full screen background image

லாக் டவுன் – சினிமா விமர்சனம்

லாக் டவுன் – சினிமா விமர்சனம்

லைகா புரொடக்ஷன்ஸ் திரு.சுபாஷ்கரன் தயாரிப்பில், ஜி.கே.எம்.தமிழ்குமரன் தலைமையில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘லாக் டவுன்’.

சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற 56 வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு சர்வதேச திரை ஆர்வலர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்த ‘லாக் டவுன்’ திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன், பிரியா வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு படத் தொகுப்பாளராக சாபு ஜோசப், இசையமைப்பாளராக என்.ஆர்.ரகுநந்தன் – சித்தார்த் விபின் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

லாக் டவுன் காலகட்டத்தில் மக்களுக்கு ஏற்பட்ட உணர்வு மற்றும் உளவியல் ரீதியிலான தாக்கங்களை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்போதைய புதிய தலைமுறையினர் அனைத்துவித நடைமுறைகளையும், மரபுகளையும் தாண்டி செல்வதுதான் இப்போதைய வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த எண்ணத்துடன் அவர்கள் செயல்படுத்தும்போது ஏற்படும் தோல்வியினால் தன்னை சுற்றி இருக்கின்ற அனைவரையுமே கண்கலங்க வைக்கிறார்கள். வருத்தப்பட வைக்கிறார்கள். அதனுடைய பலனை மீறுபவர் மட்டுமே இல்லாமல் அவருடைய குடும்பமும், சுற்றத்தினரும் அனுபவிக்கப் போகும் கொடுமைகளை நினைத்துதான் முன்பே பலரும் எச்சரிக்கிறார்கள்.

ஆனால் அந்த எச்சரிப்பை உதறி தள்ளும் இன்றைய தலைமுறையினர் பாதிக்கப்பட்ட பின்புதான் அதை உணர்கிறார்கள். அப்படி ஒரு கதைதான் இந்த லாக் டவுன்’ திரைப்படம்.

அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய அம்மா, அப்பா, தங்கையுடன்  மிடில் கிளாஸ் ஃபேமிலியில் வாழ்கிறார். வேலை தேடி தீவிரமாக அலைந்து கொண்டிருக்கிறார். அவருக்கான சரியான வேலை கிடைக்காமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் அவருடைய தோழி ஒருவர் தன் வேலை வாங்கி தருவதாக சொல்லி ஒரு இடத்திற்கு அழைக்கிறார். தோழியை பார்க்க அந்த இடத்துக்குப் போன அனுபவமா சிறிது ஆர்வத்திலும் தோழியின் வற்புறுத்தலாலும் கொஞ்சம் மது அருந்தி, நடனமும் அடி தன்னுடைய கவலையை மறக்கிறார்.

ஆனால் முதல்முறையாக மது அருந்தியதால் மயக்கம் அடைய அந்த இடத்திலிருந்து மறுநாள் காலையில்தான் அவர் தன்னுடைய வீட்டுக்கு வந்து சேர்கிறார்.

இதன் பின்பு இரண்டு மாதங்கள் கழித்து திடீரென்று அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக மருத்துவமனைக்கு செக்கப்புக்கு செல்கிறார். அங்கே, அவர் கர்ப்பமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

யாரும் எனக்கு பாய் ஃபிரண்ட் இல்லை. காதலர்கள் இல்லை. நான் யாருடன் உறவு வைத்துக் கொள்ளவில்லை. பின்பு எப்படி நான் கர்ப்பமானேன் என்று தன்னுடைய தோழியிடம் கேட்டு கேட்டு சலித்து போய் கடைசியாக வேறு வழி இல்லாமல் கருவை கலைத்துவிடலாம் என்று தீவிரமாக முயற்சி செய்கிறார் அனுபமா.

ஆனால் அது சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக முடியாமல் போகிறது. இவர் கருக்கலைப்பு செய்ய போகும் அதே நாளில்தான் இந்தியா முழுவதும் கொரோனா லாக்டவுன் ஆரம்பிக்க அனுபமாவின் அத்தனை முயற்சிகளும் தோல்வி அடைகின்றன.

இதற்குப் பிறகு என்ன நடந்தது?.. அனுபமா குழந்தை பெற்றாரா? இல்லையா? அவரது குடும்பத்தினருக்கு விஷயம் தெரிந்ததா..? இல்லையா..? அவர்கள் என்ன சொன்னார்கள்? என்பதையெல்லாம் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இளமை கொப்பளிக்கும்விதமாய் தான் அடித்த அத்தனை திரைப்படங்களிலும் சிரிப்பும், மகிழ்ச்சியும், கொண்டாட்டமாய் நடித்துக் கொண்டிருந்த நாயகி அனுபமா பரமேஸ்வரனுக்கு இந்தப் படம் நிச்சயமாக ஒரு புதிய விதம்தான்.

கர்ப்பம் என்கின்ற செய்தி தெரிய வரும்வரையிலும் ஒரு சாதாரணமான மிடில் கிளாஸ் மகளாக, பொறுப்பான மகளாக இருக்க விரும்பி வேலை தேடி அலையும் அந்த காட்சிகளில் தன்னுடைய சோகத்தையும் தான் சந்திக்கும் ஏமாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளும் விதமாய் நடித்திருக்கிறார் அனுபமா.

ஆனால் தனக்கே தெரியாமல் தான் கர்ப்பம் என்ற செய்தியை அறிந்தவுடன் அதற்கு பின்பு படம் முழுவதும் இவருடைய கையில்தான். அப்பா, அம்மா, தங்கைக்கு தெரியக் கூடாது. எப்படியாவது இந்த பிரச்சனையையும் முடிக்க வேண்டும். அதேசமயம் பணத்தையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற இக்கட்டான சூழலில் ஒரு இளம் பெண் மாட்டிக் கொண்டு முழித்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு நிஜமான ஒரு நடிப்பை காண்பித்திருக்கிறார் அனுபமா.

பணப் பிரச்சனை ஏதும் அறியாத இளைய வயதினருக்கு அந்த பிரச்சினை வந்தால் அவர்கள் எப்படி எல்லாம் தடுமாறுவார்களோ அப்படி ஒரு போராட்டத்தை காண்பித்திருக்கிறார் அனுபமா! கர்ப்பம் கலைக்க மாத்திரைகள் வாங்க அல்லல்படும்பொழுது டாக்டர்களை கருக்கலைப்புக்கு ஒத்துக்க வைப்பதற்காக அனுபமாவும் அவருடைய தோழியும் படும் கஷ்டம்.. படம் பார்ப்பவர்களை நிறையவே டிஸ்டர்ப் செய்துவிட்டது.

எப்போதும் மகள்கள் மீது பாசத்தை கொட்டும் அப்பா வரிசையில் இந்தப் படத்திலும் சார்லி தன்னுடைய அழகான, பண்பட்ட நடிப்பை காண்பித்திருக்கிறார்.

“என் மகள் எந்த தப்பும் பண்ண மாட்டாள்.. ஏதோ பிரச்சனையில் மாட்டி இருக்கா.. விடு சரியாயிரும்..” என்று எவ்வளவு குழப்பங்களும் சந்தேகங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மகளுக்கு ஆதரவு கரம் நீட்டும் அப்பாவாக நடித்திருக்கும் சார்லி… இப்படி ஒரு அப்பா நமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் என்று நினைக்க வைத்திருக்கிறார்.

வீட்டில் ஒவ்வொரு குழப்பத்தின் போதும் குடும்பத் தலைவர் என்ற பெயரையும் தன்னுடைய அப்பா என்ற ஸ்தானத்திலும் மகள் மீது துளிகூட சந்தேகம் கொள்ளாமல் என்ன பிரச்சனை என்பதை அவளாகவே சொல்லட்டும் காத்திருப்போம் என்று மிக நாகரீகமாக நடந்து கொள்ளும் இந்த அப்பா நமக்கு ரொம்பவும் பிடித்தமானவராக மாறிவிட்டார். சார்லிக்கு இத்திரைதிரைப்படம் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.

பாசத்தைக் கொட்டும் அம்மாவாக இருந்தாலும் சந்தேகப்பட்டு மகளைக் கேள்வி கேட்கும் அம்மாவாக நிரோஷா இதுவரையில் நடிக்காத ஒரு நடிப்பினை இந்த படத்தில் காண்பித்திருக்கிறார்.

அதிலும் அவள் எதையோ தன்னிடம் இருந்து மறைக்கிறாள்.. தன்னையே வெளியில் தள்ளும் அளவுக்கு கோவப்படுவதை கண்டு எதிர் கோபம் கொள்ளும் நிரோஷா மகளை அடித்து உதைக்கும் காட்சியில் நிஜமாகவே ஒரு மிடில் கிளாஸ் தாயை நாம் கண்முன்னே காட்டி விட்டார் நிரோஷா. உண்மையில் எல்லா அம்மாமார்களும் இப்படி இருக்க மாட்டார்கள். ஆனால் இப்படி ஒரு அம்மா இருந்தால் அவர் வேறு என்னதான் செய்வார்?

மகள் மீதான பாச பேச்சுக்களும், அவருடைய சந்தேகங்களும்… அதற்கு பின்னான மகள் மீது கொண்ட பாசப் போராட்டமும்… நிரோஷாவின் நடிப்பைப் பார்த்த்தும் இப்படி ஒரு நிலைமை எந்த அம்மாவுக்கு வரக் கூடாது என்றுதான் நமக்கு சொல்ல தோன்றுகிறது.

அனுபமாவின் தோழியாக நடித்தவரும் மிக சிறப்பாக தன்னுடைய பங்களிப்பை செய்திருக்கிறார். அனுபமாவுக்கு ஆறுதல் சொல்லும் கையோடு அந்தப் பிரச்சனையை முடிப்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டு தோழிக்கு தோள் கொடுக்கும் அந்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். அதேபோல் அனுபமாவின் தங்கையாக நடித்தவரும் தன்னுடைய சிறப்பான நடிப்பை காண்பித்து இருக்கிறார்.

இந்தப் படத்தின் இயக்குநரின் இயக்குதல் திறமை சிறப்பு என்பதால் மிக சிறப்பாக அனைவரையும் நடிக்க வைத்திருக்கிறார். இன்னொரு பக்கம் இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில் நுட்பக் கலைஞர்களும் கச்சிதமாக தங்களுடைய திறமையை காட்டி இருக்கிறார்கள்.

அந்த ஒரு பாடல் காட்சியை மட்டும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் அனைத்தையும் காட்டிவிட்டு இதற்கு பின்னால் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று நம்மை முன்கூட்டியே எச்சரித்திருக்கிறார் இயக்குநர். இந்த பாடலுக்கான இசையும், பாடல் வரிகளும், நடனமும் சேர்ந்து பாடல் காட்சியை மிக மிக ரசிக்க வைத்திருக்கிறது.

ஒளிப்பதிவு, பாடல்களுக்கான இசை, இவைகளைத் தாண்டி பின்னணி இசையில் சற்று அடக்கி வாசித்து எமோஷன்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தில் கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

“நல்லதோர் வீணை செய்தேன். அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ” என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப நல்லதொரு குடும்பத்தில் இப்படி ஒரு பிரச்சனையை ஊட்டி விடும் இன்றைய ஜென் இஸட் இளைஞர்களும், இளைஞர்களும் தங்களின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் தங்களுடைய வாழ்க்கையை மேன்மையாக்க நினைக்காமல் கேளிக்கைகளிலும், சிற்றின்பத்திலும், தங்களை ஆழ்த்திக் கொண்டு அவர்கள் கெட்டதும் இல்லாமல் அவர்களை நம்பி வந்தவர்களையும் நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்துவதை அராஜகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதே சமயம் இதெல்லாம் எங்களுடைய இளமை வாழ்க்கையில் சகஜம் என்பது போல ஒரு சிலர் பேசுவது பெருவாரியான மக்களையும் பாதிக்கிறது. அப்படி ஒரு கதையைத்தான் இந்த இயக்குநர் அழகாக சுட்டிக் காட்டியிருக்கிறார்.

தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியிருக்கும் பார்ட்டிக்கு அழைத்த தோழியையும், அந்தக் கயவனையும் நாயகி தேடிச் சென்று அடித்து, உதைப்பதுபோல திரைக்கதையை அமைத்திருந்தால் நிச்சயமாக இயக்குநரை மேலும் பாராட்டியிருக்கலாம்.

ஆனால் இயக்குநர் சொன்னது போலவே இறுதியில் இதுவே தீர்வு என்று சொல்வதெல்லாம் படு அபத்தம்… அதிலும் கருவைக் கலைத்த பிறகு உடனடியாக அந்த டாக்டர் கேட்டதைக் கொடுக்கும் நாயகியின் செயல் ஏற்கக் கூடியதல்ல.

நாயகி இதைச் செய்ததற்குப் பதிலாக தான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை தன்னுடைய தாய், தந்தையிடம் இதைச் சொல்லி அவர்கள் மூலமாகவே இதை சரி செய்திருக்கலாம். ஆனால் அதைச் சொல்லவிடாமல் அவரை தடுப்பது யார்? எது தடுக்கிறது?.. என்பதை இயக்குநர் அழுத்தமாக சொல்லவில்லை.

“என் மகள் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு” என்று வெளிப்படையாக சொல்லி நட்பாகப் பழகும் தனது அப்பாவிடமே நடந்ததை சொல்லி இருக்கலாம். சொல்லியிருந்தால் அது அப்போதே முடிந்திருக்கும். மிக எளிதாக இந்தப் பிரச்சனையும் முடிந்திருக்கும். ஆனால் அப்படி சொல்வதை தடுப்பது எது என்பதுதான் நமக்கு புரியவில்லை. இயக்குநரும் தெளிவாகச் சொல்லவில்லை.

இப்படியொரு பிரச்சனையை சந்திக்கும் பிள்ளைகள் தாங்கள் வெளிப்படையாக தங்களுடைய தாய் தந்தையிடம் சொல்லி பிரச்சனையை முடித்து கொடுக்கும்படி கேட்டாலே ஒவ்வொரு குடும்பத்திலும் பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

ஆனால் இதை ஒரு பெரிதான அவமானமாகவும் கருதி அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளும்போதும் தொலைத்துக் கொள்ளும்போதும் அந்தக் குடும்பமே கதறுகிறது.

மகள், மகன் கொண்டு வரும் பிரச்சனைகளை ஏதோ குற்றம் செய்ததை போல பாவிக்காமல், எதிர்கொள்ளாமல் அதை ஒரு விபத்து என்று பிள்ளைகளிடம் சொல்லி அதை தீர்த்து வைப்பதுதான் மிகச் சிறந்த வழி.

இந்த வழியை இயக்குநர் சொல்லி இருந்தால் நிச்சயமாக இந்தப் படத்தை இன்னும் நாம் பாராட்டியிருக்கலாம்.

RATING : 4 / 5

Our Score