full screen background image

மாயவன் – சினிமா விமர்சனம்

மாயவன் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரித்து இயக்கியிருக்கிறார். இது இவர் இயக்கும் முதல் படமாகும்.

இந்தப் படத்தில் சுந்தீப் கிஷன் கதையின் நாயகனாகவும், லாவண்யா திரிபாதி நாயகியாகவும் நடித்துள்ளனர். மற்றும் ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, அக்சரா கெளடா, கருணா, மைம் கோபி, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு, கதை, இயக்கம் – சி.வி.குமார், திரைக்கதை, வசனம் – நலன் குமாரசாமி, ஒளிப்பதிவு – கோபி அமர்நாத், இசை – ஜிப்ரான், படத் தொகுப்பு – லியோ ஜான் பால், கலை இயக்கம் – கோபி ஆனந்த், சண்டை பயிற்சி – ஹரி தினேஷ், ஒலிக் கலவை – சூரன், பாடல்கள் – விவேக், சிக்கந்தர், செளந்தர், இணை தயாரிப்பு – சரவணன், கள தயாரிப்பாளர் – பிரவீன், தயாரிப்பு நிர்வாகம் – சின்னமனூர் கே.சதீஷ்குமார், வி.லட்சுமணன், மக்கள் தொடர்பு – நிகில். விளம்பர வடிவமைப்பு – என்.டி.பிரத்தூல்.

சயின்ஸ் பிக்ஸன் திரைப்படங்கள் தமிழில் அதிகமாக வருவதில்லை. இதற்கு முன் வந்த பல சயின்ஸ் பிக்ஸன் திரைப்படங்களில் ‘இன்று நேற்று நாளை’ திரைப்படம் மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருந்த்து. அத்திரைப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் சி.வி.குமாரே, இந்த சயின்ஸ் பிக்ஸன் திரைப்படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார்.

கோடீஸ்வரனோ, ஏழையோ… இருவருக்கும் உள்ள பொதுவான ஒரேயொரு பயம் மரணத்தின் மீதுதான். அந்த மரணம் எப்போது எப்படி வருமென்று யாருக்குமே தெரியாது என்பதால்தான் இன்னமும் கோவில்களில் பக்தர்களின் கூட்டங்கள் கூடிக் கொண்டே செல்கிறது.

எத்தனை கோடி சொத்துக்களை வைத்திருந்தாலும் சாவைத் தடுக்க முடியாமல் இருப்பது கோடீஸ்வரர்களுக்கே பெரும் துயரமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 2 வருடங்கள் பயணித்து நிலாவில் கால் பதித்துவிடும் அளவுக்கு தற்போதைய உலகத்தில் அறிவியலை வளர்த்த, தொழில் நுட்ப அறிவும், பொருளாதார பலமும் மனிதர்களிடத்தில் இருந்தாலும் அவர்களால் அவர்களது சாவை மட்டும் தடுத்து நிறுத்தவே முடியவில்லை.

இன்றைக்கு இருக்கும் கோடீஸ்வரர்களுக்கு இருக்கும் ஒரேயொரு கவலை.. இவ்வளவு பணத்தை வைத்து வாழ்க்கையை அனுபவித்து வரும் நமக்கு ஏன் சாவு வருகிறது..? ஏன் நாம் இன்னும் கொஞ்சம் காலம் வாழக் கூடாதா..? கொஞ்ச காலம் என்ன..? சாவையே தள்ளிப் போட முடியாதா…? என்றெல்லாம் யோசித்து, சிந்தித்து, அதற்காக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த அகில உலக ஆராய்ச்சியில் உலகத்தின் அதி முக்கிய கோடீஸ்வர புள்ளிகளும் ஒன்றிணைந்து கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டியிருக்கிறார்கள். இந்த ஒரு புள்ளியில் இருந்துதான் இந்தப் படத்தின் கதைக் கருவைத் தொட்டிருக்கிறார் இயக்குநர் சி.வி.குமார்.

கூடுவிட்டு கூடு பாயும் கதைகளில் திரைப்படங்கள் வந்துவிட்டன. இந்தாண்டு வெளிவந்த ‘போகன்’ படம்கூட இது மாதிரியான கதைதான். இந்த வித்தையைத்தான் அறிவியல்பூர்வமாக தொடர் கதையாக நடத்த முடிந்தால் என்ன ஆகும் என்பதை இந்தப் படத்தின் திரைக்கதையில் வெகு சுவாரஸ்யமாக ஆக்கித் தந்திருக்கிறார் இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான நலன் குமாரசாமி.

நாயகனான சுந்தீப் கிஷன் சென்னை காவல்துறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். ஒரு குற்றவாளியை விரட்டிப் பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறார். அவன் ஒரு ஹவுஸிங் போர்டு வீட்டிற்குள் ஒளிந்து கொள்ள, அவனைப் பிடிக்க அங்கே நுழையும் சுந்தீப்புக்கு அங்கே வேறொரு வீட்டில் ஒரு கொலை நடந்திருப்பதை தற்செயலாக கவனிக்கிறார்.

அந்தக் கொலையாளி சுந்தீப்பை அடித்துவிட்டு தப்பியோட.. அவனையும் விரட்டிப் பிடிக்கிறார். ஆனால் கடைசியில் இருவருக்குமிடையில் வன்முறை நிகழ.. எதிர்பாராமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவனைக் கொலை செய்கிறார் சுந்தீப். ஆனால் அவனது தாக்குதலால் தலையில் பலத்த அடிபட்டு சில நாட்கள் கோமாவில் மூழ்குகிறார் சுந்தீப். பின்பு மருத்துவ சிகிச்சைக்கு பின்பு நினைவு திரும்பி நல்ல உடல் நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார் சுந்தீப்.

இப்போது பணிக்குத் திரும்ப ஆயத்தமாகிறார் சுந்தீப். அவர் நல்ல மனநிலையில் இருக்கிறாரா என்பதையறிய அரசு மருத்துவமனையின் மன நல மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று வரும்படி உயரதிகாரி அறிவுறுத்துகிறார். இதற்காக அரசு மருத்துவனையில் மன நல மருத்துவராக இருக்கும் நாயகி லாவண்யா திரிபாதியிடம் வருகிறார் சுந்தீப்.

அவரை பரிசோதிக்கும் லாவண்யா, “சுந்தீப் இப்போதும் பழைய தாக்குதலின் விளைவில் சிக்கியிருப்பதால் அவர் வேலையில் சேரக் கூடாது..” என்கிறார். இதனால் சுந்தீப் கோபம் கொண்டு லாவண்யாவை ஏசிவிட்டுச் செல்கிறார். பின்பு வேறொரு மருத்துவரிடம் தான் மிக்க உடல் நலத்தோடு இருப்பதாகச் சொல்லி சான்றிதழ் பெற்று மீண்டும் வேலையில் சேர்ந்துவிடுகிறார்.

இப்போது பிரபல நடிகை ஒருவர் அவருடைய வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இதனை நேரில் சென்று பார்க்கும் சுந்தீப், ஹவுஸிங் போர்டு வீட்டில் நடந்த முதல் கொலைக்கும், இந்தக் கொலைக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதை அறிகிறார்.

ஆனாலும் ரத்தச் சிதறல்களை பார்த்தவுடன் அவரால் பயப்படாமல் இருக்க முடியவில்லை. உடல் நிலை ஒத்துழைக்காததால் உடன் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டரான பகவதி பெருமாளின் வீட்டிற்கு வந்து ஓய்வெடுக்கிறார். லாவண்யா அங்கேயும் அவரைத் தேடி வந்து அவர் இன்னமும் சிகிச்சை பெற வேண்டும் என்று சொல்லி அவருக்கு ஊசி போட்டு தூங்க வைக்கிறார்.

இப்போது மீண்டும் வேலையில் சேர நினைக்கிறார் சுந்தீப். ஆனால் தன்னுடைய மனநிலை காரணமாக விடுப்பு எடுக்க நினைக்கும் நேரத்தில் மூன்றாவதாக ஒரு கொலை நிகழ்கிறது.

இந்தக் கொலையாளியை தேடும்போது புகழ் பெற்ற பேச்சாளரான டேனியல் பாலாஜிக்கு இந்தக் கொலையாளியுடன் தொடர்பு இருப்பதாக சுந்தீப்புக்கு தெரிகிறது. இது தொடர்பான தேடுதல் வேட்டையில் ஈடுபடும் சுந்தீப் டேனியல் பாலாஜிக்கு இந்தக் கொலை மட்டுமல்ல ஏற்கெனவே நடந்த மூன்று கொலைகளுடன் ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு இருப்பதை அறிகிறார்.

வேறு வழியில்லாமல் டேனியல் பாலாஜியை கஷ்டப்பட்டு பிடித்து விசாரிக்கிறார் சுந்தீப். விசாரணையின்போது டேனியல் பாலாஜி அவசரப்பட்டு போட்ட ஒரு கையெழுத்தை வைத்து விசாரிக்க, வழக்கு போலீஸாரே நினைத்துக்கூட பார்க்காத வேறொரு கோணத்தில் திரும்புகிறது..!

அது என்ன என்பதும், இறுதியில் குற்றவாளிகளை சுந்தீப் பிடித்தாரா என்பதுதான் திரைக்கதை.

‘பிரில்லியண்ட் ஐடியா’ என்பார்களே அது இந்தப் படத்தின் கதைக் கருவை தேர்வு செய்த இயக்குநர் பிளஸ் தயாரிப்பாளரான சி.வி.குமாரையே சேரும். உண்மையில் இப்போது உலகத்தின் ஒரு மூலையில் நடந்து வரும் ஆராய்ச்சி பற்றிய செய்தியை மையமாக வைத்து இங்கே தமிழில் படமெடுத்து காண்பித்திருக்கிறார். வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!

சுந்தீப் கிஷனுக்கு ஏற்ற வேடம். பரபரப்பாக ஓடிக் கொண்டேயிருக்கும் துடிப்பான இளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தை கச்சிதமாக ஏற்று நடித்திருக்கிறார் சுந்தீப். டிபார்ட்மெண்ட்டில் பெயர் வாங்க வேண்டும் என்பதைவிடவும் குற்ற வழக்குகளில் துப்பு துலக்க வேண்டும் என்பதில் அவர் காட்டும் ஈடுபாடும், வெறியும்தான் அவரது கேரக்டர் ஸ்கெட்ச். அதனை மிகச் சரியாகவே தனது நடிப்பில் காட்டியிருக்கிறார் சுந்தீப்.

லாவண்யாவை முதல்முறையாக பார்த்தவுடன் அவருடன் சண்டை போட்டுவிட்டு செல்வதும், பின்பு அவருடைய உதவியுடன்தான் இந்த வழக்கை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்த முடியும் என்பதை அறிந்து பழகி, நட்பாகி, காதலாகி அதனை கடத்துவதுமாக தனது நடிப்பை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார் சுந்தீப்.

லாவண்யா திரிபாதி. அப்படியொன்றும் அழகில்லை என்றாலும் சினிமாட்டிக் முகம் என்பார்களே.. அது அவருக்கு அமைந்திருக்கிறது. ஒரு அரசு மன நல மருத்துவர் என்ற முறையில் போலீஸ் அதிகாரியாகவே இருந்தாலும் உண்மைத்தன்மை மாறாமல் பயப்படாமல் பேசுவதும், வழக்கு தொடர்பாக பேசப் போய் அதிலேயே சுந்தீப்பை காதலிப்பதாக அமைவதும் மிக இயல்பாக இருப்பதால் இயக்குநரின் சொல்லிக் கொடுத்த நடிப்பை நடித்திருக்கிறார். இவருக்கான மிக அதிக குளோஸப் காட்சிகளில் ஒரு சின்ன ஸ்லிப்கூட இல்லாமல் டப்பிங் லிப்ஸ் மூவ்ஸ்மெண்ட் இடம் பெற்றிருப்பதற்காக பின்பணியாற்றிய இணை இயக்குநருக்கு ஒரு பாராட்டு..!

இந்த மெகா பிராஜெக்ட்டில் தலையைக் கொடுத்து பலியாடுகளாகும் தீனா, மைம் கோபி, அமரேந்திரன் மூவருமே பயமுறுத்தியிருக்கிறார்கள். ஜாக்கி ஷெராப் கொஞ்ச நேரமே ஆனாலும் அந்தக் கேரக்டருக்கு ஏற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார். படம் நெடுகிலும் அவ்வப்போது வாயைக் கொடுத்து காமெடி செய்தாலும் கிளைமாக்ஸில் உயிரையும் கொடுக்கும் பகவதி பெருமாளும் தனது நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். வில்லனாக பொறியைக் கிளப்பியிருக்கிறார் டேனியல் பாலாஜி.

மிக, மிக சிக்கலான இந்தப் படத்தின் கதைக் கருவை மிக எளிமையான தமிழில் அதே சமயம் ஆங்கில கலப்புடன் கச்சிதமாக சொல்லும் கதை சொல்லியாக நடித்திருக்கிறார் ஜெயப்பிரகாஷ். படத்தில் ஆங்கில வசனங்கள் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், அதை நிவர்த்தி செய்வதைபோல, சில கிராபிக்ஸ் காட்சிகளிலேயே கதையை நகர்த்தியிருப்பதால்  பி அண்ட் சி ரசிகர்களுக்கும் நிச்சயமாக இந்தக் கதை புரியும்.

போலீஸ் – திருடன் விளையாட்டு போன்ற பரபரப்பில் திரைக் காட்சிகளை அமைத்திருப்பதால் கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் வேகமும் கூடியிருக்கிறது. முதல் காட்சியில் சுந்தீப் திருடனைத் துரத்தியோடும் காட்சியில் செம ஜலீர் உணர்வு..! கொலையுண்ட காட்சிகளில் திடுக் உணர்வு.. சுந்தீப் ரத்தம் பார்த்து பயந்து போய் இருக்கும்போது ஒரு பயப்பட வைக்கும் உணர்வு.. இப்படி பலவித கலவைகளையும் கேமிராவிலும் அழகாக பதிவாக்கியிருக்கிறார் கோபி அமர்ந்தார். அவருக்கு நமது வாழ்த்துகள்.

ஜிப்ரானின் இசையில் பாடல்களைவிடவும் பின்னணி இசை உயிர்ப்புடன் இருக்கிறது. கலை இயக்குநர் கோபி ஆனந்த், தனது அபாரமான திறமையால் விஞ்ஞான கூடத்தை அழகாக அமைத்திருக்கிறார். வெண்மை நிறத்தில் பளிச்சென்று இருக்கும் அந்தக் கூடம்தான், மனித குலத்தையே தலைகீழாக மாற்றும் ஒரு ஆராய்ச்சிக் களம் என்பதை திகிலோடு வடிவமைத்து படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.

ஜெயப்பிரகாஷை ஜாக்கி ஷெராப் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லும் ஒரு காட்சியில் மட்டுமே கொஞ்சம் யதார்த்தம் இடிக்கிறது என்பதைத் தவிர மற்ற எந்தவிடத்திலும் லாஜில் எல்லை மீறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர்.

கூடு விட்டு கூடு பாய்வது போலன்று இதன் கதைக் கரு. மனித மூளையையே ஜெராக்ஸ் எடுத்து இன்னொரு மூளையில் செலுத்தி முந்தைய மனிதரின் பணியை புதிய மனிதர் மேற்கொண்டு அந்த ஒரிஜினல் மூளையிருந்த மனிதருக்கு மட்டும் சாகா வரம் கிடைப்பது போன்ற இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால், பின் விளைவுகள் என்னவாகும் என்பதை இயக்குநர் இதில் சொல்லியிருக்கிறார்.

அறிவியல் விஷயங்களை ஆக்கப்பூர்வமாகவும், அமைதிக்காகவும், நலனுக்காகவும் பயன்படுத்தினால் அது தவறில்லைதான். ஆனால் இதைப் பயன்படுத்தி சர்வாதிகாரிகள், கொலைகாரர்கள், திருடர்கள் போன்றவர்களின் மூளைகள் பெருகிக் கொண்டே போனால் மனித சமூகம் சீரழிந்துவிடும் என்பதையும் கொஞ்சம் உரக்கச் சொல்லி நம்மை யோசிக்க சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

சிறந்த அறிவியல் கதைகளை நம்மால் ஆச்சரியப்பட்டுத்தான் பார்க்க முடியும். இந்தப் படமும் அதேபோல்தான் நம்மை பார்க்க வைக்கிறது..!

Our Score