full screen background image

‘லிங்கா’ பட வழக்குகள் – நாளையும், நாளை மறுநாளும் விசாரணை..!

‘லிங்கா’ பட வழக்குகள் – நாளையும், நாளை மறுநாளும் விசாரணை..!

புதிய, புதிய வழக்குகள் ‘லிங்கா’வுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன.

மதுரையைச் சேர்ந்த ரவிரத்தினம், சென்னை வடபழனியைச் சேர்ந்த சக்திவேல் என்று இருவர் ‘லிங்கா’ படத்தின் கதை தங்களுடையது என்று உரிமை கோரி வழக்கு தொடுத்திருந்தனர்.

இப்போது மூன்றாவதாக இன்னொரு வழக்கும் ‘லிங்கா’ மீது தொடுக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பாலாஜி ஸ்டுடியோ பிரைவேட் நிறுவனம் சார்பில் ’லிங்கா’ படத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், “தெலுங்கு மொழியில் நடிகர்கள் சிரஞ்சீவி, சோனாலி பிந்தரே உட்பட பலர் நடித்த ‘இந்திரா’ படத்தை தமிழில் ‘ரீமேக்’ செய்யும் உரிமையை பெற்றுள்ளேன். இந்த படத்தின் கதையும், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லிங்கா’ படத்தின் கதையும் ஒன்றுபோல் உள்ளது. ‘இந்திரா’ படத்தின் கதையை அப்படியே எடுத்து ’லிங்கா’ படத்தை எடுத்துள்ளனர்.

’லிங்கா’ படம் வெளியானால், எனக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே ‘லிங்கா’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும். ‘இந்திரா’ மற்றும் ‘லிங்கா’ படங்களை பார்த்து கதை குறித்து முடிவு செய்ய வக்கீல் கமிஷன் அமைக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘லிங்கா’ படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பதில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “லிங்கா’ படத்தின் இயக்குனர் பணியை மட்டுமே செய்துள்ளேன். தெலுங்கில் வெளியான ‘இந்திரா’ படத்தின் கதைக்கும், ‘லிங்கா’ படத்தின் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இந்தியாவில் உள்ள அணைகள் குறித்து திரைப்படம் எடுக்க எல்லோருக்கும் உரிமை உள்ளது. யார் வேண்டுமென்றாலும் கதை மற்றும் திரைக்கதையை எழுதலாம். இந்த வழக்கை தொடர்வதன் மூலம், ‘லிங்கா’ படத்தில் பணியாற்றும் அனைவரையும் மிரட்டும் விதமான நடவடிக்கையில் மனுதாரர் இறங்கியுள்ளார். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்..” என்று கூறியிருந்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சுப்பையா, ‘லிங்கா’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க மறுத்தார். மேலும் இந்த வழக்கு விசாரணையை வருகிற 12-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதேபோல் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இயக்குநர் ரவிரத்தினம் தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது..!

கதையை வெளில சொன்னா இப்படித்தான் பத்து பேர் பத்து மூலைல இருந்து கிளம்பி வர்றாங்க.. சொல்லலைன்னா மீடியாக்கள்ல விளம்பரம் வர மாட்டேங்குது.. என்னதான் செய்வாங்க இந்த சினிமாக்காரங்க..?

Our Score