‘லிங்கா’ படத்தின் மீடியேட்டர் அய்யப்பன் தற்கொலை முயற்சி..!

‘லிங்கா’ படத்தின் மீடியேட்டர் அய்யப்பன் தற்கொலை முயற்சி..!

‘லிங்கா’ படத்தின் திருநெல்வேலி, கன்னியாகுமரி வட்டார விநியோகஸ்தர் மற்றும் மீடியேட்டரான அய்யப்பன், இன்று காலை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இவர் திருநெல்வேலி, கன்னியாகுமரி வட்டாரத்தில் லிங்கா படத்தை மெயின் விநியோகஸ்தரான வேந்தர் மூவிஸிடமிருந்து தியேட்டர்காரர்களுக்கு வாங்கி கொடுக்கும் பணியை இன்னொரு விநியோகஸ்தரான ரூபனுடன் இணைந்து செய்துள்ளார்.

அய்யப்பனும் தனது பங்குக்கு சில தியேட்டர் அதிபர்களிடம் முன் பணம் வாங்கி வேந்தர் மூவிஸிடம் கொடுத்து படத்தின் விநியோக உரிமையைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் சிங்காரவேலன் தலைமையில் விநியோகஸ்தர்கள்  அணி போர்க்குரல் கொடுத்தபோது இந்த அய்யப்பனும், ரூபனும் ஒன்றாகவே வந்திருந்தார்கள். அனைத்துவித போராட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக லிங்கா படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினி தரப்பில் 5 கோடியும், ராக்லைன் வெங்கடேஷ் தரப்பில் 5 கோடியும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்தப் பணத்தை யார், யார், எந்த விகிதத்தில் பிரித்துக் கொள்வது என்று தியேட்டர் உரிமையாளர்கள், மற்றும் விநியோகஸ்தர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இதுவரையிலும் நஷ்டஈட்டுப் பணம் யாருக்கும் வழங்கப்படவில்லையாம்.

இந்த நேரத்தில் பல்வேறு பண நெருக்கடிகள் மற்றும் தொடர் தொல்லைகள் காரணமாக மனம் வெறுத்துப் போன மீடியேட்டர் அய்யப்பன், இன்று காலை விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனேயே வடபழனி சூர்யா மருத்துவமனையில் அய்யப்பன் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் இருக்கும் அய்யப்பனை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவாவும் மற்றும் சில முக்கிய விநியோகஸ்தர்களும், மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.

போராடும்போது ஒற்றுமையாக இருந்தவர்கள், கையில் பணம் கிடைக்கப் போகும் இந்த கிளைமாக்ஸ் நேரத்தில் இப்படி சொதப்புவது ஏன் என்று தெரியவில்லை..?!

Our Score