‘குற்றம்-23’ – ‘ஈரம்’ அறிவழகனின் சிறந்த படைப்பு – பிரபல விநியோகஸ்தரின் பாராட்டு..!

‘குற்றம்-23’ – ‘ஈரம்’ அறிவழகனின் சிறந்த படைப்பு – பிரபல விநியோகஸ்தரின் பாராட்டு..!

வியாபாரம், வர்த்தகம் மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளில் ஏறக்குறைய 12 வருட கால சிறந்த  அனுபவத்தை பெற்று, தற்போது திரையுலகின் வர்த்தக உலகில்  தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து  இருக்கிறார், ‘அக்ராஸ் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் பிரபு வெங்கடாச்சலம்.  

முன்னதாக  வேறொரு பிரபல  தயாரிப்பு நிறுவனத்துடன்  இணைந்து பணியாற்றி, தரமான கதையம்சம் நிறைந்த படங்களை மட்டுமே  தேர்வு செய்யும் யுக்தியை நன்கு அறிந்து கொண்ட  பிரபு வெங்கடாச்சலம், ‘டூ மூவி பஃப்ஸ்’ நிறுவனத்தோடு கை கோர்த்து ‘திட்டம் போட்டு திருடற கூட்டம்’ படத்தை தற்போது தயாரித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி ‘கொடி’ திரைப்படத்தின் சேலம் பகுதி விநியோக உரிமையை வாங்கி வெளியிட்டது மூலம், விநியோக துறையிலும் கால் பதித்து இருக்கிறார்.

அந்த வெற்றியை தொடர்ந்து, திரையுலகின் மூத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவோடு இணைந்து, ‘பறந்து செல்ல வா’ படத்தையும் தமிழகத்தில் பிரபு வெங்கடாச்சலம் விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.  

விநியோக துறையில் நல்லதொரு பெயரை சம்பாதித்து இருக்கும் ‘அக்ராஸ் பிலிம்ஸ்’ தற்போது ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை வாங்கி இருக்கிறது. 

இந்த நேரத்தில் இதற்கு முன்பாக நடிகர் அருண் விஜய்யின் நடிப்பில் ‘ஈரம்’ அறிவழகன் இயக்கியிருக்கும் ‘குற்றம் 23’ படத்தையும் பிரபு வெங்கடாச்சலமே தமிழகமெங்கும் வெளியிடப் போகிறார்.

இது பற்றி பேசிய தயாரிப்பாளர் பிரபு வெங்கடாச்சலம், “திரைப்பட விநியோகத்திற்கு தேவையான விஷயங்களை நன்கு தெரிந்து கொள்வதுதான் ஒரு தரமான தயாரிப்பாளருக்கு அழகு.

அதனால்தான் நான் இந்தத் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து நுழைந்தவுடன் விநியோகத் தொழிலை நன்கு கற்று கொண்டேன். அதன் பின்புதான் இந்தத் தொழிலில் முழு மூச்சாக இறங்கினேன்.

தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாட தயாராகி  கொண்டிருக்கும் நாம், தயாரிப்பு, விநியோகம் என இரண்டு  துறைகளிலும்  சிறந்து விளங்கிய சில மூத்த திரையுலகினரை இந்த தருணத்தில் நினைத்து பார்க்க வேண்டும்.

அவர்கள் கையாண்ட யுக்தியை  தற்போது தமிழ் திரையுலகில் மீண்டும் நிலை நாட்டி, தயாரிப்பு மற்றும் விநியோக துறைகளில் வெற்றி பெற   வேண்டும் என்பதுதான் எங்கள் ‘அக்ராஸ் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் முக்கியமான குறிக்கோள்.

திறமையான கலைஞர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது மட்டுமில்லாமல், வர்த்தக வெற்றிக்கு  தேவையான சிறப்பம்சங்களை உள்ளடக்கி இருக்கும் படங்களை விநியோகம் செய்ய வேண்டும் என்பதிலும்  உறுதியாக இருக்கின்றது ‘அக்ராஸ் பிலிம்ஸ்’.

விநியோக துறையை பொறுத்தவரை, வெளிப்படையாக இருப்பது மிக முக்கியம். நிச்சயமாக தயாரிப்பாளர்கள் அதனை புரிந்து கொண்டு ஏற்று கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.  

அருண் விஜய் நடிப்பில், அறிவழகன் இயக்கியிருக்கும் ‘குற்றம்-23’ திரைப்படம் தரமான கதை களத்தில் உருவாகி இருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லுவேன். ஒரு நடிகராக அருண் விஜய்  என்னை மிகவும் கவர்ந்து இருக்கிறார்.

‘என்னை அறிந்தால்’ திரைப்படத்திற்கு பிறகு, அருண்  விஜயின் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் ‘குற்றம்-23’ என்பதால், இந்த படம் வர்த்தக உலகில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி வருகிறது.  

ஒரு படத்தை உருவாக்குவதில் ஆரம்பித்து, அதனை ரசிகர்களிடத்தில்  அழகாக கொண்டு போய் சேர்க்கும்வரை, இயக்குநர் அறிவழகன் பின்பற்றும் பாணி என்னை மிகவும் கவர்ந்து இருக்கின்றது.

‘குற்றம்-23’ படத்தை பார்த்த பிறகு, அவர்கள் மீது இருந்த நம்பிக்கை எனக்கு மேலும் வலு பெற்று இருக்கிறது. நிச்சயமாக மார்ச் 3-ம் தேதி வெளியாகும் ‘குற்றம்-23’ திரைப்படம் ஒவ்வொரு ரசிகரையும் கவரும்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பிரபு வெங்கடாச்சலம்.

Our Score