கூலிப்படைகளின் கலாச்சாரம் பற்றிப் பேச வரும் ‘கூலிப்படை’ திரைப்படம்

கூலிப்படைகளின் கலாச்சாரம் பற்றிப் பேச வரும் ‘கூலிப்படை’ திரைப்படம்

பாரதி  கலைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஏ.ராம்தாஸ் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘கூலிப்படை.’

இதே நிறுவனம் ஏற்கெனவே ‘ராமநாதபுரம்’, ‘அலைபேசி’ ஆகிய படங்களை தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மதுரை டூ தேனீ (வழி ஆண்டிபட்டி)’, ‘பலம்’, ‘சூரத்தேங்காய்’ போன்ற படங்களில் நடித்த அரவிந்த் இப்படத்தின் நாயகனாகவும், ‘கத்தி’ படத்தில் விஜயின் தங்கையாக அறிமுகமாகி ‘இளமி’, ‘மனுஷனா நீ’, ‘இட்லி’, ‘அலைபேசி’ ஆகிய படங்களின் நாயகியான அனுகிருஷ்ணா இந்தப் படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.

‘கூலிப்படை’ படத்தின் ஒளிப்பதிவை எஸ்.மோகனும், இசையை ஜி.சாய்தர்ஷனும் கவனிக்கிறார்கள்.

இப்படத்தின் பூஜை சமீபத்தில் ஏவி.எம். ஸ்டூடியோவில் இனிதே நடைபெற்றது. ‘கூலிப்படை’ படத்தின் பூஜையை தமிழ் திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் அபிராமி ராமநாதன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.

முன்னாள் பெப்சி தலைவரும், திரைப்பட இயக்குநருமான வி.சி..குகநாதன் படத்தின் திரைக்கதையை இயக்குநர் முரளி பாரதியிடம் கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தமிழ் டிஜிட்டல் பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி. சேகரன், தயாரிப்பாளரும், நடிகருமான கே.ராஜன், முன்னாள் கில்டு தலைவர் ஜெ.வி.ருக்மாங்கதன், நடிகர்கள் சம்பத் ராம், அனு மோகன் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டு இத்திரைப்படத்தின் இயக்குநரையும், தயாரிப்பாளரையும் வாழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அபிராமி ராமநாதன், “இன்றைய காலக்கட்டத்தில் மற்றவர்களுக்கு கைக்கூலியாகி சீரழியும் இளைஞர்கள், பின்னர் கூலிப் படையாக மாறுவதை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.  இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இந்த சமுதாயத்துக்கும், நாட்டிற்கும் நல்ல குடிமகனாக இருக்க வேண்டும். இது போன்ற சின்னப் படங்களுக்கு மக்கள் அனைவரும் தங்களது ஆதரவை தர வேண்டும்…” என்று கேட்டுக் கொண்டார்.

இப்படத்தின் இயக்குநரான முரளி பாரதி பேசுகையில், “அரசியல்வாதிகளுக்கும், பணக்காரர்களுக்கும் கைக்கூலியாகி சீரழியும் இளைஞர்கள், பின்னர் கூலிப் படையாக மாறுவது வழக்கமாக உள்ளது. ஆனால் இந்த சமுதாயத்தில் உள்ள பல  குடும்பங்களை வாழவைப்பதற்காக இளைஞர்கள் எவ்வாறு கூலிப் படையாக மாறுகிறார்கள் என்பதைத்தான் இந்தப் படத்தில் சொல்ல இருக்கிறோம்..” என்றார்.

Our Score