நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கூத்தன்’.
அறிமுக நாயகன் ராஜ்குமார், அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் (பிரபுதேவா தம்பி) நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்னன், ரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என ஒரு பெரிய திரையுலக பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
பாலாஜி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு – மாடசாமி, படத் தொகுப்பு – பீட்டர் பாபியா, கலை – சி.ஜி.ஆனந்த், நடனம் – அசோக் ராஜா, சுரேஷ், நிர்வாக தயாரிப்பு – மனோஜ் கிருஷ்ணா, எழுத்து, இயக்கம் – வெங்கி.
இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைப் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் படக் குழுவினர் முன்னிலையில் நேற்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் மிகப் பிம்ரமாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் திலகம் கே.பாக்யராஜ், ஜாக்குவார் தங்கம், நடிகை அர்ச்சனா, நடிகை நமீதா, நடிகை நிகிஷா பட்டேல் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த இசை வெளியீட்டு விழா மேடையிலேயே புதிய முறையில் தியேட்டர் டிக்கெட் விற்பனை முறையை அறிமுகப்படுத்திப் பேசினார் தயாரிப்பாளரான நீல்கிரிஸ் முருகன்.
அவர் பேசும்போது, “ஒரு மிகப் பெரிய பிரம்மாண்டமான படத்தின் மூலம் என் மகனை அறிமுகப்படுத்தி ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான படம் பார்க்கும் உணர்வை தர நினைத்துதான் இந்தப் படத்தை தயாரித்துள்ளேன்.
எந்த விஷயத்திலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைப்பவன் நான். இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் சின்ன படங்கள் ஓடுவது மிகப் பெரிய விஷயமாகிவிட்டது. அதை மாற்றி இந்தப் படத்தை அனைவரிடமும் கொண்டு செல்லவும், இதை வெற்றிப் படமாக்கவும் டிக்கெட் முறையில் புதிய முறையை அறிமுகப்படுத்த உள்ளேன்.
இதன்படி படத்தின் டிக்கெட்டுக்களை நானே என் நண்பர்கள் மூலமாகவும் என் நலம் விரும்பிகள் மூலமும் விற்பனை செய்யவுள்ளேன். இதறகு எனது நண்பர்கள் அனைவரும் ஒத்துழைக்கிறார்கள். இந்த டிக்கெட்டை கொண்டு நீங்கள் தியேட்டருக்குச் சென்றால் ஒன்பது நாட்களில் எந்த தியேட்டருக்கு செல்கிறீர்களோ அந்தத் தியேட்டரில் இந்தப் படத்தின் டிக்கெட்டை தருவார்கள்.
டிக்கெட்டை நீங்கள் தமிழ் நாட்டில் எங்கு வாங்கினாலும் எந்த விலைக்கு வாங்கினாலும் அதிக டிக்கெட் விலையுள்ள தியேட்டருக்கு நீங்கள் சென்றாலும் இந்த டிக்கெட் செல்லும். தியேட்டர்காரர்களின் ஒத்துழைப்புடன்தான் இதை நான் ஆரம்பித்திருக்கிறேன்.
ஒரு சின்னப் படத்தை 5 லட்சம் பேர் பார்த்தால் அது ஹிட் படம். இந்த மேடையிலேயே என் நண்பர்கள் மூலம் 20 லட்சம் ரூபாய் அளவு டிக்கெட்டை விற்கிறேன். இதை அவர்கள் சந்தைப்படுத்துவார்கள். ஒவ்வொரு கட்டமாக இதை நடைமுறைப்படுத்துவேன்.
இதன் மூலம் பார்வையாளர்களை நேரடியாக நாங்கள் சந்தித்து தியேட்டருக்கு அழைத்து வருவோம். மேலும் படத்தையும் மிகப் பெரிய ஹிட் படமாக ஆக்குவேன். இந்த முறை இனிமேல் எல்லோராலும் பின்பற்றப்படும்..” என்றார்.
தொடர்ந்து விழாவில் பேசிய பிரபலங்களும் இத்திட்டத்தினை வெகுவாகப் பாராட்டினர்கள்.
படத்தின் ஹீரோ ராஜ்குமார் பேசும்போது, “இந்தப் படத்தின் தலைப்பை இயக்குநர் அவருடைய மனைவியிடம் கேட்டுத்தான் ‘கூத்தன்’ என்று அற்புதமான டைட்டிலாக வைத்தார். இந்தப் படத்திற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். இந்தப் படத்தில் பணி புரிந்தது மறக்க முடியாத அனுபவம். இந்த வாய்ப்பு என் தந்தையால் கிடைத்தது. இதில் நான் என்னால் முடிந்த அளவிலான உழைப்பை தந்திருக்கிறேன். இதற்கு உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எனக்கு வேண்டும். எனக்கு ஆதரவு தாருங்கள்..” என்றார்.
நடிகை நமீதா பேசும்போது, “என் வாழ்க்கையில் கொஞ்சம் வெற்றி வரக் காரணம் எனது மேனேஜர் மனோஜ் கிருஷ்ணாதான். அவர்தான் என்னை தமிழில் பேசிப் பழகுங்கள் என்று உற்சாகப்படுத்தினார். ‘மச்சான்’ என்ற வார்த்தைகூட அப்படித்தான் உருவானது. ஹிரோ ராஜ், நீங்கள் மனோஜ் மூலம் அறிமுகமாகிறீர்கள். கண்டிப்பாக வெற்றி அடைவீர்கள். தண்ணியில் குதித்துவிட்டதால் நீச்சல் கற்றுக் கொள்ளுங்கள். திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். எல்லோருக்கும் என் நல்வாழ்த்துக்கள்” என்று வாழ்த்தினார்.
இயக்கநர் திலகம் கே.பாக்யராஜ் பேசும்போது, “நான் உள்ளே வரும்போது டீ.ஆர். உணர்ச்சி பொங்க பாடிக் கொண்டிருந்தார். அவர் மேடைகளில் உணர்ச்சிவசமாக பேசி விடுவதால் இங்கு வரவில்லை என்றார்கள். அதுவும் சரிதான். நான் இந்த மாதிரியான கதையை அடிப்படையாக வைத்து ஒரு கதையை யோசித்து வைத்திருந்தேன். ஆனால் இந்தப் படத்தை இவர்கள் அற்புதமாக எடுத்திருக்கிறார்கள்.
நடன இயக்குநர் தம்பி நாகேந்திர பிரசாத் இதில் பிரமாதமாக நடித்திருக்கிறார். தயாரிப்பாளர் ஒரு பேக்கரியில் வேலை பார்த்து இந்த அளவு முன்னேறியிருக்கிறார். எல்லாவற்றிலும் மிகுந்த திட்டமிடலுடன் இயங்குகிறார். இசை மேடையிலேயே வியாபாரத்தை தொடங்கிவிட்டார். இதற்கு அவர் நண்பர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நாயகன் புதியவர் போல் இல்லாமல் அதிகமாக உழைத்திருக்கிறார். இத்திரைப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும்…” என்று வாழ்த்தினார்.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “இந்தப் படத்தின் இயக்குநர் வெங்கியை எனக்கு முப்பது வருடங்களாக தெரியும். அவர் அப்போதே ஜீனியஸ். எங்களுக்கே தெரியாத பல விசயங்கள் அவருக்கு தெரியும். இயக்குநர் தயாரிப்பாளருக்கு சண்டை வராத படங்கள் என்னைப் பொருத்தவரை விளங்காது.
நான் இயக்கிய ‘புலன் விசாரணை’ பட ரிலீஸின்போது அலுவலக ரோட்டிலேயே என்னை வரக் கூடாது என்றார் என் தயாரிப்பாளர். ஆனால் படத்தின் ரிலீஸுற்கு பின் என்னைக் கூப்பிட்டு பாராட்டினார். அதுபோல் இந்தப் படத்திலும் ஏதாவது மனத்தாங்கல் இருந்தால் படத்தின் ஹிட்டுக்கு பிறகு நீங்கள் இணைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நாயகனின் கண்கள் விஜயகாந்தைப் போல் உள்ளது. அவர்போல் இவரும் மிகப் பெரிய இடத்தை அடைவார். படக் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்…” என்றார்.
நடிகை அர்ச்சனா பேசும்போது, “இந்த உலகத்தில் முதலில் வந்தது கூத்துதான். ‘கூத்தன்’ நல்ல தலைப்பு. தயாரிப்பளரின் முயற்சியில் நிறைய நேர்மை இருக்கிறது. நல்ல முறையில் படக் குழுவினர் உழைத்துள்ளார்கள். பாக்யராஜ் இந்தப் படத்தில் இருப்பது மிகப் பெரிய பிளஸ். பெண்களுக்கு கண்கள் அழகாக இருப்பது மிகப் பெரிய பிளஸ். இந்தப் படத்தில் நாயகனின் கண்கள் வசீகரமாக இருக்கிறது. அவர் மிகப் பெரிய இடத்திற்கு செல்வார். உங்கள் தந்தை சினிமா உலகில் நிரந்தர இடத்தை பிடிக்கவே இப்படத்தை தயாரித்துள்ளார். அதை மனதில் வைத்து பயணியுங்கள். மிகப் பெரிய வெற்றியை அடைவீர்கள். அனைவரும் இந்தப் படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டும். அதுதான் சினிமாவிற்கு நாம் செய்யும் மரியாதை. இத்திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்…” என்றார்.
இசை அமைப்பாளர் பால்ஜீ பேசும்போது, “நான் திரைப்படக் கல்லூரியில் படித்த காலத்திலிருந்தே மேடையில் இருப்பவர்களை பார்த்து வியந்து பார்த்திருக்கிறேன். இவர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டது மிகப் பெரிய விசயம். இந்தப் படத்தில் எல்லோரும் ரசிக்கக் கூடிய துள்ளலான இசையை தந்திருக்கிறோம். படம் டான்ஸை மையமாகக் கொண்டது என்பதால் அதைச் சுற்றி இசை அமைத்திருக்கிறேன். எல்லோரும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்…” என்றார்.
பாடலாசிரியர் விவேகா பேசும்போது, “இப்படத்தின் இசையமைப்பாளர் எனது நெருங்கிய நண்பர். கன்னடத்தில் நிறைய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். நான் இப்படத்தில் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறேன். கதாநாயகன் அற்புதமாக நடனமாடியுள்ளார். அவர் மிகப் பெரிய இடத்தை அடைவார்.
தயாரிப்பாளர் அற்புதமான மனம் படைத்தவர். ஒரு பாடல் பதிவிற்காக ஒரு ரிசார்ட்டிற்கு சென்றிருந்தோம். அங்கே அவரது இன்ஸ்டிடுயூட்டில் படித்தவர்கள் அவரை வந்து பார்த்தனர். உடனே ஈன்ற பொழுதினும் பெரிதுவைப்பவர் போல் மகிழ்ந்து அவர்களுக்கு பரிசளித்து மகிழ்ந்தார். அந்தக் குணம் எனக்கு மிகவும் பிடித்தது. இப்படம் நிச்சயம் வெற்றி பெறும்..” என்றார்.
நடன இயக்குநர் அசோக்ராஜா பேசும்போது, “இந்தப் படத்தை சின்னப் படம் என்று சொல்லி அழைத்தார்கள். ஆனால் படத்தில் நிறைய செலவு இருந்தது. தயாரிப்பாளர் எல்லாவற்றையும் பிரம்மாண்டமாக செய்யலாம் என்று எங்களையெல்லாம் உற்சாகப்படுத்தினார். என் குரு டி.ராஜேந்தர் சார் இந்தப் படத்தில்ஒரு பாடலை பாடியிருக்கிறார். என் மானசீக குருவான பிரபுதேவா சார் அந்தப் பாடலை வெளியிட்டது என்னால் மறக்க முடியாதது…” என்றார்.
நடன இயக்குநரும், நடிகருமான நாகேந்திர பிரசாத் பேசும்போது, “இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சினிமா மேல் வைத்திருக்கும் அன்பு என்னை பிரமிக்க வைத்தது. படத்தில் அனைவருமே கடினமாக உழைத்திருக்கிறார்கள். படத்தின் நாயகன் அற்புதமாக நடனமாடியுள்ளார். எல்லோரும் படத்தை பார்த்து படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்…” என்றார்.
இறுதியில், விழாவிற்கு வந்திருந்த அனைவர் முன்னிலையிலும் இசை வெளியீடு கோலாகலமாக நடைபெற்றது.