மாநாடு – சினிமா விமர்சனம்

மாநாடு – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை வி ஹவுஸ் புரொடக்சன் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

இதில் சிலம்பரசன் நாயகனாக நடிக்க கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, ‘படவா’ கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். 

எழுத்து, இயக்கம் – வெங்கட் பிரபு, இசை – யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு – ரிச்சர்டு எம்.நாதன், படத்தொகுப்பு – பிரவீன் கே.எல்., கலை இயக்கம் – உமேஷ் ஜெ.குமார், சண்டை இயக்கம் – ஸ்டண்ட் சில்வா, உடைகள் வடிவமைப்பு – வாசுகி பாஸ்கர், பாடல்கள் – மதன் கார்க்கி, அறிவு, நடன இயக்கம் – ராஜு சுந்தரம், ஒலி வடிவமைப்பு – டி.உதயக்குமார், தயாரிப்பு நிர்வாகம் – சுப்ரமணியன், விஷூவல் கிராபிக்ஸ் – பால்கான் கவுதம், புகைப்படங்கள் – சுதர்சன், மக்கள் தொடர்பு – ஜான், விளம்பர வடிவமைப்பு – டூனே ஜான்.

டைம் லூப்’ எனப்படும் ஒரு நாளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒரு மனிதருக்குள் திரும்பத் திரும்பத் தோன்றும் கான்செப்ட்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

துபாயில் வேலை செய்து வரும் நாயகன் அப்துல் காலிக்’ என்ற சிம்பு தனது நண்பனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கோவைக்கு விமானத்தில் வருகிறார். இதே கல்யாணத்திற்காக அதே துபாயில் இருந்து நாயகி கல்யாணி பிரியதர்ஷனும் அதே விமானத்தில், சிம்புவுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்தபடி வந்து கொண்டிருக்கிறார்.

விமானத்தில் தூங்கிக் கொண்டிருந்த சிம்புவுக்கு திடீரென்று சில சம்பவங்கள் நடப்பதாக அவரது மூளையில் பதிவாகிறது.

அதே நாளில் கோவையில் ஆளும் கட்சியின் 12-வது மாநில மாநாடு அந்தக் கட்சியின் தலைவரும், மாநிலத்தின் முதலமைச்சரான எஸ்.ஏ.சந்திரசேகரின் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டின்போது முதல்வரை கொலை செய்துவிட்டு, கோவையில் மதக் கலவரத்தைத் தூண்டிவிட்டு.. சத்தமில்லாமல் அடுத்த முதல்வராக முயல்கிறார் அந்தக் கட்சியில் 30 ஆண்டுகளாக நம்பர் டூ’-வாக இருந்து வரும் ஒய்.ஜி.மகேந்திரன்.

இதற்காக ரபீக் என்ற இஸ்லாமிய அப்பாவி இளைஞனை பகடைக் காயாக பயன்படுத்துகிறது போலீஸ். ரபீக்கின் குடும்பத்தினரை பிடித்து வைத்துக் கொண்டு தாங்கள் சொல்வதை செய்தால்தான் அவர்களை விடுவிப்போம் என்று மிரட்டுகிறது போலீஸ்.

அவர்களிடமிருந்து தப்பித்து ஓடி வரும் ரபீக்கைக் காப்பாற்றப் போய் போலீஸிடம் சிக்குகிறார்கள் சிம்பு அண்ட் டீம். இப்போது மொத்த சிம்பு டீமையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் போலீஸ் அதிகாரி சூர்யா, தங்களுடைய கொலை அஸைன்மெண்ட்டை செய்து கொடுத்தால்தான் சிம்புவின் நண்பர்கள் உயிர் பிழைப்பார்கள். இல்லையேல் அவர்களை கொலை செய்வோம் என்று மிரட்டுகிறார்.

போலீஸின் மிரட்டலால் சிம்பு முதல்வரை படுகொலை செய்ய.. அடுத்த நொடியே போலீஸ் சிம்புவைச் சுட்டுக் கொல்கிறது. உடனேயே மதக் கலவரம் வெடிக்கிறது. முஸ்லீம்கள் போர்வையில் இந்துக்கள் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள். இதுவரையிலான சம்பவங்கள் சிம்புவின் மூளையில் பதிவாகி சொல்லப்படுகிறது.

ஆனால்ஸ அவர் கண் விழித்தவுடன் இதெல்லாம் நடக்குமா என்று பயப்படுகிறார். அடுத்த முறை தூங்கும்போது இதிலேயே மேலும் சில விஷயங்கள் நடக்கிறது. முதலில் நடக்கும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வழிகளை இரண்டாம் முறை கனவு காணும்போது அவர் நினைக்கிறார். அதையும் தாண்டி மீண்டும், மீண்டும் இந்தக் கொலை பிரச்சினையில் சிம்பு சிக்கிக் கொள்கிறார்.

தான் கனவில் காண்பது நிஜமாகவே கோவையில் அன்றைக்கு நடக்கவிருப்பதை உணர்கிறார் சிம்பு. இதைத் தடுப்பதற்கு தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யத் துடிக்கிறார் சிம்பு.

ஆனால், அதே சமயம் சிம்புவின் முயற்சிகளை தடுக்க நினைக்கிறார் இந்தச் சதி வேலையின் சூத்திரதாரியான போலீஸ் அதிகாரி தனுஷ்கோடி’ என்ற எஸ்.ஜே.சூர்யா. இதில் யார் வெற்றி பெற்றார்கள்.. எப்படி வென்றார்கள் என்பதுதான் இந்த சுவாரஸ்யமான படத்தின் மீதமான கதை.

சிம்புவுக்கு நிச்சயமாக இதுவொரு கம் பேக் படம்தான். இத்தனை நடிப்பையும் வைத்துக் கொண்டு வெளிப்படுத்த ஒரு நல்ல பிளாட்பார்ம் கிடைக்காமல் மனிதர் தவித்துக் கொண்டிருக்கிறார் போலும்.. வெங்கட் பிரபு போன்ற இயக்குநர்கள் கைகளில் கிடைத்ததால்தான் இந்த நடிப்பெல்லாம் வெளியில் வருகிறது.

சாந்த சொரூபியாக அறிமுகமாகி.. பின்பு எப்படியாவது இந்தப் படுகொலையைத் தடுத்தாக வேண்டும் என்ற வேட்கையுடன் களமிறங்கும் சிம்புவுக்கு பெரிதும் துணை நின்றிருப்பது இயக்குநரும், திரைக்கதையும்தான்.

டைம் லூப்பில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் தனது பரிதவிப்பை அழகாகக் காட்டியிருக்கிறார் சிம்பு. அவ்வப்போது அவர் டெலிவரி செய்யும் ஒற்றை வரி வசனம்கூட சிரிப்பலையை உண்டு செய்கிறது.

ஒய்.ஜி.மகேந்திரனிடம் மாட்டிக் கொண்ட நிலையில் தப்பிப்பதற்காக எஸ்.ஜே.சூர்யாவை மாட்டிவிடும் அந்தக் காட்சியில் அவரது தத்ரூபமாக நடிப்பு வெளிப்பட்டுள்ளது. அந்தக் காட்சியில் ஒரு பிரேமைகூட நாம் மிஸ் செய்துவிடக் கூடாது. அப்படியொரு சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார் சிம்பு.

அவர் ஓடுகின்ற ஓட்டம்.. வேகமாக செயல்பட்டு முடிவெடுக்கும் தருணங்கள், சூர்யாவை ஏமாற்றும் வேலைகள்.. தன் பேச்சை யாருமே நம்ப மறுக்கிறார்களே என்ற ஆதங்கத்தில் அவர் கொட்டித் தீர்ப்பவைகளில் சிம்புவின் சிறந்த நடிப்பும் ஒன்றாகிவிட்டது.

நாயகனுக்கேற்ற வில்லனாக நடிப்பில் ஒன்றியிருக்கிறார் எஸ்.ஜே..சூர்யா. அவருடைய முகம், குரலும் அவருடைய வில்லத்தனத்திற்கு மிகவும் உதவிகரமாக உள்ளன. கோபத்தில் அவர் பேசும் ஒவ்வொரு பேச்சிலும் நடிப்பு தெறிக்கிறது.

ஒய்.ஜி.மகேந்திரனிடம், போனில் அவர் பேசுகின்ற காட்சியில் தியேட்டரே அதிர்கிறது. அதேபோல கிளைமாக்ஸ் காட்சியிலும் ஒய்.ஜி.மகேந்திரன் தான் சொல்வது புரிந்து கொள்ளாமல் பேசுகிறாரே என்ற நினைப்பில் சூர்யா காட்டும் முகபாவனைகளும் அபாரம்.

டைம் லூப் தற்போது தன்னையும் தொற்றிக் கொண்டதை தாமதமாகப் புரிந்து கொண்ட சூர்யா.. ஒவ்வொரு முறையும் எழுந்திருக்கும்போதும், ஒவ்வொரு பிரச்சினையையும் தாண்டித் தாண்டி சிம்பு போவதை உணரும்போதும் நடிப்பில் சிம்புவை வென்றுவிட்டார் என்றே சொல்லலாம்.

ஒய்.ஜி.மகேந்திரன் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிகச் சிறந்த நடிப்பினை இந்தப் படத்தில்தான் வழங்கியிருக்கிறார். நாடக மேடையில் அவர் சிவாஜி கணேசன் என்று போற்றப்படுபவர்என்பதால் வசனங்களை ஏற்ற, இறங்கத்துடன் கச்சிதமான மாடுலேஷனில் உச்சரிக்கும்போது ரசிகர்களுக்கு மிக இயல்பாகவே சிரிப்பு வருகிறது.

காரில் வந்து கொண்டிருக்கும் சூர்யாவிடம் அவர் பேசும்போது நம்மால் கை தட்டாமல் இருக்க முடியவில்லை. இதற்கு வெங்கட் பிரபு எழுதியிருக்கும் அசத்தலான வசனங்களும் உதவிகரமாக இருந்திருக்கின்றன.

நாயகி கல்யாணி பிரியதர்ஷன் அழகு தேவதையாக ஜொலிக்கிறார். பெரிதாக வேடம் இல்லையென்றாலும் பிரேமில் அவர் இருப்பதே அழகாக இருக்கிறது.

மேலும் முதலமைச்சர் எஸ்.ஏ.சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, பஞ்சு சுப்பு, கருணாகரன், பிரேம்ஜி என்று பெரிய பட்டாளமே நடித்திருக்கிறார்கள். இதில் பிரேம்ஜிக்கும், கருணாகரனுக்கும் சிறந்த காட்சிகள் கிடைத்திருக்கின்றன. மற்றவர்களுக்கு ஓரிரு காட்சிகள்தான்..!

இருந்தாலும் யாரும் நடிப்பில் குறை வைக்கவில்லை. அந்த அளவுக்கு மிகச் சிறப்பான முறையில் இயக்கத்தை செய்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவும், கே.எல்.பிரவீனின் படத் தொகுப்பும் அற்புதம் என்றே சொல்ல வேண்டும். அத்தனை பெரிய கூட்டத்தை எப்படி கச்சிதமாகக் கையாண்டு படம் பிடித்தார்கள் என்று தெரியவில்லை. அதோடு கார் சேஸிங் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் கேமிராமேன் பெரிய சாகஸமே செய்திருக்கிறார்.

‘கரணம் தப்பினால் மரணம்’ என்ற கதையாக உருவாக்கப்பட்டிருக்கும் திரைக்கதையை கச்சிதமாக நறுக்கித் தொகுத்தளித்திருக்கிறார் படத் தொகுப்பாளர். உடைகள் வடிவமைப்பையும், கலை அரங்கத்தை நிர்மாணித்தவரையும் பாராட்ட வேண்டும். இரண்டு பணிகளும் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. ஸ்டண்ட் சில்வாவின் சண்டை காட்சிகள் இன்னொரு பக்கம் சிம்புவை ஆக்சன் ஹீரோவாக்குகின்றன.

பின்னணி இசையில் ஒரு பெரும் கலவரத்தையே உண்டு செய்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. சிம்புவுக்கு அவர் போட்டிருக்கும் தீம் மியூஸிக் சிம்புவுக்கு ரசிகர்கள் எண்ணிக்கையை நிச்சயமாக அதிகரிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல் படம் முழுவதும் ஒரு கதாபாத்திரமாகவே இசை இருந்து வருகிறது.  

இடைவேளைக்குப் பின்னான கதை, திரைக்கதையில் ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் இருந்ததால் பரபரவென ஓடுகிறது படம். கூடவே சூர்யாவின் நடிப்பும், நகைச்சுவையும் சேர்ந்து கொள்ள.. ஒவ்வொரு டாஸ்க்கையும் சிம்பு முறியடிக்க.. அந்தத் திட்டத்தை சூர்யா மாற்றியமைக்க.. இப்படியே போகும் இந்த திருடன்-போலீஸ் விளையாட்டு செம ஜோர்..!

இது போன்ற ‘டைம் லூப்’ கதைகள் தமிழுக்கு அன்னியமானவை. பி அண்ட் சி ரசிகர்களுக்கு இது மிகவும் புதியது. போன வாரம் வெளியான ‘ஜாங்கோ’ திரைப்படம் இதனால்தான் பெரிதாகப் பேசப்படாமல் போனது. இந்தப் படத்தில் முதல் பாதியிலும் இந்தக் குழப்பம் நீடிக்கிறது.

குறிப்பால் உணர்த்துவதெல்லாம் ஹாலிவுட் படங்களுக்கு ஓகே. தமிழ்ப் படங்களுக்கு செட் ஆகாது. ‘டைம் லூப்’ பற்றிய பல வசனங்களை முன் வைத்திருக்க வேண்டிய சூழலில் அதை சொல்லாமல் தவிர்த்துவிட்டதால்தான் முதல் பாதி கொஞ்சம் அயர்ச்சியை தந்துவிட்டது.

வசனங்களுடன் இந்த ‘டைம் லூப் தியரி’யை சொல்லிவிட்டு படத்தைத் துவக்கியிருந்தால்கூட அதில் நிச்சயமாக தப்பில்லை. சிம்புவைத் தொடர்ந்து சூர்யாவுக்கும் இந்த ‘டைம் லூப்’ தொற்றிக் கொண்டுள்ளது என்பதை முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். ஆனால், சிறிது நேரம் கழித்து சொன்னதால் இடைவேளைக்கு பின்பு கதையுடன் ஒன்றிணைய சிறிது கால தாமதம் ஆகிறது.

அதே சமயம் தமிழகத்தின் இன்றைய அரசியல், அரசியல் கட்சிகளின் நிலைமையை அப்படியே பிரதிபலிக்கும்வகையில் கதையை எழுதியிருப்பதற்கும், அதற்கேற்ற வசனங்களை தைரியமாக எழுதியிருப்பதற்கும் இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கு நமது பாராட்டுக்கள்.

அதிலும் குறிப்பாக ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் அவருடைய குடும்ப அரசியலைப் பற்றிப் பேசும்போது தியேட்டரே கரவொலியில் அதிர்கிறது. இன்றைய அரசியல் என்றால் என்ன என்பது பற்றி சில வசனங்கள் மூலமாக இன்றைய இளைய சமுதாயத்திற்கும் உணர்த்தியிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

அதே சமயம் இஸ்லாமியர்கள் மீது வன்மம் கொண்டு அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, மதக் கலவரத்தை உண்டு செய்ய நினைக்கும் அரசியல்வியாதிகளின் போலித்தனமான அரசியலையும் சிம்பு மூலமாக சொல்ல வைத்திருக்கிறார் இயக்குநர். இதற்காகவும் இயக்குநருக்கு இன்னுமொரு பாராட்டுக்கள்.

எப்படியிருந்தாலும் இந்த ‘மாநாடு’ படம் ஒரு மாநாடு போலவே பிரம்மாண்டத்தையும், ஆச்சரியத்தையும், பரவசத்தையும் கொடுத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை..!

RATINGS : 4 / 5

Our Score