full screen background image

மாயக்கூத்து – சினிமா விமர்சனம்

மாயக்கூத்து – சினிமா விமர்சனம்

ராகுல் மூவி மேக்கர்ஸ் (ராகுல் தேவா) மற்றும் அபிமன்யு கிரியேஷன்ஸ் (பிரசாத் ராமசந்திரன்) இணைந்து தயாரித்துள்ள சுயாதீன படம்தான் இந்த மாயக்கூத்து”.

இப்படத்தில் முன்னணி நடிகர்களான டெல்லி கணேஷ், மு.ராமசாமி மற்றும் சாய் தீனா, நடிகர் நாகராஜன் கண்ணன், மற்றும் வளரும் நடிகர்களான பிரகதீஸ்வரன், முருகன், ஐஸ்வர்யா, காயத்ரி மற்றும் ரேகாஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

இப்படத்திற்கு கயமை கடக்க’, ‘சூப்பர் டூப்பர்மற்றும் நீத்தோபடங்களின் ஒளிப்பதிவாளர் சுந்தர் ராம் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கேப்டன் மில்லர்’, ‘டான்மற்றும் சாணி காயிதம்படங்களின் படத் தொகுப்பாளரான நாகூரன் ராமசந்திரன் இந்த படத்தின் படத் தொகுப்பினைச் செய்துள்ளார்.

இசையில் பல்வேறு துறைகளிலும் வடிவங்களிலும் நிபுணத்துவம் கொண்ட அஞ்சனா ராஜகோபாலன் இப்படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார். அவரது இசைக்கு  நாகராஜன் மற்றும் கேபர் வாசுகி பாடல்களை எழுதி உள்ளனர்.

இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநரான A.R.ராகவேந்திரா எழுதி இயக்கியுள்ளார். இவர், திரைப்பட இயக்குநர் பிரம்மா அவர்களிடம் உதவியாளராகவும் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பல குறும் படங்களை இயக்கிய அனுபவமும் கொண்டவர். மேலும், இவர் கதையில் உருவான உடன் பால்என்ற திரைப்படம் பல முக்கிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.

சமூகத்தில் படைப்பாளிகளின் பொறுப்புணர்வை சுட்டிக் காட்டும்  இப்படம் ஒரு கற்பனை கலந்த திரில்லர் வடிவில் உருவாகியுள்ளது. மேலும், இப்படம் சீரான பொருட்செலவில் நேர்த்தியாகவும் தரமாகவும் படைக்கப்பட்டுள்ளது.

சத்தியமாக இதுவொரு பின் நவீனத்துவ திரைப்படம்.

தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை கொண்டு வருவதற்கான முயற்சிகள் பல முறை, பல தடவைகள் நடந்துள்ளது. அதில் சில வெற்றி பெற்று இருக்கின்றன. பல தோல்வி அடைந்திருக்கின்றன. அந்த வகையில் இந்தப் படமும் ஒரு மாற்று சினிமாவை தமிழ் ரசிகர்கள் முன் வைத்திருக்கிறது.

ஒரு எழுத்தாளர் எழுதிய கதையில் வரும் கதாபாத்திரங்கள் நிஜமாகவே அவர் கண் முன்னே உயிர் பெற்று வந்து தங்களுக்கான நீதி, நியாயங்களை கேட்டால் அந்த எழுத்தாளர் என்ன செய்வார் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

பிரபலமான எழுத்தாளரான வாசன் இப்பொழுது ஒரு தொடர்கதையை எழுதிக் கொண்டிருக்கிறார். அந்த கதையில் மூன்றுவிதமான குடும்பங்கள் இருக்கின்றன.

முதல் கதையில் ஐஸ்வர்யா ரகுபதி ஒரு எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் பக்கத்தில் இருக்கும் ஒரு அப்பார்ட்மெண்டில் ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வருகிறார். அன்றைக்கு அவர் வேலைக்கு சென்ற நேரத்தில் அந்த வீட்டில் ஒரு 2000 ரூபாய் நோட்டு காணாமல் போகிறது.

அதே சமயம் ஐஸ்வர்யாவும் தன்னுடைய மகனின் ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டும் என்பதற்காக ஒரு 2000 ரூபாயை தன் பர்ஸில் வைத்திருக்கிறார்.

இப்பொழுது அந்த அப்பார்ட்மெண்ட் உரிமையாளர் பெண் ஐஸ்வர்யா தான் அந்த படத்தை எடுத்திருக்க வேண்டும் என்று சொல்லி சந்தேகப்படுகிறார். ஐஸ்வர்யா நான் எடுக்கவில்லை என்ற சாதிக்கிறார். இந்தக் கருத்து மோதல் கைகலப்பாக மாற அந்த ஒரே நொடியில் ஐஸ்வர்யா கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்து போகிறார்.

சாய் தீனா ஒரு பெரிய ரவுடிக் கும்பலின் தலைவன். பணத்துக்காக கொலை செய்பவர். இப்பொழுது அவருடனே இருக்கும் கூட்டாளிகளில் ஒரு சிலர் சாய் தீனாவை கொலை செய்யப் பார்க்கிறார்கள். இந்த தகவல் சாய் தீனாவுக்கு தெரிந்தவுடன் தன்னுடைய இருக்கும் அந்த கருப்பு ஆடு யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்.

இந்தக் கதைகளின் தொடர்ச்சியை எப்படி எழுதுவது என்று ஆசிரியர் வாசன் யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று அவரது வீட்டுக்கு ஐஸ்வர்யா ரகுபதியும் அவருடைய அவரை குற்றம் சாட்டி அந்த பெண்மணியும் வீட்டுக்குள் வருகிறார்கள்.

ஐஸ்வர்யா தான அந்த பணத்தை எடுக்கவில்லை என்று எழுத்தாளரிடம் சாதிக்கிறாள். வாதாடுகிறாள். இன்னொரு பக்கம் வாசன் உருவாக்கிய அந்த வீட்டு உரிமையாளர் பெண் ஐஸ்வர்யாதான் இந்தப் பணத்தை எடுத்திருக்கிறாள் என்றும் குற்றம் சாட்டுகிறார்.

இப்படி தான் எழுதி வரும் கதையில் தான் உருவாக்கிய கதாபாத்திரங்களே தன்னிடத்தில் வந்து நியாயம் கேட்பதை கண்டு அதிர்ச்சியில் ஆடிப் போய் விடுகிறார் வாசன்.

இந்த நேரத்தில் வாசனின் மனைவியும் ஊரில் இருந்து திரும்பி வந்து விடுகிறார். வந்தவரிடம் இது போன்று நம் வீட்டுக்குள்ளேயே ஐஸ்வர்யாவும் அந்த இன்னொரு பெண்ணும் இருப்பதை மனைவியிடம் சொல்கிறார். ஆனால், அவர் மனைவி இதை நம்ப மறுக்கிறார். உங்களுக்கு என்னமோ ஆகிவிட்டது என்று சொல்லி மனைவியும் புலம்புகிறார்.

அடுத்து சாய் தீனா கும்பலிடம் மாட்டிக் கொள்கிறார் வாசன். இப்போது வாசனைக் கட்டி வைத்து என்னுடன் இருக்கும் அந்த கருப்பாடு யார் என்பதை நீதான் சொல்ல வேண்டும் என்று சொல்லி மிரட்டுகிறார் சாய் தீனா.

இப்பொழுது சாய் தீனாவுக்கு என்ன பதில் சொல்வது என்று வாசனுக்குத் தெரியவில்லை. ஒரு பக்கம் ஐஸ்வர்யா ரகுபதியும், இன்னொரு பக்கம் சாய் தீனாவும் சேர்ந்து தங்களுக்கான நியாயத்தை கேட்க, இந்தக் கதையை எழுதிய படைப்பாளியான வாசன் என்னவாகிறார்? வாசன் கதையின் முடிவு என்ன? படத்தின் முடிவு என்ன..? என்பதுதான் இந்த சுவையான திரைக்கதையைக் கொண்ட மாயக்கூத்து என்ற திரைப்படம்.

மத்திம வயதுடைய எழுத்தாளர் என்கின்ற அந்தக் கதாபாத்திரத்திற்கு வாசனாக நடித்திருக்கும் நாகராஜ் கண்ணன் அவருடைய மிக சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.

நாகராஜ் கண்ணன் தன்னுடைய சிறப்பான நடிப்பினால் படம் முழுவதையும் நம்மை மிகவும் ரசிக்க வைத்திருக்கிறார். அவருடைய மனைவியிடம் அதை சொல்லி புலம்புவதில் துவங்கி, பப்ளிசரிடம் வந்து கதையை மாற்றியே ஆக வேண்டும் என்று கெஞ்சுகின்றவரையிலும் எதற்கு இந்த புலம்பல்..? எதற்கு இந்த பயம்?.. என்கின்ற கேள்வியை எல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு தான் எழுதிய தான் உருவாக்கிய கதாபாத்திரங்களின் இடையே சிக்கித் தவிக்கும் ஒரு சராசரி மனிதனின் மனநிலையை பல்வேறு வகையான நடிப்புகளினால் காண்பித்திருக்கிறார் நாகராஜ் கண்ணன்.

அப்பாவி பெண்ணாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ரகுபதி, மிக அழகான ஒரு நடிப்பினை காண்பித்திருக்கிறார் அவருடைய கணவருடனான ஊடல், கூடல் எல்லாம் தாண்டி ஒரு குடும்ப்ப் பெண்ணாக குடும்பத்தை தாங்கும் பொறுப்பு தனக்கு உண்டு என்பதை போல அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருடி என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவுடன் வரும் கோபத்தைக்கூட அடக்கிக் கொண்டவர் பேசுகின்ற பேச்சுக்களும், அந்த நடிப்பும் ஐஸ்வர்யா ரகுபதி ஒரு சிறந்த நடிகையாக வருவார் என்று சொல்லத் தோன்றுகிறது.

ஐஸ்வர்யாவை குற்றச்சாட்டி நடித்திருக்கும் அந்த பெண்ணும் மிகச் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நடுநிலைமையாக இருக்கும் அந்தப் பெண்ணின் கணவர் கதாபாத்திரமும் சிறப்புதான்.

சாய் தீனா தன்னுடன் இருக்கும் ஒரு கருப்பாடு யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் துடிக்கின்ற துடிப்பும், அதற்காக கிளைமாக்ஸில் அவர் காட்டுகின்ற ஸ்டைலும், நிஜமாகவே ஒரு கமர்ஷியல் படத்தில்கூட இது மாதிரியான ஒரு கட்சியை நாம் பார்த்திருக்க முடியாது. அந்த அளவுக்கு மிக அழகாக இயக்கம் செய்திருக்கிறார் இயக்குநர்.

இந்த கதாபாத்திரத்திற்கு தன்னைவிட்டால் வேறு ஆள் இல்லை என்பது போல டெல்லி கணேஷ் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடைய இயல்பான பேச்சும் பதிப்பு துறையில், அச்சுத் துறையில், பத்திரிக்கை நடத்துகின்ற துறையில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பதை அவர் லேசாக கோடிட்டு காட்டும்பொழுதும் ஒரு பண்பட்ட நடிகரை தமிழ் சினிமா உலகம் இழந்துவிட்டது என்ற வருத்தத்தை தருகிறது.

இன்னொரு பக்கம் இப்படி ஒரு மனைவி கிடைப்பாரா என்கின்ற ஒரு ஏக்கத்தை தருவதைப் போல காயத்ரியின் நடிப்பும் அமைந்திருக்கிறது. தன்னுடைய கணவர் சொல்வதை நம்பாமல் இருந்தாலும் அவருக்கு சமாதானம் சொல்வதைப் போல அவர் பேசுகின்ற வசனங்களும் அவருடைய ஆறுதலும் நிச்சயம் எதிர்பாராதது. இந்தப் படத்தில் அவருடைய மாடுலேஷன், பாடி லாங்குவேஜ் அனைத்துமே அசத்தல் என்று சொல்லலாம்.

சுந்தர்ராம் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு ஒரு மீடியம் பட்ஜெட் படத்தில் எந்த அளவுக்கு இருக்க வேண்டுமோ அதைவிட கூடுதலாகவே அமைந்திருக்கிறது. பல காட்சிகளின் கோணங்களே ரசிக்க வைத்திருக்கிறது.

பெண் இசையமைப்பாளரான அஞ்சனா ராஜகோபாலனின் இசை இசையில் பாடல்கள் ஒருமுறை கேட்கும் வகையில் உள்ளது. ஆனால் பின்னணி இசையில் ஒரு கலை படைப்பை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்பதற்காக அதற்கு ஏற்றார் போல பின்னணி இசை அமைத்திருக்கிறார். பாராட்டுக்கள்.

படத்தின் தொகுப்பாளரான நாகூரான் ராமச்சந்திரன் நிச்சயம் பாராட்டுக்குரியவர். இந்த படத்தின் முதல் பாதியில் அந்த சஸ்பென்சை உடைக்கின்றவரையிலும் மிக அழகாக எடிட் செய்து நிஜமாகவே இதுவொரு அந்தாலஜி திரைப்படமோ என்று சில மணி நேரங்கள் நம்மை ஒரு குழப்பத்தில் வைத்திருந்து பின்பு அதை தெளிவுபடுத்தி இருக்கிறார். அந்த வகையில் அவரது படத் தொகுப்பு மிகவும் சிறப்புதான்.

படத்தை எழுதி இயக்கி இருக்கும் அறிமுக இயக்குநரான .ஆர்.ராகவேந்திரா நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய வரவு என்றே சொல்லலாம். இதுபோன்ற திரைப்படங்களை கலை படைப்பு என்று சொல்லி அனைவரும் ஓரங்கட்டி விடுவார்கள். ஆனால், அந்த கலை படைப்பையே வெகுஜன மக்களும் ரசிக்கின்ற வகையில், அவர்களும் விரும்புகின்ற வகையில் அவர்களுக்கு ஏற்றவாறு அவர்கள் மனதில் இடம் பிடிக்கின்ற வகையில் மிக எளிமையான கதைகளை வைத்து படமாக்கித் தந்திருக்கிறார் அந்த வகையில் இந்த இயக்குநருக்கு நம்முடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.

படத்தின் இடைவேளை வரும்வரையிலும் அவர் எழுதிய கதாபாத்திரங்கள்தான் மற்றைய கதாபாத்திரங்களாக திரையில் தோன்றுகிறார்கள் என்ற சஸ்பென்சை அப்படியே மெயின்டைன் செய்து கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

இப்படியும் நடக்குமா என்று ஒரு கேள்வி எழும்போது அந்த கேள்வியை எல்லாம் யோசிக்கவிடாமல் தான் எழுதிய கதாபாத்திரங்களே தன்னிடம் வந்து நியாயம் கேட்கிறதே என்கின்ற அந்த மனக்குழப்பமும், உளவியல் சார்ந்த பிரச்சினைகளாக மாறி.. தன் மனைவியிடம் இதைச் சொல்லி புலம்புவது, பப்ளிசரிடம் சென்று அழுவது இந்த கதையின் முடிவை நாம் மாற்றி விடுகிறேன் என்று இறுதியாக கெஞ்சுவது என்று சராசரி மனிதனைப் போல ஒரு எழுத்தாளன் கீழே இறங்கி வருகின்றான்.. என்பதுதான் இந்த படத்தின் அடிநாதம்.

கலைப் படைப்பு அல்லது கமர்சியல் படைப்பு எதுவாக இருந்தாலும் மக்கள் மனதை தொடுவதைப் போல இருந்தால் நிச்சயம் அந்த படம் ஹிட்டுதான். அந்த வகையில் இந்த திரைப்படமும் கமர்சியல் படங்களுக்கும்ம் கலைப் படங்களுக்கும் இடையிலான தூரத்தை வெகுவாக குறைத்து இருக்கிறது. இரண்டுவித ரசிகர்களுக்கும் இடையில் ஒரு பலமாகவும் இத்திரைப்படம் அமைந்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கமர்சியல் படங்களைப் பார்த்துப் பார்த்து சலித்து போய் இருக்கின்ற தமிழ் ரசிகர்கள் நிச்சயமாக இந்த வாரம் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படத்தை பார்த்து கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

அவசியம் பார்க்க வேண்டிய படம் இது.

மிஸ் பண்ணிடாதீங்க.

RATING : 4.5 / 5

Our Score