full screen background image

மான் கராத்தே – சினிமா விமர்சனம்

மான் கராத்தே – சினிமா விமர்சனம்

வரிசையாக 3 மெகா ஹிட்டுகளை கொடுத்த ஹீரோ.. சிறுவர் முதல் பெரியவர்வரையிலும் அனைவராலும் விரும்பப்படும் இப்போதையே ஒரே ஹீரோ. இளசுகளையும், பெரிசுகளையும் ஒரே சமயத்தில் அலைபாய வைத்திருக்கும் ஹீரோயின்.. கேட்டதும் கொடுக்கும் தயாரிப்பாளர்.. 3-வது வரிசை ஹீரோவாக இருந்தும், தியேட்டர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது இவருக்காகத்தான்..! பெரிய இயக்குநரின் சொந்தக் கதை.. அதே இயக்குநரிடம் பல படங்களுக்கு இணை இயக்குநராக இருந்து இயக்குநராக பிரமோஷன் பெற்றவர் இயக்கிய முதல் படம்.. பட ரிலீஸுக்கு முன்பேயே தயாரிப்பாளருக்கு 2 மடங்கு லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கும் படம். எல்லாம் இருந்தும்… எல்லாம் இருந்தும்..!?

பாக்ஸிங் என்றாலே என்னவென்று தெரியாத ஒரு இளைஞன், காதல் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக.. காதலியை அடைய வேண்டும் என்பதற்காக.. முறையான பயிற்சி பெற்ற சாம்பியனான பாக்ஸரை போட்டியில் ஜெயிக்க எண்ணுகிறார்.. அது நடந்ததா? இல்லையா? என்பதுதான் இதன் சுருக்கப்பட்ட கதை..!

நம்ப முடியாத கதையை நம்பும்விதமாகச் சொல்வதில்தான் இயக்குநரின் திறமை இருக்கிறது.. இதற்குச் சுவையான திரைக்கதையும் லாஜிக் மீறல் இல்லாத தன்மையும் வேண்டும்.. இது இரண்டுமே இல்லையெனில் படத்தை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது என்றே நமக்கு குழப்பந்தான் வரும்.. இதிலும் அந்தக் குழப்பம்தான் வந்திருக்கிறது..!

முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாகவே எடுத்திருக்க வேண்டிய படத்தை இடைவேளைக்கு பின்பு அநியாயத்திற்கு சீரியஸாக்கியதால் படத்தின் நம்பகத்தன்மை கெட்டு.. இப்படியெல்லாம் நடக்குற காரியமா..? எடுக்கலாமா..? என்கிற கேள்விக்குறியை தானாகவே எழுப்பிவிட்டது இந்தப் படம்..!

குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் காலில் ஷூ அணிந்து, கையில் ஒரு கிளவுஸை மட்டும் எடுத்துக் கொண்டு உடனேயே போட்டிக்காக கியூவில் போய் நிற்க முடியாது.. இதற்கெல்லாம் முறையான சங்கங்கள் உண்டு. அதில் சேர்ந்து குறிப்பிட்ட காலம் பயிற்சி பெற்று.. பயிற்சியாளரின் ஒப்புதல் பெற்ற பின்பு.. திறமைச் சான்றுக்கான முதற்கட்ட போட்டியில் வெற்றி பெற்ற பின்புதான் குத்துச்சண்டை போட்டியாளர் என்ற பெயரே,  அடையாள அட்டையுடன் கிடைக்கும்.

இந்தப் பெயர் கிடைத்த பின்பும் நகர அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் என்று போட்டிகளில் தொடர்ந்து கலந்து கொண்டிருந்தால் மட்டுமே தேசிய அளவுக்கே செல்ல முடியும்.. குரும்பப்பட்டியில் நடக்கும் பொங்கல் விழாவில் ஓட்டப் பந்தயம் நடத்தப்படுவது போல, எங்கேயும் குத்துச்சண்டை போட்டியை நடத்திவிட முடியாது..

இதற்கான ஆட்களும் குறைவு.. சங்க அமைப்புகளும் குறைவு.. நடுவர்களும் குறைவு.. விதிமுறைகளை மிகச் சரியாகப் பயன்படுத்தவில்லையெனில் உயிருக்கே அபாயம் என்பதால் இந்த விளையாட்டை வெளியிடங்களில் நடத்துவதற்கு ஏகப்பட்ட பார்மாலிட்டீஸ்களை வைத்திருக்கிறது அகில இந்திய குத்துச்சண்டை சம்மேளனம்..!

எல்லாவற்றையும் பரணில் தூக்கிப் போட்டுவிட்டு லாஜிக்கை காலில் மிதித்தபடியே சிவகார்த்திகேயன் என்னும் ஹீரோவுக்காக ஒரே நாளில் பயிற்சி எடுத்து.. வீர வசனங்களை பேசியவுடன்.. கேட்டவுடன்.. ரத்த நாளங்கள் துடிக்க மேடையேறி தேசிய சேம்பியனை அடித்து வீழ்த்துவது என்பதெல்லாம் காமெடியாக செய்திருந்தால் ஓகே.. ஆனால் இங்கே சீரியஸாக எடுத்துத் தொலைத்திருக்கிறார்கள். அதனால்தான் இப்படியெல்லாம் குறிப்பிட வேண்டியிருக்கிறது..!

சிவகார்த்திகேயன் குத்துச் சண்டை போட்டியில் பெயர் பதிவு செய்ய வந்தவுடன்  எதுவுமே கேட்காமல் பட்டென ஒரு பக்க அப்ளிகேஷனை நீட்டி கையெழுத்து போடச் சொல்கிறார்கள். போடுகிறார். “வந்து கலந்துக்குங்க…” என்கிறார்கள். சரி என்று திரும்பிச் செல்கிறார்.. ஏதோ கட்சியில் தொண்டராக சேர்வதற்கு வந்து செல்வதைப் போல..! ம்.. படத்தின் மீதான ஈர்ப்பு கொஞ்சம், கொஞ்சமாக குறையத் தொடங்கியது இரண்டாம் பகுதியில்தான்..!

படத்தின் முன்னுரையான அந்த சித்தர்.. அவரிடம் வரம் கேட்பது.. வேண்டுமென்றே அடுத்த வருட ஆயுத பூஜைக்கு அடுத்த நாளுக்கான தினத்தந்தி பேப்பரை கேட்பது. அவர் அதனை கிரியேட் செய்து தருவது.. அதில் அவர்கள் சம்பந்தப்பட்ட அந்த பீட்டர் பாக்ஸர் விஷயம் இருப்பது.. இதுவொரு அருமையான கான்செப்ட்.. இதனை வைத்து முதற்பாதியை போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் நகைச்சுவை குறைவு..!

ஐடி மக்கள்ஸ் சிவகார்த்திகேயனை சட்டென அடையாளம் காண்பது.. அவர்தான் தாம் தேடி வந்த பாக்ஸர் பீட்டர் என கண்டறிவது.. அவரை வைத்து தங்களது 2 கோடி கனவை அடைய வேலைகளைச் செய்வது.. சிவகார்த்திகேயன் செய்யும் டார்ச்சர்களை தாங்கிக் கொள்வது.. இடையில் சிவகார்த்திகேயன் பார்த்தவுடன் காதல் என்ற தோரணையில் ஹன்ஸிகா என்னும் லூஸு பெண்ணை காதலிக்கத் தொடங்குவது.. ஹன்ஸிகாவைவிட பெரிய லூஸான அவரது அப்பா… 10 திருக்குறளை மனப்பாடமா ஒப்பித்தால்தான் பொண்ணைத் தருவாராம்.. எங்கே இருக்கிறார்கள் இப்படியொரு அப்பனும் மகளும்..? காமெடிக்குத்தானே என்றால்.. சரி.. சிரித்துக் கொண்டும், சகித்தும் கொண்டும் கடந்துவிட்டோம்..!

இரண்டாம் பாதியில் இறுதிப் போட்டிக்கு முன்பு நடக்கும் பிரிமியர் போட்டிகளில் குத்துச்சண்டை என்கிற ஒரு விஷயமே இல்லாமல் சிவகார்த்திகேயன் ஜெயிக்கும் காட்சிகளை பார்த்தபோதும்.. சரி படம் முழுவதும் இப்படித்தான் என்று நினைத்தோம்.. கொஞ்ச நேரத்தில் இறுதிப் போட்டிக்கு முன்பாக வம்சி கிருஷ்ணாவின் வீட்டிற்குச் சென்று சிவகார்த்திகேயன் தன்னிடம் தோற்கும்படி கெஞ்ச ஆரம்பித்தவுடன் இதுவரையில் பார்த்த காட்சிகளையெல்லாம் சீரியஸாக நினைக்கும்படியாகிவிட்டது..!

காதலிக்காகத்தான் பாக்ஸிங் என்பது கதையின் கருவல்ல.. இந்த ஐடி மக்களுக்காகத்தான் பாக்ஸிங்.. காதலி அதை பார்க்க விரும்புகிறார்.. அவ்வளவே.. “ஹன்ஸிகாவிடம் எனக்கு பாக்ஸிங் தெரியாது.. ஏதோ இவர்களுக்காக அப்படி நடிக்கிறேன்…” என்று சொல்லிவிட்டுப் போயிருக்கலாமே..? கதை முடிந்து போயிருக்கும்.. காதலிக்காக உருகுவதாகச் சொல்லி அழுது, புரண்டு கடையியில்  ஹீரோவுக்காக குத்துச்சண்டையை கொலையே செய்துவிட்டார் இயக்குநர்.

இந்தப் படத்தைப் பார்க்கும் இன்றைய இளைய தலைமுறையினர் குத்துச்சண்டை போட்டியினைப் பற்றி என்ன நினைப்பார்கள்..? அது பற்றிய ஒரு எதிர்மறையான எண்ணத்தை அவர்களிடத்தில் தோற்றுவித்துவிடாதா..? அதிலும் குத்துச்சண்டையில் ஒரு லெவலுக்கு மேல் உடம்பில் குத்தக் கூடாது. முகம், நெஞ்சகம் மட்டுமே தாக்குதலுக்கு உட்பட்ட பகுதிகள். இதையெல்லாம் விட்டுவிட்டு சினிமா சண்டை போல குத்தித் தீர்த்துவிட்டார்கள். சூரி நடுவராம்.. இப்படி ஒரு நடுவர் ஓட்டப் பந்தயப் போட்டியில்கூட இருக்க முடியாது.. ஒரு தேசிய அளவு போட்டியில் இப்படியா ஒரு மொக்கையான நடுவரை வைத்து, விதிமுறைகளை பின்பற்றாத அளவுக்கு நடத்துவார்கள்..?

நடிப்பு என்று பார்த்தால் சிவகார்த்திகேயன் இதற்கு முந்தைய படங்களைவிடவும் இதில் கொஞ்சம் கூடுதல் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக வம்சி கிருஷ்ணாவின் வீட்டில் வந்து கெஞ்சும்போதும், அழுகும்போதும்.. பாவம் என்கிற உணர்வை ஆடியன்ஸிடம் இருந்து சம்பாதித்துவிட்டார்..  ஆனால் அவருடைய படங்களில் எப்போதும் இருக்கும் நகைச்சுவைத் துணுக்குகள் இப்படத்தில் மிக மிக குறைவாகவே இருக்கிறது.. முற்பாதியில் அரைமணி நேரம் கழித்துத்தான் சிரிப்பே வந்தது. இவருடைய டயலாக் டெலிவரியில் எதிரணி நடிகர்களும் குப்புற விழுந்துவிடுவார்கள்.. உதாரணம் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் கிளைமாக்ஸில் சத்யராஜிடம் இவர் பேசும் பேச்சு.. இதில் என்ன ஆச்சுன்னு தெரியலை.. அது போன்ற காட்சிகளும், வசனங்களும் இல்லாமல்.. எல்லாமே ரொம்ப ரொம்பச் சாதாரணமாகவே உள்ளன.

ஹன்ஸிகா.. லூஸு பெண் கேரக்டருக்கு மிகப் பொருத்தம்.. கச்சிதம்.. சிவகார்த்திகேயன் என்ன படித்திருக்கிறார் என்பதுகூட தெரியாமல் டூவீலருக்கு பஞ்சர் பார்த்துக் கொடுத்தவுடன் காதலிக்கத் துவங்குகிறார். அப்பாவின் இண்டர்வியூவில் ஜெயிக்க வைக்கிறார். பாக்ஸிங் வீரர் என்று தெரிந்து   மிகவும் உறுதியாக காதலிக்கிறார். இறுதியில் மனம் உருக வைக்கிறார். உண்மை தெரிந்தவுடன் கண்ணீரும், கம்பலையுமாய் “பீட்டர் நீ பாக்ஸர் இல்லைன்னாலும் ஐ வல் யூ..” என்கிறார். அதற்குள்ளாக ஹீரோ இமேஜ் சிவகார்த்திகேயனுக்குள் விஸ்வரூபமெடுத்துவிட்டதால் அதற்கு பலனில்லாமல் போகிறது..

பாடல் காட்சிகளில் அழகு மிளிர ஒய்யாரமாக நடந்து வருகிறார். ‘டார்லிங் டம்பக்கு’ பாடலில் தூக்கிக் கட்டிய சட்டையுடன் இடுப்பையும், தொப்புளையும், மத்தியப் பிரதேசத்தையும் காட்டியபடியே இவர் ஆடியிருக்கும் ஆட்டம்.. இன்றைய இளசுகளை ரகசியமாக மனம் குளிர வைத்திருக்கும்..!

வம்சி கிருஷ்ணா சில நிமிடங்களே வந்தாலும் அசத்தல் நடிப்பு.. அழுத்தமான நடிப்பு.. தான் வில்லன் என்பதை உணர்ந்தாலும், மனைவியின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு பேசும் பேச்சும்.. வீட்டிற்கு வெளியே சிவகார்த்திகேயனிடம் குத்துச்சண்டை பற்றி எடுத்துச் சொல்லி கோபப்படும் காட்சிகளிலும் மனிதர் நிஜமான வீரரை போலவே தெரிகிறார்..  வாழ்க..!

சில நிமிடங்களே வந்தாலும் சூரி பெஸ்ட் அண்ட் பெஸ்ட்.. கேணத்தனமான நடுவர் பொறுப்பு என்பதாலும், காமெடி என்பதாலும் இவர் செய்யும் சேட்டைகளையும், அந்த காமெடி போட்டிகளையும் ரசிக்க முடிந்தது. காமெடியாக போட்டியை நடத்திவிட்டு தன்னைத் தாக்கியவருக்கு 6 மாதம் போட்டியில் பங்கேற்க தடை என்று ஸ்டிரெச்சரில் படுத்தபடியே சொல்லிவிட்டுப் போகிறார் சூரி.. இதை எங்கே போய்ச் சொல்வது..?

படத்தில் குறிப்பிடத்தக்க 2 விஷயங்கள் ஒளிப்பதிவும், இசையும்.. முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் மைனா சுகுமாரின் ஒளிப்பதிவு பம்பரமாக சுற்றியிருக்கிறது.. அந்தக் கொல்லிமலையை பக்குவமாக படம் பிடித்துக் காண்பித்ததில் துவங்கி.. இறுதிப் போட்டியின்போது ஏரியல் வியூவில் மொத்தக் கூட்டத்தையும் காண்பித்து டென்ஷனை ஏற்றும்வரையிலும் ஒளிப்பதிவாளர் படம் நெடுகிலும் கூடவே வந்திருக்கிறார். வெல்டன் ஸார்..

அனிருத்தின் இசையில் இருந்த 3 பாடல்களுமே காதைக் கிழித்தன. அதிலும் ‘டார்லிங் டம்பக்கு’ பாடலின் வரிகளை யாராவது முழுமையாகச் சொல்லிவிட்டால் அவருக்கு இதே படத்திற்கு இன்னொரு முறை டிக்கெட் எடுத்துக் கொடுக்கலாம். அந்த அளவுக்கு டமாரத்தை அடித்துத் தூள் கிளப்பியிருக்கிறார். ஆனால் அதற்காக இசையைக் குறிப்பிடவில்லை. பல இடங்களில்.. சிவகார்த்திகேயன் வரும் இடங்களிலெல்லாம் ஒரு மிருதங்கத்தையும், தபேலாவையும் வைத்து நட்டுவாங்கம் வாசித்திருக்கிறார் பாருங்க.. மிக மிக வித்தியாசமான அனுபவம் இது..! அவ்வளவுதான் இந்த அண்ணனின் இசையைப் பற்றிச் சொல்ல முடியும்.

கதை ஏ.ஆர்.முருகதாஸ். மிகப் பெரிய இயக்குநர். இவர் செய்தால் சரியாகத்தான் இருக்கும் என்று ஆரம்பித்துவிட்டார்கள். இவரிடம் இணை இயக்குநராக இருந்த திருக்குமரன்தான் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். முன்பே சொன்னதுபோல முழுக்க முழுக்க நகைச்சுவை படமாகவே இருந்திருந்தால் படம் முற்றிலும் பொழுது போக்குச் சித்திரம் என்று ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போயிருப்போம். கடைசிக்கு முந்தின ரீலில் இருந்து இது சீரியஸ் படமாக உருவெடுத்துவிட்டதால் ரசிக்க முடியாமல் போனதற்கு இயக்குநர்தான் பொறுப்பேற்க வேண்டும்..!

எனக்குள் நெருடலான 3 விஷயங்கள்..

1 – லிப்டில் யாரோ ஒருவர் விட்டுச் சென்ற ‘வாயு’வை சுவாசிக்க முடியாமல் ஹன்ஸிகாவும், சிவகார்த்திகேயனும் தவிப்பது போன்ற காட்சிகளெல்லாம் குழந்தைகள் வரத் துடிக்கும் இது போன்ற டாப் ஸ்டார் நடிக்கும் காமெடி படங்களுக்குத் தேவையா..? வேறு காமெடியே கிடைக்கவில்லையா..?

2 – என்னதான் காதலியாக இருந்தாலும், குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்கும் காதலனுக்கு பரிசளிக்க எத்தனையோ இருந்தும், ஜட்டிக்குள் அணியும் கவசத்தைத்தான் வாங்கித் தர வேண்டுமா..? என்ன கொடுமை இது..?

3. சில நாட்களுக்கு முன்பாக நடந்த இந்தப் படத்தின் பிரஸ் மீட்டில் டாஸ்மாக் சரக்கு.. தண்ணியடிப்பது பற்றியெல்லாம் பேசி.. “இனி இது போன்ற காட்சிகளெல்லாம் என் படங்களில் வராமல் பார்த்துக் கொள்வேன்..” என்றார். “நான் நிஜத்தில் தண்ணியடிக்க மாட்டேன். தம் அடிக்க மாட்டேன்..” என்றார். இந்தப் படத்தில் இப்படியொரு காட்சி இருப்பதை அன்றைக்கும் அவர் சொல்லவில்லை.. நைஸாக தப்பித்திருப்பது இப்போது புரிகிறது.  இந்த டாஸ்மாக் சரக்குக்காகவே ஒரு பாடலும் படத்தில் இருக்கிறது. எல்லா ஹீரோக்களும் இதை இப்படியே வளர்த்தால் எப்படி..?

முந்தைய சிவகார்த்திகேயன் படங்களுக்கும் இதற்கும் 18 வித்தியாசங்களுக்கும் மேலாகவே குறிப்பிட முடியும்.. படம் பார்த்த பின்பு என்ன சொல்வது என்பதே தெரியாமல் எழுந்து வருவது மிகக் கொடுமையான விஷயம்.. அதிகப்பட்சம் நகைச்சுவையை அதிகமாக கொடுத்திருக்க வேண்டும். திரைக்கதையை இன்னமும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம்.. இடைவேளைக்கு பின்பு கதையின் போக்கு மாறி மாறி போக நமக்குத்தான் காண்டாகிறது. இது இப்போது சிவகார்த்திகேயனுக்கே புரிந்திருக்கும்.. அடுத்தடுத்த படங்களிலாவது இதனை மாற்றிக் கொண்டு வந்தால் அவருக்கும் நல்லது. அவரது தயாரிப்பாளர்களுக்கும் நல்லது..!

ஒரு முறை பார்க்கலாம்..!

Our Score