“வயசானாலும் லொள்ளும், ஜொள்ளும் போகாது”ம்பாங்க.. அது அமைதிக்கும், அடக்கத்திற்கும் பெயர் போன தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயாரையும் தொற்றிவிட்டது..!
இன்று காலை சத்யம் திரையரங்கில் ‘அஞ்சான்’ படத்தின் பாடல்களும், டிரெயிலரும் வெளியிடப்பட்டன. அதில் ஒன்று நா.முத்துக்குமார் எழுதி, நடிகர் சூர்யாவும், நடிகை ஆண்ட்ரியாவும் ஜோடியாக பாடிய பாடல்.
“ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி…
நா ஒண்ணொண்ணா சொல்லித் தரேன். கத்துக்கடி..
நீ சாய்ஞ்சி பாத்தா சுத்துதடி..
நெஞ்சில் தீயா பத்துதடி..!”
என்ற அந்த பாடல் காட்சியும் திரையிடப்பப்பட்டது.. இந்தப் பாடல் காட்சி ஒரு ஆற்றங்கரையோரமான பின்னணியில் செம்மண் பூமியில், துணி துவைப்பவர்கள் மத்தியில் சூர்யாவும், சமந்தாவும் ஆடிப் பாடுவது போல எடுக்கப்பட்டிருந்தது.
இதில் சமந்தாவின் காஸ்ட்யூம்தான் ரொம்பவே சிக்கனம்.. குத்துப் பாடலுக்கு ஆடும் அயிட்டம் நடிகை அளவுக்கு தனது ‘மத்தியப் பிரசேதம்’ முழுவதையும் திறந்து காட்டிக் கொண்டு சட்டையின் முதல் 2 பட்டன்களை மட்டும் போட்டுக் கொண்டு மீதியை அவிழ்த்துவிட்டு கீழே ஒரு இறுக்கமான அஞ்சு வயசு பையனின் டவுசர் அளவுக்கு ஒன்றை போட்டுக் கொண்டு செம குத்தாட்டம் போட்டிருக்கிறார்.(நாம என்னங்க செய்யறது..? ஸ்கிரீன்ல காட்டுனதைத்தான சொல்ல முடியும்..?)
ரசிகர்களிடத்தில் இந்த பாடல் காட்சிக்கு அப்படியொரு வரவேற்பு.. இருக்காதா பின்ன..? கிளாமர் என்றால் என்ன..? கவர்ச்சி என்றால் என்ன என்பது இன்னமும் குழப்பமாகவே இருப்பதால் இதற்கு இயக்குநரை மட்டும் குறை சொல்லிவிட முடியாது..!
சரி போகட்டும் என்றுவிட்டால், மேடையில் வாழ்த்திப் பேச வந்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் இந்த பாடல் காட்சியைக் குறிப்பிட்டு பேசிய விதம்.. நாம் மேலே எழுதியிருப்பதே பரவாயில்லை என்று சொல்ல வைத்துவிட்டது.
கேயார் இந்தப் பாடல் குறித்து பேசியது இதுதான் :
“லிங்குசாமி எந்தளவுக்கு புத்திசாலியான ஆளுங்கிறதுக்கு ஒரே ஒரு உதாரணம் சொல்றேன். இந்தப் படத்தோட ஹீரோயின் சமந்தாவுக்கு ஸ்கின் ப்ராப்ளம். அதுனால நிறைய படங்கள்ல அவங்க நடிக்காம போயிட்டாங்க..
அதே மாதிரி இந்தப் பிரச்சினைன்னால இந்த ‘அஞ்சான்’ படத்துல இருந்தும் அவங்களை லிங்குசாமி தூக்கப் போறார்னு ஒரு பத்திரிகையில நியூஸா படிச்சேன். ஆனா அதுக்கப்புறம் அந்தப் பிராப்ளம் சரியாகி அவங்களே நடிச்சிட்டாங்க..
அதுக்காக லிங்குசாமியே இந்தப் படத்துல ஒரு வேலையை செஞ்சிருக்கார். சமந்தா எப்பவும் படங்கள்ல தன்னோட உடம்பை ரொம்ப எக்ஸ்போஸ் பண்ண மாட்டாங்க. ஆனா இந்தப் படத்துல அவங்க டான்ஸ் ஆடுன ஒரு பாடலைப் பார்த்தோம். அதுல ஒவ்வொரு சீன்லேயும் சமந்தாவோட உடம்பை எக்ஸ்போஸ் பண்ணி ஸ்கின் அலர்ஜி. அவங்களுக்கு எங்க இருக்கு..? இல்லையேன்ற மாதிரி விஷயத்தை வெளில சொல்லிருக்காரு லிங்குசாமி…” என்று சொல்ல சூர்யாவும், லிங்குசாமியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சிரித்த சிரிப்பு இருக்கே..!? ம்ஹூம்.. ‘நமக்கும் மேல ஒருத்தர் இங்க சமந்தா ரசிகரா இருக்காருய்யா…’ என்ற அந்த சிரிப்பு அர்த்தத்தை உதிர்த்தது..
திரு. கேயார் இப்போ தயாரிப்பாளர் சங்கத் தலைவரா…? இல்ல… சமந்தா ரசிகர் மன்றத் தலைவரான்னு கேக்க வைச்சிருக்கு அவரோட இந்த ‘ஜொள்ளு’ பேச்சு..!