full screen background image

லக்கி பாஸ்கர் – சினிமா விமர்சனம்

லக்கி பாஸ்கர் – சினிமா விமர்சனம்

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சியும், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சாய் சௌஜன்யாவும் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் இப்படத்தை வழங்குகிறது.

இப்படத்தில் துல்கருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்திருக்கிறார். மேலும் சாய்குமார், டினு ஆனந்த் இருவரும் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த லக்கி பாஸ்கர்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பு பக்காளன் மற்றும் நவின் நூலி படத் தொகுப்பாளர். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தை சார்’, ‘வாத்திஆகிய பிளாக் பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.

குடும்பத் தேவைக்காகக் குறுக்கு வழியில் சம்பாதித்த ஒரு வங்கி கேஷியரின் உண்மைக் கதைதான் இந்தப் படம்.

1992-ம் ஆண்டு வெளியாகி இந்தியாவையே உலுக்கியெடுத்து மும்பை பங்குச் சந்தையின் மிகப் பெரிய ஊழலின் நாயகனான ஹர்ஷத் மேத்தாவின் துணையோடு தான் வேலை பார்த்த வங்கிப் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்ற ஒரு கேஷியரின் வாழ்க்கைக் கதைதான் இந்தப் படம்.

1991-ம் ஆண்டு. துல்கர் சல்மான் மும்பையில் ஒரு வங்கியில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். ஒரு தம்பி, தங்கை, அப்பா, மனைவி, ஒரு மகனுடன் வாழ்ந்து வரும் துல்கருக்கு பணப் பிரச்சினைகள் ஏராளம். நிறைய பேரிடம் கடன் வாங்கி வைத்திருக்கிறார். அதைக் கட்ட முடியாமலும் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் அவர் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த அஸிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட் அவருக்குக் கிடைக்காமல் போகிறது. அதே நேரம் கொடுத்த கடனுக்காக கடன்காரன் அவரை நடுரோட்டில் அவமானப்படுத்திவிட்டு ஸ்கூட்டரை எடுத்துச் சென்று விடுகிறான்.

இந்த நேரத்தில்தான் துல்கரின் மனம் மாறுகிறது. எதை செய்தாலாவது பணம் சம்பாதித்துவிடலாம் என்ற எண்ணத்துக்குத் தள்ளப்படுகிறார் துல்கர். இந்த மனப் போராட்டத்தில் இவர் இருக்கும்போதுதான் ஆண்டனி என்ற ராம்கி துல்கரிடம் வந்து ஒரு வழியைக் காட்டுகிறார்.

அந்த வழியைப் பயன்படுத்தி வங்கிப் பணத்தை எடுத்து ஆண்டனியிடம் கொடுக்கிறார் துல்கர். ஆண்டனி அந்தப் பணத்தை வைத்து வெளிநாட்டில் இருந்து பொருட்களை வாங்கி விற்று, மீண்டும் அந்தப் பணத்தைப் புரட்டி துல்கரிடமே கொடுத்துவிடுகிறார். துல்கரும் சத்தம் போடாமல் அந்தப் பணத்தை மீண்டும் வங்கியில் வைத்துவிடுகிறார்.

இந்த ரொட்டேஷன் முறையில் வங்கிப் பணத்தை அள்ளிக் கொடுத்து கிடைக்கும் கமிஷனில் ஏகபோக வாழ்க்கை வாழ்கிறார் துல்கர். இந்த நேரத்தில்தான் ஆண்டவனாகப் பார்த்து அவருக்கு அஸிஸ்டெண்ட் ஜெனரல் மேனேஜர் போஸ்ட்டை கொடுக்கிறார்.

இப்போதுதான் மிகப் பெரிய திமிங்கிலமான ஹர்ஷத் மேத்தாவின் அறிமுகம் துல்கருக்குக் கிடைக்கிறது. ஹர்ஷத் வங்கிப் பணத்தை வேறொரு வங்கியின் பெயரில் கடனாகப் பெற்று அந்தப் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகிறார். இந்த வகையில் கிட்டத்தட்ட 4000 கோடி ரூபாய்வரையிலும் ஹர்ஷத் மேத்தா சம்பாதித்துவிட்டார்.

இந்தத் தில்லுமுல்லு துல்கருக்கும் தெரிய வர.. அவரும் இதில் பங்குதாரராகிறார். ஆயிரம், லட்சமாகி துல்கர் பணத்தில் மிதக்கத் துவங்க.. ஒரு நாள் ஹர்ஷத் மேத்தா சிபிஐயிடம் பிடிபடுகிறார். அவரோடு வரிசையாக பலரும் கைதாகிக் கொண்டிருக்க.. அடுத்த்து துல்கர்தான் என்ற நிலைமை வருகிறது.

துல்கர் சிபிஐயில் சிக்கினாரா..? இல்லையா..? மக்கள் பணம் வங்கிக்குத் திரும்பக் கிடைத்ததா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் துல்கர் சல்மானுக்கு இதுவொரு சவாலான கதாப்பாத்திரம். மொத்தக் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்புடன் பணத்தைத் தேடியலையும் சாதாரண மிடில் கிளாஸ் மனிதனாக பல இடங்களில் நம்மையே திரையில் பிரதிபலித்திருக்கிறார்.

அடுத்தடுத்து வரும் சோதனைகளைத் தாண்டி ஓடுவதும், அந்தந்தக் காட்சிகளுக்கேற்ப நடிப்பைக் காட்டி அந்தக் காட்சியை ரசிக்க வைக்கும்விதமாய் தன் நடிப்பில் சிறப்பானவைகளை திரையில் காண்பித்து நம்மையும் பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார் துல்கர்.

அஸிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட் கிடைக்காத கோபத்தில் மேனேஜரிடம் போய் சண்டையிட்டு பின்பு சட்டென்று அவருடைய காலில் விழுந்து கதறும் காட்சியில் உண்மையில் ஒரு சாதாரண குடும்பத் தலைவனை காட்டுகிறார்.

பின்பு அடுத்தடுத்து தனது ஆட்டத்தை ஆடும்போது வெற்றிப் புன்னகையைச் சிதறவிடும்போதும், கோவாவுக்கு செல்லும் பயணத்தை வெற்றிகரமாக முடிக்கும்போதும், கடைசியாக வங்கியின் சேர்மனிடம் இறுக்கமான முகத்துடன் பேசிவிட்டு வெளியில் வந்து ரசிகர்களுக்கு ஒரு திகிலைக் கொடுக்கும்போதும் ‘வாவ்’ என்றுதான் சொல்ல வைத்திருக்கிறார் துல்கர்.

துல்கர் சல்மானின் மனைவியான மீனாட்சி செளத்ரி அந்தக் குடும்ப பாங்கான மனைவிக்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். பல்வேறு குடும்பச் சூழல்களில் சிக்கித் தவிக்கும் சராசரி குடும்பப் பெண்ணாக சமர்த்தாக நடித்திருக்கிறார் மீனாட்சி. பிறந்த வீட்டில் நடக்கும் அவமானத்தைத் தாங்க முடியாமல் கோபத்தைக் கொட்டிவிட்டுக் கிளம்பும் மீனாட்சி, கடைசியாக தன் குடும்பத்தினருக்காக கணவருடன் பேசி சமாதானம் செய்து வைக்கும் அளவுக்கு நல்லவளாகத் தன்னுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்ற நடிப்பைக் காட்டியிருக்கிறார்.

ஆண்டனியாக நடித்திருக்கும் ராம்கி, ஹர்ஷத் மேத்தாவாக நடித்தவர், வங்கியின் சேர்மனாக நடித்த டினு ஆனந்த், சிபிஐ அதிகாரியாக நடித்த சாய்குமார் என்று மற்றவர்களும் தங்களது நடிப்பை குறையில்லாமல் கொடுத்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு 1990-களில் நடப்பதை போல கிரே அண்ட் ஷேட் கலரில் ஷூட் செய்திருப்பது சாலப் பொருத்தம். அந்தக் காலக்கட்டம் போலவே வங்கி செட் போட்டிருக்கும் கலை இயக்குநருக்கு ஒரு ஷொட்டு. ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில், பாடல்களும் பின்னணி இசையும் அதிகம் நம்மைக் கவரவில்லை!

1990-களில் மாதம் ஒரு தடவை மட்டும் வங்கிகள் தங்களது பேலன்ஸ் ஷீட்டை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பினால் போதும் என்றிருந்த விதிமுறையை வைத்துதான் ஹர்ஷத் மேத்தா போன்ற முதலைகள் மக்கள் பணத்தை இப்படிக் கொள்ளையடித்தார்கள்.

அவர்கள் எப்படி கொள்ளையடித்தார்கள்..? எப்படி தப்பித்தார்கள்..? கடைசியாக யார், யாரெல்லாம் சிக்கினார்கள் என்பதையெல்லாம் சொன்ன இயக்குநர், நாயகன் மட்டும் தப்பித்து அமெரிக்காவில் ஹோட்டல் வாங்கி செட்டிலாகிவிட்டதாகக் காட்டியிருப்பதுதான் இந்தப் படத்தை பாராட்ட விடாமல் செய்துவிட்டது.

100 கோடி ரூபாய்க்கு செக்குகளைக் கொடுத்துவிட்டு வங்கியின் வாசலுக்கு வந்து நிற்கும் துல்கரைக் காட்டிவிட்டு படத்தை முடித்திருந்தால்கூட, நிச்சயமாக இந்தப் படம் இந்த அளவுக்கு வெற்றியையே கொடுத்திருக்கும். நாமளும் பாராட்டித் தீர்த்திருக்கலாம்!

ஆனால் அதுவும் டிராமாதான். நாயகனின் பராக்கிரமத்தைப் பாருங்கள் என்று சொல்லி நாயகன் இந்திய மக்களின் 100 கோடி ரூபாயுடன் தப்பியோடியதை நியாயப்படுத்துவதைப்போல காட்சியமைத்து முடித்திருப்பது நிச்சயமாக ஏற்க முடியாதது.

இது போன்ற தவறுகளை எதுவும் நடக்காததுபோல காட்டுவது படம் பார்க்கும் நாளைய தலைமுறையின் மனதையும் மாற்றி, எதுவுமே தப்பில்லை என்கிற மனோபாவத்தை அவர்களுக்குள் புகுத்திவிடும்.

இதனாலேயே செய்த தவறுக்குத் தண்டனையுண்டு என்று சொல்வதுதான் திரைப்படத்தில் நாம் காட்டும் நீதியாக இருக்க வேண்டும். இதுதான் மனித குல வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

‘லக்கி பாஸ்கர்’ என்ற தலைப்புகூட, இந்தப் படத்துக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாதது. ‘திருட்டு பாஸ்கர்’ என்றுதான் வைத்திருக்க வேண்டும்..!

RATING : 3.5 / 5

 

Our Score