‘லிங்கா’வுக்கு பின்பு வெளிவந்த ‘ஐ’ படமே திருநங்கைகள் மேட்டரில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்க.. சென்னையின் போராட்டக் களம் திரும்பவும் லிங்கா படத்தின் பக்கம் திரும்புகிறது.
கடந்த வாரம் ‘லிங்கா’ படத்தினால் நஷ்டம் என்று சொல்லிய விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதம் இருந்த நிலையில் தயாரிப்பாளர் “நான் பணத்தைத் திருப்பித் தர மாட்டேன். சட்டப்படி, ஒப்பந்தப்படி பணத்தை அவர்கள் திருப்பித் தர முடியாது. கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன்..” என்று சொல்லிவிட்டார்.
ஆனால் பிரதம விநியோகஸ்தரான வேந்தர் மூவீஸின் சார்பில் பேசிய தயாரிப்பாளர் டி.சிவா நஷ்டத்தை ஈடு கட்ட பணம் கொடுத்து உதவும்படி தயாரிப்பாளரிடம் விநியோகஸ்தர்கள் சார்பாக பேசியதும் நடந்தது.
இது நடந்து 10 நாட்களாகியும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மனமிறங்க மறுக்கிறாராம். போதாக்குறைக்கு சில ஆங்கில தினச் செய்தித்தாளக்ளுக்கு அவர் அளித்த பேட்டியில் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தைத் தடுக்கும் பொருட்டுத்தான் அரசியல் பின்னணியோடு இந்த விநியோகஸ்தர்கள் இநத போராடத்தில் இறங்கியிருப்பதாக” கூறியிருக்கிறார்.
இப்போது இதைப் படித்துவிட்டு ஆவேசமாகியிருக்கும் விநியோகஸ்தர்கள் வரும் ஜனவரி 27-ம் தேதி செவ்வாய்கிழமை மறுபடியும் தயாரிப்பாளரை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்.
அந்த மனுவில் “படத்தைத் திரையிட்டுக் காட்டாமலேயே படம் லாபம் ஈட்டித் தரும் என்று உத்தரவாதம் கொடுத்து பெரும் தொகையை முன் பணமாக பெற்றுக் கொண்டு எங்களை ஏமாற்றியதை கண்டித்து” என்று கூறியிருக்கிறார்கள்.
அவர்கள் சொன்னால் இவர்களுக்கெங்கே புத்தி போனது..? ‘கேழ்வரகிலே நெய் வடிகிறது’ என்றால் பார்க்காமலேயே ‘ஆமாம்’ என்பார்களா..?
ஒப்பந்தப்படி பணத்தைத் திருப்பிக் கேட்க முடியாது என்பதால் விநியோகஸ்தர்கள் கோர்ட்டிற்கு போனால் வழக்கு நிற்காது என்பது அவர்களுக்கே தெரியும்.
மேலும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் அடுத்து நேரடி தமிழ்ப் படங்களை தயாரிக்காமலேயே ஒதுங்கிவிட்டால் இவர்களால் அவருக்கெதிரான எதிர்கால தடைகளை விதித்து மிரட்டல் விடுத்து பணத்தை வசூல் செய்ய முடியாது என்பதால் இது போன்ற மலிவான போராட்டங்களை கையில் எடுத்திருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.
அதோடு கூடவே அரசியலும் கலந்துவிட்டதோ என்கிற சந்தேகமும் இப்போது தோன்றுகிறது. மீண்டும் உண்ணாவிரதம் இருங்கள். மனு கொடுங்கள் என்று யார் அட்வைஸ் கொடு்தததோ தெரியாது.. ஆனால் இது நிச்சயம் ரஜினியை குறி வைத்துத்தான் என்பது மட்டும் புரிகிறது..!
அபத்தமான, ஏற்றுக் கொள்ள முடியாத போராட்டம் இது..!