full screen background image

மாமன்னன் – சினிமா விமர்சனம்

மாமன்னன் – சினிமா விமர்சனம்

பல பிரம்மாண்டமான வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இப்படம் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 15-வது படமாகும்.

இப்படத்தில் நாயகனாக உதயநிதி ஸ்டாலினும், நாயகியாக கீர்த்தி சுரேஷூம் நடித்துள்ளனர்.  நடிகர் வடிவேலு, பஹத் பாசில் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் அழகம் பெருமாள், கீதா கைலாசம், லால், ரவீணா ரவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – ரெட் ஜெயன்ட் மூவீஸ், இணை தயாரிப்பு – M. செண்பகமூர்த்தி, R.அர்ஜீன் துரை, இயக்கம் – மாரி செல்வராஜ், இசை – ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர், கலை இயக்கம் – குமார் கங்கப்பன், படத் தொகுப்பு – R.K.செல்வா, சண்டை இயக்கம் – திலீப் சுப்புராயன், பாடல் – யுகபாரதி, நடனம் – சாண்டி, தயாரிப்பு மேற்பார்வை – E.ஆறுமுகம், விநியோக நிர்வாகம் – ராஜா.C, பத்திரிக்கை தொடர்பு – சதீஷ் (AIM).

பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் – உதயநிதி ஸ்டாலின் – இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான்… இவர்கள் முவரும் முதன்முறையாக இணையும் இப்படம் பலரின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை படமும் நிறைவு செய்துள்ளது என்றே சொல்லலாம்.

சேலம் மாவட்டம் காசிபுரம் தொகுதியில் ஆதிக்க சாதியினரும், தாழ்த்தப்பட்ட மக்களும் ஒரே ஊரில் வசித்தாலும் ஆண்டான்-அடிமையாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த ஊரில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர் ‘அதிவீரன்’ என்ற உதயநிதி. இவருடைய அப்பாவான ‘மாமன்னன்’ என்ற வடிவேலு தாழ்த்தப்பட்ட பிரிவினரில் முக்கியஸ்தர். ஆளும் கட்சியில் முக்கிய பிரமுகரும்கூட.

அந்த ஊரில் இருக்கும் பொது கிணற்றில் தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் சிலர் குளிப்பதைப் பார்த்து ஆதிக்க சாதியினர் அவர்களை கல்லால் அடித்து கொல்கிறார்கள். இந்தக் கல்லெறிதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புகிறார் உதயநிதி.

தன்னுடைய மகன் உயிர் பிழைத்தாலும், மற்ற சிறுவர்களின் உயிர் இழப்புக்காக தன்னுடைய கட்சித் தலைமையிடம் நியாயம் கேட்கிறார் வடிவேலு. ஆதிக்க சாதியினரே கட்சித் தலைமையிடத்தில் இருப்பதால் மாவட்ட செயலாளர் இதற்கு ஆதரவு தர மறுத்து, ஓட்டுக்களுக்காக விட்டுக் கொடுத்துப் போகும்படி வடிவேலுவை வற்புறுத்துகிறார்.

கட்சிக்காக தனது சொந்த சாதியினரின் கொலையையே தற்கொலையாக மாற்ற ஒப்புக் கொள்கிறார் வடிவேலு. இதனாலேயே சிறுவனான உதயநிதி, தன் அப்பாவிடம் பேச மறுத்து பல வருடங்களாக அப்பாவுடன் பேசாமல் மெளனப் போராட்டத்தில் இருக்கிறார்.

கூடவே ‘அய்யா வழி’ ஆன்மீகத்தில் திளைத்திருந்த ஒரு பெரியவரின் ஆதரவிலும், அரவணைப்பிலும் வளர்கிறார். படித்துப் பட்டம் பெற்ற பிறகு, இந்த காட்பாதரின் மூலமாக அடிமுறை பயிற்சி என்ற தற்காப்புக் கலையையும் பயின்று தற்போது அதை சொல்லித் தரும் பள்ளியையும் நடத்தி வருகிறார் உதயநிதி. கூடவே, சிறு வயதில் இருந்தே பன்றிகளின் மேல் நேசத்துடன் இருக்கும் உதயநிதி, இப்போது பன்றிகளையும் வளர்த்து வருகிறார்.

இந்தப் 15 வருட இடைவெளியில் வடிவேலு அதே கட்சியில் அரசியலில் வளர்ந்து காசிபுரம் தொகுதி தனித் தொகுதியானதால் அங்கே கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டு 2 முறை எம்.எல்.ஏ.வாகவும் இருக்கிறார். ஆனாலும் அங்கே மறைமுகமாக அதிகாரம் கட்சியில் இருக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களிடமே இருக்கிறது.

சேலம் மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக இருந்த அழகம் பெருமாளின் மகனான ‘ரத்னவேல்’ என்ற பகத் பாசில்தான் தற்போது அந்த மாவட்டத்தின் கட்சியின் செயலாளர். வேட்டை நாய்களை வளர்த்து வருகிறார். அதோடு அப்பாவைவிடவும் மூர்க்கமான ஜாதி வெறி பிடித்தவராகவும் இருக்கிறார். வடிவேலு எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் உண்மையான அதிகாரம் பகத் பாசிலிடம்தான் இருக்கிறது.

இதே நேரம் கல்லூரி காலத்தில் இருந்தே ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாமல் தலையாய் காதலித்து வருகிறார்கள் உதயநிதியும், ‘லீலா’ என்ற கீர்த்தி சுரேஷும். மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்காக மாணவக்களுக்கு இலவசக் கல்வி தரும் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷ் நடத்தும் இலவச டியூஷன் சென்டரால் தன்னுடைய தொழில் பாதிக்கப்படுவதால் பகத் பாசிலின் அண்ணனான சுனில் கீர்த்தியின் டியூஷன் சென்டரை குண்டர்களை வைத்து அடித்து நொறுக்குகிறார்.

தன்னுடைய இடத்திற்கு வந்து தான் தெய்வமாக நினைத்திருக்கும் தன்னை வளர்த்தவரின் பூஜையறையையும் டியூஷன் சென்டரையும் அடித்து நொறுக்கியதைக் கண்டு பொங்கும் நாயகன் உதயநிதி பதிலுக்கு தன்னுடைய நண்பர்களுடன் சென்று சுனிலின் கல்வி நிலையத்தை அடித்து நொறுக்குகிறார். 

இதைச் செய்தது  வடிவேலுவின் மகன்தான்  என்பது பகத் பாசிலுக்குத் தெரிய வருகிறது. அதே நேரம் இந்த மோதல் முதல்வர் வரையிலும்போக, இரு தரப்பினரையும் சமாதானமாகப் போகும்படி சொல்கிறார் முதல்வர்.

இதற்காக பேச்சுவார்த்தைக்கு வடிவேலுவையும், உதயநிதியையும் தன் வீட்டுக்கு அழைக்கிறார் பகத் பாசில். தன் வீட்டுக்கு யார் வந்தாலும் உட்கார வைத்துப் பேசும் பழக்கம் உள்ளவர் வடிவேலு. அப்பேர்ப்பட்ட வடிவேலுவை நிற்க வைத்து பேசுவதைப் பார்த்து கோபப்படும் உதயநிதி தன் அப்பாவை உட்காரச் சொல்கிறார்.

அவர் முதலில் தயங்கினாலும் பின்பு அமர்கிறார். இதைப் பார்த்து கோபப்படும் பகத் பாசில் வடிவேலுவை அடித்துவிட, உதயநிதியும் தன் பங்குக்கு தான் கற்று வைத்திருக்கும் தற்காப்புக் கலையை அங்கே காட்ட.. பெரும் கை கலப்பு ஏற்படுகிறது.

பகத் பாசிலின் குடும்பத்தினர் செய்யும் ஒரு செயலால் அங்கே கொலை எதுவும் நடக்காமல் போனாலும் பகத் பாசிலுக்கு வெறி உச்சத்துக்கு ஏறியிருக்கிறது. விஷயம் முதல்வர் வரைக்கும்போக.. இரு தரப்பினரையும் அழைத்து பேசுகிறார் முதல்வர்.

“இனிமேல் என் மகன் என்ன சொல்றானோ அதைத்தான் நான் செய்யப் போகிறேன்…” என்று வடிவேலு முதல்வரிடம் சொல்கிறார். பகத் பாசிலோ தான் செய்தது சரி என்றும், தனக்குக் கட்சியைவிட ஜாதி பிடிமானம்தான் முக்கியம் என்றும் சொல்ல முதல்வர் கோபப்பட்டு அவரைக் கட்சியைவிட்டு போகச் சொல்கிறார்.

சட்டென்று எதிர்க்கட்சியில் சேரும் பகத் பாசில் அடுத்து வரும் சட்டமன்றத் தொகுதியில் தன்னுடைய ஆதரவாளர் ஒருவரை அதே தனித் தொகுதியில் நிறுத்தி வைத்து ஜெயிக்க வைப்பேன். அதன் பிறகு வடிவேலு, உதயநிதி இருவரையும் கொலை செய்வேன் என்று வீர சபதம் எடுக்கிறார். அதையும் பார்த்துவிடுவோம் என்று சொல்லி வடிவேலுவை மீண்டும் தேர்தலில் நிறுத்தி, அவரை ஜெயிக்க வைக்கப் போராடுகிறார் உதயநிதி.

இறுதியில் என்னவானது..? பகத் ஜெயித்தாரா..? அல்லது உதயநிதி ஜெயித்தாரா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதையாக்கம்..!

டைட்டிலிலேயே தன் பெயரை முதலில் போடாமல் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ்.. இதற்குப் பிறகுதான் ‘உதயநிதி ஸ்டாலின்’ என்று தன் பெயரை போட வைத்திருக்கிறார் உதயநிதி. இந்த அடக்கத்துக்காகவே அவருக்கு ஒரு பாராட்டு..!

படத்திலும் இதே வரிசைப்படித்தான் அனைவரின் நடிப்பும் அமைந்திருக்கிறது. தனக்கான கேரக்டரை உணர்ந்துதான் நடித்திருக்கிறார் உதயநிதி.  அமைதியின் திருவுருமாய் வீட்டில் இருந்து பயிற்சி நிலையத்துக்கு வரும் உதயநிதி, அங்கே அடி வாங்கி அழுது கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு சொல்லும் அறிவுரைகளில்தான் அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சே வெளிப்படுகிறது.

தன்னுடைய கோபத்தை வசனங்களின் மூலமாகவும், ஆக்ரோஷமான சண்டை காட்சிகளின் மூலமாகவுமே காட்டியிருக்கிறார் உதயநிதி. “அப்பா நீ உக்காருப்பா…” என்று அவர் ஆரம்பிக்கும் வசனம்தான் படத்தின் தீப்பொறி. இந்தத் தீப்பொறியை கடைசிவரையிலும் அணையாமல் கொண்டு போயிருக்கிறார் இயக்குநர். இதற்கு உதயநிதியின் நடிப்பும் பெரிதும் உதவியிருக்கிறது.

தன் அப்பா உட்கார்ந்து பேசுகிறாரா.. அல்லது நிற்க வைக்கப்பட்டு பேசுகிறாரா என்பதையறிய முதல்வரின் அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து பார்க்கும் காட்சியில் கை தட்ட வைத்திருக்கிறார் உதயநிதி. இதுவரையிலும் தன் அப்பாவுக்குத் தோணாத அவரது அதிகாரத்தை சொல்லிக் கொடுத்து அவரை மோல்டிங் செய்யும் உதயநிதியின் அத்தனை நடிப்புகளும் அபாரம்.

இடையிடையே மென்மையான காதலுக்கு அச்சாரம்போல கீர்த்தியிடம் காதலை சொல்லாமல் மறைத்து வைத்தமைக்காக “ஸாரி” சொல்வதும், கீர்த்தியும் பதிலுக்கு “ஸாரி” சொல்வதும் டீஸண்ட்டான காதல் எபிசோடு.  

“படத்தில் உண்மையான ‘மாமன்னன்’ வடிவேலுவா..? அல்லது உதயநிதியா..?” என்று பட்டிமன்றமே நடத்தலாம் போலிருக்கிறது. அந்த வகையில் நாம் இதுவரையிலும் பார்த்திராத வடிவேலுவை இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

‘வண்டு முருகன்’, ‘ஸ்நேக் பாபு’, ‘இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி’, ‘கைப்புள்ளை’, ‘நாய் சேகர்’, ‘நேசமணி’, ‘பாடி சோடா’, ‘ஐயா சாமி’, ‘என்கவுண்ட்டர் ஏகாம்பரம்’, ‘பிச்சுமணி’, ‘முருகேசன்’, ‘படித்துரை பாண்டி’, ‘அலர்ட் ஆறுமுகம்’, ‘தீப்பொறி திருமுகம்’, ‘தேங்காய் கடை தேனப்பன்’, ‘சூனா பானா’ என்று தன்னுடைய அடையாளத்தை பல்வேறு பெயர்களில் தமிழ்ச் சினிமாவில் ஆழமாகப் பதிய வைத்திருக்கும் ‘வைகைப் புயல்’ வடிவேலுவுக்கு இ்ந்தப் படம் நிச்சயமாக புத்தம் புதிய படம்தான்.

யார் வீட்டுக்கு வந்தாலும் “உக்காருங்க.. உட்கார்ந்து பேசுங்க…” என்று மிக இயல்பாக பேசத் துவங்கும் வடிவேலுவை, போகப் போக அவர் நடத்தும் போராட்டத்தில் அவர் ஜெயித்தாக வேண்டும் என்று தன் நடிப்பின் மூலமாக நம்மையே ஏங்க வைத்துவிட்டார் வடிவேலு.

“உட்காருங்கப்பா…” என்று மகன் சொல்லும் காட்சியில் உட்காரப் போகும்போது காட்டும் நடிப்பும், உட்கார்ந்த பிறகு காட்டும் நடிப்பும் வேறு.. வேறு.. அந்தக் காட்சியில் பகத் பாசிலிடம் அவர் பேசும் தோரணையும், “வேணாண்டா.. நான் தூக்கி வளர்த்த பையன்டா நீ…” என்று பாசத்துடன் பேசுவதிலும் அந்தக் காட்சியை மெய் மறக்க செய்துவிட்டார் வடிவேலு.

போர்க்களத்திற்குத் தயார் என்ற நிலையில் துப்பாக்கியையும், அரிவாளையும் கையில் தூக்கிக் கொண்டு வந்து அமரும் காட்சியில் வன்முறையின் துவக்கம் என்றாலும் நம்மையும் அறியாமல் கை தட்ட வைத்துவிட்டார் வடிவேலு.

மனைவியிடம் “வீராயி” என்று பாசமாக அழைத்து, சாதாரணமாகப் பேசும் வடிவேலுதான் முதல்வரிடமும் இதேபோல் பேசுகிறார். “நான் ‘மாமன்னன்’னு என் மகன் எனக்குக் காட்டிட்டான்ய்யா.. இனிமேல் அவன் காட்டும் வழிதான் எனக்கு…” என்று அமைதியாய் சொல்லிவிட்டு வரும்போதும் “சபாஷ்” என்றே சொல்ல வைத்திருக்கிறார் வடிவேலு.

சாவு வீட்டில் அடி வாங்கும்போதும் தனது மகனை கையைப் பிடித்திழுத்து அமைதி காக்கும்படி சொல்வதும், துப்பாக்கி வாங்கியது குறித்து மகனுடன் பேசும், சம்பாஷனையும் மிக, மிக இயல்பு. அதே துப்பாக்கியைக் காட்டி பகத்தை காரில் இருந்து இறங்கும்படி சொல்லும் காட்சியை பகத்தே மறக்க மாட்டார். ஹாட்ஸ் அப் வடிவேலு அண்ணே..!

வில்லன் சரியாக இருந்தால்தான் நாயகனால் ஜெயிக்க முடியும் என்பார்கள். அதுபோல இந்தப் படத்தில் வடிவேலுவையும், உதயநிதியையும் ஜெயிக்க வைத்திருப்பவர் பகத் பாசில்தான்.

இப்படியொரு ஒல்லியான உடல் வாகுவை வைத்துக் கொண்டு முகத்திலும், உடல் மொழியிலும் அவர் காட்டியிருக்கும் அனாயசமான நடிப்பு படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட். மிகக் கச்சிதமான தேர்வு இவருடையது.

தான் அவமானப்பட்ட ஆவேசத்தில் துப்பாக்கியைத் தூக்கி வர ஓடும் வேகமும், முதல்வரிடம் தனது ஜாதிப் பற்றைக் காட்டும் இடத்திலும், ஜாதி சங்கத்து ஆட்களின் காலில் விழும் காட்சியிலும், அதே ஆளை வெட்டிக் கொல்லும் வெறியிலும் ஒரு ஜாதி வெறி பிடித்தவரை உரித்து வைத்திருக்கிறார் பகத் பாசில்.

வடிவேலுவின் மனைவி ‘வீராயி’யாக கீதா கைலாசம் நடித்துள்ளார். சாதாரணமாக நடிக்கவே இல்லாத நடிகையாக படத்தில் தோன்றியுள்ளார். கீர்த்தி சுரேஷை மட்டும் தனியே அழைத்து தனது மகனுக்கும், அவருக்கும் காதலோ என்று பேசும் காட்சியில் இயக்கத்தினால் மிகச் சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

அதோடு வெறி கொண்டு வீட்டுக்குள் வந்த கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க கட்டிலுக்கு அடியில் ஒளிருந்து பார்க்கும் அந்த ஒரு நிமிடத்தில் நமக்குள் ஒருவித பயத்தையே உண்டு செய்திருக்கிறார்.

படத்தின் ரிச்னெஸ்ஸுக்காகவும், வியாபாரத்திற்காகவும் கீர்த்தி சுரேஷ் இதில் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார் போலும். காதல் போர்ஷன்களிலும் தனித்த நடிப்பைக் காண்பித்திருந்தாலும் ஒட்டு மொத்தமாய் சில இடங்களில் காட்சிகளை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறார் கீர்த்தி.

மேலும் அழகம் பெருமாளின் நைச்சியமான நடிப்பும், முதல்வர் லாலின் சமாதானமான பேச்சும் இரண்டும் ஒன்றுதான். தன் ஜாதிக்காரனையே கைது செய்ய வைக்க தன்னால் முடியாது என்று அழகம் பெருமாள் பூசி மெழுகுவதும், இரண்டு தொண்டர்களும் அமைதியாய் இருந்தால்தான் ஆட்சி நீடித்து நிலைத்து நிற்க முடியும் என்பதற்காக முதல்வர் லால் செய்யும் சமரசமும், தீர்வும், தீர்ப்பும் ஒன்றாய்த்தான் இருக்கிறது.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு ப்ளஸ் கேமிரா கோணத்தினால் படம் நெடுகிலும் தெறிக்க வைத்திருக்கிறது. சண்டை காட்சிகளை படமாக்கியவிதமே அதன் கொடூரத்தைக் காட்டுகிறது. பன்றிகளை, வேட்டை நாய்கள் பதம் பார்க்கும் காட்சி கொடூரத்தின் உச்சம்.

சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயனின் சண்டை இயக்கமும், படத் தொகுப்பாளரின் சிறப்பான பணியும், கேமிராமேனின் கேமிராவும் ஒருங்கே இணைந்ததால் எந்தக் காட்சியும் அன்னியமாகத் தெரியவில்லை. மிக இயல்பான சண்டை காட்சிகளாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஏ.ஆர்.ரகுமானின் இசை ராஜாங்கத்தில் பின்னணி இசை சிறப்புதான்.  பாடல்கள் கேட்கும் ரகம். உணர்வைத் தூண்டும் பாடல்களின் மாண்டேஜ் காட்சிகள் மேலும், மேலும் பாடல்களை சிறப்பாக்கியிருக்கின்றன.

மிகச் சிறந்த இயக்கத்தை மாரி செல்வராஜ் கொடுத்தது போலவே மிகச் சிறப்பான வசனங்களையும் எழுதி, கை தட்ட வைத்திருக்கிறார்.

“என் நாய் போட்டில தோக்குறதை பத்தி எனக்குக் கவலையில்லை. ஆனா, எந்த சாதிக்காரன் நாயிடம் தோக்குதுன்றதுதான் முக்கியம்..”.

“ஜெயிக்கிற நாய் நம்மகிட்ட வாலாட்டிக்கிட்டே இருக்கணும். தோக்குற நாய் நம்மைப் பார்த்து ஏங்கிக்கிட்டே இருக்கணும்…”

“உனக்கு மேல உள்ள சாதிக்காரன்கிட்டயோ, உனக்கு சமமா உள்ள சாதிக்காரன்கிட்டயோகூட பணிஞ்சு போ. ஆனா, உனக்கு கீழ உள்ள சாதிக்காரன்கிட்ட சமரசமா போறதவிட, செத்துப் போறதே மேல்..”

“உங்கப்பாவ நிக்க வச்சு பேசுனது என்னோட அடையாளம். இப்போ உன்னை உக்கார சொல்றது என்னோட அரசியல்…”

இப்படி சாதிய வன்மங்களை அழுத்தம், திருத்தமாக அரசியல் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

அ.தி.மு.க.வின் தலைவியான செல்வி.ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2011-ம் ஆண்டு அவினாசி தொகுதி எம்.எல்.ஏ.,வான தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தனபாலை சட்டப் பேரவைத் தலைவராக தேர்வு செய்த கதைதான் இந்தப் படத்தின் மையக் கரு.

உண்மையாக இந்தப் படத்தை இத்தனை துணிச்சலாக எடுத்தமைக்காக இயக்குநர் மாரி செல்வராஜை வெகுவாகப் பாராட்ட வேண்டும். ஏனெனில் தமிழகத்தில் இப்போதைய நடந்து வரும் அப்பட்டமான சாதி மோதல்களுக்கு தமிழகத்தின் முக்கிய கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரண்டு கட்சிகள்தான் முழுக் காரணம்.

இதில் தி.மு.க.வின் வருங்காலத் தலைவரும், வருங்கால முதல்வருமான உதயநிதியையே நாயகனாக நடிக்க வைத்து அவருடைய கட்சி செய்த, செய்திருக்கும், செய்து கொண்டிருக்கும் சாதிய பிரிவினைகளை, சாதிய அடக்குமுறைகளை, கட்சியிலேயே செய்து கொண்டிருக்கும் சாதி பாகுபாடுகளை விமர்சிப்பதென்பது உதயநிதியின் கையை எடுத்து அவரது கண்ணையே குத்த வைத்திருப்பது சமம். இதை செய்து காட்டியிருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜின் தைரியம் மிகவும் பாராட்டுக்குரியது.

அதேபோல் அரசியல் ரீதியாக இந்தப் படம் சொல்லப் போகும் செய்தி, தான் நிழல் தலைவராக இருக்கும் தி.மு.க.வுக்கு இன்றைய இளைய தலைமுறையினரிடத்தில் நிச்சயமாக ஒரு நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று நினைத்து இதைத் தயாரித்து, நடித்திருக்கும் உதயநிதி ஸ்டாலினும் பாராட்டுக்குரியவர்தான்.

படத்தில் கிணற்றில் குளித்த கல்லால் அடித்துக் கொல்லும் காட்சி பதைபதைக்க வைக்கிறது. அதேபோல் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சிறுவர்கள் குளித்துவிட்டார்கள் என்பதற்காகவே அந்தக் குளத்தை மண் போட்டு மூடும் ஆதிக்க சாதியினரின் செயலும், தமிழகம் எந்த அளவுக்கான சாதிய வெறியில் தள்ளாடுகிறது என்பதையே காட்டுகிறது.

தாமிரபரணி ஆற்றோரம் தேவேந்திர குல வேளாளர்களின் ஊர்வலத்தில் நடந்த கலவரத்தையும், நெல்லை, கொடியன்குளம் கிராமத்தில் நடந்த கலவரத்தையும் இந்தக் காட்சிகள் நியாபகப்படுத்துகின்றன.

உதயநிதி வடிவேலுவை உட்கார சொல்லும் காட்சியில்தான் படமே பரபரப்பாக்குகிறது. அந்தக் காட்சியை உயிர்ப்போடு படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். அந்தக் காட்சியில் நம்மையும் அதில் ஒருவராக நிற்க வைத்திருக்கும் பாணியில் நாமும் ஒன்றிப் போகிறோம். இந்தக் காட்சியை படத்தின் டர்னிங் பாயிண்ட் என்றே சொல்லலாம்.

தன்னுடைய சாதி வெறிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுபோல தன்னை காலில் விழுகச் சொல்லும் தன் சுயசாதி சங்கப் பெரியவர்களின் காலில் விழும் பகத் பாசிலின் செய்கை, சாதிய வீரியம் எத்தகையது என்பதை வெளிக்காட்டுகிறது.

அதேபோல் காலில் விழ வைத்தவரை கொலை செய்துவிட்டு அனுதாபத்தைப் பெறும் முயற்சியில் இறங்கும் பகத் பாசிலின் செயல், இது எல்லாமே அரசியல் அதிகாரத்திற்காகத்தான் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

படத்தில் வடிவேலுவின் வீட்டில் அம்பேத்கர் புகைப்படத்தைக் காட்டுகிறார்கள். அதே நேரம் முதல்வர் சமரசத் தீர்வை சொன்ன பிறகு, அவர் டேபிளில் இருக்கும் பெரியாரின் படத்தின் மீதுதான் அந்தக் காட்சி ப்ரீஸ் ஆகிறது. இந்தக் குறியீடுகளால் பெரியாரையும், அம்பேத்கரையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் இயக்குநரின் கருத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

படிப்பு ஒன்றுதான் தாழ்த்தப்பட்ட மக்களை சாதிப் பிரிவினையில் இருந்து காப்பாற்றும் என்பதுதான் பெரியார் மற்றும் அம்பேத்கர் இருவரின் சொல்லாக்கமும். இதை நாயகன் செய்திருந்தாலும், படத்தில் பன்றிகளை வளர்ப்பது போன்ற கேரக்டர் ஸ்கெட்ச் எதற்கு என்பதுதான் தெரியவில்லை.

பன்றி வளர்ப்பு தவறல்ல.. கீழ்த்தரமானதல்ல என்று இயக்குநர் சொல்ல வந்தாலும் நிஜத்தில் அது நேர்மாறாகத்தான் இருக்கிறது. வெறும் கறிக்காக மட்டுமே வளர்க்கப்படும் இந்த நாட்டு பன்றிகள் வளரும் சூழல், சுற்றுச் சூழல் கெடுதியாகவும், நோய் பரப்பும் இடமாகவும் இருப்பது கண் கூடான உண்மை. இதுதான் பெருவாரியான மக்களுக்கு பன்றிகள் என்றாலே அசூயை ஏற்படுவதற்கான  காரணம்.

ஆனால் இதையே தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அடையாளமே பன்றி வளர்ப்பதுதான் என்பதாக இந்தப் படம் சுட்டிக் காட்டியிருப்பது தவறான வழிகாட்டுதலாக இருக்கிறது.

இந்து மதம் மற்றும், உருவ வழிபாடு கொண்ட அனைத்து மதங்களிலும் மறைமுகமாக தொங்கிக் கொண்டிருக்கும் சனாதன தர்மத்தை அறவே புறந்தள்ளும் அய்யா வழி ஆன்மீகத்தையும் இந்தப் படத்தில் தொட்டுக் காண்பித்திருக்கிறார் இயக்குநர். இதுவும் பாராட்டுக்குரியதுதான்..!

ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து வரும் வடிவேலுவின் வீடு, முந்தைய காலக்கட்டத்திற்கும் தற்போது இருப்பதற்குமான அவருடைய குடும்ப வாழ்க்கை மேம்பட்டிருக்கும் விதத்தைக் காட்டுகிறது. இதற்கான வழி, வகைகளை இயக்குநர் சொல்லாமல்விட்டது ஏன் என்று தெரியவில்லை.

2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரையே ஆதிக்க சாதியினர் தங்களுடைய கிராமங்களில் நுழைய மறுப்பதாகக் காட்டி புதிய, இளைய தலைமுறையினர் இந்த சாதிப் பாகுபாட்டை எதிர்க்கும் மன நிலையில் உள்ளார்கள் என்று காட்டியிருக்கும் பாஸிட்டிவ் அப்ரோச் எழுத்தளவிலும், படைப்பாக்கத்திலும் ஏற்க முடிந்ததுதான். ஆனால் நிஜத்தில் அப்படியா இருக்கிறது..?

கடைசி முயற்சியாக ஒரு வீடியோ பதிவில் பேசி மக்களின் மனம் கவரும் வடிவேலுவின் யுக்தி பாராட்டுக்குரியதுதான் என்றாலும் அதில் வீரியமும், பாச உணர்வும் வெளிப்படவில்லையே இயக்குநரே..?

ஜாதிப் பிரிவினையை தேர்தலில் வெற்றி பெற்றாலே வீழ்த்திவிட முடியும் என்பதாக இந்தப் படம் காட்டியிருக்கும் முடிவும் சர்ச்சையாகியிருக்கிறது. தேர்தல் முடிவு என்பதெல்லாம் தனித் தொகுதிக்கு இவர்தான் எம்.எல்.ஏ. என்பதை மட்டுமே காட்டுகிறது.

முதல் பாதி பரபரப்பாக நகர்ந்து வந்து இடைவேளை பிளாக்கில் நம்மைத் தூக்கி உட்கார வைக்கிறது. ஆனால் இடைவேளைக்குப் பின்பு தேர்தல் காட்சிகளில் மெல்ல நகர்ந்து ஒருவித சலிப்பை ஏற்படுத்திவிட்டது.

பகத் பாசிலின் பின்பு இத்தனை கூட்டம் இருக்கும் நேரத்தில் 2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வடிவேலுவின் பின்பு கூட்டம் இல்லாதது ஏனோ..?

படத்தின் கிளைமாக்ஸில் வடிவேலுவுக்குக் கிடைக்கும் பெருமையை தாழ்த்தப்பட்ட இனத்தினருக்கான பெருமிதமாக சொல்லியிருந்தாலும் இது தற்காலிகமானதே.. என்று நாம் சற்று ஆசுவாசப்பட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஏனெனில் அவர் எம்.எல்.ஏ.வான பின்பும் அவருக்கான சமூக நீதியை அவர் சார்ந்த கட்சியும், ஆட்சியும், ஆதிக்க சாதி மக்களும் கொடுக்கிறதா.. கொடுக்கிறார்களா.. இல்லையா.. என்பதில்தான் சாதிய ஒழிப்பே அடங்கியிருக்கிறது. இதை இந்தப் படத்தின் இறுதியில் இயக்குநர் இன்னும் கொஞ்சம் அழுத்திச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

தமிழகத்தின் சமூக நீதியைக் கட்டிக் காக்கும் கட்சிகளில்கூட சாதி வெறி எப்படி இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாய் சொல்லியவிதத்திலும், கட்சியின் தலைமைகள் இது போன்ற நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை சொன்ன விதத்திலும் சாதிய அடையாளத்தை கட்சிகளில் இருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவிதத்திலும் இந்த மாமன்னன்’ கொண்டாடப்பட வேண்டியவன் என்பதில் சந்தேகம் இல்லை..!

RATING : 4 / 5

Our Score