full screen background image

தயாரிப்பாளர் சங்கத்தில் கேயார் அணி செயல்பட தடையில்லை – கோர்ட் உத்தரவு..!

தயாரிப்பாளர் சங்கத்தில் கேயார் அணி செயல்பட தடையில்லை – கோர்ட் உத்தரவு..!

நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில்..!

ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலுக்குப் பின்பு பொறுப்பேற்ற கேயார் தலைமையிலான புதிய டீமையும் செயல்படவிடாமல் செய்ய.. இந்தத் தேர்தலே செல்லாது என்றும், பல தில்லுமுல்லுகள் இத்தேர்தலில் நடந்தது என்று சொல்லி தோல்வியடைந்த தாணு தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.

இந்த மனு மீதான ஆரம்பக் கட்ட விசாரணையின்போது புதிதாக பதவியேற்ற டீம், பெரிய அளவிலான கொள்கை முடிவுகளை கையாளக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்திருந்தது நீதிமன்றம். 

இந்தத் தடையின் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் செயற்குழுவிலும், அதன் பின்னாலும் என்ன முடிவெடுத்தாலும் நீதிமன்றத் தடையைச் சுட்டிக் காட்டி இதற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தது எதிரணி. தயாரிப்புச் செலவுகளை குறைத்து.. பெரிய பட்ஜெட், சின்ன பட்ஜெட் படங்கள் இரண்டுக்கும் சம அளவிலான போட்டி இருக்க வேண்டும் என்பதற்காக 40 லட்சம் ரூபாய் வரையிலும் மட்டுமே படத்தின் பிரமோஷனுக்காக செலவிட வேண்டும் என்றெல்லாம் தயாரிப்பாளர் சங்கத்தில் பேசி வைத்திருக்கிறார்கள். இதனை நடைமுறைக்குக் கொண்டு வர முடியாமல் தடுத்தது இந்த கோர்ட் தடை..

இன்றைக்கு இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் தாணு தாக்கல் செய்த மனுக்களை ஆதாரம் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்த கோர்ட், கேயார் தலைமையிலான அணி முழுமையாகச் செயல்படலாம என்று உத்தரவிட்டுள்ளது. 

இன்று காலையில் நடந்த ‘சிநேகாவின் காதலர்கள்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இது பற்றி பேசிய சங்கத்தின் செயலாளர் டி.சிவாவும், தலைவர் கேயாரும் “கட்டிப் போடப்பட்டிருந்த எங்களது கைகள் இன்றைக்கு அவிழ்க்கப்பட்டுள்ளன. இனிமேல் பாருங்கள்.. தயாரிப்பாளர் சங்கம் முழுமையாகச் செயல்பட்டு திரையுலகத்தின் நலனுக்காக செயல்படும்” என்று தெரிவித்தார்கள்..!

சீக்கிரமா ஏதாவது செய்யுங்க பாஸ்..! 

Our Score