ஷில்பா மோஷன் ஒர்க்ஸ் – வார்டு லைப் பிலிக் என்ற பட நிறுவங்கள் இணைந்து ‘மடிசார் மாமி’ என்ற படத்தைத் தயாரித்திருந்தார்கள். இந்தப் படத்திற்கு முதலில் வைத்திருந்த பெயர் ‘மடிசார் மாமியும் மதன மாமாவும்’ என்பதுதான். கிட்டத்தட்ட கில்மா பட ரேஞ்சுக்கு இருந்த இந்தப் படத்தின் பெயரைக் கேட்டு அதிர்ச்சியான சிலர், படம் சென்சார் முடிந்து வெளியாக இருந்த நிலையில், நீதிமன்றத்திற்குச் சென்றார்கள்.
தமிழ்நாடு பிராமணர்கள் சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவர் கே.ஆர்.சீனிவாசன் இந்தப் படத்தை எதிர்த்து சென்ற ஆண்டே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், “பிராமண சமுதாய மக்களை இழிவுபடுத்தும் வகையிலும், அம்மக்களின் கலாசார, பழக்க வழக்கங்களை கேலி செய்யும் விதத்திலும் ‘மடிசார் மாமி’ என்ற திரைப்படத்தை ‘ஷில்பா மோசன் ஒர்க்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. பிராமண சமுதாய மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் நிறைந்துள்ள அந்தப் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்,’ என்று கோரியிருந்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி என்.கிருபாகரன், ‘மடிசார் மாமி’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து அப்போதே இடைக்கால தீர்ப்பை வழங்கியிருந்தார். அந்த உத்தரவில், “பாசமலர், “பணமா, பாசமா, “நெஞ்சில் ஓர் ஆலயம், “வீரபாண்டிய கட்டபொம்மன், “தாய் சொல்லை தட்டாதே என, பழைய படங்களை, இப்போதும் நம்மால் நினைவு கூற முடியும். படங்களின் தலைப்பே, அதன் மதிப்பை உணர்த்தும். மனித உறவுகள், குடும்பத்தின் மதிப்பு, பெரியவர்களுக்கான மரியாதை, தேசிய ஒருமைப்பாடு, சகோதரத்துவம் என, பல கருத்துக்களை நமக்கு உணர்த்தும். அதனால்தான், பழைய படங்களின் கதாநாயகர்களை, வணங்குகின்றனர். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., மது குடிப்பவராகவோ, புகை பிடிப்பவராகவோ, நடித்ததில்லை. அத்தகைய காட்சிகளை, அவர் தவிர்த்தார். அவரது சமூக பொறுப்பை, இது காட்டுகிறது. அதனால்தான், 1977ம் ஆண்டு, முதல்வராக ஆன அவர், இறக்கும்வரை, முதல்வராக இருந்தார்.
தமிழகத்துக்கு, ஐந்து முதல்வர்களை, சினிமா உலகம் அளித்துள்ளது. காலம் செல்ல செல்ல, சமூக மாண்புகள், சினிமா படங்களில் சிதைக்கப்பட்டு விட்டது. சமீபகாலங்களில் வரும் சினிமா படங்கள், இளைய சமூகத்தினரின் மனதை கெடுக்கிறது. நாட்டில், குற்றச்சம்பவங்கள் பெருக, இதுவும் ஒரு காரணம். சினிமா ஒரு வர்த்தகம் என்றாலும், பொது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அல்லது, அவர்களை கெடுக்காமலாவது இருக்க வேண்டும்.
வன்முறை, ஆபாசம், கொடூரமான காட்சிகள் மூலம், பல படங்கள், மனித மனங்களை கெடுக்கின்றன. இதனால், சமூகம் தான் பாதிக்கப்படுகிறது. படத்தின் வெற்றிக்கு, அதன் தலைப்பும் (பெயர்) காரணம். தற்போது, “திருட்டு பயலே, “கேடி பில்லா, கில்லாடி ரங்கா, “மங்காத்தா, “பில்லா, “போக்கிரி, “சண்டைக்கோழி, “ரத்த சரித்திரம் என்கிற பெயர்களில், படங்கள் வெளியாகியுள்ளன. கிரிமினல்களின் பெயர்களை, படத்தின் பெயருக்கு பயன்படுத்தியுள்ளனர். இதில் வேதனை என்னவென்றால், பிரபல கதாநாயகர்கள், இதில் நடித்திருப்பதுதான்.
எனவே, கதாநாயர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தங்கள் படங்களுக்கு, நல்ல பெயர்களை வைக்க வேண்டும். அதன்மூலம், மக்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு சமூகத்தையும், கேலிப் பொருளாக சித்தரிக்க முடியாது.
வன்முறை, ஆபாசத்தை தூண்டுகிற காட்சிகளை கொண்ட, சினிமா படங்களுக்கு, எப்படி சென்சார் சான்றிதழ் வழங்கப்படுகிறது என்பதை, புரிந்து கொள்ள முடியவில்லை. சென்சார் போர்டு, முறையாக செயல்படுகிறதா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சென்சார் போர்டுக்கு, சமூகப் பொறுப்பு உள்ளது.
எனவே, தற்போதைய படங்களால், சமூகத்துக்கு ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொண்டு, சினிமோட்டோகிராப் சட்டத்தில், உரிய திருத்தங்களும், விதிகளும் கொண்டு வரவேண்டும். சென்சார் போர்டு உறுப்பினர்களாக, பொறுப்பானவர்களை நியமிக்க வேண்டும். அரசியல் பின்னணியை, நியமனத்துக்கு பரிசீலிக்கக் கூடாது. பொறுப்புணர்வுடன், உறுப்பினர்கள் செயல்பட வேண்டும். இந்த பரிந்துரைக்கு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், பதிலளிக்க வேண்டும்.
இப்படத்துக்கு, முதலில், “மடிசார் மாமி, மதன மாமா என பெயரிட்டு, பின், “மதன மாமாவை நீக்கியுள்ளனர்; ஆனால், இணைய தளத்தில், முன்பு இருந்த பெயர், அப்படியே உள்ளது. படத்தின் உள்ளடக்கம் முழுவதும் தெரியாது என்றாலும், படத்தின் தலைப்பு, அவதூறாக உள்ளது. எனவே, “மடிசார் மாமி என்ற பெயருடன், படத்தை வெளியிட, தடை விதிக்கப்படுகிறது. படத்தின் பெயரை மாற்றி விட்டு, வெளியிடுவது என்பது, படத் தயாரிப்பாளரைப் பொருத்தது..” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியானது. அதில் தலைப்பை மாற்றிவிட்டுத்தான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று உத்தரவாகியிருந்த்து. இதன்படியே இப்போது ‘மடிசார் மாமி’ என்ற தலைப்பை ‘புளிப்பு-இனிப்பு’ என்று மாற்றியிருக்கிறார்கள்.
“நீதிமன்றத்தின் உத்தரவுப்படியும், எந்த ஒரு மனிதனின் மனதையும் பாதிப்பது நல்ல சினிமாவாகாது. என்கிற உரிய நோக்கத்தோடும் படத்தின் தலைப்பை ‘புளிப்பு இனிப்பு’ என்று மாற்றி வைத்துள்ளோம்..” என்கிறார் வார்டு லைப் பிலிக் பட நிறுவத் தயாரிப்பாளரான சுஷாந்த் கத்ரு(sushanth kathru)
மே மாதம் வெளியாக உள்ள இப்படம் காமெடி கலந்த குடும்பப் படமாகும். இந்தப் படத்தில் மிதுன் கதாநாயகனாகவும், கதாநாயகியாக மான்ஸியும் நடித்திருக்கிறார்கள். கோயிலில் சாதாரண அர்ச்சகராக பணிபுரியும் மிதுன், தான் எப்படியாவது பணக்காரனாக வேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆண் குழந்தை வேண்டும் என்று நினைத்து மனைவியான மான்ஸியுடன் வாழ்ந்து ஐந்தும் பெண் குழந்தைகளாக பிறந்துவிடுகிறது. ஐந்தாவது குழந்தை தொலைந்து போகிறது. தரித்திரமாகத் தெரிந்த அந்த குழந்தை மிதுனுக்கு பின்னர் அதிர்ஷ்ட தேவதையாகி வருகிறது. அதற்குப் பிறகு நடக்கும் பாசப் போராட்டம்தான் இந்தப் படத்தின் கதை.
‘புளிப்பு-இனிப்பு’ என்ற தலைப்பும் சுவையாக இல்லையே..?