வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது மகப்பேறு மருத்துவத்தில் அடுத்தக் கட்ட வளர்ச்சியைக் காட்டுகிறது..!
தம்பதிகளில் யாரேனும் ஒருவருக்கு குறைபாடு இருப்பின் அதனை நிவர்த்தி செய்ய முடியாதபட்சத்தில் வாடகைத் தாயை ஏற்பாடு செய்து அவர் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்வது சமீப காலமாக இந்தியாவில் அதிகரித்துதான் வருகிறது.
பிரபலங்கள் பலரும் இது போல குழந்தைகளை உருவாக்கத் தொடங்கிய பின்னர் இது பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே பெரிதும் ஏற்பட்டுள்ளது. நடிகர்கள் அமீர்கானும், ஷாரூக்கானும் இந்த வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டது பரபரப்பானது.
இப்போது தெலுங்குலக நடிகையும், தயாரிப்பாளருமான லட்சுமி மஞ்சுவும் வாடகைத் தாய் மூலம் தனக்காக குழந்தையைப் பெற்றிருக்கிறார்.
38 வயதான லட்சுமி மஞ்சு பிரபல தெலுங்கு நடிகரான மோகன்பாபுவின் ஒரே மகள். திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். மணிரத்னத்தின் ‘கடல்’ படத்திலும் நடித்திருந்தது நினைவிருக்கலாம்.
தன்னுடைய குடும்பத்தினருடன் நன்கு ஆலோசித்துதான் இந்த முடிவை எடுத்ததாகச் சொல்லியிருக்கிறார் மஞ்சு. கடந்த 15-ம் தேதி ஹைதராபாத்தில் இருக்கும் ஆனந்த் குழந்தை பேறு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
இது குறித்து லட்சுமி மஞ்சு பேசுகையில், தன்னுடைய குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருந்ததினால்தான் இதனைச் செய்ய முடிந்தது என்றும், இப்படியொரு திட்டத்தை அப்பாவிடம் சொன்னதும் அவர் ஒரு நொடிகூட தாமதிக்காமல் செய் என்று மட்டுமே சொன்னார்.. இப்போது நான் ஒரு தாய் என்பதை உணர்கையில் ரொம்பவே பெருமையாவும், சிலிர்ப்பாவும் இருக்கு..” என்று சொல்லியிருக்கிறார்.
குழந்தை இல்லை என்ற ஏக்கத்தை எந்தப் பெண்ணுக்கும் கொடுக்காமல் இருக்க இந்த முறையும் கொஞ்சம் பயன்படட்டுமே.. தவறில்லை..!