full screen background image

தமிழ் சினிமாவின் மூத்தப் படத் தொகுப்பாளர் ஆர்.விட்டல் காலமானார்

தமிழ் சினிமாவின் மூத்தப் படத் தொகுப்பாளர் ஆர்.விட்டல் காலமானார்

தமிழ்த் திரையுலகின் மூத்த படத் தொகுப்பாளரான திரு.ஆர்.விட்டல் இன்று மதியம் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.

வணிகப் படங்களின் எடிட்டிங் என்பது மிகவும் சவாலான பணி. தமிழ்த் திரையுலகத்தில் கமர்ஷியல் படங்களின் எடிட்டிங் பணியில் சிறப்பாகப் பணியாற்றி தனக்கென்று ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்தவர் படத் தொகுப்பாளர் ஆர்.விட்டல்.

இயக்குநர் எஸ்.பி. முத்துராமனின் முதல் படமான ‘கனிமுத்து பாப்பா’வில் தொடங்கி ஏறக்குறைய 70 படங்களில் அவருடன் பணியாற்றிய பெருமை கொண்டவர் எடிட்டர் விட்டல்.

ஏவி.எம். நிறுவனம் தயாரித்த 40 படங்களுக்கு படத் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். ஏவி.எம். நிறுவனம் – இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கூட்டணியில் உருவான ‘ராஜா சின்ன ரோஜா’, ‘சகலகலா வல்லவன்’, ‘முரட்டுக் காளை’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘பாயும் புலி’ போன்ற புகழ் பெற்ற படங்களுக்கு படத் தொகுப்பு செய்த பெருமைக்குரியவர் ஆர்.விட்டல்.

மேலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்த 18 படங்களுக்கு படத் தொகுப்பாளராகப் பணியாற்றினார். இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் வெளியான 16 படங்களுக்கும் படத் தொகுப்பு செய்துள்ளார்.

மற்றும், இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன்-பஞ்சுவின் இயக்கத்தில் 12 படங்கள், இயக்குநர் யோகானந்த் இயக்கத்தில் 10 படங்கள், இயக்குநர் C.H.நாராயண மூர்த்தி இயக்கத்தில் 3 படங்கள், இயக்குநர் பட்டாபிராமன் இயக்கத்தில் 7 படங்கள், இயக்குநர் ராஜாவின் இயக்கத்தில் 6 படங்கள் என்று மொத்தமாக 170 படங்களுக்கும் மேல் படத் தொகுப்பு செய்துள்ளார் ஆர்.விட்டல்.

இதில் நடிகர் கமல்ஹாசன் நடித்த 10 படங்கள், நடிகர் ரஜினிகாந்த் நடித்த 33 படங்கள், நடிகர் ஜெய்சங்கர் நடித்த 18 படங்களும் அடக்கம்.

முத்தான முத்தல்லவோ’, ‘பெண்ணைச் சொல்லி குற்றமில்லை’, ‘முடிசூடா மன்னன்’ ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார் ஆர்.விட்டல்.

‘வீட்டுக்கு வந்த மருமகள்’, ‘உன்னைத்தான் தம்பி’, ‘எங்களுக்கும் காதல் வரும்’, ‘தொட்டதெல்லாம் பொன்னாகும்’, ‘முத்தான முத்தல்லவோ’ ஆகிய 5 படங்களை இயக்கியும் உள்ளார் ஆர்.விட்டல்.

வயது மூப்பின் காரணமாக இன்று மதியம் 3 மணிக்கு வீட்டிலேயே மாரடைப்பு ஏற்பட்டு ஆர்.விட்டல் அவர்கள் காலமானார்.

அனானாரது இறுதிச் சடங்குகள் நாளை காலை 11 மணியளவில் கோடம்பாக்கம் இயக்குநர்கள் காலனியில் உள்ள அவரது வீட்டில் நடைபெறவுள்ளது.

Our Score