“தமிழ் திரைப்பட சங்கங்களில் தமிழர் அல்லாதவர்கள் தலைமை மற்றும் நிர்வாகிகள் பதவிக்கு வருவதில் எனக்கு உடன்பாடில்லை..” என்று கருத்து தெரிவித்த இயக்குனர் பாரதிராஜாவுக்கு, ‘லிங்கா’ விநியோகஸ்தர் சிங்காரவேலன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ‘லிங்கா’ விநியோகஸ்தர் சிங்காரவேலனும் தன் பங்குக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “தமிழ், தமிழ் என்று மூச்சுக்கு மூச்சு முழங்கி வரும் பாரதிராஜா மொழியின் பெயரால் பிரிவினைவாதத்தை தூண்டுகிறார். தமிழர்கள் மட்டுமே நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்று பேசியிருப்பது கடும் கண்டத்திற்குரியது.
நடிகர்கள் மொழி, இனம், ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட சங்கத்தில் ஜாதியின் பெயரால், மொழியின் பெயரால், பிளவு ஏற்படுத்த முயல்வது பாரதிராஜா போன்ற மூத்த கலைஞர்களுக்கு அழகல்ல.
மூன்றாண்டுகள் மட்டுமே அதிகாரம் செலுத்தக் கூடிய நடிகர் சங்க பதவிகளுக்கு தமிழர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறும் பாரதிராஜா, வாழ்நாள் முழுவதும் குத்து விளக்கேற்றும் மருமகளை ஏன் தமிழ் இனத்திலிருந்து தேர்ந்தெடுக்கவில்லை..?
ஒருவனுக்கு ஒருத்தி… ஒருத்திக்கு ஒருவன் என்பதுதானே தமிழ் கலாச்சாரம். அதை மீறுபவர்களை பாரதிராஜா ஆதரிக்கிறாரா என்பதையும் அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும் அவர் இயக்கியுள்ள பல படங்களில் பல மாநிலங்களை சேர்ந்த நடிகர், நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்துள்ள பாரதிராஜா இப்போது தமிழர்கள் மட்டும்தான் பதவிக்கு வர வேண்டும் என்று சொல்லுவது ஏன்..?
ஒன்றுபட்ட இந்திய தேசத்தில் மொழி, இனம், ஜாதி, என்ற பெயரால் பிரிவினையை தூண்டும்வகையில் பேசி வரும் பாரதிராஜாவை தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்…” என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் விநியோகஸ்தர் சிங்காரவேலன்.