இந்தப் படத்தை சிவகார்த்திகேயனின் SK புரொடக்சன்ஸ் நிறுவனமும், தி லிட்டில் வேவ் புரொடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இத்திரைப்படத்தில், சூரி மற்றும் அன்னா பென் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பல புதுமுகங்களும் படத்தில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சக்தி, படத் தொகுப்பு – கணேஷ் சிவா, ஒலி வடிவமைப்பு – ஜி.எஸ்.சுரேன், அழகியகூத்தன்.
பல சர்வதேச விருதுகளை வென்ற ‘கூழாங்கல்’ திரைப்படத்தை, இயக்கிய இயக்குநரான பி.எஸ்.வினோத்ராஜ், இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.
இந்தக் ‘கொட்டுக்காளி’ திரைப்படம் 53-வது டிரான்சில்வேனியா, சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதையும், 74-வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில், ஃபோரம் பிரிவின் கீழ், தேர்வான முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தின் தலைப்பான ‘கொட்டுக்காளி’ என்ற வார்த்தை தென் தமிழகத்தின் சில பகுதிகளில் புழக்கத்தில் இருப்பதுதான். ரொம்பவும் பிடிவாதம் பிடிக்கும் பெண்ணை இந்த வார்த்தை சொல்லி அழைப்பார்கள்.
மதுரை அருகேயிருக்கும் சிறு கிராமம்தான் படத்தின் கதைக் களம். பாண்டி என்ற சூரிக்கு அவரது முறைப் பெண்ணான அன்னாபென்னை திருமணம் செய்ய நிச்சயித்துள்ளார்கள்.
படிப்பில் ஆர்வமுள்ள அன்னா மேலும் படிக்க விரும்பவே கல்லூரிக்கு அனுப்பப்படுகிறார். அங்கே உடன் படிக்கும் ஒரு மாணவனுடன் அவருக்குக் காதல் பிறக்க.. வீட்டில் பிரச்சினை எழுகிறது. இந்தக் களேபரத்தில் அன்னா பென்னுக்கு சற்று மனநலம் பாதிக்கப்படுகிறது.
அவருக்கு அலோபதி சிகிச்சையளிக்க விரும்பாமல் குல தெய்வக் கோவிலுக்கும், கிராமங்களில் பேய் பிடித்தப் பெண்களுக்கு அளிக்கும் பாரம்பரியமான சிகிச்சையையும் அளிக்க முடிவெடுக்கிறார்கள் பாண்டியின் குடும்பத்தார்.
அதற்காக அன்னா பென்னை அழைத்துக் கொண்டு மொத்தக் குடும்பமும் ஆட்டோவில் கிளம்புகிறது. இவர்கள் கோவிலுக்கும், மந்திரிக்கவும் சென்று வரும் நிகழ்வுகள்தான் இந்த ஒன்றரை மணி நேரத் திரைப்படம்.
‘விடுதலை’, ‘கருடன்’ படங்களைப் போல கதையின் நாயகனாக நினைத்து நடித்திருக்கும் சூரி, அந்தக் கதாப்பாத்திரத்தை நன்கு மேம்படுத்தி செய்துள்ளார். ஒரு வித்தியாசத்திற்காக குரல் தேக்கத்திற்காக கழுத்தில் சுண்ணாம்பைத் தடவிக் கொண்டு கீச்சுக் குரலில் சண்டையில் துவங்கும் சூரியின் ஆக்ரோஷ நடிப்பு, இறுதியில் தேய்பிறையாய் தவித்துப் போய் நிற்கிறது.
தனது உறவினர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு காரணத்துக்காக சண்டையிடும் சூரியின் கேரக்டர் ஸ்கெட்ச் எதையும் புரிந்து கொள்ள நினைக்காதவராக இருப்பதால் நாமும் அவரைப் புரிந்து கொள்ள முடிகிறது.
அந்த வட்டார மொழியை அதன் ஏற்ற, இறக்கங்களுடன், ஆக்சன் காட்சிகளின்போதும் தாளம் தப்பாமல் செய்து காட்டியிருக்கும் சூரிக்கு இந்தப் படமும் ஒரு அசாத்தியமான படம்தான்.
அன்னா பென் ஒரு பாடலை முணுமுணுத்தவுடன் மொத்தக் கோபத்தையும் அவர் மீது காட்டும் அந்த 5 நிமிட சண்டை காட்சிதான் படத்தின் ஹைலைட். அதேபோல் இப்போது நாம் பார்த்துக் கொண்டிருப்பதும் சினிமாதான் என்பதை நிரூபிக்க வைத்ததும் அந்த ஒரு காட்சிதான். வெல்டன் சூரி.
பக்கம், பக்கமாக நீளம், நீளமாக வசனம் பேசியிருந்தால்கூட அன்னா பென் இத்தனை பாராட்டுக்களைப் பெற்றிருக்க மாட்டார். ஒரேயொரு இடத்தில் மட்டுமே வசனம் பேசியிருக்கும் அன்னா பென்னின் அமைதியான அந்த இருண்மை அழகுடன், வருத்தம் தோய்ந்த முகம் கடைசிவரையிலும் ஒரு பேய் பிடித்தப் பெண்ணை.. நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
இவருடைய அம்மாவாக நடித்தவர், உறவினர்களாக நடித்தப் பெண்கள், டூவீலரில் வரும் ஆண்கள் என்று அத்தனை பேருமே அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களாகவும், குடும்பம் சார்ந்தவர்களாகவே பேசி வருவதால் நமக்கும் கதையை நகர்த்தியிருக்கிறார்கள்.
படத்தில் இசை இல்லவேயில்லை. ஸ்பாட் ரெக்கார்டிங்கை மிகவும் கஷ்டப்பட்டு பதிவு செய்திருக்கிறார்கள். சாதாரண ஒத்தையடிப் பாதை, ஒரு ஆட்டோ மட்டுமே செல்லும் கரடு, முரடான பாதைகள், அதிகம் போக்குவரத்துக்குப் பயன்படாத சாலைகள் என்று ஆட்டோ பயணிக்கும் வழியை நிறுத்தி, நிதானமாக நமக்குக் காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
படத்தொகுப்பாளர் இந்தப் படத்தில் மட்டுமே மிகவும் கஷ்டப்படாமல் வேலை செய்திருப்பார். அதிகப்படியான காட்சிகள் இல்லாமல், இருக்கும் காட்சிகளையே பல நிமிடங்களுக்கு நீட்டியிருப்பதால் அவருக்குக் கஷ்டமில்லைதான்.
இதே இயக்குநர் இயக்கியிருந்த ‘கூழாங்கல்’ படத்தைப் போலவே இந்தப் படமும் அவார்டுக்காகவே தயாராகியிருக்கிறது. ‘கூழாங்கல்’லில் நடப்பதையே 40 நிமிடங்கள் காண்பித்திருப்பார். இதில் கொஞ்சம் குறைத்து 30 நிமிடங்கள் ஆட்டோ, டூவீலர் பயணத்தைக் காண்பித்திருக்கிறார். மற்றபடி இரண்டு திரைப்படங்களின் நோக்கமும் ஒன்றுதான்.
படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை சூரி அனைவரிடமும் சண்டையிடும் காட்சியும், கிராமப்புறங்களில் பேய் பிடித்தால் அதை விரட்டுவதற்கு அந்தப் பூசாரி மந்திரிப்பது என்ற சடங்கு மூலமாக என்னென்ன செய்வார் என்பதை விலாவாரியாக காட்சிப்படுத்தியிருப்பதுதான்.
அந்த சடங்கில் அன்னா பென்னுக்கு முன்பாக சிகிச்சைக்குள்ளாகும் பெண்ணின் அசத்தலான அந்த 10 நிமிட சிலை போன்ற நடிப்பைப் பாராட்டியே ஆக வேண்டும்.
கிளைமாக்ஸில் சூரி எதை நினைத்து ஸ்தம்பித்துப் போய் நிற்கிறார் என்பதை நாமளே யூகித்துக் கொள்ள வேண்டுமாய் இயக்குநர் பந்தை நம் பக்கம் திருப்பியடித்துதான் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய டேமேஜை கொடுத்திருக்கிறது.
ஒன்று., தனக்கு மனைவியாகப் போகும் பெண்ணின் உடலில் இந்த அளவுக்கு உரிமையெடுத்து, கை வைத்து, சிகிச்சையளிக்கப் போகிறானா இந்தப் பூசாரி என்ற நினைப்பில் சூரி அதிர்ச்சியாய் நின்றிருக்க வேண்டும்.
அல்லது
பேய் பிடிப்பது என்பது நமக்கு மட்டுமல்ல. நாட்டில் எத்தனையோ பேருக்கு இருக்கு. அன்னா பென் நடிக்கவில்லை. உண்மையாகவே அவளுக்கு ஏதொவொன்று ஆகிவிட்டது என்ற உண்மையை சூரி உணர்ந்திருக்க வேண்டும்.
இந்தக் கோடிட்ட இடத்தை நாமளே பூர்த்தி செய்து அனுபவித்துக் கொள்ளுமாறு இயக்குநர் நம்மைப் பணித்திருக்கிறார். இது இயக்குநர் செய்திருக்கும் மிகப் பெரிய தவறு.
படம் என்ன சொல்ல வருகிறது என்பதே தெரியாமல் சாதாரணமான ரசிகர்கள் இயக்குநரையும், படத்தையும் தாறுமாறாகத் திட்டிக் கொண்டே தியேட்டரை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். இது தமிழ் சினிமாவுக்கு நல்லதல்ல.
இப்போது தியேட்டரைவிட்டு ஓடியவர்கள் மீண்டும் எப்போது தியேட்டருக்கு வருவார்கள் என்பது கேள்விக்குறி. இப்படி ரசிகர்களை ஓட விடுவதுதான் ஒரு இயக்குநரின் வேலையா..?
தயாரிப்பாளராவது கொஞ்சம் சுதாரித்து இதைத் தியேட்டருக்குக் கொடுக்காமல் ஓடிடிக்கு மட்டுமே கொடுத்து நம்மைக் காப்பாற்றியிருக்கலாம். அதையும் செய்யாமல் நம்மையும் படு குழியில் தள்ளியிருக்கிறார் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்.
மாற்று சினிமாக்கள் அவசியம் தேவைதான். ஆனால் இந்த அளவுக்கு தேவையில்லை என்பதை ரசிகர்கள் தியேட்டரில் புரிய வைத்திருக்கிறார்கள். புரிந்து கொண்டால் சரி..!
கொட்டுக்காளி – தேள் மாதிரி கொட்டிருச்சு ப்ரோ..!
RATING : 2.5 / 5









