லஷ்மி – சினிமா விமர்சனம்

லஷ்மி – சினிமா விமர்சனம்

பிரமோத் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ருதி நல்லப்பா மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் பேபி தித்யா படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் பிரபு தேவாவின் சிஷ்யையாக நடித்துள்ளார். மற்றும் சல்மான் யூசுப்கான், கோவை சரளா, கருணாகரன், சாம்பால், சோபியா, சாம்ஸ், ஜார்ஜ், மாஸ்டர் அக்ஷத், மாஸ்டர் ஜீத் தாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

நடனம் – புரேஷ் ஷிரோத்கர், ரூயல் டாசன் வரிந்தானி, ஷம்பா சொந்தாலியா, சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா, கலை இயக்கம் – ஏ.ராஜேஷ், ஆடை வடிவமைப்பு – சவி தாகூர், நேஹா பாண்டா, ஆன்ஷி குப்தா, நிர்வாகத் தயாரிப்பு – கணேஷ், ஓமார், தயாரிப்பு நிர்வாகம் – கே.மணிவர்மா, ஒலிக்கலவை – எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன், ஒப்பனை – டி.நாகராஜன், உடைகள் – மோதப்பள்ளி ரமணா, ஸ்டில்ஸ் – ராமசுப்பு, VFX – டிஜிட்டல் HAWK, ஒலி வடிவமைப்பு – SYNC சினிமா, டி.ஐ.கலரிஸ்ட் – ஜி.பாலாஜி, விளம்பர டிசைன்ஸ் – முகில் டிசைன்ஸ், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, மீடியா பிளானிங் – பிரமோஷன் – ஷியாம், இசை – சாம் சி.எஸ்., ஒளிப்பதிவு – நீரவ் ஷா, படத் தொகுப்பு – ஆண்டனி, பாடல்கள் – மதன் கார்க்கி. கதை – விஜய், நீரவ் ஷா, வசனம் – விஜய், அஜயன் பாலா, கதை, திரைக்கதை, இயக்கம் – விஜய்.

நடனத்தை மட்டுமே சுவாசிக்கும் ஒரு குருவுக்கும், நடனத்தை சுவாசிக்க துடிக்கும் ஒரு சிஷ்யைக்கும் இடையேயான உண்மையான பிணைப்பை காட்டுகின்ற படமாக வந்திருக்கிறது இந்த லஷ்மி திரைப்படம்.

நடனம் என்பது ஒரு ஆற்றல். நடனம் ஆடுபவர்கள் மட்டுமல்லாமல் நடனத்தை ரசிப்பவர்களுக்கும் ரசிக்கும் ஆற்றலை அளிக்கும் ஒரு கலை இது. அந்த வகையில் நடனத்தில் மூழ்க விரும்பும் அனைவருக்குமான ஒரு பாடமாகவும் வந்திருக்கிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் தன் 13 வயது மகளான தித்யாவுடன் சென்னைக்கு குடி வருகிறார். ஒரு புதிய பள்ளியில் மகளை சேர்ப்பிக்கிறார். மகள் தினமும் பள்ளிக்கு அரசு பேருந்தில் சென்று வருகிறாள்.

தித்யாவுக்கு நடனம் என்றால் உயிராக இருக்கிறது. அவளுக்குள் இயல்பாகவே நடனத் திறமையும், ஆர்வமும் இருக்கிறது. ஆனால் ஐஸ்வர்யாவுக்கோ மகள் நடனத் துறைக்குள் போகவே கூடாது என்ற நினைப்பில் இருக்கிறார்.

தித்யா ஒரு நாள் பள்ளிக்கு செல்லும்போது, வழியில் இருக்கும் ஒரு ரெஸ்ட்டாரெண்ட்டில் நடனமாடும் அளவுக்கு தோதான பாடல் ஒலிப்பதை கவனிக்கிறாள்.  அந்த ரெஸ்ட்டாரெண்ட்டில் நுழைந்து கொஞ்ச நேரம் ஆடிக் கொள்கிறாள். அந்த ரெஸ்ட்டாரெண்ட்டின் உரிமையாளரான பிரபுதேவா அவளுக்கு அனுமதி கொடுக்கிறார்.

அப்போது அகில இந்திய அளவில் நடனப் போட்டி நடக்க இருப்பதை அறிகிறாள் தித்யா. இதற்காக பிரபுதேவாவை அவளுடைய தந்தையாக நடிக்க வைத்து அந்தப் போட்டியில் சேர பெயர் கொடுக்கிறாள். இதற்கான பணத்தையும் பிரபுதேவாவிடமே கேட்டு வாங்கிக் கொள்கிறாள்.

பிரபுதேவா அவளுக்கு நடனமாடும் டிரக் ஷூட்டை வாங்கிக் கொடுக்கிறார். அதை ரெஸ்ட்டாரெண்ட்டிலேயே வைத்துக் கொண்டு அங்கேயிருந்து டான்ஸ் கிளாஸ் போய்க் கொண்டு அம்மாவை ஏமாற்றி வருகிறாள் தித்யா.

நடனப் போட்டிக்கான அணிகளின் தேர்வு சென்னையில் நடக்கிறது. இத்தேர்வின்போது தித்யா கொஞ்சம் தயங்கி நிற்க அவளது அணி தேர்வாகாமல் போகிறது. இந்த நேரத்தில் தித்யா வீட்டுக்கு வரவில்லையே என்றெண்ணி ஐஸ்வர்யா அவளைத் தேடும்போதுதான் தித்யாவின் நடனப் போட்டி ரிகர்சல் அவளுக்குத் தெரிய வருகிறது.

ஒரே நேரத்தில் பிரபுதேவாவும், ஐஸ்வர்யாவும் தித்யாவைத் தேடி அங்கே வருகிறார்கள். ஐஸ்வர்யாவை பார்த்தவுடன் பிரபுதேவா அதிர்ச்சியாகி திரும்புகிறார். மறுநாள் தித்யாவை அழைத்துக் கொண்டு தேர்வுக் கமிட்டி முன்பாக வருகிறார் பிரபுதேவா. அங்கேயிருப்பவர்கள் அவரைப் பார்த்தவுடன் திகைக்கிறார்கள்.

பிரபுதேவாவும் ஒரு முன்னாள் நடன சாம்பியன் என்பதை  அப்போதுதான் அவர்கள் சொல்கிறார்கள். பிரபுதேவாவாவுக்காக தித்யாவை சேர்த்துக் கொள்கிறோம் என்பவர்கள், இதற்காக பிரபுதேவாவும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். தித்யாவுக்காக பிரபுதேவாவும் இதனை ஒத்துக் கொள்கிறார்.

ஐஸ்வர்யாவை பார்த்தவுடன் பிரபுதேவா ஏன் அதிர்ச்சியானார்? அந்த அகில இந்திய நடனப் போட்டியில் தித்யா கலந்து கொண்டாளா..? வெற்றி பெற்றாளா. இல்லையா…? என்பதையெல்லாம் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்..!

இதுவொரு சினிமா என்றில்லாமல் தான் அடைய நினைக்கும் லட்சியத்தை நோக்கிய பயணத்தில் இருக்கும் இடையூறுகள், தடங்கல்களைத் தாண்டி அந்த லட்சியவாதி எப்படி வெற்றி பெறுகிறார் என்பதான ஒரு கதையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சிறுமி.. 13 வயது. நடனத்தில் ஆர்வம். படிப்பில் நாட்டமில்லை. ஆனால் நடனத்தில் ஜொலிக்க துடிக்கும் அவளது ஆர்வத்தையும், துடிப்பையும் புரிந்து கொள்ளாத அவளது அம்மா.. புரிந்து கொண்டு ஜெயிக்க வைக்க நினைக்கும் அவளது கோச்சான பிரபுதேவா.. நடனப் போட்டியை நடத்தி லட்சங்களில் பணத்தினை பரிசாகக் கொடுப்பதாக வெளியில் சொல்லிக் கொண்டு உள்ளுக்குள் தங்களது டிவி சேனலின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்த திட்டமிடும் தொலைக்காட்சி.. எப்படியாவது தாங்களே ஜெயித்தாக வேண்டும் என்று நினைக்கும் எதிரணியினர்.. மேடைகளில் குண்டூசியே வைத்து நடன மாணவர்களைக் காயப்படுத்தும் அணியினர்.. எப்படியாவது ஜெயித்து பிரபுதேவாவை வீழ்த்த நினைக்கும் மும்பை அணியின் கோச்.. இதற்கிடையில் அவளுக்கு எதிர்பாராமல் நடக்கும் ஒரு விபத்து. விபத்தினால் அவளுக்கு ஏற்படும் பக்க விளைவு.. இதையும் தாண்டி தித்யாவின் ஜெயிக்கும் கனவை நினைவாக்கும்விதம்.. என்று படம் எடுத்துக் கொண்ட கதைக் கருவில் இருந்து கொஞ்சமும் பாதை மாறாமல் பயணித்திருக்கிறது.

பேபி தித்யாதான் படத்தின் உண்மையான நாயகன் / நாயகி. அவருடைய நடன ஆற்றல் நடனக் காட்சிகளில் தெரிந்தாலும், நடிப்புத் திறமையும் சேர்ந்துதான் வெளிப்பட்டிருக்கிறது. சில நடன அசைவுகளில் அவர் காட்டியிருக்கும் நடிப்புத் திறன் மிகவும் ரசிக்க வைத்திருக்கிறது.

சின்ன சின்ன ஸ்டெப்புகளை மிகவும் வசிகரமாக இருக்கும்வகையில் அமைத்திருக்கிறார்கள் நடன இயக்குநர்கள். இதனாலேயே தித்யாவை மிக நெருக்கமாக ரசிக்க முடிந்திருக்கிறது. பிரபுதேவாவை “கிருஷ்ணா” என்று உரிமையோடு கலாய்த்து அவருடன் நெருங்கிப் பழகும்விதத்தில் கவர்ந்திழுத்திருக்கிறார்.

அம்மாவுடனான பிணக்கை முகத்தில் காட்டும் தருணம். நடன ஆர்வத்தை அம்மாவிடமிருந்து மறைக்கும்போதும், பள்ளியில் பிரபுதேவாவை “அப்பா” என்று சொல்லி அழைத்து வந்து பிரச்சினையை மூடி மறைக்கும்விதத்தில் அவர் காட்டும் அப்பிராணி நடிப்பும்.. ஓஹோ என்று சொல்ல வைக்கிறது.

கிளைமாக்ஸ் நடனத்தில் ஒரு புயலாய் பாய்ந்திருக்கிறார் தித்யா. காது கேளாத நிலைமையிலும் அந்த நடனத்திற்கான இசையை தனக்குள் வைத்துக் கொண்டு அதற்கேற்ற ஸ்டெப்புகளை அனாசயமாக எடுத்தாண்டு நடனமாடி வின்னராகும் அத்தருணம் மிகச் சிறப்பானது.

12 வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தினால் நடன சாம்பியன் பதக்கத்தையும், தனது காதலியையும் இழந்த சோகத்தில் நடனத்தையே கைவிட்டுவிட்டு அமைதியாக வாழும் பிரபுதேவா கேரக்டர்.. இவருக்கு தித்யாவை பிடித்துப் போகும் அத்தருணம் திரைக்கதையில் மிக முக்கியமானது.

இவருடைய நடனத்தைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் மிகச் சரியான பாடல்கள் அமையாததால் இந்தப் படத்தில் அவருடைய நடனம் அதிகமாக வெளியில் தெரியாது என்றே நினைக்கிறோம். கண்டிப்பு மிகுந்தவராகவும், கண்ணியம் காப்பவராகவும், பாசத்தைக் கொட்டுபவராகவும் ஒரு மாஸ்டராக இருந்திருக்கிறார் பிரபுதேவா.

பிரபுதேவா-ஐஸ்வர்யா ராஜேஷ் கதையை மிகவும் துருவாமல் நாகரிகமாக வெளியில் சொல்லாமல் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் விஜய். தன் வாழ்க்கையை திசை திருப்பிய நடனத்தின் மீது வெறுப்புக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவின் கேரக்டர் ஸ்கெட்ச் உண்மையானது. ஆனால் அதனை இன்னும் கொஞ்சம் வசனம் மூலமாக வெளிப்படுத்தியிருந்தால் உணர்வுப்பூர்வமாக உணர்ந்திருக்கலாம்.

அதேபோல் பிரபுதேவா-ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருக்குமான உறவினை மகள் தித்யா புரிந்து கொள்ளும் வகையிலான காட்சியையும் வைத்திருக்கலாம். அது மிஸ்ஸிங்காகவே இருக்கிறது.

இன்னொரு மிக முக்கிய கேரக்டரில் சோபியா நடித்திருக்கிறார். மிக அழகு. குளோஸப் காட்சிகளில் நடிப்புத் திறன் வெளிப்பட்டிருக்கிறது. ஒரு சிறந்த நடிகையை வெளிக்காட்டியிருக்கிறார் இயக்குநர் விஜய்.

கருணாகரன் இடையிடையே வரும் சின்ன டைமிங்சென்ஸ் காமெடிக்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறார். சாம்பால் டி.ஆர்.பி.யை மட்டுமே நம்பும் டிவிக்காரராகவும், யூசுப்கான் முடிவில் உண்மை தெரிந்து பிரபுதேவாவின் நலம் கோரும் வில்லனாகவும் நடித்திருக்கின்றனர்.

கோவை சரளாவின் கேரக்டர் தவறானது. நகைச்சுவையாக எடு்ப்பதாக நினைத்து மரியாதைக் குறைவாகிவிட்டது. இதனை கவுரவமாகவே வைத்திருக்கலாம்..!

ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் ஜில்லென்ற உணர்வுதான். நடனப் போட்டிகளை மிக அழகாக படம் பிடித்திருக்கிறார். காட்சிகளின் தன்மை மனதில் பதிவாவதற்கு கேமிராவும் ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது. அதோடு கூடவே படத்தொகுப்பாளர் ஆண்டனியின் கத்தரி பணியும் பாராட்டுக்குரியது. கிளைமாக்ஸில் நடக்கும் அந்த 20 நிமிட நடனப் போட்டி கச்சிதமாக நறுக்கிக் கொடுத்திருக்கிறார்.

பாடல்களும், இசையும் மட்டுமே படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய நஷ்டம். குறிப்பிட்டுச் சொல்லும்படியாக பாடல்களும், நடனத்திற்கேற்ற இசையும் கிடைக்காதது படத்திற்குக் கிடைத்த பேக் டிராப்.

கிளைமாக்ஸில் ஒரு சினிமாவாக இல்லாமல் “ஒரு சின்னப் பொண்ணு.. போட்டில ஜெயிக்கிறதுக்கு இப்படி கஷ்டப்பட்டு போராடுதுப்பா…” என்று ரசிகர்களை எண்ண வைக்கும் அளவுக்கு தனது இயக்கத் திறமையைக் காட்டியிருக்கிறார் இயக்குநர் விஜய்.

இந்தப் படத்திற்காக நிறையவே உழைத்திருக்கிறார் இயக்குநர் விஜய். நடனமாடும் சின்னப் பையன்கள், பொண்ணுகளை தேடிப் பிடித்து அவர்களிடத்தில் கால்ஷீட் வாங்கி, அவர்களுக்கு பள்ளி இல்லாத நாட்களில் படப்பிடிப்பினை வைத்து, அவர்களது நடனத் திறமையை முழுமையாக காட்டும்வகையில் நடனக் காட்சிகளை அமைத்து கச்சிதமாக அதே சமயம் கஷ்டப்பட்டும் படமாக்கியிருக்கிறார். இயக்குநர் விஜய் பெரும் பாராட்டுக்குரியவராகிறார்.

இத்திரைப்படம் சாதாரணமான சினிமா இல்லை. அதேசமயம் டாக்குமெண்ட்ரியும் இல்லை. இரண்டுக்கும் நடுவில் ஒரு சின்ன பெண்ணின் நடன ஆசை பற்றியும். சாதிக்கத் துடிக்கும் அவளது நோக்கம் பற்றியதுமான படமாக இது வந்திருக்கிறது.

சின்ன வயதிலேயே திறமைசாலிகளைக் கண்டறிந்து அவரவர் துறையில் மென்மேலும் வளர்ந்து சாதிக்க வைக்கும் அளவுக்கு அவர்களது பெற்றோர்கள் நடந்த கொள்ள வேண்டும் என்பதை இத்திரைப்படம் சொல்லிக் கொடுக்கிறது..!

இப்படியொரு படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் நமது மனமார்ந்த நன்றிகள்..!

படத்தில் நடித்த அனைவருக்கும் நமது வாழ்த்துகளும்.. பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..!

Our Score