கூட்டத்தில் ஒருத்தன் – சினிமா விமர்சனம்

கூட்டத்தில் ஒருத்தன் – சினிமா விமர்சனம்

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனமும், ரமாணியம் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.  

இந்தப் படத்தில் அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த், சமுத்திரக்கனி, மாரிமுத்து, அனுபமா குமார், பால சரவணன், ஜான் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவு – பி.கே.வர்மா, படத் தொகுப்பு – ஜெய், கலை இயக்கம் – கே.கதிர், சண்டை பயிற்சி – அன்பறிவு, நடனம் – சதீஷ், பாடல்கள் – கபிலன், தயாரிப்பு மேற்பார்வை – வைரம் சங்கர், தயாரிப்பு – ரமாணியம் டாக்கீஸ், ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் பத்திரிகையாளர் த.செ.ஞானவேல்.

இதுவரை தமிழ் சினிமாவில் முதல் பெஞ்ச் மாணவர்கள், கடைசி பெஞ்ச் மாணவர்கள் பற்றி நிறைய படங்கள் வந்துள்ளன. ஆனால், இந்தப் படம் கொஞ்சம் வித்தியாசமாக மிடில் பெஞ்ச் மாணவர்களைப் பற்றி பேசியிருக்கிறது. இந்த உலகத்தில் பெரும்பான்மையானவர்கள் மிடில் பெஞ்சர்ஸ்தான். அவர்களை கொண்டாடும் படமாக இந்த ‘கூட்டத்தில் ஒருத்தன்’ திரைப்படம் வந்திருக்கிறது.

பள்ளி படிப்பைத் துவக்கியதில் இருந்தே சராசரி மாணவராக… 100-க்கு 50 மதிப்பெண் பெறும் மாணவராகவே இருக்கிறார் ஹீரோ அசோக் செல்வன். அம்மா, அப்பா, அக்கா, தம்பியுடன் இருக்கும் அசோக் செல்வனுக்கு அவருடைய அப்பா மட்டுமே எதிரி.

பள்ளி ஆசிரியராக இருக்கும் அவருடைய அப்பாவான மாரிமுத்துவிற்கு அசோக் செல்வனின் ஆவரேஜ் மதிப்பெண்கள் கவலையளிக்கிறது. இதனால் அசோக் செல்வனுக்கான மரியாதையும் வீட்டில் குறைவாகே இருக்கிறது.

பள்ளியில், வகுப்பில், வீட்டில் எங்கு பார்த்தாலும் தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்க மறுக்கிறார்களே என்று மனம் குமைகிறார் அசோக். ஆனால் இவரது இந்த வருத்தத்தை கேட்கக்கூட ஆளில்லை என்பதுதான் சோகமான விஷயம்.

இந்த நேரத்தில் ஒரு நாள் மாலையில் கடற்கரைக்கு செல்கிறார்கள் அசோக்கின் குடும்பத்தார். அந்த நேரத்தில் கடற்கரையில் கிடந்த ஒரு குப்பையை எடுத்துச் சென்று குப்பைத் தொட்டியில் போடுகிறார் அசோக். இப்போது அந்தக் குப்பையை அங்கே வேண்டுமென்றே வைத்துவிட்டுச் சென்ற பள்ளியின் என்.எஸ்.எஸ். பிரிவைச் சேர்ந்த ஹீரோயின் பிரியா ஆனந்த் ஓடோடி வந்து அசோக்கிடம் கை குலுக்கி பாராட்டுகிறார்.

இந்த ஒரு நிமிட பாராட்டு அவருக்குள்  ஒரு இனம் புரியாத உணர்வை ஏற்படுத்துகிறது.  காதல் என்ற கெமிஸ்ட்ரியை உண்டு பண்ணுகிறது.

இதே பிரியா ஆனந்த் அந்த வருடத்திய பிளஸ் டூ வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்வாகிறார். இதைத் தொலைக்காட்சியில் பார்க்கும் அசோக் செல்வன் பிரியாவிடம் மயங்கிவிடுகிறார். பிரியா தான் ஜர்னலிஸம் படிக்கப் போவதாகச் சொல்ல அசோக்கும் அதே கோர்ஸில் படிக்க விருப்பப்படுகிறார்.

அப்பாவின் எதிர்ப்பையும் மீறி ஜர்னலிஸம் வகுப்பில் சேர்கிறார் அசோக். பிரியா ஆனந்தும் அதே கல்லூரியில், அதே வகுப்பில் படிக்க வருகிறார். பிரியாவுக்காகவே அந்தக் கல்லூரியில், அதே படிப்பில் சேர்ந்த அசோக் நிஜமாகவே பிரியாவை காதலிக்கத் துவங்குகிறார்.

பிரியாவின் அம்மா ஒரு மாஜிஸ்திரேட். டைவர்ஸ் ஆனவர். தனது மகளை சிறு வயதிலிலிருந்தே தனித்து வளர்த்தெடுத்தவர். காதல் என்ற பெயரில் நெருங்குபவர்களை அருகில் அனுமதிக்க வேண்டாம் என்று மகளுக்கே டியூஷன் எடுக்கிறார். இதனால் பிரியாவும் காதல் என்ற பேச்சுக்கே இடமளிக்காமல் இருக்கிறார்.

இந்த நேரத்தில் அசோக் பிரியாவை காதலிப்பதாக அவரிடமே போய் சொல்ல.. “காதல் என்றால் என்ன..? எதுக்குக் காதலிக்கணும்..? அடுத்து என்ன செய்யப் போற..?” என்று அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்டுவிட்டு தனக்கு அசோக் மீது காதல் இல்லை என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டுப் போகிறார் பிரியா ஆனந்த்.

இந்த்த் திடீர் காதல் தோல்வியால் மனமுடைந்த அசோக் தற்கொலை செய்து கொள்ள கடலுக்குள் செல்கிறார். ஆனால் எதிர்பாராதவிதமாக அப்போது கடலில் மூழ்கிக் கொண்டிருந்த சின்னப் பையனுடன் மோதி.. இருவருமே மயக்கமடைந்து கரைக்கு வந்து ஒதுங்குகிறார்கள்.

இந்தச் சம்பவம் ஒரு நபரால் வீடியோவில் படமாக்கப்பட்டு யூடியூபில் வெளியாகிறது. இதையடுத்து அசோக்தான் அந்தச் சிறுவனை காப்பாற்றியதாக ஊர், உலகமே நம்புகிறது. பாராட்டுக்கள் குவிகிறது அசோக்கிற்கு. பிரியாவிற்கு அசோக் மீது ஒரு கவன ஈர்ப்பு இதன் மூலம் வருகிறது.

அந்தச் சிறுவன் லோக்கல் ரவுடியான சமுத்திரக்கனியின் மகன். தன் உயிருக்குயிரான மகனை காப்பாற்றிய அசோக்கை நேரில் வரவழைத்து பாராட்டுகிறார் சமுத்திரக்கனி. அசோக்கின் தற்போதைய பிரச்சினையை சால்வ் செய்ய சமுத்திரக்கனி தன்னாலான முயற்சிகளை மேற்கொள்கிறார்.

இதில் ஒன்றாக லண்டன் பிபிசியில் வேலை செய்வதற்கான சிறப்பு மாணவராக அசோக்கை தேர்வு செய்து அனுப்பிவைக்கும்படி துறை தலைவரை ஆள் வைத்து மிரட்டி சாதிக்கிறார் சமுத்திரக்கனி. இது மேலும் பிரியாவையும், அசோக்கையும் இணைத்து வைக்கிறது.

ஆனாலும் காதல் மட்டும் ஓகேயாகாமல் இருப்பதால் இதற்காக சமுத்திரக்கனி ஒரு திட்டம் போட.. அது சொதப்பலாகி அசோக்கை காப்பாற்றிவிட்டு தான் மட்டும் சமுத்திரக்கனி  செட்டப் செய்த விபத்தில் சிக்கிக் கொள்கிறார் பிரியா ஆனந்த்.

இதனால் 3 மாதங்கள் மருத்துவமனையில் இருந்து உயிர் பிழைத்து வருகிறார் பிரியா ஆனந்த். இப்போது பிரியா காதலுக்கு ஓகே சொல்ல.. அசோக் ஆனந்தத்தில் திளைக்கிறார்.

ஏற்கெனவே போலீஸை பகைத்துக் கொண்ட சமுத்திரக்கனியை போலீஸ் இன்ஸ்பெக்டரான ஜான் விஜய் திட்டம் போட்டு என்கவுண்ட்டரில் படுகொலை செய்கிறார்.

அதே நேரம் அசோக்கின் வகுப்பிலேயே படித்து வரும் இன்னொரு மாணவன் அசோக் பற்றி நன்கு தெரிந்து வைத்து, பக்காவாக பிளான் செய்து அசோக் எப்படி லண்டனுக்கு தேர்வானான்..? எப்படி பிரியாவை மடக்கி காதலிக்க வைத்தான் என்பதையெல்லாம் அவன் வாயாலேயே சொல்ல வைத்து அதனை கான்பிரன்ஸ் கால் மூலமாக அனைவருக்கும் தெரியப்படுத்த..

கல்லூரியில் இருந்து அசோக்கை துரத்துகிறார்கள். பிரியா அசோக்கிற்கு “குட் பை” சொல்கிறார். மாரிமுத்து வீட்டில் அசோக்கை சேர்க்க மாட்டேன் என்று சொல்லி வெளியில் துரத்துகிறார்.

இனி என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதமான திரைக்கதை..!

மேற் சொன்னதுதான் திரைக்கதைப்படி கதையாக வருகிறது என்றாலும் முடிவு வேறு கோணத்தில் சமூக நோக்கோடு அமைக்கப்பட்டிருக்கிறது. மீதமான உணவை குப்பைத் தொட்டியில் போடாமல் அதனை உணவில்லாதவர்களுக்கு கொடுத்தால் அவர்களது பசியாவது மிஞ்சுமே என்ற பிரியா ஆனந்த், அசோக்கிடம் சொல்லும் கான்செப்ட் இப்போது உலகம் முழுவதுமே நடைமுறையில் இருக்கிறது.

இந்த கான்செப்ட்டை தமிழகத்திலும் பல நல்ல உள்ளங்கள் செயல்படுத்தி வருகிறார்கள். இதனையே இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தி அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

ஒரு மிடில் பெஞ்ச் மாணவன் தனது வாழ்க்கை திசை திரும்பிய நிலையில் மற்றவர்களுக்காக வாழ விரும்பிய நிலையில்.. தியாக மனப்பான்மையோடு இதனை ஒரு சேவையாக நினைத்துச் செய்யத் துவங்க அது ‘அமுதசுரபி’ என்னும் தொண்டு நிறுவனமாக மிகப் பெரிய அளவுக்கு வளர்கிறது என்றால் அது பாராட்டத்தக்கதுதான்.

ஆனால் இந்தக் காட்சியை வைப்பதற்கான அழுத்தமான காரணங்கள் எதுவும் ஹீரோவின் வாழ்க்கையில் இல்லை என்பதுதான் சோகமான விஷயம். காதலுக்காக அனைத்தையும் செய்த ஹீரோ கடைசியில் அந்தக் காதலே இல்லை என்ற நிலைமை வந்தவுடன், சமூக சேவைக்கு வருவதை போல திரைக்கதை அமைந்திருப்பது படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்.

காதலே இந்த தியாகத்தால்தான் உருவாகிறது என்பதுபோல இருந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். ஆனால் கடைசியில் காதலி மனமுருகி திரும்பி வருவதெல்லாம் சினிமாத்தனமாகவே இருக்கிறது.

அசோக் செல்வன் சோடா புட்டி கண்ணாடியோடு ஒரு மிடில் பெஞ்ச் மாணவராகவே காட்சியளிக்கிறார். இந்த ஒரு படத்தோடு அவர் ஸ்கூல் பையன் இமேஜை கைவிடுவது நல்லது.

வெகுளியான தனது நடிப்பைக் காட்ட அவருக்கு மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்து அதை அவரும் சிறப்பாக கையாண்டிருக்கிறார். பிரியா ஆனந்த் அவரை நிராகரித்தவுடன் அவருக்கு ஏற்படும் அதிர்ச்சியும், தொடர்ச்சியான தற்கொலை முயற்சிகளும் நியாயப்படுத்த முடியாதவை என்றாலும் அதில் அந்த வயதுக்கே உரிய கதாபாத்திரத்தின் செயல் தென்படுகிறது. இயக்குநர் இதனை அழுத்தமாகவே படத்தில் பதிவு செய்திருக்கிறார்.

பிரியாவின் நாயைத் தேடி அலைச்சல்.. பிரியாவை கவர கவனம் எடுக்கும் சில செயல்கள்.. காதல் தோற்றவுடன் அசோக் நினைத்துப் பார்க்கும் நினைவுகள்.. பிரியா மருத்துவமனையில் இருக்கும்போது சமுத்திரக்கனியுடன் வந்து சண்டையிடும் காட்சிகள் என்று பல இடங்களில் தனது நடிப்பை அக்மார்க் முத்திரையுடன் குத்தியிருக்கிறார் அசோக் செல்வன். பாராட்டுக்கள்.

திரையுலகத்தில் நடிப்பை ஓரங்கட்டிவிட்டு விடை பெற நினைத்திருந்த நேரத்தில் இதில் நடித்திருக்கிறார் பிரியா ஆனந்த்.  பாடல் காட்சிகளில் கொஞ்சம் கிளாமரோடு இருந்தாலும், கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார். பாராட்டு மட்டுமே காதலாகிவிடாது என்பதில் உறுதியாக இருக்கும் பிரியா ஆனந்த், போகப் போக மெதுவாக அசோக் மீது காதல் வயப்படுவதாக காட்டியிருப்பது அழகு. ஆனாலும் திரைக்கதையில் வேகம் குறைவானது இந்த இடத்தில்தான்..!

பால சரவணன் அவ்வப்போது தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி விடுகிறார். மாரிமுத்து அக்மார்க் ஒரு அப்பாவாக தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறார். இன்னொரு பக்கம் ஏற்கெனவே ஏமாந்து போன அம்மாவாக வரும் அனுபமா குமாரின் ஸ்கிரீன் பிரஸ்ஸென்ஸ் ஆண்ட்டி மேனியா கொண்டவர்களுக்கு அற்புத சலுகை..!

ரவுடியாக வரும் சமுத்திரக்கனி இன்னொரு பக்கம் பாசக்காரராக வலம் வருகிறார். தனது ஒரே மகனை காப்பாற்றிய ஒரே காரணத்துக்காக அசோக்கிற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்துவிட்டு அசோக்கின் கோபத்தையும், உதாசீனத்தையும் தாங்கிக் கொண்டு கடைசியாக பரிதாபமாக உயிரைவிடுகிறார். ஆனால் நடிப்பில் அப்படியே ஈர்த்திருக்கிறார்.

நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படிதான் இருக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கொரு பலம். பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவில் அனைத்துக் காட்சிகளுமே அழகுற படமாக்கப்பட்டுள்ளன. பாடல் காட்சிகளுக்கு கூடுதல் கவனம் எடுத்து செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. 

மிடில் பெஞ்ச் மாணவர்கள் கீழேயும் போக முடியாமல், மேலேயும் உயரத் தெரியாமல் அல்லல்படும் கஷ்டங்களை படத்தின் முற்பாதியில் ரொம்பவே சொல்லியிருக்கிறார் இயக்குநர். இதையே படத்தின் முழுமையான கதைக் கருவாக வைத்திருக்கலாம். பிற்பாதியில் சமூக சேவையை நோக்கி படத்தைத் திசை திருப்பியதால் படம் எது மாதிரியான படம் என்பதில் ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுவிட்டது..! இதுதான் படம் எதிர்நோக்கிய ஒரேயொரு பிரச்சினை.

அதே சமயம், “உணவை வீணாக்கக் கூடாது. மீதமான உணவை பகிர்ந்து கொள்ள வேண்டும்…” என்கிற இப்போதைய சமூகத்திற்குத் தேவையான மெஸேஜை தெரிவித்த காரணத்துக்காக இந்தப் படம், இயக்குநருக்கு நிச்சயமாக பெருமையை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

`கூட்டத்தில் ஒருத்தன்’ நிச்சயமாக சினிமாவிலும் ஒருத்தன்தான்..!

Our Score