full screen background image

“லவ் டுடே’ பிரதீப் இன்னொரு தனுஷாக உயர்வார்” – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வாழ்த்து..!

“லவ் டுடே’ பிரதீப் இன்னொரு தனுஷாக உயர்வார்” – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வாழ்த்து..!

AGS Entertainment நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி S.அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே’ படம் கடந்த  ஆண்டின் பிளாக் பஸ்டர் வெற்றியாக மகுடம் சூடியது.

அனைத்து தரப்பினரும் கொண்டாடிய இப்படம், தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு, 100-வது நாளை கடந்த திரைப்படமாக சாதனை படைத்துள்ளது.

இப்படம் 100 நாட்களை கடந்ததை அடுத்து படக் குழுவினரை கௌரவிக்கும்விதமாக மிகப் பிரம்மாண்டமான வெற்றி விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு படக் குழுவினருக்கு வெற்றிக் கோப்பையை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் படத் தொகுப்பாளர் மோகன் பேசும்போது, “AGS உடைய புகழ் இ்ந்தப் படத்தின் மூலமாக காலம் காலமாக நிலைத்து நிற்கும். தனித்துவமான படங்களை அவர்கள் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர்.

பிரதீப் முதல் படத்திலும் வெற்றியைக் கொடுத்தார். இரண்டாவது படத்திலும் இன்று வெற்றியை கொடுத்து நாயகனாக இருக்கிறார். இந்தப் படத்தில் பணிபுரிந்த நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுக்க வேண்டும். அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.” என்றார்.

இயக்குநர் R.V.உதயகுமார் பேசும்போது, “100 நாட்கள் விழா நடந்து பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது இந்த லவ் டுடே’ திரைப்படம் 100 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த இயக்குநருடைய முதல் படமே எனக்கு மிகப் பிடித்தமான ஒன்றாக இருந்தது. இந்தப் படத்தை அதிக பொருட்செலவில், அதிக அர்ப்பணிப்பில், அதிக சிரத்தையில், அதிக உழைப்பில் உருவாக்கியுள்ளனர். பிரதீப் இன்னொரு தனுஷாக வருவார். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.

இயக்குநர் மோகன்ராஜா பேசும்போது, “AGS எனது குடும்பம் போன்றது. AGS உடன் நான் 16 ஆண்டுகளாக பயணித்து வருகிறேன். எனது வாழ்கையில் மிக முக்கியமான ‘தனி ஒருவன்’ படம், இதே AGS நிறுவனத்தினால்தான் தயாரிக்கப்பட்டது. ‘லவ் டுடே’ திரைப்பட வெற்றிக்கு படக் குழுவினர் மிகவும் தகுதியானவர்கள். இந்தப் படத்திற்காக இயக்குநர் பிரதீப்பிற்கு நன்றி கூறிக் கொள்கிறேன். பிரதீப் பலருக்கு இன்ஷ்பிரேசனாக மாறியுள்ளார். இது போன்ற பல படங்களை AGS நிறுவனம் தொடர்ந்து தர வேண்டும்.” என்றார்.

நடிகர் சதீஷ் பேசும்போது, “AGS தொடர்ந்து இரண்டு புதுமுக கதாநாயகர்களை வைத்து திரைப்படம் எடுத்தார்கள். அதற்கு அவர்களுக்கு நன்றி கூற வேண்டும். இது போன்று அவர்கள் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். பிரதீப்பின் இந்த வெற்றி உண்மையான வெற்றி. அவர் இதை தாண்டுவதற்கே அடுத்து கடினமான உழைப்பை கொடுக்க வேண்டும். மிகச் சிறந்த வெற்றியை அவர் பதிவு செய்து இருக்கிறார். ஒட்டு மொத்த படக் குழுவிற்கும் எனது வாழ்த்துகள்.” என்றார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசும்போது, “இந்தப் படத்தின் இசையை பொறுத்தவரை எனது குழுவிற்கும், பாடகர்களுக்கும், பாடலாசிரியர் பிரதீபிற்கும் எனது நன்றி. இந்தப் படத்தின் கதையை கேட்டவுடன், இது ஹிட் என்று நான் முடிவுக்கு வந்துவிட்டேன். இந்தப் படம் AGS-க்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்து இருக்கிறது, அதற்கு வாழ்த்துகள். இது போன்ற பல வெற்றிகளை அவர்கள் அடைய வேண்டும் அதற்கு என்னுடைய வாழ்த்துகள்.” என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் பேசும்போது, “சினிமாவில் பல ஆண்டுகளாக 100 நாள் விழாக்கள் நடக்கவில்லை. AGS நிறுவனம் இப்போதுதான் அதை முறியடித்துள்ளனர். அதில் நான் கலந்து கொண்டதிலும் பெரும் மகிழ்ச்சி. பிரதீப்பின் முதல் படத்தை நான் தயாரித்ததில் மிகவும் மகிழ்ச்சி. அதுவும், நூறு நாள், இதுவும் நூறு நாள், இது போன்று தொடர்ந்து அவர் பல வெற்றிகளை குவிக்க வேண்டும். பிரதீபிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.” என்றார்.

நடிகை இவானா பேசும்போது, “இந்தப் படத்தின் வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த வெற்றி விழா மேடையில் நான் இருப்பது என் வாழ்கையின் மிக முக்கியமான தருணம். இயக்குநராகவும், நடிகராகவும் பிரதீப் ஒரு மிகச் சிறந்த மனிதர். இந்தப் படக் குழு கொடுத்த அரவணைப்பு எனது வாழ்க்கையின் மிக முக்கியமான ஒன்றாக மாறியிருக்கிறது. என்னுடன் இந்தப் படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன்.” என்றார்.

கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசும்போது, “பிகில் படத்திற்கு பிறகு இந்த மேடை எங்களது நிறுவனத்திற்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த ‘லவ் டுடே’ படத்தின் கதையைக் கேட்கும்போதே நம்பிக்கையை கொடுக்கக் கூடிய வகையில் இருந்தது. அதுதான் படத்தின் சிறப்பு என்று நினைக்கிறேன்.

கொரோனாவிற்கு பிறகு பல திரைப்படங்கள் வெளியாயின. “லவ் டுடே’ போன்ற பெரிய ஹீரோ இல்லாத படத்தை எப்படி வெளியிட போகிறீர்கள்..?” என்று பலர் கேட்டபோது, இயக்குநர் முழு நம்பிக்கையுடன் இருந்தார். இந்த வெற்றி மிகப் பெரிய நம்பிக்கையை தந்துள்ளது. இந்தப் படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.

இயக்குநர் நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசும்போது, “ஒரு புதுமுகத்தை நாயகனாக வைத்து திரைப்படம் எடுக்க பலர் முன் வர மாட்டார்கள். ஆனால் AGS முன் வந்தார்கள். அதோடு அவர்கள் எனக்கு இந்தப் படத்தின் உருவாக்கத்தில் பெரும் சுதந்திரம் தந்தார்கள். அதற்காக ஒட்டு மொத்த AGS குழுவிற்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் இசையை பொறுத்தவரை யுவன் சாரிடம், நிறைய விஷயங்களில் கூடுதலாக, ஈடுபாட்டுடன்  இயங்கினேன். யுவன் சார் மிக அற்புதமான இசையை தந்தார். அடுத்ததாக எனது தொழில் நுட்பக் குழு, அவர்களது பணி அளப்பறியது. அவர்களும், உடன் நடித்த நடிகர், நடிகைகளும் இந்தப் படத்தை மேம்படுத்தினார்கள்.

கடைசியாக மக்கள் கொடுத்த ஆதரவில் இந்தப் படம் பெரிய வெற்றிப் படமாக மாறியது. இந்தப் படத்திற்காக உழைத்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி கொள்கிறேன்.” என்றார்.

Our Score