தமிழ்த் திரையுலகத்தின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் புதிய திரைப்படங்களைத் தயாரிப்பதற்காக சிறந்த கதைகளைக் கேட்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
லைகா நிறுவனம்தான் தற்போதைக்கு தமிழ்ச் சினிமாவில் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமாக உள்ளது. தற்போது ‘இந்தியன்-2’, ‘பொன்னியின் செல்வன்’, சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘டான்’ உட்பட சில மெகா பட்ஜெட் படங்களைத் தயங்காமல் தயாரித்து வருகிறது.
‘இந்தியன்-2′, மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய திரைப்படங்கள் கொரோனா லாக் டவுன் காரணமாக ஷூட்டிங் நடத்தப்படாமல் தாமதமானாலும் நிச்சயமாக இந்தாண்டில் இந்தப் படங்கள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நேரத்தில் லைகா நிறுவனத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுள்ளனராம். இந்த நிர்வாகிகள் பெரிய பட்ஜெட் படங்களை செய்வதைவிடவும் மீடியம் பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் படங்களைத் தயாரித்து குறிப்பிடத்தக்க லாபத்தைப் பார்ப்பதுதான் கம்பெனியின் எதிர்காலத்திற்கு நல்லது என்று நிறுவனத்தின் தலைமைக்கு உணர்த்தியிருக்கிறார்களாம்.
இதற்கு நிறுவனத் தலைமையும் ஒத்துக் கொண்டிருப்பதால் புதிய படங்களைத் தயாரிக்க.. மீடியம் பட்ஜெட் படங்களைத் தயாரிக்க அந்த நிறுவனம் முன் வந்திருக்கிறது. இதற்காக கதை கேட்கவும் தாங்கள் தயார் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள்.

இதற்காக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள போஸ்டரில் நிறுவனத்தின் ஈ-மெயில் முகவரியைக் கொடுத்திருக்கிறார்கள். சொல்ல வேண்டிய கதையின் சுருக்கத்தை, அனுப்புபவரின் முழு விவரத்தோடு அந்த ஈ-மெயிலில் அனுப்பி வைக்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்த் திரையுலகத்தில் ஒரு இயக்குநராக ஜெயிக்க வேண்டும் என்று போராடி வரும் திறமைசாலிகளுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பு..!
பயன்படுத்திக் கொள்ளுங்கள்..!!!