full screen background image

மாதவனும் மலர்விழியும் – சினிமா விமர்சனம்

மாதவனும் மலர்விழியும் – சினிமா விமர்சனம்

தாய், தந்தையில்லாமல் பாட்டியின் அரவணைப்பில் கொடைக்கானலில் இருப்பவர் ஹீரோ மாதவன். வெட்டி ஆபீஸர். கூடவே நாலைந்து வெட்டி நண்பர்கள்.

ஒரு நாள் புகைப்படம் எடுக்கச் செல்லும்போது ஹீரோயின் காஞ்சனாவை சந்திக்கிறார். மோதலில் ஏற்படும் சந்திப்பு காஞ்சனாவுடன் அடிக்கடி மோதவும் செய்ய வைக்கிறது.. காஞ்சனாவை டார்ச்சர் செய்ய நினைத்து அவள் நடனம் பயிலும் பள்ளியில் ஹீரோவும் சேர்கிறார்.

அங்கே நடன ஆசிரியர் மலர்விழி. இளம் விதவை. அடிக்கடி மயக்கம் போட்டு விழுகிறார். சிகிச்சைக்காக மருத்துவரிடம் செல்லும்போது “ஆண் துணையில்லாமல் இருப்பது ரொம்ப கஷ்டம். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குங்க. இது மாதிரி இன்னொரு தடவையும் வந்தா ரொம்பச் சிக்கலாயிரும்..” என்கிறார் டாக்டர். இதனை அரைகுறையாகக் கேட்டுத் தொலைக்கிறார் ஹீரோ.

இன்னொரு நாள் மலர்விழி மயங்கி விழுகும்போது டாக்டர் சொன்னது ஹீரோவின் நினைவுக்கு வர.. டீச்சருடன் கலவி கொள்கிறார். மயக்கம் தெளிந்து உண்மையறிந்த மலர்விழி ஹீரோவை சந்திப்பதைத் தவிர்க்கிறாள். ஆனாலும் அவளுக்குள் காதல் ஏற்பட்டுவிடுகிறது. இதே நேரம் காஞ்சனா அதுவரையில் வேண்டாம் என்று ஒதுக்கிய ஹீரோவை திருமணம் செய்ய நினைக்கிறார். இருவரில் யாருக்கு ஹீரோ கிடைத்தார் என்பதுதான் படம்.

ஏதோவொரு மலையாளப் படத்தை ரீமேக் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஹீரோத்தனமே இல்லாத ஹீரோ.. விடலைத்தனமாகவே பேசி, பழகி காதலிக்கும் கேரக்டர்.. சீரியஸ்னெஸ்ஸே இல்லை.. முற்பாதியைவிட பிற்பாதியில் கொஞ்சம் நடித்திருக்கிறார்.. ஆனாலும் திரைக்கதை அவ்வளவு வேகமில்லை என்பதால் அதிகம் ரசிக்க முடியவில்லை.

காஞ்சனாவாக நடித்தவரின் முகவெட்டு பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. எப்படி ஹீரோயினாக ஆனார் என்பது அந்த முருகனுக்கே வெளிச்சம்.. பார்க்கும்போதே சின்னப் புள்ளைக மாதிரியே இருக்காங்க.. இவங்க ரெண்டு பேரும் லவ் பண்றதை நினைக்கவே முடியலை.. அப்புறம் எப்படி கதையில் ஒன்றிப் போவது..?

ஒரேயொரு ஆறுதல் மலர்விழியாக நடித்திருக்கும் ஸ்ரீஜாரோஸ் மட்டுமே.. அழகு தேவதை.. இதற்கு முன்னர் 2 படங்களில் நடித்துவிட்டு இப்போதும் தமிழ் பக்கம் அதிகம் வராமல் இருக்கிறார். ஏனோ தமிழ் இயக்குநர்களும் அப்ரோச் செய்யாமல் இருக்கிறார்கள். நடிப்பு சுண்டிவிட்டாலே வருகிறது.. அழகும், திறமையும், நளினமும் ஒருசேர இருக்கிறது அம்மணியிடம்.. எடுத்துக் கொடுக்கத்தான் ஒரு நல்ல இயக்குநர் இல்லை போலும்..! பாடல் காட்சிகளில் அசத்தியிருக்கிறார். லொகேஷனும், இவருடைய காஸ்ட்யூம்ஸும், நடனமும் மீண்டும், மீண்டும் பார்க்க வைக்கும்..

வெண்புறா வெங்கடேஷ் என்ற கேரக்டரில் நம்ம வில்லன் பொன்னம்பலம்.. கிளைமாக்ஸ் காட்சிவரைக்கும் அழுத்தமாக நடித்திருக்கிறார்.. பட்.. எல்லாமே சொதப்பல் கிளைமாக்ஸினால் வீணாகிவிட்டது..! இந்த 2014-லிலும் கொடைக்கானலில் போலீஸே இல்லாததுபோல காட்டியிருப்பது மன்னிக்க முடியாத குற்றம்.. பொன்னம்பலத்தின் ரவுடித்தனம் பற்றிய காட்சிகளெல்லாம் நம்பும்படியாக இல்லை..

கிளைமாக்ஸ்வரைக்கும் படம் சாதாரண ஒரு காதல் படமாக.. ஏற்றுக் கொள்ளக்கூடிய படமாகவே இருந்திருந்த்து. கிளைமாக்ஸில் வைத்திருக்கும் அந்த நடனக் காட்சி தேவையில்லாமல் கதையை அடல்ட் ஒன்லி கதையாக்கி.. யு-ஏ சர்டிபிகேட்டையும் வாங்கிக் கொடுத்துவிட்டது.. இதெல்லாம் தேவைதானா..? காதலை தியாகம் செய்துவிட்டு போவது போலவே கொண்டு போயிருக்கலாம்.. நிர்வாணமாக பரத நாட்டியம் ஆடச் சொல்லி ரசிப்பதெல்லாம் என்னவொரு டிராஜடி டேஸ்ட்..? இயக்குநர் ஸார்.. ரொம்ப ரொம்ப பேட் டேஸ்ட் உங்களுடையது..

‘வைதேகி காத்திருந்தாள்’ கதையை கொஞ்சம் திருப்பிப் போட்டு எடுத்திருப்பதை காட்டுவதற்காக அந்தப் படத்தின் பாடலையே ஒலிக்க வைத்திருப்பது ரொம்ப டூ மச்சா இருக்கு..! ஆனாலும் வசந்தமணியின் இசையில் ஒலித்த 4 பாடல்களுமே அருமை.. அதிலும் ‘சிந்து நதியிலே’ பாடலும், ‘அட்டா ஜிம்கானா’ பாடலும் திரும்பத் திரும்ப கேட்க வைப்பவை..

இது போன்ற சின்ன பட்ஜெட் படங்களில்தான் பாடல்கள் நன்றாக இருக்கின்றன.. பெரிய பட்ஜெட் படங்களில் இசையமைப்பாளர்கள் வாங்கும் செக் மட்டுமே சிறப்பாக இருக்கிறது.. சந்தேகமிருந்தால் இப்படத்தின் பாடல்களை கேட்டு பாருங்கள்..!

ஒரு சராசரியான காதல் படமாக வந்திருக்க வேண்டியது கிளைமாக்ஸ் கொடுத்த அதிர்ச்சியினால் கருத்தே சொல்ல முடியாத அளவுக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டது.. ஸாரி டைரக்டர் ஸார்..!

Our Score