full screen background image

“நைட்டு 2 மணிக்கு தண்ணியடிக்க போனேன்” – மெட்ராஸ் ஹீரோ கார்த்தியின் பேச்சு..!

“நைட்டு 2 மணிக்கு தண்ணியடிக்க போனேன்” – மெட்ராஸ் ஹீரோ கார்த்தியின் பேச்சு..!

‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ கொடுத்த அடியில் இருந்து மீள்வதற்கு கார்த்தி பெரிதும் நம்பியிருக்கும் படம் ‘மெட்ராஸ்’..! சென்னை மாநகரத்தின் உண்மையான மண்ணின் மைந்தர்கள் வாழும் இந்த வடசென்னை பகுதிதான் படத்தின் களமாம்.

இதில் வடசென்னை பகுதி மக்களில் ஒரு சிலரை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ‘அட்டக்கத்தி’ ரஞ்சித். அட்டக்கத்தி படத்திற்குப் பிறகு இவர் இயக்கும் இரண்டாவது படம் இது. இதில் ஹீரோயின் கேத்தரின் தெரசா. இசை சந்தோஷ் நாராயணன். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது. படத்தின் இசையை நடிகர் சூர்யா வெளியிட, நடிகர் சிவக்குமார் பெற்றுக்கொண்டார்.

விழாவில் சூர்யா, கார்த்தி இருவரையும் தவிர படத்தில் நடித்திருக்கும் வடசென்னை இளைஞர்களுக்குத்தான் அதிகக் கைதட்டல்கள் கிடைத்தன. படத்தில் நடித்திருக்கும் கலை அரசன், வினோத், ஹரி, மைம் கோபி, கூத்துப் பட்டறை ஜெயராவ், போஸ்டர் நந்தகுமார் இவர்களெல்லாம் மேடையேறியபோது கைதட்டல்களும், விசில்களும் தூள் பறந்தன. இவர்கள் அனைவருமே தத்தமது குடும்பத்தினருடன் அழைக்கப்பட்டிருந்தனராம். கானா பாலா, கபிலன், உமா தேவி மூவரும் பாடல்களை எழுதியிருக்கின்றனர். மூவருமே மேடைக்கு வந்து அவரவர் பாடல்களை அறிமுகப்படுத்தி வைத்து பேசினார்கள்.

IMG_9093

தற்செயலாக ஞானவேல்ராஜா மூலமாக ரஞ்சித்தின் ஸ்கிரிப்ட் கார்த்தியிடம் செல்ல.. படித்துவிட்டு இதில் நானே நடிக்கிறேனே..? நடிக்கலாமா..?” என்று ஆர்வத்துடன் கேட்டாராம் கார்த்தி. அதுக்காகத்தான அலைஞ்சிக்கிட்டிருக்கேன் என்று ரஞ்சித்தும் சொல்ல.. இப்படித்தான் இந்தப் படம் ஆரம்பித்ததாம்..!

கார்த்தி பேசும்போது, “எல்லாப் படத்துலேயும் ஒரே மாதிரி சிரிச்சிக்கிட்டே இருக்கீங்கங்கன்னு நீங்கதான் சொல்றீங்க.. சிரிச்சாத்தான் நல்லாயிருக்குன்னும் நீங்கதான் சொல்றீங்க..? எனக்குத்தான் என்ன செய்யறதுன்னே தெரியலை.. ஒரே மாதிரி கேரக்டரா வருதேன்னு எனக்கே போரடிச்சுப் போயிருந்துச்சு.. அப்பத்தான் இந்தப் படம் எனக்கு வந்துச்சு.. வடசென்னை பகுதி மக்களின் உண்மையான வாழ்க்கையை அப்படியே இந்தப் படம் பிரதிபலிக்கும்.. தமிழ்ச் சினிமாவுலேயும் ஒரு முக்கியமான படமாவும் இருக்கும்..” என்றார்.

முதல் நாள் ஷூட்டிங் பற்றிய கதையை சுவாரஸ்யமாகவே சொன்னார் கார்த்தி. “படத்தின் முதல் நாள் ஷூட்டிங் எத்தனை மணிக்குன்னு கேட்டேன். 2 மணின்னு சொன்னாங்க. பகல்லயான்னு கேட்டேன். இல்லை நாட்டு 2 மணின்னு சொன்னாங்க.. பொதுவா ஷூட்டிங் 2 மணின்னா அப்படி, இப்படீன்னுட்டு 2.30 மணிக்குத்தான் ஆரம்பிப்பாங்கன்னு நான் கரெக்ட்டா 2 மணிக்கு போய் இறங்குறேன்.. எனக்கு முன்னாடியே லைட்டெல்லாம் போட்டுட்டு ரெடியா இருந்தாங்க..

போனவுடனேயே என்கிட்ட ஒரு பிளாஸ்டிக் குடத்தை கொடுத்து போயி அந்தப் பைப்புல தண்ணியடிச்சிட்டு வாங்கன்னார் டைரக்டர்.  அங்க ஏற்கனவே கியூவுல லேடீஸெல்லாம் நின்னுக்கிட்டிருந்தாங்க.. அவங்க்கிட்ட வம்பிழுத்து எப்படியோ நைஸா தண்ணியடிச்சிட்டு வரணும்.. இதுதான் சீன்.. இந்த மாதிரி என் வாழ்க்கைல எனக்குக் கிடைக்காத புதுமையான அனுபவங்களெல்லாம் இந்தப் படத்தோட முதல் நாள்ல இருந்தே கிடைச்சுச்சு..” என்றார்.

படத்தின் ஹீரோயின் கேத்தரின் தெரசா திக்கித் திணறி 2 வரிகளை தமிழில் பேசிவிட்டு பின்பு ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டினார். இவரையும் பாராட்டிவிட்டார் ஹீரோ கார்த்தி..

“கேத்தரின் இந்த படத்துல புக் ஆகும்போது இப்படியெல்லாம் ஆகும்னு நினைச்சே பார்த்திருக்க மாட்டாங்க.. மாடர்ன்னா வந்தாங்க.. உடனேயே மேக்கப்பை மாத்தி.. சடை போட்டு.. பொட்டு வைச்சு.. பூவை சுத்தி அவங்களையும் ஒரு வடசென்னை பொண்ணா மாத்திட்டாங்க.. அவங்களுக்குத் தமிழ் தெரியலைன்னாலும் ஒரு காட்சில நீளமான டயலாக்ஸ் இருந்துச்சு.. அதையும் மனப்பாடம் பண்ணி கச்சிதமா பேசி அசத்திட்டாங்க..” என்று பாராட்டினார் கார்த்தி.

ஒரு ஹீரோவா இருந்தா எத்தனை வேலையை செய்ய வேண்டியிருக்கு பாருங்க..?

Our Score