full screen background image

குற்றம் புரிந்தால் – சினிமா விமர்சனம்

குற்றம் புரிந்தால் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை அமராவதி ஃபிலிம் ஸ்டூடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆத்தூர் ஆறுமுகம் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில், எம்.எஸ்.பாஸ்கர், ஆதிக் பாபு, அர்ச்சனா, ‘நாடோடிகள்’ அபிநயா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கே.கோகுல், இசை – கே.எஸ்.மனோஜ். பாடல்களை கபிலன் மற்றும் கார்த்திக் நேதா இருவரும் எழுதியிருக்கிறார்கள். 

‘நான் சிவனாகிறேன்’, ‘இரும்பு மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் டிஸ்னி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

நாயகனான ஜீவா என்ற ஆதிக் பாபு, கம்யூனிஸ்ட்டான தனது தாய் மாமாவின் ஆதரவில் வாழ்ந்து வருகிறார். அவரது மாமாவின் மகள் அர்ச்சனாவும், ஜீவாவும் ஒருவரையொருவர் விரும்புகின்றனர். மகளின் கல்லூரி படிப்பு முடிந்ததும் இருவருக்கும் திருமணம் நடத்தி வைப்பதாக எம்.எஸ்.பாஸ்கர் நினைத்திருக்கிறார்.

இந்த நிலையில் ஒரு நாள் திடீரென மூன்று பேர் வீட்டிற்குள் வந்து ஜீவா மீது தாக்குதல் நடத்தி அவரை முடக்கிப் போட்டு, அவரது மாமாவையும்  தாக்கிவிட்டு அர்ச்சனாவை பாலியல் பலாத்காரம் செய்து விடுகின்றனர். இந்தக் களேபரத்தில் ஜீவாவின் மாமாவான எம்.எஸ்.பாஸ்கரும், அவரது காதலியும் இறந்து போகின்றனர்.

இன்னொரு அதிர்ச்சியாக போலீஸ் நிலையத்தில் உண்மைக் குற்றவாளிக்குப் பதிலாக வேறொருவனை குற்றவாளியாக காட்டுகிறார்கள். இவன் குற்றவாளியல்ல. வேறு 3 பேர்தான் குற்றவாளிகள் என்று ஜீவா கதறியும் அவனது கூக்குரல் செல்லாக் காசாகிறது.

போலீஸ் இந்த வழக்கையும் கோர்ட்டில் சொதப்பிவிட அவனும் விடுதலையாகிறான். இதனால் ஆத்திரமடையும் ஹீரோ வழக்கை விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டர், பொய் சாட்சி சொன்ன மருத்துவர் மற்றும் குற்றவாளிகள் மூவரையும் பழி வாங்கத் துடிக்கிறார்.

இதைச் செய்து முடித்தாரா இல்லையா என்பதுதான் இந்தக் குற்றம் புரிந்தால் படத்தின் திரைக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகரான ஆதிக் பாபு முதல் படம் போல் தெரியாமல் ஓரளவு நன்றாக நடித்திருக்கிறார். ஆக்க்ஷன் காட்சிகளிலும் வேகத்தைக் காட்டியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அர்ச்சனா, மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். அவரது இளமை ததும்பும்  ரொமான்ஸ், குறும்புத்தனம், காதலை வெளிப்படுத்தும்விதம் என்று அனைத்தும் ரசிக்கும்படியாகவே உள்ளது.

நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், தனது அனுபவ நடிப்பின் மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ‘நாடோடிகள்’ அபிநயா, காக்கி உடையில் கம்பீரமாக இருப்பதோடு நடிக்கவும் செய்திருக்கிறார். மேலும் அருள் டி.ஷங்கர், ராம், ரேணிகுண்டா நிசாந்த் ஆகியோரும் செவ்வனே நடித்துள்ளனர்.

கதைக்கு ஏற்ற ஒளியமைப்பை வைத்து அழகாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோகுல்.  பாடல்களை ரசிக்கும்படி கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் கே.எஸ்.மனோஜ், பின்னணி இசையையும் சிறப்பாகவே கொடுத்திருக்கிறார்.

பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் 101-வது படமாக இதைச் சொல்லலாம்.

இன்றைய சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் மோசமாகி வருவதை தன்னால் முடிந்த அளவுக்கு அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் டிஸ்னி.  

ஒருவன் குற்றம் செய்தால் அவனுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை வித்தியாசமான கோணத்தில் யோசித்தும் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர்.

தான் சொல்ல வந்த கதையை நேர்த்தியாக சொல்லியிருப்பதோடு, சமுதாயத்திற்கு தேவையான படமாகவும் கொடுத்தவிதத்தில் இயக்குநர் டிஸ்னிக்கு நமது பாராட்டுக்கள்.

‘குற்றம் புரிந்தால்’ ஒரு முறை பார்க்கலாம்தான்..!

RATING : 2.5 / 5

Our Score