விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியனை கதாநாயகனாக வைத்து இயக்குநர் பி.ஜி.முத்தையா இயக்கி வரும் திரைப்படம் ‘மதுர வீரன்.’
இந்தப் படத்தின் நாயகியைத் தேடி கேரளமெங்கும் கதாநாயகி வேட்டை நடத்தியிருக்கிறார் இயக்குநர் முத்தையா. இறுதியாக கேரளாவில் காயம்குளம் என்ற ஊரிலிருந்து மீனாட்சியை கண்டெடுத்தார்.
இந்த மீனாட்சி ஏற்கெனவே மலையாள இயக்குநர் கண்ணன் தாமரைக்குளம் இயக்கிய ‘திங்கள் முதல் வெள்ளிவரை’ என்கிற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தவர். அந்த படத்தில் மீனாட்சியின் நடிப்பு மீடியாவால் மிகவும் பாராட்டப்பட்டது. அந்தப் படத்தில் மீனாட்சியுடன் நடித்திருந்த நடிகர் ஜெயராம் மீனாட்சியை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்.
அந்தப் பாராட்டு தனக்குக் கிடைத்த ஆசீர்வாதமாக நினைக்கும் மீனாட்சிக்கு இந்த ‘மதுர வீரன்’ படத்தில் நடித்தக் காட்சிகளைப் பார்த்து கேப்டன் விஜய்காந்தும் பாராட்டியது மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு போயுள்ளது.
காஜல் என்பது மீனாட்சியின் செல்லப் பெயராம். ‘மதுர வீரனை’ தொடர்ந்து தமிழ் சினிமாவிலிருந்து நிறைய வாய்ப்புக்கள் வந்தபோதும் பிளஸ் ஒன் தேர்வு காரணமாக அந்த வாய்ப்புகளை மீனாட்சிக்கு ஏற்க இயலாமல் போயிருக்கிறது.
அது மட்டுமல்லாமல் தேடி வந்தது அனைத்துமே முதிர்ச்சியான கிராமிய நாயகி வேடங்கள். சின்ன பொண்ணான தனக்கு மாடர்ன் வேடங்களும் பொருந்தும் என்று நிரூபிக்க காத்திருக்கிறாராம் மீனாட்சி.
எவ்வளவு சவாலான வேடங்களும் ஏற்று நடிக்க தயார் என்று கூறும் மீனாட்சி தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவேன் என்று தன்னம்பிக்கையுடன் உள்ளார். மேலும் தனது நடிப்பு திறனை மெருகேற்ற நாட்டியமும் கற்று வருகிறாராம். தமிழில் நடிப்பதற்காக தமிழ் மொழியையும் கற்றுள்ளார். மலையாள நாட்டிலிருந்து வந்தாரை வாழ வைக்கும் கோடம்பாக்கமும் தமிழ் சினிமாவும் மீனாட்சியையும் அரவணைக்கும் என்று நம்புவோம்.