‘அமைதிப்படை-2’, ‘கங்காரு’ ஆகிய படங்களைத் தயாரித்து, விரைவில் வெளியாகவிருக்கும் ‘மிக மிக அவசரம்’ என்கிற படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கும் தயாரிப்பாளர், பிளஸ் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி, தனது நான்காவது திரைப்படத்தைத் துவக்கியிருக்கிறார்.
படத்தில் ஹீரோவாக சிம்பு நடிக்கப் போகிறார் என்பதுதான் திரையுலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கப் போகிறார் என்பது இன்னுமொரு அதிர்ச்சிகரமான தகவல். படத்திற்கு ‘மாநாடு’ என பெயர் சூட்டியிருக்கின்றனர்.
இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை முடித்த கையோடு இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.
தனது பழைய பாணிகளைத் தூக்கியெறிந்துவிட்டு கடுமையான உழைப்பு, சரியான கதைத் தேர்வு, நேரத்திற்கு படப்பிடிப்பில் கலந்து கொள்வது என்று புதிய திட்டத்தோடு புதிய சிம்பாக தெம்பாக களமிறங்கியுள்ளார்.
அடுத்தடுத்த கமிட்மெண்ட்ஸ் என பரபரப்பாக தனது கேரியரை சுழலவிட்டிருக்கும் சிம்பு, ,வெங்கட் பிரபு, சுரேஷ் காமாட்சி என்ற இந்த அதிரி புதிரி கூட்டணி என்ற செய்திதான் கோடம்பாக்கத்தை இன்று பரபரப்பாக்கி வைத்திருக்கிறது.
முழுக்க, முழுக்க மாறுபட்ட கதாபாத்திரத்திலும்… களத்திலும் சிம்பு நடிக்க இருக்கும் இந்த ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
மற்ற நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.