full screen background image

கும்கி-2 – சினிமா விமர்சனம்

கும்கி-2 – சினிமா விமர்சனம்

2012-ம் ஆண்டில் வெளியான ‘கும்கி’ திரைப்படம் தமிழ் திரையுலகத்தை கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. ஒரு வனத்தில் இருக்கும் ஒரு யானை. அங்கே இருக்கும் ஒரு ஹீரோ.. அவர்கள் இருவரும் இடையிலான பாசத்தையும் அந்த மலைவாழ் மக்களின் வாழ்க்கை கதையையும் சொல்லி இருந்த கும்கி திரைப்படம் இன்றைக்கும் மறக்க முடியாத திரைப்படமாக உள்ளது.

அந்தப் படத்தை தொட்டு தொடர்வது போல இப்பொழுது ‘கும்கி-2’ என்கின்ற தலைப்பிலேயே மேலும் ஒரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.

ஒரு மலை உச்சியை கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் ஹீரோ மதி. அவருடைய அம்மா லோக்கலிலேயே கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பவர். அவருடைய வளர்ப்பு தந்தைக்கும், அவருடைய அம்மாவுக்கு தினமும் அடிதடி சண்டை நடந்து கொண்டே இருக்கிறது.

தன்னுடைய அம்மாவுக்கு மிகவும் பயப்படும் மதி பள்ளிக்கு சென்று படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார். ஆனால் அங்கே போக முடியாத நிலைமையை அவருடைய அம்மா உருவாக்கி வைத்திருக்கிறார். ஆனால் மதியின் பள்ளி ஆசிரியர் மதி மீது தனியாக ஒரு ஆர்வம் எடுத்து அவரை இவ்வளவு தூரம் படிக்க வைத்து உருவாக்கி இருக்கிறார்.

மதி சின்ன வயதில் இருக்கும்பொழுது ஒரு யானை குட்டி ஒரு குட்டையில் விழுந்து வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. அந்த குட்டி யானையை காப்பாற்றிய மதி அந்த யானையுடன் பெரிதும் சினேகம் கொள்கிறார். அந்த யானையைத் தானே வளர்க்கவும் செய்கிறார்.

ஒரு கட்டத்தில் அந்த யானை மிகப் பெரிய அளவுக்கு வளர்ந்தால் அதை கோடிகளில் விற்பனை செய்யலாம் என்று ஒரு புரோக்கர் மதியின் அம்மா, அப்பாவிடம் சொல்ல அவர்களும் அதிகமாக மதியின் யானை வளர்ப்பில் உதவி செய்கிறார்கள்.

ஒரு நாள் திடிரென்று அந்த யானை காணாமல் போகிறது. அதே சமயம் மதியின் அம்மா, அப்பாவிடமும் பணம் சேர்கிறது. தன்னுடைய அம்மா, அப்பாதான் யானையை விற்றிருக்கிறார்கள் என்பதை தெரியாத மதி யானையைத் தேடி அலைகிறார். அவரால் கண்டறிய முடியவில்லை.

அந்த சோகத்தோடு மேற்படிப்பு படிக்கவும் அந்த ஊரை விட்டு விலகிச் சென்று இருக்கிறார். இப்பொழுது மீண்டும் ஐந்து வருடங்கள் கழித்து தன்னுடைய வீடு நோக்கி வந்த மதிக்கு அவருடைய யானை இருக்கும் இடம் தெரிகிறது.

யானையை இப்பொழுதே மீட்க வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார் மதி. ஆனால். அந்த யானையை வைத்து ஒரு மிகப் பெரிய அரசியல் சதி நடந்து வருவது அவருக்கு அப்போது தெரியாது.

கடைசியில் என்ன ஆனது?.. தன்னுடைய யானையை கண்டெடுத்தாரா? யானையுடன் இணைந்தாரா? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

அறிமுக நடிகரான மதி மிக சிறப்பாகவே நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார். இப்போதெல்லாம் ஹீரோவாக அறிமுகமாகுபவர்கள் சாதாரண கமர்சியல் கதையை விரும்பாமல் ஒரு கவன ஈர்ப்பாக ஒரு நல்ல அழுத்தமான நடிப்பை காட்டும்விதமான கதைகளில்தான் நடிக்கிறார்கள். அந்த வகையில் மதிக்கு இந்தக் கதை கிடைத்தது சாலப்பொருத்தம்.

யானை காணாமல் போன அந்த நேரத்தில் அவர் படுகின்ற ஆவேசம்.. அவஸ்தை.. தனிமை.. துயரம்.. இவைகளை எல்லாம் தன்னுடைய நடிப்பில் காண்பித்துவிட்டார். அதேபோல் மீண்டும் அந்த யானையை பார்த்த பின்பு அவர் காட்டுகின்ற அந்த மகிழ்ச்சி.. சந்தோஷம்.. உற்சாகம்.. “சரி… ரெண்டு பேரும் நிம்மதியா இருக்கட்டும்” என்று நம்மையும் கொஞ்சம் சொல்ல வைத்திருக்கிறார்கள்.

இவருடைய நண்பராக நடித்திருக்குமா ஆண்ட்ரூஸ் அவ்வப்பொழுது தெறிக்கும் சில பன்ச் வசனங்களாலும், காமெடி பேச்சுக்களினாலும் இருவரின் காட்சிகளையும் நம்மால் ரசித்துப் பார்க்க முடிந்திருக்கிறது. ஆண்ட்ரூஸ் தன்னுடைய ஆர்.ஜே.வுக்கான அத்தனை தகுதிகளையும் வைத்துக் கொண்டு சுயமான வசனங்கள் மூலமாக நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்.

பல படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ் இந்தப் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதற்கே அவரை பாராட்ட வேண்டும். வேறு எந்த ஹீரோவும் இந்த மாதிரி மற்றொரு அறிமுக ஹீரோவின் படத்தில் சின்ன வேடத்தில் நடிப்பதற்கு ஒத்துக் கொள்வார்களா என்று தெரியவில்லை. ஆனால் அதை செய்து காட்டி இருக்கிறார் அர்ஜுன் தாஸ். எப்போதும் போல் அவருடைய குரல்தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறது.

ரொம்ப அப்பாவி போல் சில பல காட்சிகளில் நடித்துவிட்டு கடைசி நேரத்தில் வில்லன் அவதாரத்தை எடுக்கும்போதும் பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார் அர்ஜுன் தாஸ்.

படத்தில் பெண் கதாபாத்திரங்கள் இல்லை என்றால் சரியாக இருக்காது என்பதால் அந்தக் காட்டில் ஒரு ஆராய்ச்சிக்காக வரும் கேரக்டரில் ஷ்ரதா ராவ் என்கின்ற பெண் இடைவேளைக்கு பின்பான சில காட்சிகளில் வந்து நம்முடைய கவன ஈர்ப்பை இழுத்து இருக்கிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஹரிஷ் பெரடி தன்னுடைய மிகச் சிறப்பான ஒரு வில்லத்தனத்தை இந்தப் படத்தில் காண்பித்து இருக்கிறார், அவருடைய நடிப்புதான் ஹீரோவுக்கு பக்க பலமாக அமைந்துள்ளது. இப்படி ஒரு வில்லனை இப்படி ஒரு ஹீரோதான் சமாளிக்க முடியும் என்பதுபோல இருவருமே அவரவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

மலைப் பிரதேசக் கதைகள் என்றாலே ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் அல்வா சாப்பிடுவது போல..! கடின உழைப்பை எப்போதும் தன்னுடைய படத்துக்கு கொடுத்து வரும் சுகுமார், இந்தப் படத்திலும் தன்னுடைய முழு திறமையையும், உழைப்பையும் காண்பித்து இருக்கிறார். காடு, மலை, வெள்ளம், அருவி போன்ற அத்தனையையும் தன்னுடைய கேமராவில் மிகச் சரியாக பதிவு செய்திருக்கும் இந்தப் படத்தை காட்சிகளின் பின்னணியில் வரும் இயற்கை காட்சிகளுக்காகவே நாம் ரசித்து பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு கொண்டு வந்துவிட்டார் சுகுமார்.

நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்கள் கேட்கின்றன. ஆனால், பாடல் வரிகள் நம் மனதில் உட்காரவில்லை. இன்னமும் கொஞ்சம் அழகான இசையை அவர் அமைத்திருக்கலாம்.. கொடுத்திருக்கலாம்.

இயக்குநர் காட்டில் படமெடுத்துக் கொண்டு வந்து கொடுத்த காட்சிகளை நம் கண்களுக்கு விருந்தாக்கும் வகையில் அழகாக தொகுத்து அளித்திருக்கிறார் படத் தொகுப்பாளர். ஆனாலும், இன்னும் கொஞ்சம் கிரிப்பாக செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

யானையை பலியிடுவது என்பது எந்த உலகத்தில் நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் இயக்குநர் பிரபு சாலமனோ இப்போதும் இதுபோல சம்பவங்கள் இந்தியாவில் நடக்கின்றன என்ற அடித்து சொல்கிறார்.

கஜ பூஜை என்பது யானைகளுக்கு தேவையான உணவு வகைகளை கொடுத்து அவைகளை ஆசுவாசப்படுத்துவதன் மூலமாக நம்மை பிடித்திருக்கும் கெட்ட ஆவிகளையும் துரத்திவிடும் என்பது காலம் காலமாக இந்தியாவில் சொல்லப்படும் ஒரு கதை.

அந்தக் கதையை வைத்துப் பார்த்தால் இது நிச்சயம் கஜ பூஜைக்கான திரைக்கதை இல்லை.  ஆனால் யானையை பலியிடுவது என்பது அரசியல்வாதிகள், மிகப் பெரிய பணக்காரர்களில் யாரோ ஒருவர் செய்து வருகிறார் என்று இயக்குநர் பிரபு சாலமன் சொல்வது நிச்சயமாக ஏற்கக் கூடியது அல்ல.

அதேபோல் பிரஸ் ஷோவுக்கு பின்பு நடந்த பிரஸ்மேட்டில் பிரபு சாலமன் “இது இந்து மக்களின் நம்பிக்கை. அது தவறானது” என்றெல்லாம் அவர் பேசியது நிச்சயமாக கண்டிக்கத்தக்கது.

பிரபு சாலமன் ஒரு கிறிஸ்தவர். கிறிஸ்தவராக இருந்து கொண்டு இந்து மத நம்பிக்கைகளை தவறு என்று சொல்வதும், அதை வைத்து படம் எடுத்துக் காட்டுவதெல்லாம் மத துவேஷத்தைத்தான் காட்டுகிறது.

மத சகிப்புத்தன்மை கொண்ட இந்தியாவில் இது போன்ற திரைப்படங்கள் வருவது இரண்டு மதத்தவருக்குள் மோதலைத்தான் உருவாக்கும். இன்னும் சொல்லப் போனால், அவருடைய சொந்த மதத்திலேயே இது போன்ற பலி சடங்குகள் நிறையவே சொல்லப்பட்டிருக்கின்றன. பைபிளில் நிறையவே இருக்கின்றன. அதை எல்லாம் தவறாகப் பார்க்காமல் அடுத்த மதத்தில் தலையை நீட்டி இங்கு இவ்வளவு கொடுமைகள் நடக்கிறது என்று சொல்வதெல்லாம் அதிகப் பிரசங்கித்தனம்.

பிரபு சாலமன் வனத்தையும், வன விலங்குகளையும் ஆராதிப்பவர். கொண்டாடுபவர் என்றால் முதலில் அவருடைய மதத்தில் நடந்த, நடக்கும் மிருக பலிகளை தவறு என்று சொல்லிவிட்டு பின்பு அடுத்த மதத்திற்கு அவர் தாவி வரலாம்.

இந்த சினிமா உலகம் வேற எங்கு போகாது. இங்கேயேதான் இருக்கும். பிரபு சாலமன் தனது அடுத்த படத்தை பைபிளை கருவாக வைத்து எடுத்துக் கொடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்.

RATING : 3 / 5

Our Score