மாசில்லாத மாசிலாமணி என்கிற பெயருடன் இருக்கும் ஹீரோ பெயருக்கு நேர்மாறான செயல்களை செய்யும் ரவுடியாக வாழ்கிறார். போலீஸ் டிரெஸ்ஸை அணிந்து டாஸ்மாக்கை கொள்ளையடிப்பது.. கஸ்டமஸ் ஆபீஸர் போல் உடையணிந்து கடத்தல் பணத்தைக் கொள்ளையடிப்பது போன்ற மாசு வேலைகளை தனது உயிர் நண்பன் பிரேம்ஜியுடன் இணைந்து செய்து வருகிறார்.
கஸ்டம்ஸ் பிராஜெக்ட்டில் கொள்ளையடித்த பணத்தை பறி கொடுத்த ரெட்டி. சூர்யாவை தேடிப் பிடித்து பணத்தைக் கேட்க அங்கே நடக்கும் அடிதடிக்குப் பிறகு அவர்களிடமிருந்து தப்பிக்க நினைத்து காரில் தப்பியோடுகிறார்கள். வழியில் கார் விபத்துக்குள்ளாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைக்கிறார் சூர்யா.
மருத்துவமனையில் இருந்து வெளியில் வரும் சூர்யாவிற்கு, ஆத்மா சாந்தியாகாமல் இன்னமும் ஊருக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கும் ஆவிகள் கண்ணில் தெரிகின்றன. அவைகள் அனைத்தும் சூர்யாவை சுற்றி வளைத்து தங்களது ஆசையை நிறைவேற்றித் தரும்படி கேட்க.. அவைகளை வைத்து பேயோட்டும் பிஸினஸை துவக்குகிறார் சூர்யா. இதில் நன்றாக கல்லா கட்டவே இதனையே தொடர நினைக்கிறார்.
இந்த நேரத்தில்தான் திடீரென்று ஷக்தி என்னும் இன்னொரு சூர்யா பேயாக காட்சியளிக்கிறார். அவர் தனக்கொரு உதவி என்று சொல்லி நிஜ சூர்யாவை நெல்லைக்கு அழைத்துச் செல்ல அந்த வேலை கொலையில் முடிகிறது..!
அந்தக் கொலைக்கான காரணத்தை தேடியறியும் முயற்சியில் சூர்யா இறங்க.. அப்போதுதான் அவருக்கே அவரது பிறப்பு, குடும்பம் போன்றவைகள் தெரிய வர.. ஆன்ட்டி கிளைமாக்ஸாகிறது கிளைமாக்ஸ்.. இதன் பின் என்ன ஆகிறது என்பதுதான் கதையே..!
முந்தைய பேய் படங்களிலெல்லாம் பேய்களுக்கு இருக்கும் அபரிமிதமான சக்தியைக் காட்டி அதனை வைத்துத்தான் தியேட்டரை அலற வைத்தார்கள். இதில் பேய்களுக்கு ஒரு குறிப்பிட்ட ரேஞ்ச்சுக்கு மட்டுமே சக்தியுண்டு எனவும், அதற்கு மேல் கிடையாது என்றும் சொல்லி மிச்சத்துக்கு சூர்யாவை ஆக்சன் செய்ய வைத்திருக்கிறார்கள். ஆனாலும் பேய்களுக்கு தொடும் உணர்ச்சி கிடையாது என்று சொல்லிவிட்டு மேசையில் இருக்கும் டம்ளர், தட்டுக்களை பறக்க விடுவதெல்லாம் எந்த வகையில் நியாயம் இயக்குநரே..?
படத்தின் முற்பாதியில் கதைக்களம் சற்று சோர்வடையச் செய்தாலும் பிற்பாதியில்தான் ‘மாஸ்’ தெறிக்கிறது. படத்தின் குறிப்பிட்ட மூன்று இடங்களில் வெங்கட்பிரபுவின் திரைக்கதை டிவிஸ்ட் ரசிக்க வைத்திருக்கிறது. பிரேம்ஜியின் அன்றைய நிலையை சூர்யா உணரும் கட்டம். ஷக்தி யார் என்பதை சூர்யா தெரிந்து கொள்ளும் காட்சி.. சூர்யாவுக்கு இருந்த மாஸ் சக்தி அவரை விட்டுப் போய்விட்டதை அறியும் காட்சி என்று கொஞ்சம் இடைவெளிவிட்டு விட்டு டிவிஸ்ட்டுகளை ஒழுங்குபடுத்தியிருப்பதால் படத்தினை பிற்பாதியில் பெரிதும் ரசிக்க முடிந்தது..!
இந்தப் படம் சூர்யாவுக்கு மிகப் பெரிய பெயரை பெற்றுத் தராது என்றாலும் இருக்கின்ற பெயரை குறைக்காதவகையில் இயக்கமும், நடிப்பும் அவரைக் காப்பாற்றியிருக்கிறது. பிரேம்ஜியின் நிலை பற்றி தெரிந்து புலம்புவதும்.. ஷக்தி யார் என்று தெரிந்து தன் நிலை உணர்ந்து அழுவதிலும்தான் கொஞ்சம் சூர்யாவுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
நல்லாத்தான போயிக்கிட்டிருக்கு என்று சொல்லும் நிலையில் இந்தப் படத்தில் எதற்கு ஈழத் தமிழர் கேரக்டர் என்று தெரியவில்லை. ஈழத் தமிழரின் சொத்துக்களை அபகரிக்கும் உள்ளூர் தமிழனை எட்டி உதைத்து நியாயம் கேட்கிறார் ஈழத் தமிழன் ஷக்தி. அவர் பேசும் வசனத்திற்கும் அந்தக் காட்சிக்கும் ஒட்டவேயில்லையே..?
மற்றபடி நயன்தாராவை பார்த்தவுடன் காதல் கொள்வது.. விரட்டிப் பிடிப்பது.. ரெட்டியுடன் நக்கலாகப் பேசியே தப்பிப்பது.. ஆவிகளை அதட்டலுடன் சமாளிப்பது.. அவைகளுக்கும் மனம் உண்டு என்பதை உணர்ந்து அவர்கள் ஒவ்வொருவரின் ஆசையையும் நிறைவேற்றி வைப்பது போன்றவைகளில் ஜமாய்த்திருக்கிறார் சூர்யா.
இந்தப் படத்திற்கு எதற்கு நயன்தாரா என்று தெரியவில்லை. அவர் படத்தில் பேசியிருக்கும் மொத்த வசனமும் அரை பக்க பேப்பரில் எழுதிவிடலாம். அவ்வளவுதான்.. ஆனால் திரைக்கதையில் மிக கச்சிதமாக அவரை உட்புகுத்தி கடைசிவரையிலும் இழுத்திருக்கிறார்கள்..! இவரைவிடவும் இவரது தோழியாக நடித்தவருக்குத்தான் நடிக்க ஸ்கோப் கிடைத்துள்ளது.
பிரேம்ஜி கொஞ்சம் அடக்கமாக பேசியிருக்கிறார். சிற்சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். பல இடங்களில் கலகலக்க வைக்கிறார். ஆனாலும் இன்னமும் அலட்டல் நடிப்பை கைவிடவில்லை. இதையும் கைவிட்டாரென்றால் நன்றாகவே இருக்கும்.
சமுத்திரக்கனி மீது வெங்கட்பிரபுவுக்கு என்ன கோபமோ தெரியவில்லை. இதில் வசமாக ஒரு வில்லன் கேரக்டரை கொடுத்து அடி வாங்கியே சாகடித்துவிட்டார்கள். அதிலும் எம்.ஜி.ஆர். காலத்து வில்லனை போன்ற கெட்டப் வேறு..?!
இன்னுமொரு சுவாரய்மான கேரக்டர் பார்த்திபனுடையது. நல்லவரா.. கெட்டவரா.. வல்லவரா.. என்றெல்லாம் யோசிக்கவேக்கூட நேரமில்லாமல் டயலாக் மூலமாகவே சுவாரஸ்யத்தைக் கூட்டிக் கொண்டே போகிறார் பார்த்திபன்.
அவருடைய தனி ஸ்டைலில் ‘எதையுமே புடுங்கலைன்னு சொல்லிடக் கூடாது பாரு..’ என்று சொல்லிவிட்டுப் போகுமிடத்தில் தியேட்டரே கை தட்டலில் அதிர்கிறது. பார்த்திபனின் பஞ்ச் அண்ட் டைமிங்கான வசனங்களுக்கு இன்னமும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்..!
யுவன்சங்கர்ராஜாவின் இசையை பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. பாடல்களெல்லாம் தியேட்டர்களில் கேட்பதோடு சரி.. வெளியில் வந்தவுடன் எதுவும் நினைவில்லை. சில இடங்களில் பின்னணி இசை மட்டுமே ரசிக்கும்படி இருந்த்து..!
வெளிநாட்டு லொகேஷனை படமாக்கியவித்த்தில் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் தன் பெயரை பதிவு செய்திருக்கிறார். ஆனால் நயன்தாராவை மட்டும் ஏன் இப்படி டல்லாக காட்டியிருக்கிறார் என்றுதான் தெரியவில்லை. பாடல் காட்சிகள் அனைத்தும் கலர்புல்லாக இருந்தும், ஆடல், பாடல் கண்ணுக்குக் குளிர்ச்சி.. கேமிராவிலும் அசர வைத்திருக்கிறது. இன்னொரு பாடல் காட்சியில் உருக்கத்தைக் கொடுக்க கேமிராவும் துணை நின்றிருக்கிறது.
பேய்கள் துரத்தி வரும் காட்சியிலும்.. அவைகள் சம்பந்தப்பட்ட அத்தனை காட்சிகளிலும் எடிட்டரின் உதவியினால் காட்சிகளின் தொகுப்பும் பார்க்கும்படியிருக்கின்றன. எல்லாம் இருந்தும் மனதைத் தொடும் காட்சிகளும், அதீத பயமுறுத்தல்களும் இல்லாததால் பேய்ப் பட வரிசையில் இடம் கொடுக்காமல் சூர்யாவின் படமாகவே இதனைப் பார்க்கலாம்..!