full screen background image

அவசியம் பார்க்க வேண்டிய, தரமான படமாக வருகிறது ‘குரங்கு பொம்மை’ திரைப்படம்

அவசியம் பார்க்க வேண்டிய, தரமான படமாக வருகிறது ‘குரங்கு பொம்மை’ திரைப்படம்

ஸ்ரேயா ஸ்ரீமூவிஸ் L.L.P. நிறுவனம் தயாரித்திருக்கும் ‘குரங்கு பொம்மை’ திரைப்படம் வரும் செப்டம்பர் 1-ம் தேதியன்று திரைக்கு வரவிருக்கிறது.

இந்தப் படத்தில் ‘இயக்குநர்  இமயம்’  பாரதிராஜாவும், நடிகர் விதார்த்தும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். 

மேலும் டெல்னா டேவிஸ், ரமா, பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு,  கல்கி,  பாலா சிங்,  கிருஷ்ணமூர்த்தி  மற்றும்  பலர் நடித்துள்ளனர்.

இசை – B. அஜனீஷ் லோக்நாத், ஒளிப்பதிவு – N.S. உதயகுமார், படத் தொகுப்பு -அபினவ் சுந்தர் நாயக், கலை – வீரமணி, வசனம் – மடோன் அஸ்வின், பாடல்கள் -நா.முத்துக்குமார், நடனம் – ராதிகா, சண்டை – மிராக்கல் மைக்கேல், மக்கள் தொடர்பு – இரா. குமரேசன், நிர்வாகத் தயாரிப்பு – M. கண்ணன், இயக்கம் – நித்திலன்,

இப்படம் குறித்து இயக்குநர் நித்திலன் கூறும்போது, “இந்தப் படம் என்னுடைய முதல் குறும் படமான ‘புதிர்’ தாக்கத்தின் காரணமாக உருவானது.

மனிதனுடைய மனது குரங்கு போன்று தாவிக் கொண்டேயிருக்கும். அதன் குறியீடுதான் இந்த ‘குரங்கு பொம்மை’ படம். ஒரு நல்லவனுக்கும், கெட்டவனுக்கும் இடையே இருக்கும் நட்பை கதைக் கருவாக வைத்துதான் இந்தப் படத்தை இயக்கியுள்ளேன்.

நடிகர் விதார்த் என்னுடைய ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ என்ற குறும்படத்தை பார்த்து என்னை அழைத்து பாராட்டிவிட்டு ‘நாம் இருவரும் சேர்ந்த ஒரு படம் பண்ணலாம்’ என்றார். அதைக் கேட்டு சந்தோஷமாகி ‘குரங்கு பொம்மை’ படத்தின் கதையை கூறினேன். அவரும் கதையைக் கேட்டுவிட்டு ‘நல்லா இருக்கு. இதையே செய்வோம்’ என்று ஒத்துக் கொண்டதால் படத்தைத் துவக்கிவிட்டோம்.

என்னுடைய குறும்படத்தை பாரதிராஜா சார் ஏற்கனவே பார்த்து பாராட்டியிருக்கிறார். அந்த பழக்கத்தின் காரணமாக அவரை அணுக நினைத்தேன். ஆனால் முதலில் அவரிடம் கதை சொல்ல பயமாக இருந்தது. தயங்கினேன். பின்பு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரைச் சந்தித்து கதையை சொன்னேன். கேட்டவுடனே ‘நன்றாக இருக்கிறது’ என்றார். அவர் ‘சரி’ என்று சொன்ன பிறகுதான் எனக்கு படம் இயக்கும் தைரியமே வந்தது.

இதில் விதார்த்துக்கு அப்பாவாக ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடித்திருக்கிறார். வித்தார்த்துக்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் நடித்திருக்கிறார்.  அப்பா, மகனுக்கும் இடையேயான பாசத்தையும் இதில் அழுத்தமாக சொல்லியிருக்கிறோம். இப்படத்தின் படப்பிடிப்பு 59 நாட்கள் நடந்த்து. சென்னையை சுற்றியேதான் படம் நகரும்.

படத்தில் மொத்தம் 3 பாடல்கள். இதில் அமரர் நா.முத்துக்குமார் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறார். ‘பீச்சு காத்து பார்சல் என்ன வெல…’ என்ற பாடலும், ‘அண்ணமாறே அய்யாமாறே…’ என்ற பாடல் வரிகள் நா.முத்துக்குமார் எழுதியவை. இப்படத்தின் மூலம் அஜனீஷ் லோக்நாத் என்ற இசையமைப்பாளர் தமிழுக்கு அறிமுகமாகிறார். இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது…” என்றார்.   

படம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் பேசுகையில், “தற்போதைய திரைப்பட உலகில் சிறு முதலீட்டுப் படங்கள் வெளி வருவதற்கான சூழல் ஒரு பெரிய நெருக்கடியில் இருக்கிறது. அது எங்களது ‘குரங்கு பொம்மை’ படத்தையும் பாதித்த்து.

கடந்த இரண்டு மாதங்களாக சரியான நேரமும், தேதியும் கிடைக்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தோம். இப்போது கிடைத்த குறுகிய கால அவகாசத்தில் மூன்று நாட்களுக்கு முன்பாக ரிலீஸ் தேதியை குறித்துக் கொண்டு களத்தில் குதித்துள்ளோம். எங்களது ‘குரங்கு பொம்மை’ படம் வரும் செப்டம்பர் 1-ம் தேதியன்று வெளியாகிறது.

தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரையிலும் சிறந்த, தரமான சிறு முதலீட்டுப் படங்களுக்கு கொடுத்து வரும் பேராதரவை எங்களுடைய முதல் தயாரிப்பான இந்த ‘குரங்கு பொம்மை’ படத்திற்கும் வழங்குவார்கள் என்று பெரிதும் நம்புகிறோம்..” என்றார் நம்பிக்கையுடன்..!

Our Score