full screen background image

மான் கராத்தே விழாவில் நடந்த குளறுபடிகள்..!

மான் கராத்தே விழாவில் நடந்த குளறுபடிகள்..!

‘மான் கராத்தே’ என்று படத்திற்குப் பெயர் வைத்திருப்பதால் இதன் பாடல் வெளியீட்டு விழாவிற்கு வந்தவர்களுடன் கராத்தே சண்டை போடுமளவுக்கு நடந்து கொண்டனர் விழாவின் பாதுகாப்பிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பவன்சர்கள் என்ற காவலர்கள்..!

இது போன்ற பவுன்சர்கள் இரவு நேர பப்புகளில்தான் பணியில் இருப்பார்கள். இன்றைக்கு சிவகார்த்திகேயன் என்கிற தற்போதைய டாப் ஹீரோவின் பாதுகாப்புக்காக தயாரிப்பாளரால் சத்யம் தியேட்டருக்கு வரவழைக்கப்பட்டிருந்தார்கள்.

நிகழ்ச்சி நிரலில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் யாரையெல்லாம் உள்ளே விடலாம் என்பது தெளிவாக முதலிலேயே சொல்லப்படாததால், தங்களது நட்சத்திரத்தை பார்த்துவிட வேண்டும் என்று துடிப்பில் இருந்த சிவகார்த்திகேயனின் ரசிகர் படையினர் எட்டு மணியில் இருந்தே அரங்கத்திற்கு வந்து குவிந்துவிட அனைவரையும் உள்ளே அனுமதித்துவிட்டனர் சத்யம் திரையங்க ஊழியர்கள்.

கால் மணி நேரத்தில் முக்கால்வாசி அரங்கம் நிரம்பி வழிய.. பின்புதான் சுதாரித்து வருபவர்களை வாசலில் நிறுத்தி அனுமதி அட்டை இருந்தால்தான் உள்ளே அனுமதி என்றார்கள் தியேட்டர் ஊழியர்கள். உள்ளே வந்த பத்திரிகையாளர்களிடத்திலும் அடையாள அட்டை இருந்தால்தான் உள்ளே விடுவோம் என்றனர். என்றைக்குமில்லாமல் இன்றைக்கு எதற்கு அடையாள அட்டை என்று கேள்வி கேட்டபோதுதான் உள்ளேயிருந்த நிலைமை புரிந்தது.

பத்திரிகையாளர்களுக்கான இருக்கைகளில் சிவகார்த்திகேயனின் ரசிகர்களே அமர்ந்திருக்க அவர்களை எழுப்பிவிடும் முயற்சியில் நிர்வாகிகள் சிலர் ஈடுபட்டபோது சுற்றியிருந்த பவுன்சர்கள் அதைத் தடுத்து “இங்க இடமில்லை.. வேற எங்கயாவது போய் உட்காரச் சொல்லுங்க..” என்றார்கள்.

ரசிகர்களைவிடவும் பவுன்சர்களே முன் வரிசையில் ஆதிக்கம் செலுத்தி பத்திரிகையாளர்களைகூட நிற்கவிடாமல் செய்தது குழப்பத்தை ஏற்படுத்தியது.. ஹீரோவும், ஹீரோயினும் உள்ளே வந்தவுடன் இந்த பவுன்சர்கள் காட்டிய கெடுபிடியில் சிக்கிய பத்திரிகையாளர்கள் விட்டால்போதும் என்று சொல்லி வெளியேறினார்கள்.

பால்கனியில் இடம் இருக்கிறது என்ற மேடை தொகுப்பாளரின் அறிவிப்பை நம்பி மாடிக்குச் சென்றால் அங்கேயும் பவுன்சர்கள் பத்திரிகையாளர்களை அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். “ஹவுஸ்புல் ஸார்.. கீழேயே போங்க…” என்றார்கள். தியேட்டர் ஊழியர்கள் பக்கத்தில் எதுவும் பேசாமல் நின்று கொள்ள.. சில பத்திரிகையாளர்கள் பவுன்சர்களுடன் மல்யுத்தம் செய்ய முடியாததால் வார்த்தைகளால் மோதிவிட்டு வந்தார்கள்..!

வீடியோ ஷூட் எடுக்க வந்த கேமிராக்களின் முன்பாகவே இந்த பவுன்சர்கள் நின்று கொண்டிருக்க படமெடுக்க முடியாமல் திணறினார்கள் கேமிராமேன்கள். கொஞ்சம் நகர்ந்து நிற்கும்படி சொல்லியும் “தள்ளி நிக்க முடியாதுங்க.. இதுதாங்க எங்க பொஸிஸன். இங்கதான் எங்களை நிக்கச் சொல்லியிருக்காங்க..” என்று கெத்தாகச் சொல்லிவிட்டு அதே இடத்தில் நின்று கொள்ள.. தொலைக்காட்சி நிறுவனத்தினரும் டென்ஷனாகிவிட்டார்கள்..

சிவகார்த்திகேயன் பெரிய மாஸ் நடிகர்தான். அவர் வந்தால் நிச்சயம் இந்த அளவுக்குக் கூட்டம் வரும் என்பது தெரிந்ததுதான். அதுவம் இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை வேறு.. இதையெல்லாம் எதிர்பார்த்து அழைப்பு உள்ளவர்களுக்கு ம்ட்டுமே அனுமதி என்று முன்கூட்டியே திட்டமிட்டு ஏற்பாடு செய்திருந்தால் இந்த குளறுபடியை தவிர்த்திருக்கலாம்.

மேலும் நட்சத்திரங்களுக்கு பாதுகாவல் காக்க வரும் பவுன்சர்கள் தேவையில்லாமல் அரங்கத்திற்குள் வந்தும் இடத்தைப் பிடித்து அடைத்துக் கொண்டும், ஸ்கிரீனை மறைத்துக் கொண்டும் நிற்பது பார்வையாளர்களுக்கு பெரும் சங்கடத்தையும், எரிச்சலையும் தருகிறது.

இவர்களுக்கு பத்திரிகையாளர்களையும் அடையாளம் தெரியவில்லை. பி.ஆர்.ஓ.க்களையும் அடையாளம்  தெரியவில்லை. பிறகு எதற்கு இவர்களை அரங்கத்தில் அனுமதித்து பாதுகாப்பு பொறுப்பை வழங்க வேண்டும்..?

சென்ற ஞாயிறன்று இதே அரங்கத்தில் நடந்த ‘கோச்சடையான்’ பாடல் வெளியீட்டு விழாவிலும் இதே போன்ற பவுன்சர்கள்தான் பயன்படுத்தப்பட்டார்கள். ஆனால் ஒரு அளவோடு.. அப்போதிருந்த நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் உடனுக்குடன் பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்டு அவர்களை பத்திரமாக உள்ளே அழைத்து அவர்களை முன் வரிசைகளில் அமர வைத்தார்கள். ரஜினியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் முன் வரிசையில் அமர்ந்திருந்தும் அவரை பின் வரிசைக்கு போக வைத்து, அதில் பத்திரிகையாளரை அமர வைத்த சம்பவமும் அன்றைக்கு நடந்தது..!

ஆனால் இன்றைக்கு ஏன் இந்த குளறுபடி என்பதற்கு காரணம் விளங்கவில்லை.. தயாரிப்பாளர் தரப்பு.. நிகழ்ச்சி நிர்வாகிகள் தரப்பு.. பத்திரிகையாளர்கள் மேற்பார்வை தரப்பு என்று மூவருக்குமே ஒருங்கிணைப்பு மோசமாக இருந்ததால்தான் இந்த விளைவு என்று நினைக்கிறோம்.

அளவு கடந்த ரசிகர்களின கூட்டத்தினரை அனுமதித்ததுதான் முக்கியப் பிரச்சினை என்பதோடு, பவுன்சர்களின் நடவடிக்கைகளையும் இது போன்ற நிகழ்ச்சிகளில் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.. இனி வரும் நிகழ்ச்சிகளில் இந்தக் குறைகள் நிச்சயம் களையப்பட வேண்டும் என்பதும்தான் பத்திரிகையாளர்களின் வேண்டுகோள்..!

Our Score