என்னதான் தில்லிக்கே ராஜான்னாலும், வீட்ல கூஜாவாகத்தான் இருக்க முடியும் என்பதை நமது சினிமா ஜாம்பவான்கள் திரும்பத் திரும்ப நிரூபிக்கிறார்கள்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவரான கேயார், சமீப காலமாக தான் கலந்து கொள்ளும் அனைத்து சினிமா சம்பந்தமான விழாக்களிலும் கடந்த 3 மாதமாக வெற்றி பெற்ற படங்கள், தோல்வியடைந்த படங்களை பற்றிச் சொல்லி வருகிறார்.
‘கோலிசோடா’வும், ‘தெகிடி’யும் மட்டுமே இதுவரையிலும் வெற்றி பெற்ற படங்களாக கேயார் சொல்லி வருகிறார். கூடவே, “பெரிய நடிகர்கள் நடிச்ச 2 படங்கள் கடந்த ஜனவரியில் ரிலீஸாகி ஓடினாலும்… ஒட்டு மொத்தமா பார்த்தா விநியோகஸ்தர்களுக்கோ, தியேட்டர்கார்ர்களுக்கோ அந்தப் படங்கள் நஷ்டத்தைத்தான் கொடுத்திருக்கு. அவங்கதான் சொல்லிக்கிட்டிருக்காங்க.. படம் இத்தனை நாளா ஓடுது.. இத்தனை கோடி சம்பாதிச்சதுன்னு.! சம்பாதிச்சது சரி.. அதில் கிடைச்ச லாபம் என்ன..? அதை மட்டும் சொல்ல மாட்டாங்க. ஏன்னா அதைச் சொல்லிட்டா அடுத்தப் படத்துல அவங்களுக்கு சம்பளப் பிரச்சினை வந்திரும். அதுனால அதை மட்டும் சொல்லிக்காம ச்சும்மா படம் வெற்றி படம் வெற்றின்னு பொய் சொல்லிக்கிட்டிருக்காங்க..” என்பார்.
இதை இதற்கு முன் பல மேடைகளிலும் சொன்ன கேயார்.. இன்றைக்கு பிரசாத் லேப்பில் நடைபெற்ற ‘கன்னக்கோல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் இதையேதான் சொன்னார். ஆனால் அந்த 2 பெரிய படங்கள் எது? நடிகர்கள் யார்? என்றுதான் வெளிப்படையாக பேச மறுக்கிறார்.
அவர் சொல்லவில்லையென்றாலும் நமக்கே தெரிகிறது, ‘வீரம்’, ‘ஜில்லா’ படங்களை பற்றித்தான் பேசுகிறார் என்று.. ஒரு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருப்பவரே நேரடியாக பெரிய ஹீரோக்களின் பெயர்களைச் சொல்லி, அவங்க படம் நஷ்டம்.. தோல்வின்னு சொல்ல முடியலைன்னா மத்தவங்க சொல்வாங்களா என்ன..?
‘வீரம்’, ‘ஜில்லா’ படங்களை விநியோகஸ்தர்கள் வாங்கிய லெவலுக்கு வசூல் வரவில்லை. தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் ஏகத்துக்கும் நஷ்டமடைந்திருக்கிறார்கள். இதற்கு நஷ்டஈடு கேட்டு விநியோகஸ்தர்கள் தரப்பு, சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களை அணுகியபோது இரு தயாரிப்பாளர்களுமே கூலாக ஹீரோக்கள் பக்கம் கை காட்டிவிட்டார்கள். இப்போது ஹீரோக்களிடம் முட்டி மோதினால் பணம் கிடைத்தாலும் கிடைக்கும். ஆனால் அடுத்து அவர்கள் நடிக்கும் படங்களின் விநியோக உரிமையோ, திரையிடும் உரிமையோ தங்களுக்குக் கிடைக்காது என்று விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் பயப்படுவதால் அமைதியாக இருக்கிறார்களாம்..
அடுத்து வெளிவரப் போகும் விஜய், அஜீத் படங்களின் விற்பனையின்போது ‘வீரம்’, ‘ஜில்லா’ கதையைச் சொல்லி அழுதாவது, அந்தப் படங்களின் விலையைக் குறைத்து வாங்கலாம் என்று காத்திருக்கிறார்களாம்..!
கோடம்பாக்கம் யாருடைய கையில் இருக்கிறது என்று இப்போது புரிகிறதா..?