full screen background image

மாண்புமிகு பறை – சினிமா விமர்சனம்

மாண்புமிகு பறை – சினிமா விமர்சனம்

சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாண்புமிகு பறை” திரைப்படம்.

சியா புரொடக்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் தயாரிப்பில், தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ள இந்தப் படத்தில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காயத்ரி ரெமா நாயகியாக நடித்துள்ளார். மேலும் அரியன், கஜராஜ், ரமா, அசோக்ராஜா, சேரன்ராஜ், காதல் சுகுமார், ஜெயக்குமார், பொன் சுரேஷ், அரங்க குணசீலன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை: சுபா & சுரேஷ் ராம், இயக்கம்: எஸ். விஜய் சுகுமார், ஒளிப்பதிவு: ரா. கொளஞ்சி குமார், படத்தொகுப்பு: சி. எஸ். பிரேம் குமார், இசை: தேனிசை தென்றல் தேவா, நடன இயக்கம்: ஜானி, பாடல்கள்: சினேகன், கலை: விஜய் ஐயப்பன், தயாரிப்பு நிறுவனம்: சியா புரொடக்ஷன்ஸ், தயாரிப்பாளர்கள்: சுபா – சுரேஷ் ராம், இணை தயாரிப்பு: ஜெ. எப். நக்கீரன் & கவிதா, நிர்வாக தயாரிப்பாளர்: த. முரளி, பத்திரிக்கை தொடர்பு: AIM சதீஷ், சிவா.

பறை என்பது இசை மட்டுமல்ல — அது ஒரு அடையாளம், ஒரு அதிர்வு, ஒரு சமூக உணர்வு. அந்த அதிர்வில் நம்மையும் இணைத்துக் கொள்ளும் முயற்சிதான் இந்த “மாண்புமிகு பறை” திரைப்படம்.

இது ஒரு சாதாரண கதை அல்ல — பறை என்ற நம் தொன்மை வாய்ந்த இசைக் கருவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இது.

“இது பறைக்கு இன்னொரு பிறப்பு; முடிவல்ல, ஆரம்பம்…”

பறை நம் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களிலும், கலாச்சாரங்களிலும் ஒலித்து வருகிறது. ஆனால், இந்த முறை கதை ஐரோப்பாவிலிருந்து — குறிப்பாக பிரான்ஸிலிருந்து — தொடங்குகிறது. பறை எப்படி நம் நாட்டின் எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் ஒரு வலிமையான குரலாக பரவியது என்பதை படம் வலியுறுத்துகிறது.

உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழா (Cannes Film Festival)–யில் மே 2025-இல் சிறப்பாக பங்கேற்று, ஜூரி உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்று, சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இத்திரைப்படம் மீண்டும் அதே கேன்ஸ்–ல் நடைபெறும் World Film Festival–இல் கலந்து கொண்டு, Official Selection–இல் Best Social Justice Film (சிறந்த சமூக நீதிக்கான திரைப்படம்) என்ற பிரிவில் தேர்வாகி திரையிடப்பட்டது.

அத்துடன், இத்தாலியில் நடைபெற்ற Othismos Film Festival–இல் Culture, Heritage and Local Identity (கலாச்சார பாரம்பரியம் மற்றும் உள்ளூர் அடையாளம்) என்ற பிரிவில் விருதைப் பெற்றுள்ளது.

இப்படி நமது பறை இசையின் அடையாளத்தை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை “மாண்புமிகு பறை” திரைப்படத்திற்கே சொந்தமானது.

பறை என்னும் இசையை பற்றி தமிழகத்தில் நிறைய கருத்து பேதங்கள் உள்ளன. அந்த இசையை இசைக்கும் அனைவருமே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பிரிவினர் என்பதால் அந்த வகுப்பைச் சேர்ந்த கலைஞர்கள் மட்டுமே அந்த பறையை இசைக்குகிறார்கள். அவர்களுக்கு மட்டுமே உரித்தானது அது என்று பலரும் இதுவரையில் நினைத்து வந்தார்கள். ஆனால் உண்மை அதுவல்ல என்பதை விளக்கமாக சொல்ல வந்திருக்கிறது இந்தப் படம்.

பறை இசைதான் தமிழின் மூத்த குடிகள் பயன்படுத்திய இசை என்கின்றன தமிழையும், தமிழர்களையும் ஆராய்ச்சி செய்த பல எழுத்தாளர்கள் எழுதிய நூல்கள். இந்த பறை இசை எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? இந்த பறை இசையிலிருந்து பிரிந்ததுதான் மற்றைய மேள தாள இசைகள் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆதி காலத்தில் மனிதன் காடுகளில் விலங்குகளை வேட்டையாடி மகிழ்ந்து வாழ்ந்த பொழுது, வேட்டையாடி விலங்குகளை கொண்டு வந்து குடும்பத்துடன் உணவருந்தி விட்டு அந்த களைப்பை போக்குவதற்காக அவர்கள் இசைத்த இசைதான் முதல் இசை. அந்த இசையை இசைப்பதற்காக அவர்கள் பயன்படுத்திய பொருள் அவர்கள் வேட்டையாடி வந்த விலங்குகளின் தோல்.

அந்த தோள்களை தரையில் அடித்தும், பாறைகளில் அடித்தும், பல்வேறுவிதமாக பயன்படுத்திய பொழுதும் வெளிவந்த வினோதமான ஒலிதான் அவர்களுடைய அப்போதைய சந்தோஷம். மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக அவர்கள் அந்த விலங்குகளின் தோலை பயன்படுத்தியே ஒரு இசை கருவியை உருவாக்கினார்கள். அதுதான் இந்த பறை இசைக் கருவி என்கிறது தமிழர்களின் ஆதிகுடி வரலாற்று நூல்கள்.

ஆனால் இப்போது அந்த பறை இசையை இசைப்பது சாவு வீடுகளில் மட்டுமே என்றும் அதை இசைப்பவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்றும் அவர்களைத் தொடுவதோ அவர்கள் அருகில் இருப்பதோ அவர்களுடன் கை குலுக்குவதோ மற்ற சாதியினருக்கு இழிவான செயல் என்ற ஒரு பொதுவான கருத்தும், இழிவான கருத்தும், நம்முடைய தமிழர்களிடையே திணிக்கப்பட்டுள்ளது. அப்படி திணிக்கப்பட்ட அந்தக் கருத்தை தவறு என்று சொல்வதற்காகவே இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆதிக்க சாதியினரும், பறை இசையை சொந்தம் கொண்டாடும் தாழ்த்தப்பட்ட மக்களும் ஒன்றாக வாழும் ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் நாயகன், தன்னுடைய நண்பன் அரியனுடன் இணைந்து பறை இசையை சொல்லித் தரும் ஒரு சிறிய பள்ளியை நடத்தி வருகிறார்.

அந்தப் பறை இசையை தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மட்டுமல்லாது, மற்ற சாதியைச் சேர்ந்த சிறுவர்களும் ஆர்வத்துடன் கற்றுக் கொள்கிறார்கள். இது ஆதிக்க சாதியை சேர்ந்த சாதி வெறியர்களுக்கு பிடிக்காமல் போகிறது.

இந்த நேரத்தில் அந்த ஊரில் இருக்கும் பார்வையற்றோர் பள்ளியில் பணியாற்றும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த நாயகி காயத்ரி மீது நாயகன் லியோவுக்குக் காதல் வருகிறது. அந்தக் காதல் காயத்ரியின் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி திருமணத்தில் முடிகிறது.

இன்னொரு பக்கம் இந்த பறை இசை பரப்புரை ஆதிக்க சாதியினரை கடும் கோபத்தில் கொண்டு போகிறது. பக்கத்து ஊரில் நடக்கும் ஒரு விழாவில் பறை இசைப்பதற்காக சென்ற அரியன் ஆதிக்க சாதியினரால் படுகொலை செய்யப்படுகிறார்.

அந்தக் கொலை பற்றி அறிந்து தன்னுடைய உயிர் நண்பனை இழந்து தவிக்கும் லியோ தன் நண்பனை யார் கொலை செய்தார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்காக பெரும் முயற்சி செய்கிறார். இன்னொரு பக்கம் காவல்துறை இந்தப் பிரச்சனையை ஒரு சாதாரண அடிதடி கேசாகவே பாவித்து வழக்கை முடித்துவிட எத்தனிக்கிறது. இந்தப் பிரச்சனைகளுக்கு இடையில் நாயகன் லியோவையும் தீர்த்துக்கட்ட ஆதிக்க சாதியினர் திட்டமிடுகிறார்கள்.

இந்தத் தாக்குதலில் இருந்து அவர் தப்பித்தாரா.. இல்லையா… பறை இசை பள்ளி என்ன ஆனது.. இதெல்லாம் இந்தப் படத்தின் மீதமான கேள்விகள்.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவகுமார் தன்னால் முடிந்த அளவுக்கான ஒரு நடிப்பை காண்பித்திருக்கிறார். எப்பொழுதும், எந்த இடத்திலும் தான் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் என்பது தனக்கு அறிவுறுத்தப்படுவதை உணரும் வகையில் அவருடைய ஒவ்வொரு நடிப்பும் வெளிப்படுகிறது.

காதல் காட்சிகளில் தன்னால் முடிந்த அளவுக்கான ரொமான்ஸை காண்பித்து காயத்ரிக்கு ஒரு வலுவான காதலனாகவும், கணவனாகவும் நடித்திருக்கிறார்.

இவருடைய உற்ற நண்பனாக நடித்திருக்கும் அரியனும் தன்னால் முடிந்த அளவுக்கான நடிப்பை காண்பித்து இருக்கிறார்.

நாயகி காயத்ரி ரமாதான் இந்தப் படத்தை இறுதியில் காப்பாற்றி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். காதல் காட்சிகளில் அவருடைய நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இறுதிக் காட்சியில் தன்னுடைய தாய், தந்தையை உதறித் தள்ளிவிட்டுவிட்டு தன்னுடைய கணவன் எடுத்துச் சென்ற அந்த பறை இசை பள்ளியை தான் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் பறையை அடித்துக் கொண்டே அவர் ஆடுகின்ற அந்த உக்கிரமான ஆட்டம்தான் இந்தப் படத்தின் உச்சக்கட்டம். அந்தக் கட்சியில் மிக அழகாக சிறப்பாக நடித்து படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார் காயத்ரி ரெமா.

மற்றும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த வில்லனாக நடித்திருக்கும் சேரன்ராஜ். அவரது கூட்டாளிகள் மற்றைய கிராமத்து மக்கள், லியோவின் பாட்டியாக நடித்தவர்… அனைவருமே இயக்குநரால் ஓரளவுக்கு நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். சிறப்புத் தோற்றம் என்றாலும் கஜராஜூம், ரமாவும் சோகத்தில் நம்மைப் பிழிந்துவிட்டார்கள். இவர்கள் சம்பந்தப்பட்ட சஸ்பென்ஸ் காட்சி அசத்தல்!

படத்தின் மிகப் பெரிய பலம் தேவாவின் அட்டகாசமான இசை. அவருடைய இசையில் ஒலிக்கும் அந்த டூயட் பாடல் நிச்சயம் இந்த வருடத்தின் மிகச் சிறந்த டூயட் பாடல் போட்டியில் இடம் பெறும். “ஆதி சிவன் அடிச்ச பறையடா” பாடல் ஆடவும் வைத்து, பாடவும் வைக்கிறது. ஒரு சோகப் பாடலும் நம் மனதை கவ்வுகிறது.

ஒளிப்பதிவில் குறைவில்லை. முதலில் இருந்து இறுதிவரையில் ஒரு மிடில் கிளாஸ் படத்துக்குரிய அடையாளங்களோடு தன்னால் முடிந்த அழகு ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

படம் சொல்ல வந்த கருத்தும் எடுத்தாளப்பட்ட செய்தியும் வீரியமானதுதான் என்றாலும், சொல்லியவிதம்தான் கொஞ்சம் வலு குறைந்ததாக உள்ளது. இதைவிடவும் சிறப்பான திரைக்கதையில், இதைவிடவும் அழகான இயக்கத்தில் இந்தப் படத்தை செய்திருக்க வேண்டும்.

ஆனால், இயக்குநரின் இயக்குதலில் போதாமை நிறையவே இருக்கிறது. இன்னமும் கொஞ்சம் அழுத்தமாக இந்தப் படத்தை இயக்கியிருந்தால்… நடிகர், நடிகைகள் அனைவரையும் இன்னமும் சிறப்பாக நடிக்க வைத்திருந்தால் இத்திரைப்படம் இது போன்ற சாதிய பாகுபாட்டை குறித்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில் முதன்மையானதாக வந்திருக்கும்.

ஆனாலும், இத்திரைப்படம் இதுவரையில் யாரும் சொல்லாத பறை இசை ஏன்? எதற்கு? எப்படி? யார் அதை கற்றுக் கொள்ள வேண்டும்? ஏன் கற்றுக் கொள்ள வேண்டும்? எதற்காக அது இசைக்க வேண்டும்? எந்தெந்த இடங்களில் இசைக்கப்பட வேண்டும்? என்கின்ற தகவல்களை சொன்னமைக்காக இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்.

RATING : 3 / 5

Our Score