தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக சூறாவளியாய் சுழன்றடிக்கும் அரசியல் செய்தி ‘ஜி ஸ்கொயர்’ என்ற நிறுவனத்தில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனைதான்.
சுமார் 25 நிறுவனங்களுக்கும் மேல் நடத்தி வரும் ‘ஜி ஸ்கொயர்’ என்ற கட்டுமான நிறுவனம் தற்போது தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் குடும்பத்தினருடன் சம்பந்தப்பட்டது என்ற செய்தி, கடந்த சில வருடங்களாகவே பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் கடந்த 2 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனையிட்டு வருகிறார்கள். 2 நாட்களாகியும் இன்னமும் இந்த சோதனை முடிவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சோதனையின் தொடர்ச்சியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘மாவீரன்’ படத்தையும் ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனம்தான் தனது பினாமி பெயரில் தயாரித்து வருவதாக வதந்திகள் பரவத் தொடங்கின.
இது தொடர்பாக ‘மாவீரன்’ படத்தின் தயாரிப்பாளரான அருண் விஸ்வாவிடம் நாம் கேட்டபோது, “நல்ல வேளை ஸார்.. நீங்களாச்சும் கேட்டீங்க..! இந்த ‘மாவீரன்’ படத்தை அருண் விஸ்வா என்ற நான்தான் தயாரித்து வருகிறேன். என்னிடம் இருக்கும் பணத்தை வைத்தும், கடன் வாங்கியும்தான் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறேன்.
இந்தப் படத்துக்கும் அந்த ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனத்திடம் இந்தப் படத்திற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ கடன் வாங்கவே இல்லை.
இந்த வதந்தியை யார், எதற்காக திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள் என்றே தெரியவில்லை. இந்த ‘மாவீரன்’ படம் துவங்கியதில் இருந்தே சிலர் இந்தப் படத்திற்கு எதிராக பல்வேறு பொய் செய்திகளை வெளியில் பரப்பி வருகிறார்கள். இது என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது.
தமிழ்த் திரையுலகத்தில் ஒரு தயாரிப்பாளராக மிக இளம் வயதில் காலடி எடுத்து வைத்துள்ளேன். வாழ்த்த மனதில்லை என்றாலும் வசவுகளை வீசாமல் இருக்கலாமே..? இது போன்ற பொய்ச் செய்திகளை பரப்புவதால் அவர்களுக்கு என்ன லாபமோ தெரியவில்லை..” என்று சொல்லி வருத்தப்பட்டார்.