full screen background image

‘மான் கராத்தே’ படத்தை எதிர்த்து குத்துச் சண்டை சங்கத்தினர் புகார்..!

‘மான் கராத்தே’ படத்தை எதிர்த்து குத்துச் சண்டை சங்கத்தினர் புகார்..!

என்னடா இன்னும் புகார் கடிதத்தை தட்டிவிடலியேன்னு நினைச்சோம். இன்னிக்கு ஒருத்தர் கையைத் தூக்கிட்டாரு.

‘மான் கராத்தே’ படத்தில் இடம் பெறும் குத்துச்சண்டை போட்டியில் குத்துச்சண்டை சங்கங்களின் பெயர்களை பயன்படுத்தியும், அகில இந்திய அளவுக்கு பேமஸான போட்டியென்று விளம்பரப்படுத்தியும் காட்சிகள் இடம் பெற்றன.

ஆனால் படத்தில் காட்டப்பட்ட குத்துச் சண்டை காட்சிகள் உண்மையில் குத்துச் சண்டை விளையாட்டுக்கான விதிமுறைகளை பின்பற்றி எடுக்கப்படவில்லை. அனைத்துமே உண்மையான விளையாட்டுக்கு முரணாக இருப்பதாக பலரும் சொல்லியிருந்தனர்.

சினிமாதானே.. விடுங்கப்பா என்று கேட்டவர்களுக்கு “அப்படீன்னா குத்துச் சண்டை சங்கங்கள்.. அகில இந்திய போட்டி.. டிவி சேனல் ஒளிபரப்பு என்று ஏன் உண்மையான சங்கங்களின் பெயர்களை இழுக்க வேண்டும்..?” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இன்றைக்கு ஒருவர் தனது மனக்குமுறலை சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகாராகவே கொடுத்துவிட்டார்.

‘மான் கராத்தே’ பட நடிகர் சிவகார்த்திகேயன், மற்றும் இயக்குநர் திருக்குமரன் மீது  இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி  என்ற குத்துச் சண்டை வீரர் அளித்திருக்கும் புகார் மனுவில், “சமீபத்தில் திரைக்கு வந்துள்ள ‘மான் கராத்தே’ படம் குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் படத்தில் குத்துச் சண்டையை இழிவுபடுத்தும்வகையில்தான் நிறைய காட்சிகள் இருக்கின்றன.

அந்தக் காட்சிகள் நீக்கப்பட வேண்டும். தமிழ்நாடு குத்துச் சண்டை கழகத்திடம் உரிய அனுமதியும், ஆலோசனையும் பெற்று குத்துச் சண்டை தொடர்பான காட்சிகளை எடுத்திருக்கலாம். ஆலோசனை எதையும் பெறவில்லை. உரிய அனுமதியும் பெறவில்லை. இது சட்டத்திற்குப் புறம்பான செயல்.

எனவே ‘மான் கராத்தே’ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குநர் திருக்குமரன், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘மான் கராத்தே’ படத்தைத் தடை செய்யவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..” என்று கோரியிருக்கிறார்.

மனு வழக்கம்போல மெதுவாக கையில் எடுக்கப்படும். இனிமேல் அதனை விசாரித்தாலும் பலனில்லைதான்.. ஏனெனில் ‘மான் கராத்தே’ திரைப்படம் திரையிட்டு முடிந்து, கிட்டத்தட்ட 50 கோடி அளவில் வசூலையும் பெற்றுவிட்டது. இனிமேல் ஓடினால் என்ன? ஓடாவிட்டால்தான் என்ன..?

Our Score