காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம், திரில்லர் திரைப்படம் ‘லாரா’.
இப்படத்தை எம்.கே. ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திகேசன் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் ‘முருகா’, ‘பிடிச்சிருக்கு’ படங்களின் நாயகன் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுஸ்ரேயா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி ஆகியோருடன் தயாரிப்பாளர் கார்த்திகேசனும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – ஆர்.ஜே.ரவீன், இசை – ரகு ஸ்ரவன் குமார், கலை இயக்கம் – முருகன், எழுத்து, இயக்கம் – மணி மூர்த்தி.
காரைக்கால் கடற்கரை பகுதியில் பெண் சடலம் ஒன்று கரை ஒதுங்குகிறது. அந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொள்ளும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேசன் தலைமையிலான காவலர்கள் குழு, பல நாட்களாக தண்ணீரில் இருந்து முகம் முழுவதும் சிதைந்த நிலையில் இருக்கும் அந்த சடலம் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள்.
அதே சமயம், வேன் ஓட்டுநர் ஒருவர் தனது மனைவி காணாமல் போனதாக போலீஸில் புகார் அளிக்கிறார். மறுபக்கம் இரண்டு பேர் ஒரு பெண்ணை துரத்தும் சிசிடிவி காட்சிகள் போலீஸுக்கு கிடைக்கிறது.
இவற்றை வைத்து, சடலமாக இருப்பவர் வேன் ஓட்டுநரின் மனைவிதான் என்பதை போலீஸ் உறுதிப்படுத்த, வேன் ஒட்டுநரோ “அது தனது மனைவி இல்லை..” என்று உறுதியாக சொல்கிறார்.
அதேசமயம், இரண்டு ஆண்களால் துரத்தப்பட்ட பெண்ணும் வேறு ஒருவர் என்பதை கண்டுபிடிக்கும் போலீஸ், கரை ஒதுங்கிய சடலம் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.
இதற்கிடையே, காணாமல் போன வேன் ஓட்டுநரின் மனைவி பற்றிய தகவல் ஒன்று மர்மப் பெண் மூலமாக போலீஸுக்கு கிடைக்கிறது. அந்த தகவலை வைத்துக் கொண்டு தனது விசாரணையை இன்ஸ்பெக்டர் கார்த்திகேசன், தீவிரப்படுத்த, அதன் மூலம் சில எதிர்பார்க்காத அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருகிறது.
அவை என்ன? அதற்கும் கரை ஒதுங்கிய சடலத்திற்கும் என்ன சம்மந்தம்? என்பதை சஸ்பென்ஸ், திரில்லர் பாணியில் சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை முக்கியத்துவமாக கொண்டு பயணிக்காமல், படத்தில் வரும் சிறு சிறு கதாபாத்திரங்களைக்கூட திரைக்கதையின் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக சித்தரிக்கும் படங்களால்தான் கிரைம், திரில்லர், சஸ்பென்ஸ், ஜானர் படங்களை விரும்பும் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்த முடியும்.
அந்த வகையில், இந்தப் படம் படத்தின் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சிவரையிலும் அதை மிக நேர்த்தியாக செய்திருக்கிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் படத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேசன், புதுமுகம் என்றாலும் எந்த ஒரு தடுமாற்றமும் இன்றி தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். சூடாக டீ குடித்தவாறு விசாரணைகளை கையாண்டாலும், எப்போதும் கூலாக இருக்கும் இன்ஸ்பெக்டராக வலம் வந்து, தனது அளவான, இயல்பான, யதார்த்தமான நடிப்பின் மூலம் பார்வையாளர்களை கவர்ந்துவிடுகிறார்.
சிறிய வேடத்தில் நடித்தாலும் வழக்கம் போல் தனது நடிப்பின் மூலம் தன் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்த முயற்சித்திருக்கும் அசோக் குமார் கவனிக்க வைத்திருக்கிறார்.
அனுஷ்ரேயா ராஜனின் வேலை குறைவு என்றாலும் கதையின் மையப் புள்ளியான கதாபாத்திரத்தில் அளவாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.
வேன் ஓட்டுநரின் மனைவியாக நடித்திருக்கும் வெண்மதி தனது அபலை நடிப்பினால் நம்மைக் கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறார். இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சில் இருக்கும் பரிதாபம்தான் படத்தைக் கடைசிவரையிலும் பார்க்க வைத்திருக்கிறது.
வாலிபர்களால் துரத்தப்படும் வர்ஷினி வெங்கட், கவுன்சிலராக நடித்திருக்கும் எஸ்.கே.பாபு, வேன் ஓட்டுநராக நடித்திருக்கும் பாலா, பெண் ஆசையால் தேவையில்லாத பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் இளைஞர்களாக நடித்திருக்கும் திலீப் குமார் மற்றும் இ.எஸ்.பிரதீப், அசோக்கின் தந்தையாக நடித்திருக்கும் மேத்யூ வர்க்கீஸ் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
காரைக்கால் பகுதிகளை களமாக கொண்டு பயணிக்கும் கதைக்கு ஏற்றவாறு தனது கேமராவை பயணிக்க வைத்திருக்கும் ஒளிப்பதிவாளர் ஆர்.ஜே.ரவீன், கோவில் திருவிழா காட்சியை தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார்.
ரகு ஸ்வரன் குமாரின் இசை படத்தின் விறுவிறுப்புக்கு ஈடுகொடுத்து பயணித்தாலும், தேவையில்லாத சத்தங்களை தவிர்த்துவிட்டு அளவான பின்னணி இசை மூலம் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறது. படத் தொகுப்பாளரின் பணி திரைக்கதையின் வேகத்திற்குக் கை கொடுத்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் மணி மூர்த்தி முற்றிலும் புதுமுகங்களை வைத்துக் கொண்டு ஒரு புலனாய்வுக் கதையை புத்திசாலித்தனமாக நகர்த்திச் சென்று ரசிகர்களைப் பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார்.
ஒரு சடலத்தை வைத்துக்கொண்டு போலீஸ் மேற்கொள்ளும் விசாரணை மூலம் பல கிளைக் கதைகள் சொல்லப்பட்டாலும், இறுதியில் சடலம் யார்? என்பதை யூகிக்க முடியாதபடியும், தொய்வில்லாதபடியும் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர்.
ஒரு சடலம், அது யார் ? என்பதை கண்டுபிடிப்பதில் தொடங்கும் கதை, வெளிநாட்டு பண பரிவர்த்தனை, பாலியல் தொழில் செய்யும் பெண்களின் அவல நிலை, பெண்கள் மீது கொடூரத்தை வெளிப்படுத்தும் கொடூர மனிதர்களின் மர்ம முகங்கள், எம்.எல்.ஏ-வின் வாழ்க்கையில் இருக்கும் ரகசியம் என பல கிளைக் கதைகளை சுவாரஸ்யமாக சொல்லியிருப்பதோடு, லாரா பற்றிய காதல் கதையோடு அவற்றை முடிச்சு போட்டு, இறுதியில் முழுமையான கிரைம் திரில்லர் படத்தைக் கொடுத்திருக்கிறார்.
நடிகர்கள் தெரிந்த முகங்களாக இல்லை என்றாலும், அவர்களின் இயல்பான நடிப்பு மூலமாகவே கதாபாத்திரங்களை ரசிகர்கள் மனதில் பதிய வைத்திருக்கும் இயக்குநர், அவர்களின் இயல்பான உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பு மூலம் பல இடங்களில் பார்வையாளர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.
லாராவின் காதல் மற்றும் ஆசிரம கதை வேகமாக பயணித்துக் கொண்டிருக்கும் திரைக்கதையின் வேகத்தை சற்று குறைப்பது போல் இருப்பது, படத்தின் குறையாக இருந்தாலும், போலீஸ் இன்ஸ்பெக்டர் புத்திசாலித்தனமாக வழக்கை முடிப்பது மற்றும் இறுதியில் லாராவின் நிலை ஆகியவை முழுமையான ஒரு கிரைம், திரில்லர் அனுபவத்தை நமக்குக் கொடுப்பதோடு, இந்தப் படத்தின் அடுத்தப் பாகத்தின் மீதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காத்திருப்போம்..!
RATING : 3 / 5









