பல சர்வதேச விருதுகளை வென்ற ‘கூழாங்கல்’ திரைப்படத்தை, இயக்கிய இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கொட்டுக்காளி’.
இந்தப் படத்தை சிவகார்த்திகேயனின் SK புரொடக்சன்ஸ் நிறுவனமும், தி லிட்டில் வேவ் புரொடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இத்திரைப்படத்தில், சூரி மற்றும் அன்னா பென் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தக் ‘கொட்டுக்காளி’ திரைப்படம் 53-வது டிரான்சில்வேனியா, சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதையும், 74-வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில், ஃபோரம் பிரிவின் கீழ், தேர்வான முதல் தமிழ்ப் படம், என்ற பெருமையையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘கொட்டுக்காளி’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது.
இதையொட்டி படத்தின் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜூவும், தயாரிப்பாளர் கலையரசுவும் பத்திரிகையாளர்களை சந்தித்து இந்தக் ‘கொட்டுக்காளி’ படம் குறித்து தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
படத்தின் இயக்குநரான வினோத்ராஜ் பேசும்போது, “படத்தின் தலைப்பான ‘கொட்டுக்காளி’ என்ற வார்த்தை தென் தமிழகத்தின் சில பகுதிகளில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைதான். ரொம்பவும் பிடிவாதம் பிடிக்கும் பெண்ணை இந்த வார்த்தை சொல்லி அழைப்பார்கள்.
படத்தைப் பார்த்தால் உங்களுக்கு இந்த சொல்லின் அர்த்தம் புரியும். அன்னா பென்னின் கதாபாத்திர ஸ்கெட்ச் இந்த வார்த்தைக்குப் பொருத்தமாக இருந்ததால் இந்த வார்த்தையையே தலைப்பாக்கிவிட்டோம்.
படத்தில் இன்னொரு முக்கிய கதாப்பாத்திரமான ‘பாண்டி’ கதாபாத்திரத்தில் சூரியைப் போன்று அந்த ஊரைச் சேர்ந்தவரைப் போல இருப்பவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இதனால் சூரியை சந்தித்து அவரிடம் கதையைச் சொன்னோம். அவர் கதையைக் கேட்டவுடன், ‘’பாண்டி கதாப்பாத்திரத்தில் நான் வாழ்ந்திருவேன்..’’ என்று நம்பிக்கையுடன் கூறினார். அது எனக்கு மேலும் உற்சாகத்தினை கொடுத்தது.
முக்கியமான ஒரு பெண் கதாபாத்திரத்தில் அன்னா பென் நடித்திருக்கிறார். தனது உணர்வுகளை வெறுமே முக பாவனைகள் மூலமாகவே வெளிப்படுத்த வேண்டிய ஒரு பெண் கதாபாத்திரம் என்பதால் இதற்கு அன்னா பென்னின் முகம் சரியாக இருக்கும் என்று தோன்றியது, அதனால்தான் அவரை தேர்வு செய்தோம்.
நான் சிறு வயதில் நான் பார்த்த ஒரு விசயம் பற்றி சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். அதைத்தான் இதில் சொல்லியிருக்கிறேன். இது முழுக்க, முழுக்க நம் வாழ்வியலுக்கு நெருக்கமாக இருக்கும். ஒரு வாழ்வியலை பக்கத்தில் இருந்து பார்த்த அனுபவத்தை கொடுக்கும் படமாக இந்தக் ‘கொட்டுக்காளி’ இருக்கும்.
ஒரு பயணத்தின் மூலம் வாழ்வியலை சொல்வதுதான் இந்தப் படத்தின் கதை. இந்தப் பயணம் முடிவை நோக்கி அல்லாமல், அந்த மக்களை புரிந்து கொள்ளும் ஒரு படைப்பாகவும் இருக்கும்.
விருதுகள் வாங்குவதற்காக நான் படம் எடுக்கவில்லை, சர்வதேச திரைப்பட விழாக்களில் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். என்னுடைய படங்களும் திரைப்பட விழாக்களில் பங்கேற்க வேண்டும் என்ற விருப்பம் எனக்குள்ளது. ஆனால், அதற்காக மட்டும் நான் படம் எடுக்கவில்லை.
பெர்லின், ரோட்டர்டோம், ருமேனியா போன்ற வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு நம் தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டு கலாச்சாரம் சுத்தமாகத் தெரியாது, ஆனால் அவர்கள் என் படங்களை புரிந்து கொண்டு பாராட்டும்போது, நம் மக்களும் என் படங்களை புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
கமர்ஷியல், கலை படைப்பு என்று நான் பிரித்துப் பார்ப்பதில்லை, நான் பார்த்த மக்களை, அனுபவித்த வாழ்க்கையை படைப்பாக கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன், அதனால்தான் இப்படிப்பட்ட படங்களை எடுக்கிறேன்.
நான் பார்த்த மக்களை, அவர்களின் கதையை, அவர்கள் அனுபவித்த வாழ்க்கையை படைப்பாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எனது 2 படங்களையும் இயக்கியிருக்கிறேன். என்னுடைய முதல் படமான ‘கூழாங்கல்’ படத்தை, மக்களும், ஊடகங்களும் அங்கீகரித்ததால் எனக்கு பொறுப்பு அதிகமானது. தைரியமும் அதிகமானது.
இப்படிப்பட்ட படங்களை கொடுப்பதற்கான தைரியம் பாலுமகேந்திரா, வெற்றிமாறன் போன்ற முன்னோர்களிடம் இருந்து தான் எனக்கு வந்தது. இனியும் இது தொடரும் என்றுதான் நினைக்கிறேன்.
இந்தக் ‘கொட்டுக்காளி’ திரைப்படம் நிச்சயமாக திரைப்பட பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தினை கொடுக்கும் என்று உறுதியுடன் கூறுகிறேன்…” என்றார்.









