full screen background image

மாவீரன் – சினிமா விமர்சனம்

மாவீரன் – சினிமா விமர்சனம்

Shanthi Talkies நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அருண் விஸ்வா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாகவும், அதிதி ஷங்கர் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சரிதா, மிஷ்கின், பாலாஜி சக்திவேல், யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – மடோன் அஸ்வின், ஒளிப்பதிவு – விது அயன்னா, இசை – பரத் சங்கர், படத் தொகுப்பு – பிலோமின் ராஜ், கலை இயக்கம் – குமார் கங்கப்பன், சண்டை பயிற்சி இயக்கம் – யானிக் பென், ஒலி வடிவமைப்பு – சுரேன் G,, எஸ்.அழகியகூத்தன், ஒலிக்கலவை – சுரேன்.G., ஆடை வடிவமைப்பாளர் – தினேஷ் மனோகரன், ஒப்பனை கலைஞர் – சையத் மாலிக்.S, உடைகள் – நாகு, பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன்.

ஒரு கோழை எப்படி மாவீரன்’ ஆகிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

கார்ட்டூன் வரைவதில் கில்லாடியான ‘சத்யா’ என்ற சிவகார்த்திகேயன் தனது அம்மா, தங்கையுடன் கூவம் நதியோரம் இருக்கும் குடிசைப் பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய அம்மா மிகுந்த தைரியசாலியாக இருந்தாலும், மகன் சிவாவோ எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்குகிறார். எந்தப் பிரச்சினையையும் சந்திக்க விரும்பாமல் ஓரமாய் ஒதுங்கிப் போகவே விரும்புகிறார்.

சிவாவின் வீடு இருந்த பகுதியில் குடியிருந்த மக்களுக்கு மாநில அரசு அடுக்கு மாடி குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கித் தருகிறது. ஆனால் அந்த வீடுகள் தரமில்லாதவையாக இருக்கின்றன. தினம், தினம் பல்வேறு புகார்கள் குடி வந்த மக்களால் எழுப்பப்பட்டு வருகிறது.

இடையில் ‘தினத் தீ’ என்ற பத்திரிகையில் சிவா வரைந்த கார்ட்டூன்களை தான் வரைந்ததாக சொல்லி ஒரு ஓவியர், சிவாவை ஏமாற்றி வருகிறார். இது ஒரு நாள் அதே பத்திரிகையில் சப் எடிட்டராக வேலை செய்யும் ‘நிலா’ என்ற அதிதிக்குத் தெரிய வர.. அந்தத் திருட்டு ஓவியருக்கு வேலை போய் அந்த வேலை சிவாவுக்கே கிடைக்கிறது.

குடியிருப்பில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிறது. அந்தக் குடியிருப்பு பற்றி செய்தி பத்திரிகைகளில் வெளி வர.. அதைக் கட்டிக் கொடுத்த வீட்டு வசதித் துறை அமைச்சரான ‘ஜெயக்கொடி’ என்ற மிஷ்கினுக்கு முதல்வரிடமிருந்து டோஸ் விழுகிறது.

இந்த நேரத்தில் குடியிருப்பில் வசிக்கும் பொறியாளர், சிவாவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ரகளை செய்கிறார். இதையடுத்து அந்தப் பொறியாளரை கேள்வி கேட்கப் போன சிவாவுக்கு அதற்கான தைரியமில்லாமல் திரும்பி வருகிறார். இந்த நேரத்தில் சிவாவின் அம்மா, அவரை தைரியமில்லாத கோழை, தொடை நடுங்கி என்று திட்டித் தீர்க்கிறார்.

பெத்த அம்மாவின் இந்த வசை சொல்லைத் தாங்க முடியாமல் சிவா தற்கொலைக்கு முயல்கிறார். ஆனால் தப்பித்துக் கொள்கிறார். இந்த விபத்தில் அவரது தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்படுகிறது.

இதையடுத்து சிவாவுக்கு மட்டும் ஒரு அசிரீரி குரல் கேட்கத் துவங்குகிறது. அது அடுத்தடுத்து சிவாவைச் சுற்றி நடப்பதை அவருக்கே எடுத்துச் சொல்கிறது. இதையடுத்து சிவா குழப்பத்தில் ஆழ்கிறார். இந்த அசிரீரி குரலினால் சிவாவின் தினப்படியான வாழ்க்கையில் பெரும் குழப்பம் ஏற்படுவதோடு அமைச்சர் மிஷ்கினை செருப்பால் அடிக்கும் சூழல் ஏற்படுகிறது. ரவுடிகளை அடித்தும் விரட்டுகிறார்.

அமைச்சரையும், அவரது அடியாட்களையும் சிவா எதிர்கொண்ட விதத்தைப் பார்த்து அவரை ஹீரோவாக கொண்டாடுகிறார்கள் அந்தக் குடியிருப்பு மக்கள். இதையடுத்து உச்சப்பட்ச கோபத்தில் இருக்கும் அமைச்சர் மிஷ்கின், சிவாவை இல்லாமல் ஆக்க முனைகிறார்.

இந்தக் கண்டத்திலிருந்து சிவா தப்பித்தாரா..? இல்லையா..? பயந்து நடுங்கி கோழையாக இருந்த சிவா எப்படி மாவீரனார்..? அந்தக் குடியிருப்பின் கதி என்னவானது..? மக்கள் என்னவானார்கள்..? என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான கதை.

படத்தின் பெரும் பலம் சிவகார்த்திகேயனும் யோகிபாபுவும்தான். தொடர்ச்சியாக தன்னுடைய படங்களின் கதையம்சத்தில் வித்தியாசத்தைக் காட்டி வரும் சிவகார்த்திகேயன் இந்தப் படத்திலும் சிறிதளவு வித்தியாசத்தை கொடுத்திருக்கிறார்.

மாஸ் ஹீரோக்கள் யோசிக்கும் அளவுக்கான ஒரு சப்-கேரக்டரை படத்தில் வைத்துக் கொண்டு, அந்தக் கதாப்பாத்திரத்தின் துணையோடு படம் முழுவதும் வலம் வர வேண்டுமெனில் அதற்கே தனி தைரியம் வேண்டும். அந்தத் தைரியத்திற்கு நமது பாராட்டுக்கள்.

இந்தப் படத்துக்காக முற்றிலுமாக மாற்றியிருக்கிறார் சிவா. இயக்குநர் வடிவமைத்திருக்கும் அந்த ‘சத்யா’ கதாபாத்திரத்தில் அட்டகாசமாக பொருந்திப் போகிறார் சிவா.

தன்னுடைய வழக்கமான யதார்த்தமான காமெடிசென்ஸ், எமோஷன்ஸ், குடும்பங்களுக்கும் பிடிக்கும் வகையிலான பொறுப்பான மகனுக்கான பேச்சு, பெண்களுக்குப் பிடித்தாற் போன்ற கேரக்டர் ஸ்கெட்ச், தனது ரசிகர்களுக்குப் பிடித்தது போன்ற மேனரிசங்கள் என்று அனைத்து ஏரியாக்களிலும் நன்றாகவே கல்லா கட்டியிருக்கிறார் சிவா.

அம்மாவிடம் “சண்டைக்குப் போகாதே” என்று வம்படி செய்வதும், வரும் சண்டைகளை கண்டு ஒதுங்கிப் போவதுமாய் இருக்கும் சிவாவுக்கு ‘மாவீரன்’ பட்டம் கிடைக்க வழி செய்யும் அந்த அசிரீரி குரலின் வருகை திரை ரசிகர்களுக்கும்கூட ஒரு புதுமையான திரைக்கதாப்பாத்திரம்தான்.

அந்த அசிரீரியின் வழி நடத்தலால் சுத்திப் போடும் அல்லக்கைகளை ‘கைமா’ செய்துவிட்டு மிஷ்கினின் முன்னால் கையைப் பின்னால் கட்டிக் கொண்டு பவ்யமாக முட்டி போட்டு அமரும் காட்சியில் சிச்சுவேஷன் காமெடியை உருவாக்குகிறார் சிவா.

அசிரீரியின் தொல்லை தாங்காமல் வானத்தைப் பார்த்து திட்டித் தீர்ப்பதும், தெரியாத்தனமாக அதைக் கேட்டு விட்டு நல்லதே நடக்க… நம்ப மறுப்பவர்களிடம் அதைச் சொல்லிச் சொல்லி அழும்போதும் நமக்கே ஐயோ பாவம் என்ற உணர்வை  ஏற்படுத்துகிறார் சிவா.

கிளைமாக்ஸ் சண்டை காட்சியி்ல் ‘பொறுத்தது போதும்; பொங்கி எழு மனோகரா’வா ”நீ இங்க இருப்பியாடா” என மிஷ்கினை பார்த்து கர்ஜிக்கும் காட்சியிலும், ஒரிஜினல் ‘மாவீரனாக’ உயர்ந்து நிற்கிறார் சிவா.

யோகி பாபுவின் இருப்பும், அவர் நடத்தும் காமெடியும் இன்னொரு பக்கம் தியேட்டரில் அதகளம் செய்கிறது. படம் முழுக்க சிவா-யோகி பாபு காம்பினேஷன் காமெடி பட்டாசை கொளுத்தியிருக்கிறார்கள்.

மண்டேலா’ படம் போலவே இந்தப் படத்திலும் யோகிபாபுவை வைத்து மிக நாகரீகமான நகைச்சுவையை வழங்கியிருக்கிறார் இயக்குநர் மடோன். அனைத்து படங்களிலும் தன்னுடைய உருவத்தை வைத்தே கேலியையும், கிண்டலையும் பேச அனுமதிக்கும் யோகிபாபுவுக்கு, இந்தப் படத்தில் அப்படி எதுவும் வாய்ப்பில்லை என்பதே வித்தியாசம்தான்.

அவ்வப்போது யோகிபாபு தன்மையாக “வேற எங்கேயும் கை வைச்சிராதீங்க.. எதையும் உடைச்சிராதீங்கடா…” என்று குடியிருப்புவாசிகளிடம் கெஞ்சும்போது நம்மை அறியாமலேயே சிரிக்க முடிகிறது. அதிலும் வீட்டுக்குள் 10 பெண்கள் உட்கார்ந்திருக்கும்போது, “என்ன தைரியத்துல இத்தனை பேரு ஒரே வீட்டுக்குள்ள உக்காந்திருக்கீங்க…?” என்று கேட்கும்போது வெடிச் சிரிப்பை சிரிக்க வைக்கிறார் யோகிபாபு.

மிஷ்கினிடம் சிவகார்த்திகேயன் மாட்டிக் கொள்ளும்போது அவர் யோகி பாபுவையும் மாட்ட வைத்து அடி வாங்க வைக்கும் இடமும் குபீர் சிரிப்புதான்.

சப்-எடிட்டர் ‘நிலா’வாக அதிதி ஷங்கர் அமைதியான, பத்திரிகையாளராக நம் மனதில் இடம் பிடிக்கிறார். திரைக்கதையில் பெரிய வேலையில்லை என்றாலும் படத்தை நகர்த்துவதற்கு பெரிதும் உதவியிருக்கிறார்.

சிவாவின் அம்மாவாக சரிதா. பழைய சரிதாவையே ஞாபகப்படுத்துகிறார்.  கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்பட்டே தீரணும் என்ற கொள்கையுடைய சரிதாவின் கேரக்டர் ஸ்கெட்ச் சுவாரசியமானது. அவரை வைத்தே கலகத்தை உண்டு செய்யும் திரைக்கதைக்கு அழுத்தமாக உணர்வுபூர்வமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் சரிதா.

அமைச்சர் ஜெயக்கொடியாக நடித்திருக்கும் மிஷ்கின் நடிப்பில் பிசாசாக மாறியிருக்கிறார். வெறி கொண்ட மனிதராக கடைசிவரையிலும் தனது அரசியல் அடாவடித்தனத்தை வசனத்திலும், நடிப்பிலும், ஆக்சனிலும் காண்பித்திருக்கிறார்.

சிவாவின் வீட்டுக்கே வந்து பேசும்போது அவர் காட்டும் முக பாவனைகளும், நடிப்பும்.. தன் உதவியாளர் சுனிலின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு “என்ன நண்பா..?” என்று கெஞ்சும்போதும் மனிதர் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அதே நண்பனை போட்டுத் தள்ளிவிட்டு “30 வருஷமா காதுல ஒலிச்சிட்டிருந்தது.. சனியன்.. இன்னிக்குத் தொலைஞ்சது..” என்று சொல்லி சலித்துக் கொள்ளும்போதும் தனது வில்லத்தன நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார் மிஷ்கின்.

இவரது உதவியாளராக நடித்திருக்கும் தெலுங்கு நடிகரான சுனில், மிஷ்கினை கன்ட்ரோலில் வைக்க படும் அவஸ்தைகளும், பொறுமையிழந்து அவர் செய்யும் செயல்களும், பேசும் வசனங்களும் படத்தின் தன்மைக்கு வலு சேர்த்திருக்கின்றன.

சிவாவின் தங்கை மோனிஷா, ஆட்டோ டிரைவர் திலீபன், பொறியாளராக நடித்தவர் என்று கவனிக்கத்தக்க நடிப்பைக் கொடுத்தவர்களும் சிறப்பான இயக்கத்தினால் சிறப்பாகவே நடித்துள்ளனர். முதலமைச்சராக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல் மிஷ்கினையே அடக்கி வைக்கும் தலைவனாக தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

விது அய்யனாவின் ஒளிப்பதிவில் பகல் நேரக் காட்சிகளைவிடவும் இரவு நேரக் காட்சிகளே கண்களைக் கவர்கின்றன. பரத் ஷங்கரின் இசையில் பாடல்கள் முணுமுணுக்க வைத்துள்ளன. சிவாவின் மாவீரன் அவதாரத்தின்போது ஒலிக்கும் பின்னணி இசை அந்தக் கேரக்டரை ரொம்பவே உயர்த்துகிறது. யானிக் பென்னின் சண்டைக் காட்சிகள் ரொம்பவே வித்தியாசம்தான்.

படத்தின் பட்ஜெட்டில் பாதி கலை இயக்கத்திற்கே போயிருக்கும் என்று நினைக்கிறோம். அந்தக் குடியிருப்பையும், வீடுகளின் உள் கட்டமைப்பையும் பிரம்மாண்டமாக காட்டி அசத்தியிருக்கிறார் கலை இயக்குநர். படத்தின் நீளத்தை குறை சொல்லாத அளவுக்குக் கதையின் நேர்த்தி அமைந்துள்ளது.

தனது முதல் படமான ‘மண்டேலா’வைப் போலவே இதிலும் ஒரு சமூகப் பிரச்னையைத்தான் முன் வைத்திருக்கிறார் இயக்குநர் மடோன்.

ஆனால் 3 கதைகளை ஒன்றாக்கிக் கொடுத்திருப்பதால் கொஞ்சம் ஓவர் டோஸோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

அசிரீரி குரலால் கோழை ஒருவன் மாவீரனாவது ஒரு கதை. தரம் குறைவான அடுக்கு மாடிக் குடியிருப்பில் சிக்கிய மக்களின் பரிதாப நிலை இன்னொரு கதை. அரசியல்வாதிகளை எதிர்க்கும் சாதாரணமான ஒருவனின் கதை என்று 3 கதைகளை உள்ளடக்கி மூன்றையும் சம அளவுக்கு பந்தி பரிமாறியிருக்கிறார் இயக்குநர்.

படத்தில் இருக்கும் ஒரே பிரச்சினை.. படத்தை முழுமையாக காமெடியாகவே கொண்டு போயிருக்கலாம். அல்லது சீரியஸாக கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் அந்தக் குடியிருப்புக்கான கதை காமெடிக்கான அடித்தளம் இல்லை. வேறொரு கதையைத்தான் கொணர்ந்திருக்க வேண்டும். இதை சீரியஸாகவே கொண்டு போயிருந்தால் படம் வேறு லெவலாக இருந்திருக்கும்.

கேள்வி கேட்டால்தான் எதுவும் நடக்கும்; எதுவும் கிடைக்கும் என்பதையே இந்தப் படத்தின் மூலமாக இயக்குநர் சொல்லியிருக்கிறார். அந்த வகையில் இது ஒரு அரசியல் கலந்த படம் என்றும் சொல்லலாம்..!

சிவகார்த்திகேயன் தன்னுடைய திரையுலகப் போட்டியாளரான விஜய் சேதுபதியின் குரலை இரவலாகப் பெற்று, அதன் மூலமாக கட்சி ப்ளஸ் ஆட்சி அரசியல் பேசியிருப்பதே இன்னொரு திரையுலக அரசியல்தான்..!

இந்த ‘மாவீரன்’ நிச்சயமாக மாவீரன்தான்..!

RATING : 4 / 5

Our Score