full screen background image

மாறன் – சினிமா விமர்சனம்

மாறன் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்திருக்கிறார்.

தனுஷ் நாயகனாகவும், மாளவிகா மோகனன் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், ஜெயப்பிரகாஷ், இளவரசு, ஸ்மிருதி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன், இயக்குநர் அமீர், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – விவேகானந்த் சந்தோஷம், இசை – ஜி.வி.பிரகாஷ்குமார், தயாரிப்பு வடிவமைப்பு – ஏ.அமரன், படத் தொகுப்பு – ஜி.கே.பிரசன்னா, கூடுதல் திரைக்கதை – விவேக், சர்பு, சுகாஷ், சண்டை இயக்கம் – ஸ்டண்ட் சில்வா, விக்கி, உடைகள் வடிவமைப்பு – காவ்யா ராம், உடைகள் – செல்வம், தன்ராஜ், நடன இயக்கம் – ஜானி, தயாரிப்பு நிர்வாகம் – பி.ராஜ்குமார், புகைப்படங்கள் – சுரேஷ், ஒப்பனை – பி,ராஜா, கிராபிக்ஸ் – ஹரிஹரசுதன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன், தயாரிப்பு நிறுவனம் – சத்யஜோதி பிலிம்ஸ், தயாரிப்பாளர் – டி.ஜி.தியாகராஜன், இணை தயாரிப்பு – ஜி.சரவணன், ஜி.சாய் சித்தார்த், எழுத்து, இயக்கம் – கார்த்திக் நரேன்.

தனுஷ் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான கர்ணன்’ படத்திற்குப் பிறகு அவரது படங்கள் வரிசையாக ஓடிடியில் மட்டுமே வெளியாகி வருகின்றன.

அந்தரங்கி ரே’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘ஜகமே தந்திரம்’ வரிசையில் இந்த ‘மாறன்’ படமும் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் நேற்றைக்கு வெளியாகியுள்ளது.

இதுவரையிலும் தொடாமல் இருந்த ஒரு கேரக்டரை இந்தப் படத்தில் தொட்டிருக்கிறார் தனுஷ். “நான் பத்திரிகையாளராகவும் நடித்திருக்கிறேன்…” என்று பிற்காலத்தில் சொல்லிக் கொள்ள ஒரு வாய்ப்பாக இந்தப் படத்தை தனுஷ் பயன்படுத்திக் கொள்வார் போலும்..!

நேர்மையான பத்திரிக்கையாளராக இருந்த தனுஷின் அப்பாவான ராம்கி ஒரு பள்ளியில் நடக்கும் ஊழல் பற்றிய உண்மையை கண்டுபிடித்து தனது பத்திரிகையில் எழுதுகிறார்.

இதனாலேயே பிரசவ வலியில் துடித்த அவரது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது வழியிலேயே ரவுடிகளால் கொல்லப்படுகிறார். அதே சமயத்தில் பிரசவத்தின்போது அவரது மனைவி பெண் குழந்தையைப் பிரசவித்துவிட்டு பரிதாபமாக உயிரிழக்கிறார்.

ராம்கியின் 5 வயது பையனான தனுஷ், அந்தப் பிரசவத்தில் பிறந்த தனது தங்கையை தனது தாய் மாமனான ஆடுகளம்’ நரேன் உதவியுடன் தானே வளர்த்து ஆளாக்குகிறார்.

இருபது வருடங்கள் கழித்து இப்போது பத்திரிகையாளராக வாழ்ந்து வரும் தனுஷ் புதிதாக ஒரு பத்திரிகை நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார். பல புதிய, புதிய பிரேக்கிங் நியூஸ்களை அறிவித்து தமிழகம் முழுவதும் அறியப்பட்ட பத்திரிகையாளராக மாறுகிறார்.

இந்த நேரத்தில் இவருடைய பள்ளித் தோழரும் தற்போது போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் இருக்கும் ஒரு நண்பனின் தகவலால் ஒரு மிகப் பெரிய முறைகேட்டினை கண்டறிகிறார்.

நடைபெறவுள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியின் இடைத் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிடப் போகும் முன்னாள் அமைச்சரான சமுத்திரக்கனி ஓட்டு மெஷினில் போர்ஜரி செய்யப் போகிறார் என்கிற விஷயத்தை ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பத்திரிகையில் வெளிப்படுத்துகிறார் தனுஷ்.

இது அவரது குடும்பத்தில் பலவித பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. அரசியல்வாதி சமுத்திரக்கனிக்கும் இவருக்கும் இடையில் கடும் மோதலையும் உருவாக்குகிறது. தொடர்ந்து கடத்திச் செல்லப்பட்ட தனுஷின் உயிருக்கு உயிரான தங்கை உயிரோடு எரிக்கப்பட்டதாக போலீஸ் சொல்கிறது.

தனது தங்கையைத் தேடியலைகிறார் தனுஷ். தனுஷிடம் இருக்கும் ஆதாரங்களைத் தேடி சமுத்திரக்கனி அலைகிறார். போலீஸ் உண்மைக் குற்றவாளிகளைத் தேடி அலைகிறது. உண்மையில் வெற்றி பெறுவது யார் என்பதுதான் இந்த ‘மாறன்’ படத்தின் திரைக்கதை.

தங்கையுடனான மோதல், பாசக் காட்சிகள்.. தங்கையைத் தேடியலையும் காட்சிகள், இன்ஸ்பெக்டரையும் சமுத்திரக்கனியின் ஆளாகப் பார்த்து கோபமடையும் காட்சி, சமுத்திரக்கனியுடன் பேசும் காட்சிகள், அமீருடன் பேசி உண்மையைத் தெரிந்து கொள்ளும் காட்சிகள்.. என்று ஜர்னலிஸ்ட்டாக இல்லாமல் ‘மாறன்’ என்ற தனியொரு மனிதனாக அவர் நடித்திருக்கும் காட்சிகளில் தனுஷ், எப்போதும் போலவே அழகாக நடித்திருக்கிறார். இல்லையென்று மறுப்பதற்கில்லை.

ஆனால் ஜர்னலிஸ்ட்டாக அவர் தோன்றும் காட்சிகளிலெல்லாம் மாஸ் ஹீரோவாகவே அவர் வலம் வருவதுதான் நமக்கு சிரிப்பை வரவழைக்கிறது. கெத்தான ஹீரோவாக அவர் வரும்போதெல்லாம் ‘பத்திரிகையாளர் மாறன்’ என்ற கேரக்டரில் இருந்து அவர் வெகு தொலைவில் போய்விடுகிறார்.

இன்னொரு பக்கம் நாயகி மாளவிகா மோகனனும் பத்திரிகையாளராக நடித்திருக்கிறார். டல்  மேக்கப்பில், எப்போதும் வாயில் சிவிங்கத்தை மென்று கொண்டு, திமிரான பார்வையோடு இவர் படம் முழுவதும் வலம் வருவதை பார்க்கும்போது இவர்கள் வேலை செய்யும் பத்திரிகை அலுவலகத்தை ஒரு முறையாவது பார்த்தேயாக வேண்டும் என்று தோன்றுகிறது.

பேட்டை’, ‘மாஸ்டர்’ படங்களிலும் இதே மாளவிகாவை நடிக்கவே விடாமல் வெறும் காட்சிப் பொருளாகவே வைத்திருந்து அனுப்பியிருந்தார்கள். இதில் ஒரேயொரு காட்சியில், “பொறுத்தது போதும்.. பொங்கியெழு மனோகரா…” என்று தனுஷை ஆக்ரோஷமாக உசுப்பிவிடும் காட்சியில் மட்டும் மாளவிகாவின் நடிப்பு தென்படுகிறது. இவருக்கென்று ஒரு படம் தனியாக மாட்ட வேண்டும்..!

அரசியல்வாதியாக சமுத்திரக்கனி.. சில காட்சிகளில் அவர் நல்லவரா.. கெட்டவரா என்கிற குழப்பத்தை கேரக்டர் ஸ்கெட்ச் கொடுத்துவிட்டதால் அவரை ரசிப்பதில் நமக்குக் குழப்பம்தான் மிஞ்சுகிறது.

அமீரின் தோற்றத்திற்கும், குரலுக்கும், உருவத்திற்கும் பொருத்தமான வேடம். ஆனால் பொருந்தாத கேரக்டர் ஸ்கெட்ச். இதனாலேயே இவரது போர்ஷனையும் ரசிக்க முடியவில்லை.

படத்திலேயே ஒரு காமெடியான விஷயம் என்னவெனில் ‘மாஸ்டர்’ மகேந்திரனை போலீஸாகப் பார்த்துதான். அவரால் போலீஸுக்குரிய கெத்’தைக் காட்ட முடியவில்லை என்பதை இயக்குநர் கவனித்திருக்க வேண்டும்.

பாசமிக்க தங்கையாக ஸ்மிருதி வெங்கட்.. தாய் மாமனாக ஆடுகளம்’ நரேன்.. பத்திரிகை எம்.டி.யாக ஜெயப்பிரகாஷ், ஆசிரியராக இளவரசு என்று மற்றவர்கள் தங்களது கேரக்டருக்கு ஏற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.

தனுஷை இண்டர்வியூ செய்யும் காட்சி கொஞ்சம் சுவாரஸ்யத்தைக் கொடுத்தது என்றாலும் தனுஷின் பேச்சும், உடல் மொழியும் அவரை பத்திரிகையாளராகக் காட்டவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

மிகப் பெரிய பட்ஜெட் படம் என்பதால் தொழில் நுட்பத்தில் ஒரு குறையும் இல்லை. ஒளிப்பதிவும், பின்னணி இசையும் சேர்ந்தே இயக்கியிருக்கின்றன. சண்டை காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்கள். அதிலும் மாஸ் ஹீரோத்தனமே இருப்பதால் இதுவொரு ஜர்னலிஸ்ட்டின் வாழ்க்கைக் கதை என்பதே நம் மனதில் ஒட்டவில்லை. ஜி.வி .பிரகாஷ்குமாரின் இசையில் பொல்லாத உலகம்’ பாடல் மட்டுமே கேட்கும்படி உள்ளது.

பத்திரிகையாளர் கதாபாத்திரம் என்றால் அதில் யாரையாவது பார்த்து அவர்களின் உடல் மொழி, பேச்சு, நடத்தை, பேசும்விதம், கேள்விகளை கேட்கும்விதம் இதையெல்லாம் ஸ்டெடி செய்துவிட்டு தனுஷை நடிக்க வைத்திருக்கலாம்.

இயக்குநர் கார்த்திக் நரேன், ஹீரோ தனுஷை அப்படியே ஸ்பாட்டிற்கு அழைத்து வந்து “இப்போ நீங்கதான் ஸார், தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிஸ்ட்” என்று சொல்லியிருப்பார் போல..!

படம் முழுவதும் ஒரு மாஸ் ஹீரோதான் பத்திரிகையாளராக வருகிறார். இதனால் அவரது கதாபாத்திரமே முதலில் அடிபட்டுப் போய்விட்டது. பின்பு எப்படி பார்ப்பவர்களின் மனம் கதைக்குள் நுழையும்..?

அதேபோல் படத்திலும் நிறைய லாஜிக் எல்லை மீறல்கள். மிக சென்சிட்டிவ்வான பெண் கடத்தல் வழக்கு. உயிரோடு எரித்த வழக்கு. முன்னாள் அமைச்சர் சம்பந்தப்பட்ட வழக்கு என்றால்.. போலீஸ் உயரதிகாரிகள் தலையிட மாட்டார்களா..? ஒரு காட்சியிலும் ஒருவர்கூட வரவில்லை. வெறுமனே இன்ஸ்பெக்டரே இந்தக் கதையை கடைசிவரையிலும் நகர்த்திக் கொண்டு செல்கிறார்.

வாக்கு இயந்திரங்களில் மோசடி என்னும் நாட்டுக்கே சென்சிட்டிவ்வான பிரச்சினையில்கூட வெறுமனே மீடியாக்களை மட்டும் காட்டிவிட்டு அடுத்தக் காட்சிக்கு ஓடுகிறார் இயக்குநர். திரைக்கதையில் கதைக்கான படிப்பே இல்லாமல் உழைத்திருப்பது போலத்தான் தோன்றுகிறது.

அண்ணன், தங்கை பாசம், காதல் ஆகியவற்றை ஆங்காங்கே வேண்டும் என்றே திணித்தது போல உள்ளது. அதிலும் 5 வயது பையன் இப்போது பிறந்த பிள்ளையைக் கையில் வைத்துக் கொண்டு “நானே வளர்ப்பேன்…” என்று சொல்வதெல்லாம் டூ மச்சாக இல்லையா இயக்குநரே..!?

பல காட்சிகளில் உன்னிப்பாகக் கவனித்தால் வேண்டாவெறுப்பாகவே தனுஷ் நடித்திருப்பது போலவும் தோன்றுகிறது.

படத்தின் பிற்பாதியில் வரும் டிவிஸ்ட்டுகள்தான் படத்தை ஓரளவுக்குத் தாங்கிப் பிடித்திருக்கின்றன. ஆனால், அந்த டிவிஸ்ட்டுகளில் இருக்கும் நியாயமான காரணத்தை விளக்கிச் சொல்ல இயக்குநர் தவறிவிட்டார்.

அமீரின் பக்கமுள்ள நியாயத்தை விளக்குவதாகச் சொல்லி ஒரு கொடூரத்தை நியாயப்படுத்துவதுபோல அந்தக் காட்சியைப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இது தவறான வாதம். ஒரு பத்திரிகையாளராக மாறனான தனுஷ் அதற்குத் தகுந்த பதிலை அந்த இடத்தில் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், தனுஷ் சொல்லாமல் நழுவியது இயக்குநரின் தவறு என்றுதான் சொல்ல வேண்டும்.

படத்தின் கிளைமாக்ஸ் சட்டென்று முடிவுக்கு வரும் 1980-களின் படங்களைப் போல காட்சியளிக்கிறது.

ஒரு கமர்ஷியல் படத்தில் இதெல்லாம் உண்டுதானே என்று கேட்டால் நிச்சயமாக இந்த வாதம் ஏற்க முடிந்ததுதான். ஆனால் இதற்கெதற்கு ‘பத்திரிகையாளர்’ என்ற கேரக்டர் ஸ்கெட்ச்…? சாதாரண ஒரு பொது ஜனமாகவே தனுஷ் இதைச் செய்திருக்கலாம். அதனாலேயே இந்த ‘மாறன்’ படம் தனுஷின் கேரியரிலேயே மிகச் சாதாரணமான படமாகிவிட்டது.!

தனது 21-வது வயதிலேயே ‘துருவங்கள் 16’ என்ற புத்திசாலித்தனமான ஸ்கிரிப்ட்டினால் உருவான படத்தை இயக்கி, தமிழ்ச் சினிமாவில் ஒரு பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்த இயக்குநர் கார்த்திக் நரேனின் அடுத்தடுத்தப் படங்களின் இது மாதிரியான தோல்விகள் நமக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.

என்றைக்கு படைப்பாளிகள் தங்களது படைப்புத் திறமையைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு நாயக பிம்பங்களின் பின்னால் ஓடத் துவங்குகிறார்களோ.. அன்றைக்கே அவர்கள் தங்களது தனித்தன்மையை, படைப்புத் திறனை இழந்துவிடுவார்கள்.

அதற்கு தற்போதைய உதாரணம் இந்தப் படத்தின் இயக்குநரான கார்த்திக் நரேன்..!

திருந்துங்கள் இயக்குநரே..!

RATING : 3.5 / 5

Our Score