இந்தப் படத்தை தனது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தன்னுடைய 98-வது படமாக தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா சித்தாராஃ விவேக் பிரசன்னா ரேணுகா, லிவிங்ஸ்டன், பி.எல்.தேனப்பன், பைவ் ஸ்டார் கிருஷ்ணா, ஹரிதா, முத்தரசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
சுதிர் சங்கர் படத்தை இயக்கியுள்ளார். கதை, திரைக்கதை வசனம் எழுதியிருப்பது வி. கிருஷ்ணமூர்த்தி. ஒளிப்பதிவு – கலைச்செல்வன் சிவாஜி இசை – யுவன் சங்கர் ராஜா, படத் தொகுப்பு – ஸ்ரீஜித் சாரங், பத்திரிகை தொடர்பு ரியாஸ் கே.அகமது, யுவராஜ்.
‘மாரீசன்’ என்ற பெயர் ராமாயணத்தில் வரக் கூடிய ஒரு கதாபாத்திரத்தின் பெயர். ராவணனின் சொந்தத் தாய் மாமன்.
சீதையைக் கவர்ந்து வருவதற்காக சீதையின் முன்னால் ஒரு பெண் மானாக வேடமிட்டு தன் பின்னால் லட்சுமணனை ஓடவிட்டவன்தான் ‘மாரீசன்’.
அந்த ‘மாரீசன்’ என்ற பெயரைத்தான் இந்தப் படத்திற்குப் பொருத்தமாக வைத்திருக்கிறார்கள் படத்தில் ‘மாரீசன்’ யார் என்றால் அது வடிவேலுதான்.
இப்போதுதான் பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளியில் வருகிறார் ஸ்மால் திருடரான :தயாளன்’ என்ற பகத் பாசில்.
வெளியில் வந்த உடனேயே தாமிரபரணி ஆற்றங்கரையில் ஒரு செல்போனை கவர்ந்துவிட்டு, ஒரு சினிமா தியேட்டரில் யமஹா ஆர் எக்ஸ் 100 பைக்கையும் கவர்ந்து விட்டு தப்பிச் செல்கிறார் பகத் பாசில்.
அவர் நீண்ட நாட்களாக நோட்டமிட்டு காத்திருந்த ஒரு வீடு இப்போது அவர் நினைவுக்கு வர அந்த வீட்டுக்கு கொள்ளை அடிப்பதற்காக வருகிறார்.
வீட்டுக்குள் சென்றால் வேலாயுதம் பிள்ளை என்ற வடிவேலுவை யாரோ சங்கிலியால் கட்டி போட்டு இருக்கிறார்கள். தன்னை இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றினால் 25 ஆயிரம் ரூபாய் பணம் தருவதாக பேரம் பேசுகிறார் வடிவேலு.
பணம் கிடைக்கிறது என்பதால் பகத் பாசிலும் அவரை விடுவிக்கிறார். அதோடு வடிவேலு தனக்கு வயதானதால் மறதி நோயான அல்சைமர் வந்திருப்பதாகவும் “தன்னுடைய மகன்தான் வந்து விட்டதாக நினைத்து உன்னிடம் பேசி விட்டேன்” என்றும் சொல்கிறார்.
“ஏடிஎம் சென்டருக்கு போனால் எனக்கு அந்த மிஷினை பார்த்தவுடனேயே ஏடிஎம் பின் நம்பர் ஞாபகத்துக்கு வந்து விடும்” என்கிறார். இதை நம்பி அவரை விடுவித்து அவரையும் அழைத்துக் கொண்டு ஏடிஎம் மிஷினுக்கு வருகிறார் பகத் பாசில்.
சொன்னபடியே பணத்தை கச்சிதமாக எடுத்துக் கொடுக்கிறார் வடிவேலு. ஆனால் வடிவேலுவின் அக்கவுண்டில் 25 லட்ச ரூபாய் இருப்பதை பார்த்து விடுகிறார் பகத் பாசில்.
வயதானவர் அல்சைமர் நோயால் அவதிப்படுபவர் என்பதால் எப்படியும் இவரிடம் இருந்து அந்த 25 லட்ச ரூபாயை கொள்ளையடித்து விடலாம் என்று நினைத்து, என்னென்னமோ பேச்சு வார்த்தைகள் நடத்தி வடிவேலுவை தன்னுடனே அழைத்துக் கொண்டு அவர் எங்கு செல்ல வேண்டுமோ அங்கே கொண்டு போய் இறக்கி விடுவதாக சொல்கிறார் பகத் பாசில்.
முதலில் பாலக்காடு செல்ல விரும்பும் வடிவேலு பின்பு திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டும் என்கிறார். இதனால் அவரை திருவண்ணாமலைக்கு அழைத்து வருகிறார் பகத் பாசில்.
இடையில் இடைப்பட்ட நேரத்தில் எப்படியாவது இவரிடமிருந்து பின் நம்பரை பெற்று பணத்தை திருடி செல்ல நினைக்கிறார் பகத். ஆனால் அதற்கான வாய்ப்பே கொடுக்காமல் போகின்ற இடங்களில் எல்லாம் ரூம் போட்டு இருவரும் தண்ணீர் அடித்து தங்களுடைய சொந்த கதை சோக கதைகளை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
வடிவேலு வைத்திருக்கும் ஏடிஎம் கார்டுகளை போலியாக தயாரிக்க தன்னுடைய நண்பன் கணேஷிடம் ஃபோன் செய்து அந்த ஏற்பாட்டையும் செய்கிறார் பகத்.
அதன் பின்பும் ஏடிஎம் செல்லும் போதெல்லாம் சட்டு சட்டு என்று வடிவேலுக்கு மறந்து போக பணம் எடுக்க முடியாமல் போகிறது.
கடைசியாக என்னதான் நடக்கிறது? அந்த பணத்தை பகத் கொள்ளை அடித்தாரா? வடிவேலு திருவண்ணாமலையில் தன்னுடைய நண்பர்களை சந்தித்தாரா? பாலக்காடு சென்று தன் மகளை பார்த்தாரா..? அவருடைய உண்மையான நிலைமைதான் என்ன?! இதுதான் இந்த ‘மாரீசன்’ படத்தின் திரைக்கதை.
வடிவேலுவுக்கு ‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு மிகப் பெரிய பாராட்டை பெற்று தரப் போகிறது இத்திரைப்படம்.
முதல் காட்சியிலேயே மிகவும் அமைதியாக, அடக்கமாக நம்மை நம்ப வைப்பது போல் பேசுகின்ற வடிவேலு… படத்தின் கடைசிவரையிலும் ஒரு சின்ன க்ளூகூட கொடுக்கவில்லை.
அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பை மிகச் சிறப்பாக கொடுத்து இருக்கிறார். அந்த கேரக்டர்ஸ் கட்சிக்கு ஏற்ற நடிப்பையும் இயக்குனர் அவரிடம் இருந்து கச்சிதமான முறையில் வரவழைத்திருக்கிறார்.
இடையிடையே பகத்தை வம்பு இழுப்பது போல் சாதாரணமான பேச்சுக்களிலேயே காமெடியை கொண்டு வந்திருக்கிறார் வடிவேலு.
அதே போல் திடீரென்று அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவராகவும் திடீரென்று நல்லவிதமாகவும் அவர் பேச பேச நமக்கும் பெரும் குழப்பம் ஏற்படுகிறது.
இடைவேளை பிளாக்கில்தான் ஒரே ஒரு வசனத்தை வைத்து அவருடைய நடிப்பு எந்த அளவுக்கு நடிப்பாக நம் கண்ணுக்கு தெரிகிறது என்பதை இயக்குனர் கோடு போட்டு காட்டி இருக்கிறார்.
இடைவேளையிலேயே வடிவேலுவின் உண்மையான முகம் நமக்கு தெரிந்து விடுவதால் இடைவேளைக்கு பின்பு அவர் காட்டுகின்ற நடிப்பு நமக்கு சுவாரஸ்யம் இல்லாமல் போய்விட்டது என்பது உண்மைதான்.
ஆனாலும் ஒரு பள்ளி ஆசிரியரை பள்ளி மைதானத்திலேயே வைத்து சம்பவம் செய்யும் அந்த இடத்தில் அவருடைய கோபமும், ஆவேசமும்… அதேசமயம் அமைதியான பேச்சும் நம்மை பெரிதும் கவருகிறது.
பகத் பாசிலின் அம்மா ரேணுகாவிடம் மனதளவில் டச் செய்வதற்காக அவருடைய கல்யாண நாள்தான் தன்னுடைய கல்யாண நாள் என்று சொல்லி ஒரு சீன் போடுகின்ற இடத்திலும் வடிவேலுவை நமக்கு பெரிதும் பிடித்து போகிறது.
தன்னுடைய காதல் மனைவிக்கு வந்த நோயைப் பற்றி அவர் வருத்தப்படும் போதும் தன்னையே யார் என்று தெரியாமல் தன்னிடம் பேசிவிட்டு அமைதியாக வந்திருக்கும் மனைவியின் மீது வெளியில் வந்து கதறி அழுகும் அந்த ஒரு காட்சியில் நம் மனதில் பதிந்து விட்டார் வடிவேலு.
இனிமேல் வரும் காலங்களில் வடிவேலு இதுபோன்ற கதையின் நாயகனாகவே நடிக்கலாம். அவருக்கான கதைகள் நிறையவே காத்திருக்கின்றன. அவர் மனம் வைத்தால் இதுபோன்ற அவருக்கு பெருமை சேர்க்கும் திரைப்படங்கள் நிறையவே வரும்.
மலையாள திரையுலகத்தில் நடிப்பு அரக்கண் என்று சொல்லப்படும் பகத் பாசில் இந்தப் படத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்து இருக்கிறார். அவருக்கான ஸ்கோப் இந்தப் படத்தில் அதிகமாக இல்லை என்பதும் உண்மை.
கொஞ்சம், கொஞ்சம், சில, பல காட்சிகளில் மட்டுமே பழைய பகத் பாசிலை நம்மால் பார்க்க முடிகிறது. ஒரு சில இடங்களில் வடிவேலுவை கலாய்த்தும் கிண்டல் செய்தும் அவரை கண்டுபிடிக்கும் விதத்தில் பேசுகின்ற சில காட்சிகளிலும்தான் உண்மையில் அவரை ரசிக்க முடிந்திருக்கிறது.
வடிவேலுவின் மனைவியாக நடித்திருக்கும் சித்தாரா சில காட்சிகளே என்றாலும் நம் மனதில் பதிகிறார். இப்படி ஒரு மனைவிக்கு, தாய்க்கு இப்படி ஒரு நோய் வந்திருக்கக் கூடாது என்று நாம் வருத்தப்படும் அளவுக்கு அவருடைய நடிப்பும் அமைந்துள்ளது.
சில காட்சிகளே ஆனாலும் பகத் பாசிலின் அம்மாவாக நடித்திருக்கும் ரேணுகா தன்னுடைய படபட பேச்சால் பெரிதும் கவருகிறார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மாவாக நடித்திருக்கும் ஹரிதாவும் தன்னுடைய பேச்சிலேயே ஒரு பரிதாபத்தை வரவழைத்து இருக்கிறார்.
போலீஸ் துணை கமிஷனர் ஆக நடித்திருக்கும் கோவை சரளாவுக்கு நிச்சயம் இது ஒரு வித்தியாசமான ஒரு வேடம்தான். ஆனாலும் ஹரிதா சொல்லும் அந்த உண்மைக் கதையைக் கேட்டு விட்டு எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் ஏதோ நிறையவே இது போன்ற கதைகளை கேட்டதுபோல அமர்ந்திருக்கும் கோவை சரளாவின் அந்த நடிப்பைத்தான் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.
வில்லனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா இறுதிக் காட்சியில்தான் தன்னுடைய வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார்.
கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு சிறப்பு. எந்த இடத்திலும் ஒளிப்பதிவு தரம் குறையவில்லை ஊர் ஊராகச் சுற்றினாலும் ஒரு காட்சியில் இருந்து அடுத்தக் காட்சிக்கு நகரமும் இடமும் மாறும்போதும்கூட அந்த ஒளிப்பதிவில் தடமோ, தரமும் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் மூன்று பாடல்கள் கேட்கும் ரகம்தான். ஆனால் இன்னமும் சிறப்பான இசையை கொடுத்திருக்கலாம்.
பின்னணி இசை அப்படி ஒன்றை படத்தில் இருந்ததா என்ற நம்மை கேட்க வைக்கும் அளவுக்கு இயக்குநர் கதாபாத்திரங்களால் நம்மை கவர்ந்துவிட்டதால் பின்னணி இசை நம்மை பெரிதும் பாதிக்கவில்லை.
வசன காட்சிகளே அதிகமாக படத்தில் இருப்பதால் அதிலும் பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட பல காட்சிகளையும் மிக அழகாக தொகுத்து அளித்து ரியாக்க்ஷனிலேயே கொஞ்சம் காமெடியையும் வரவழைப்பது போல் கொடுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங்.
படம் முழுவதும் வடிவேலு கலர் கலர் சட்டைகளை போட்டு இன் செய்து மிக அழகான தோற்றத்திற்கு மாறியிருக்கிறார். இது போன்ற கெட்டப்பில் அவர் நடித்திருப்பது இதுதான் முதல்முறை என்பதால் உடை வடிவமைப்பாளரையும் நாம் மனதார பாராட்ட வேண்டும்.
படம் பொதுவாக, வழக்கமான போஸ்கோ வழக்கு ஒன்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது என்றாலும் அதற்கு மேல் பூச்சு, கீழ் பூச்சாக அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு முதியவர்… ஒரு திருடன் அவரிடமிருந்து பணம் பறிக்க முயல்கிறான்… என்பதாக கதையை கொண்டு சென்று, இடைவேளையிலேயே அதை பட்டென்று போட்டு உடைத்துவிட்டது ஏன் என்றுதான் தெரியவில்லை.
இடைவேளையிலேயே வடிவேலுவின் கேரக்டர் நமக்குப் புரிந்துவிட்டதால் அதற்குப் பிறகு அவர் நடிக்கின்ற அத்தனை நடிப்பும் நடிக்கிறாரே என்கின்ற ஒரு காரணத்தினாலேயே சுவாரசியம் இல்லாமல் போய்விட்டது.
அதோடு மொத்தப் படத்திற்கும் அடிப்படையான கதையே பள்ளி சிறுமிகள் மீதான பாலியல் தொல்லைதான்.
ஆனால், அதை வெறும் வசனத்தின் மூலமாகவே வைத்து படத்தை நகர்த்தி இருப்பதால் அதனுடைய இம்பேக்ட் எதுவும் நம் மனதைத் தொடவில்லை என்பது வருத்தமான விஷயம்.
அது தொடர்பான சில காட்சிகளையாவது அழுத்தமாக இயக்குநர் கொடுத்திருக்கலாம். அப்படி கொடுக்காமல் போனதால் நமக்கு இது ஒரு சாதாரண வழக்காகவே நம் மனதில் நின்றுவிட்டது.
பகத் பாசில் திருடன் என்றாலும் ஓரளவுக்கு நல்லவன் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்கிறார். அந்த தன்னைத்தானே நல்லவன் என்று சொல்லிக் கொள்பவர்தான் கிளைமாக்ஸ்சில் விவேக் பிரசன்னாவை வதம் செய்கிறார்.
அதற்கு இந்த வசனம் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது என்றாலும் இத்தனை வருடமாக நண்பனாக இருந்தவனை இப்படி ஒரே நாளில் கொலை செய்யும் அளவுக்கு பகத் பாசில் அவ்வளவு நல்லவரா என்ற கேள்வியும் நமக்குள் எழுகிறது.
தன்னுடைய மனைவியின் மரணத்திற்கு மறைமுகமாக காரணமாக இருந்த அந்தக் கயவர்களை வேட்டையாடும் ஒரு சாதாரண கணவனின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவேலுவின் கேரக்டர்ஸ் ஸ்கெட்ச் நமக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
இதுபோன்ற கதையம்சம் கொண்ட படங்கள் இதுவரையில் வந்ததில்லை என்றே சொல்லலாம்.
மனைவிக்காக பழி வாங்கும் கணவன் என்ற ரீதியில் வந்திருக்கும் இந்தப் படத்துக்கு ‘மாரீசன்’ என்ற தலைப்பு எந்த வகையில் பொருத்தம் என்பது இயக்குநருக்கே வெளிச்சம்!!









