full screen background image

குடிமகன் – சினிமா விமர்சனம்

குடிமகன் – சினிமா விமர்சனம்

ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சத்தீஷ்வரன், தயாரித்து இயக்கியிருக்கிறார்.

இப்படத்தில்  நாயகனாக நடிகர் ஜெய்குமார் நடிக்கிறார். இவர் தமிழ் சினிமாவின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான பிரபல கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளரான கலைஞானத்தின்  பேரன். 

நாயகியாக ‘ஈர நிலம்’  ஹீரோயின் ஜெனிபர்  நடிக்கிறார்.  இவர்களுடன்  ‘மது  ஒழிப்பு போராளி’  மாஸ்டர்  ஆகாஷ், எழுத்தாளர் பவா  செல்லதுரை,  வீரசமர்,  கிருஷ்ணமூர்த்தி, கிரண்,  பாலாசிங்,  பாவா  லெட்சுமணன்  ஆகியோர்  முக்கியமான  கதபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 

ஒளிப்பதிவு – C.T.அருள் செல்வன், இசை – S.M.பிரசாந்த், படத் தொகுப்பு -K.R.செல்வராஜ், பாடல்கள் – சினேகன், தை.து.இரவி அரசன், கலை இயக்கம் – D.R.K.கிரண், இணை தயாரிப்பு – செங்கை ஆனந்தன், ம.தனவனன். எழுத்து, இயக்கம் – சத்தீஷ்வரன்.

“விவசாயத்தை  அடிப்படைத்  தொழிலாகக்  கொண்ட  ஒரு  அழகான  கிராமத்தில்  கந்தன், செல்லக்கண்ணு  தம்பதியினர்  ஆகாஷ்  என்கிற  8  வயது  மகனுடன்  வசித்து வருகிறார்கள். மகனின்  மீது  அதிக  அன்பும்,  அக்கறையும் கொண்டு  வளர்த்து  வருகிறார்கள். 

மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கும் இவர்களுடைய வாழ்விலும், அந்த கிராமத்து மக்களின் வாழ்விலும் ஒரு மதுபானக் கடையினைக் கொண்டு வந்து பேரதிர்ச்சியைத் தருகிறார், அந்த ஊர் கவுன்சிலர்.

அதிர்ச்சியடைந்த அந்த ஊர் மக்கள், ஊர்த் தலைவரான அய்யா தலைமையில் போராட்டத்தில் இறங்குகிறார்கள்.  பிரச்சனை பெரிதானவுடன் வரும் காவல் துறையின் பேச்சுவார்த்தையால் ஒரு மாதத்திற்குள் கடையை மாற்றி  விடுவதாக உறுதியளிக்கிறார் கவுன்சிலர். 

நாட்கள் செல்ல செல்ல ஊரில் உள்ள ஆண்கள் எல்லோரும் குடிக்கு அடிமையாகி நிற்கிறார்கள். இதனை பயன்படுத்திக் கொள்ளும் கவுன்சிலர் கடையை மாற்றாமல் இழுத்தடிக்கிறார். அய்யா மட்டும் போராடிக் கொண்டிருக்கிறார். இந்த குடிமகன்களில் ஒருவனாக நாயகன் கந்தனும் மாறிவிடுகிறான். 

இதனால் கந்தனின் மனைவி செல்லக்கண்ணுவும், மகன் ஆகாஷும் பல கஷ்டங்களை சந்திக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் இந்தக் கொடுமையைத் தாங்க  முடியாமல், யாருமே எதிர்பார்க்காத காரியத்தைச்  செய்து  ஒட்டு மொத்த  கிராமத்தையும்  அதிர வைக்கிறாள்  செல்லக்கண்ணு.

செல்லக்கண்ணுவின் அந்த முடிவுதான் என்ன..?அய்யாவின் போராட்டம் வென்றதா..? கந்தன் குடியிலிருந்து மீண்டானா…? என்பதுதான் படத்தின் திரைக்கதை.

“குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத்தான் உறக்கம் போய்விடுகிறது” என்கிற கருத்தினை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

மதுவினால் ஏற்படும் தீமைகளை கிராமத்துப் பின்னணியில் வாழும் ஒரு குடும்பத்தை வைத்து யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். அந்தக் குடிப் பழக்கத்தினால் அவர்கள் மட்டுமன்றி அவர்களது குடும்பத்தினரும் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள்… அவர்களது எதிர்காலம் என்னவாகிறது என்பதையும் இந்தப் படத்தில் உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

‘கந்தனாக’ நடித்திருக்கும் ஜெயக்குமாருக்கு இது முதல் படம். மிக இயல்பாகவே நகரும்வகையில் படத்தின் திரைக்கதையை அமைத்திருப்பதால் அதற்கேற்றாற்போன்று கேரக்டர் ஸ்கெட்ச்சையும் உருவாக்கியிருக்கிறார்கள்.

இயக்குநரின் இயக்குதல் திறமையில் ஜெயக்குமாரும் ஒரு சோதனை முயற்சியாக சில இடங்களில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். குடிப்பதற்கு முன்பான காட்சிகளைவிடவும் குடிப்பவராக நடித்திருக்கும் காட்சிகளே கிளாஸ்..! இன்னும் நிறைய படங்களில் நடித்தால் ரசிக்க முடியும்.

நாயகியாக ‘செல்லக்கண்ணு’ என்னும் கேரக்டரில் ‘ஈர நிலம்’ படத்தின் நாயகியான நந்திதா நடித்துள்ளார். படத்தின் தூண் போன்று இருக்கிறார். ஒரு கிராமத்து, சாதாரணமான குடும்பப் பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். கணவரின் குடியை எதிர்த்து பேசுவதும், கத்துவதும், புருஷனையே அடித்து, உதைப்பதும்.. முடியாமல் போய் கதறுவதுமாய் இப்போதைய யதார்த்த மனைவிகளை அடையாளப்படுத்தியிருக்கிறார் நந்திதா.

கணவர் தனது அக்காள் மகனை படிக்க வைத்த செலவுக்கு வட்டியை தாமே கட்டி வருவைதச் சொல்லிக் காட்டுவதும்.. அதே அக்காள் மகன் வந்து தன் கல்யாணத்திற்குப் பத்திரிகையை கொடுத்துவிட்டு “வந்தால் சந்தோஷம்.. வராவிட்டாலும் சந்தோஷம்…” என்று சொல்லும்போது பார்க்கும் பார்வையும், பொங்கித் தீர்க்கும் பேச்சும், சிறப்பான நடிப்பு.

இவர்களது மகனாக நடித்த மாஸ்டர் ஆகாஷும் தன் பங்குக்கு தனது நடிப்பை மிகைப்படுத்தாமல் காண்பித்திருக்கிறார். அப்பாவை புறக்கணித்துவிட்டு செல்லும் அந்த ஒரு காட்சியிலேயே அட என்றும் சொல்ல வைக்கிறார்.

இவர் மட்டுமில்லாமல் பாலாசிங், கந்தனின் மாமனாராக நடித்த கிருஷ்ணமூர்த்தி, கந்தனின் நண்பர்களாக நடித்தவர்கள் என்று அனைவருமே குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.

எழுத்தாளர் பவா செல்லத்துரைக்கு அழுத்தமான ஒரு ஐயா வேடம். அரசியல் கட்சிகள் போடும் வேடத்தை வெளிச்சம் போட்டும் காட்டும் ஊர்ப் பெரியவராக தனது பணியை கச்சிதமாகச் செய்திருக்கிறார் பவா. இதற்கு இவருடைய கம்பீரக் குரலும் ஒத்துழைத்துள்ளது.

திரைக்கதையிலும், இயக்கத்திலும்கூட சிறப்பு என்று சொல்லும் அளவுக்குக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர்.

கந்தன் முதல்முறையாக குடியைப் பழகும் இடம்.. முதல் முறையாக குடித்துவிட்டு வந்து மனைவியிடம் அடி வாங்கும் காட்சி, இடையில் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்திருப்பதால் குடிக்க வர மாட்டேன் என்று கந்தன் சொல்லியும் நண்பர்கள் அவரை ஆசை காட்டி இழுக்கும் காட்சி, பையனைத் தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு கைவிடும் காட்சி, மனைவியின் தாலியை அறுத்துக் கொண்டு போயிருப்பதைச் சுட்டிக் காட்டும் காட்சி, கிணற்றில் விழுந்திருக்கும் ஒரு செருப்பை வைத்து கிராமத்து மக்களுக்குள் ஏற்படும் பரபரப்பு.. என்று பல இடங்களில் இயக்குநரின் சிறப்பான இயக்குதல் திறமை வெளிப்பட்டிருக்கிறது. இடையில் தேவையில்லாமல் சொருகியிருக்கும் காமெடிகளை இயக்குநரே நீக்கியிருக்கலாம்.

ஒளிப்பதிவு, இசை, படத் தொகுப்பு மூன்றுமே சுமார் என்று  சொல்லும் அளவுக்குத்தான் இருக்கின்றன.

படத்தில் இருக்கும் சில, பல தொழில் நுட்பத் தவறுகளை… குறிப்பாக டப்பிங் வாய்ஸ் சேராதது.. சில இடங்களில் வசன உச்சரிப்பு சரியில்லாமல் போயிருப்பது.. பின்னணி இசை கோர்ப்பு சரியில்லாதது.. இப்படி இருக்கும் தவறுகள் சிலவற்றை இயக்குநர் அடுத்தடுத்த படங்களில் நிவர்த்தி செய்வார் என்று நம்புகிறோம்.

என்றாலும், தமிழகத்தில் குடிப் பழக்கத்தினால் லட்சக்கணக்கான குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன.. பல ஆயிரம் உயிர்கள் பலியாகியிருக்கின்றன.. என்பதை சமூக அக்கறையோடு சொல்லியிருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் சத்தீஷ்வரனுக்கு நமது பாராட்டுக்கள்.

குடிமகன் – குடிகாரர்கள் மட்டுமன்றி நாளைய தலைமுறையினரும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்..!

Our Score