‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘அட்டக்கத்தி’, ‘இன்று நேற்று நாளை’, ‘தெகிடி’ உள்ளிட்ட கதைக்கு முக்கியத்துவம் கொண்ட மக்கள் மனதில் இடம் பிடித்த படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் சி.வி.குமார்.
தனது திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் நிறுவன தயாரிப்புகளில் பல்வேறு நடிகர்கள் மற்றும் இயக்குநர்களை அறிமுகப்படுத்திய இவர், ‘மாயவன்’, ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ ஆகிய திரைப்படங்களையும் இயக்கி உள்ளார்.
தற்போது இவர் இயக்கி வரும் படமான ‘கொற்றவை’ பிரம்மாண்டமான பொருட்செலவில் மூன்று பாகங்களாக தயாராகி வருகிறது.
ஓம் ஃபிலிம்சின் எஸ்.ஜே.குரு மற்றும் மயில் பிலிம்சின் டாக்டர் கே.பிரபு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

சின்னத்திரையில் நடிகை குஷ்பு நடுவராக பங்கு பெற்ற ‘அழகிய தமிழ் மகன்’ நிகழ்ச்சியில் ‘சாகச தமிழ் மகன்’ விருது பெற்ற ராஜேஷ் கனகசபை இந்தக் ‘கொற்றவை’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். சந்தனா ராஜ் மற்றும் சுபிக்ஷா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
மேலும், அனுபமா குமார், கவுரவ் நாராயணன், பவன், வேல ராமமூர்த்தி, அபிஷேக், வேலு பிரபாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை – இயக்கம் – சி.வி.குமார், வசனம் – தமிழ்மகன், இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – பிரகாஷ், படத் தொகுப்பு – இக்னேஷியஸ் அஷ்வின், கலை இயக்கம் – எஸ்.கே., தயாரிப்பு நிறுவனம் – ஓம் ஃபிலிம்ஸ் மற்றும் மயில் ஃபிலிம்ஸ், தயாரிப்பாளர்கள் – எஸ்.ஜே.குரு, டாக்டர் கே.பிரபு, மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

தமிழ்ச் சினிமாவில் இதுவரையிலும் யாரும் முயற்சிக்காத வகையில் உண்மை-புனைவு கதைக் களத்தில் இந்தக் ‘கொற்றவை’ திரைப்படம் உருவாகி வருகிறது.
புதையல் வேட்டை தொடர்பான கதையாக அமைந்துள்ள இந்தக் ‘கொற்றவை’ படத்தில், 2000 வருடங்களுக்கு முன்பு மறைக்கப்பட்ட ஒரு புதையலைக் கண்டறிய நாயகன் எடுக்கும் சாகச முயற்சிகள் மெய்சிலிர்க்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன. ஏன் அந்த புதையல் மறைக்கப்பட்டதென்பதும் படத்தில் விறுவிறுப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சி.வி.குமார் இந்தக் கொற்றவை படம் பற்றிய பேசும்போது, “ஏற்கனவே வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வு இப்போதும் தொடர்வது போல கதை அமைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 2000 வருடங்களுக்கு முன்பும், பின்புமான காலத்துக்கு ரசிகர்களை இப்படம் அழைத்து சென்று பரவசத்தில் ஆழ்த்தும்.
தற்போது முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
‘கொற்றவை: தி லெகசி’ என்று முதல் பாகத்துக்கு பெயரிட்டுள்ளோம். சீரான இடைவெளியில் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி, மூன்றாவது பாகத்தில் பரப்பரப்பான கிளைமேக்சுடன் இந்தக் ‘கொற்றவை’ திரைப்படம் நிறைவடையும்…” என்று கூறினார்.









