இந்தப் படத்தை ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக தருண் விஜய் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் தருண் விஜய் நாயகனாகவும், சேஷ்விதா கனிமொழி நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் மதுசூதனன் ராவ், ராம்ஸ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரைராஜ், பாய்ஸ் ராஜன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – நோவா ஆம்ஸ்ட்ராங், இசை – கருண் பி.க்ருபா, ஒளிப்பதிவு – ஜேசன் வில்லியம்ஸ்.
கிரைம், சஸ்பென்ஸ், திரில்லர் படங்களின் வரிசையில் இந்த திரைப்படமும் ஒரு புதிய கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
அறிமுக நாயகனான தருண் விஜய் உணவு டெலிவரி செய்யும் வேலையில் இருக்கிறார். அவருடைய வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஆட்டோ ஓட்டுநர் ராம்ஸ் குடியிருந்து வருகிறார். இந்த நேரத்தில் காவல்துறையில் உதவி ஆணையராக பணியாற்றும் மதுசூதனன் ராவின் மகளான நாயகி சஷ்மிதா கனிமொழி திடீரென்று காணாமல் போகிறார். முதல் நாள் இரவில் ஆட்டோவில் வீட்டுக்கு வருவதாக சொன்ன மகள் மறுநாளும் வரவில்லை என்பதால் தந்தை மதுசூதன ராவ் பதற்றம் அடைந்து போலீசில் புகார் கொடுத்து தேட ஆரம்பிக்கிறார்கள்.
இந்த நேரத்தில் நாயகன் தருண் விஜய் தானாகவே போலீசிடம் சரண் அடைந்து தான் ஒரு கொலையை செய்து விட்டதாக சொல்கிறார். அவர்தான் கொலையாளி என்பதை உறுதிப்படுத்த இறந்து போனவரின் உடல் வேண்டும். அந்த உடலை தேடி போலீஸ் அலையும் பொழுது மேலும் இரண்டு கொலைகளை தான் செய்திருப்பதாக அலட்சியமாக கூறுகிறார் தருண் விஜய்.
போலீசார் தருண் விஜய் சொன்ன தகவலை வைத்து மேலும் விசாரிக்க துவங்க திடீர் திருப்பமாக தருண் விஜய் கொலை செய்ததாக சொல்லப்பட்ட நபர்கள் உயிருடன் இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். இப்போது மூன்றாவதாக அவர் செய்த கொலை சேஷ்மிதாவாக இருக்கலாம் என்று நினைத்து போலீஸ் அந்த பக்கம் கவனத்தை திருப்புகிறது.
அந்த மூன்றாவது கொலையாளி யார்..? தருண் விஜய் ஏன் மூன்று பேரை கொலை செய்ய வேண்டும்..? எதற்காக அவரே தேடி வந்து சரணடைய வேண்டும் என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்தான் இந்த க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம்.
அறிமுக நாயகனாக நடித்திருக்கும் தருண் விஜய் ஒரு ஹீரோவுக்குரிய முக வெட்டும், உடல் அமைப்பையும் வைத்திருக்கிறார். கொஞ்சம் உயரமாகவும் சிக்ஸ் பேக் வைக்கின்ற அளவுக்கான ஆக்சன் ஹீரோவுக்குரிய உடல் பலத்துடனும் இருந்தாலும் இந்தப் படத்தில் சண்டை காட்சிகள் எதுவும் இல்லாமல் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருக்கிறார்.
மனநலம் பாதிக்கப்பட்டதை தன்னுடைய முகபாவனைகளாலும், வசன உச்சரிப்பிலும், தங்களுடைய நடிப்பிலும் கடைசி வரையில் நம்மை நம்ப வைத்து சாதித்திருக்கிறார் தருண் விஜய். கொலை செய்த அந்த தருணத்தை போலீசாரிடம் அவர் நடித்துக் காட்டும் விதமே ஒரு அசத்தலான நடிப்பு. நிச்சயம் தருண் விஜய் ஒரு சிறந்த நடிகராக வலம் வர வாய்ப்பு உண்டு.
நாயகியாக நடித்திருக்கும் சேஷ்விதா கனிமொழி திராவிட முகத்துடன் இருக்கிறார். அவருடைய கண்களே நிறைய கதைகளை பேசுகிறது. சென்டிமென்ட் காட்சிகளில் கதறி அழுது நம்மையும் கச்சிதமாக ஏமாற்றி இருக்கிறார். இவருக்கும் ஒரு பெரிய எதிர்காலம் உண்டு.
துணை கமிஷனர் ஆக நடித்திருக்கும் மதுசூதனன் ராவ் எல்லா படங்களிலும் வில்லனாக நடித்து தன் திறமையை காட்டி இருந்தவர், இந்த படத்தில் முதன்முதலாக ஒரு அன்பான, பாசமான அப்பாவாக நடித்திருக்கிறார்.
மகள் கிடைத்தவுடன் அவரை கட்டி அணைத்து அழுகின்ற கதறுகின்ற காட்சியிலும் வெளிநாட்டிலிருந்து மனைவி வந்தவுடன் அவரிடம் மகளை காட்டுகின்ற பொழுது அவரும் அவருடைய மனைவியாக நடித்த பிரியதர்ஷினி ராஜ்குமாரும் மிகச் சிறப்பான ஒரு நடிப்பை காண்பித்திருக்கிறார்கள்.
மேலும் ஆட்டோ டிரைவராக நடித்த ராம்ஸ், நிழல்கள் ரவி, பாய்ஸ் ராஜன் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்து படத்தின் தன்மை கெடாமல் காப்பாற்ற இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ் இரவு நேர காட்சிகளை அட்டகாசமாக பதிவு செய்திருக்கிறார். அதிலும் அந்த சின்ன அறையில் நடக்கின்ற கொடூரங்களை படம் பிடித்து காட்டும்போது நமக்கு அவ்வளவு கொடூரமாக தெரிகிறது. பார்வையாளர்களை கொஞ்சம் கலங்க வைக்கும்விதமாக அந்தக் காட்சிகளை அப்படியே தத்ரூபமாக நிகழ்வதைப்போல படமாக்கி இருக்கிறார்.
இசையமைப்பாளர் கரண்ட் கிருபா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். ஆனால் பின்னணி இசை அபாரம். ஒரு கிரைம் சப்ஜெக்ட்டுக்கேற்ற பின்னாணி இசையை அழகாக கொடுத்திருக்கிறார். இதிலேயே படம் முழுவதும் நாம் ஒரு கிரைம் திரில்லர் படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற ஃபீலிங் பார்வையாளர்களுக்கும் கிடைத்திருக்கிறது.
இது ஒரு கிரைம் திரில்லர் கதை என்பதால் ஒவ்வொரு ஃபிரேமிலும், ஒவ்வொரு காட்சியிலும் அதை நமக்கு சொல்லும்விதமாகவே காட்சிகளை அமைத்திருக்கிறார் படத் தொகுப்பாளர். அதிலும் இடைவேளைக்கு பின்பு படம் ரன் பாஸ்ட்டாக ஓடுகின்ற ஒரு உணர்வும் படத் தொகுப்பாளரால் கிடைத்திருக்கிறது. அவருக்கு நமது வாழ்த்துக்கள்.
இந்த படத்தை எழுதிய இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநரான நோகா ஆம்ஸ்ட்ராங் இப்படி எல்லாம்கூட சிந்திக்க முடியுமா? இப்படி ஒரு கதையை எழுத முடியுமா?.. என்று நாம் பாராட்டுகின்ற அளவுக்கு சாதாரணமான ஒரு பெண் காணாமல் போன கதையை வைத்து அந்த கதைக்குள்ளாக நாம் நினைத்திருக்காத கதையின் திருப்பங்கள், வேகமான திரைக்கதை, பார்க்க முடிந்த காட்சிகள் என்று ஒரு புதிய கிரைம், சஸ்பென்ஸ், திரில்லர், ஜர்னரை இப்படத்தில் கொடுத்திருக்கிறார்.
ஒரு பெண் காணாமல் போகிறார். அந்த பெண்ணை கடத்தியதாக ஆட்டோ ஓட்டுநர் மேல் சந்தேகப்பட்டு அவரைத் தேடுகிறார்கள். திடீரென்று அந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடியிருந்தவன் நான்தான் கொலை செய்தேன் என்று போலீசில் சரண்டர் ஆகிறார். இப்பொழுது ஒரு கொலை மூன்று கொலை ஆகிறது.
அதை தேடத் தேட போலீஸாருக்கு என்ன மாதிரியான ஒரு ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்படுமோ அதை அப்படியே படம் பார்க்கின்ற ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் இந்தப் படத்தை ஒரு நல்லதொரு இயக்கத்தின் மூலமாக பார்க்கக் கூடிய திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்.
ஆனால் படத்தின் கதை நிச்சயமாக தவறானது. இதில் சந்தேகமே இல்லை. ஏனெனில் ஒரு குற்றம் நடந்தால் குற்றத்தை செய்தவன் ஒன்று இறந்து போக வேண்டும். அல்லது சட்டத்தின் முன் நின்று அதற்கான தண்டனையை பெற வேண்டும். ஆனால், இந்தப் படத்தில் இந்த இயக்குநர் மிகப் பெரிய குற்றங்களை செய்தவர்களை போனால் போகிறது என்று மன்னித்து விடுவதாக எழுதியிருக்கிறார். இது நிச்சையமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய கதை அல்ல. ஒரு போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் தன் மகளுக்காக அனைத்து குற்றங்களையும் மறைத்துவிட்டுப் போகிறார் என்று படத்தின் கிளைமாக்ஸில் சொல்லி இருப்பது ஏற்புடையதல்ல.
அந்த வகையில் இந்த இயக்குநரின் இந்தத் தவறான கதைக்கு நம்முடைய வன்மையான கண்டனங்கள்.
RATING : 3.5 / 5









