வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘டிஎஸ்பி’ என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது அடுத்த படைப்பாக இந்தக் ‘கொம்பு சீவி’ படத்தை உருவாக்கி யிருக்கிறார்.
இந்தப் படத்தை ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் நாயகனாக நடித்துள்ளார். சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரும் ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
புதுமுகம் தார்னிகா நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் சுஜித் ஷங்கர், கல்கி, முனீஷ்காந்த், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் படத் தொகுப்பை கையாள, கலை இயக்கத்தை சரவண அபிராம் கவனிக்க, ஃபீனிக்ஸ் பிரபு மற்றும் சக்தி சரவணன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். ஸ்டில்ஸ்: சி.எச். பாலு; நடன இயக்கம்: ஷெரிப், அசார். பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன்.
இப்படத்திற்காக இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் பொன்ராம் முதல்முறையாக கை கோர்த்துள்ளார்.
தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி சுற்றி இருக்கும் கிராமங்களையும், அங்கும் இருக்கும் மக்களின் வாழ்க்கையையும் இப்படம் பேசுகிறது. இயக்குநர் பொன்ராமுக்கே உரிய நகைச்சுவையும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் நிரம்பி இருக்கும்.
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை 1959 ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.
அதை கட்ட வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது என்றால் கோடை காலங்களில் கேரளாவில் இருந்து வரும் பெரியார் அணையின் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு குமுளி, கம்பம் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கே சென்றது.
அதனுடைய கடை மடை நீர் என்று சொல்லப்படும் கடைசி சில கன அடி நீர்கள் மட்டுமே தேனியைத் தாண்டி விவசாயம் செய்து வரும் மக்களுக்கு கிடைத்தன.
அதே சமயம் மழைக் காலத்தில் வெள்ளம் பொங்கி வரும்போது வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சியதைவிடவும், மொத்த விவசாய நிலங்களையும் அழித்துவிட்டு தேனியையும் தாண்டி ஓடிப் போகிறது.
இதனால் மழைக் காலத்திலும் சரி கோடை காலத்தில் சரி தேனியைத் தாண்டி மதுரைவரை உள்ள மக்களுக்கு எந்த ஒரு நீர்ப்பாசன வழியும் இல்லாமல் போனது.
இதற்காகத்தான் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தேனி மாவட்டத்திற்கு என்று ஒரு அணையை கட்டினால் பெரியாற்றில் இருந்து வரும் நீரை சேமித்து வைத்து அதன் பின் விவசாய நிலங்களுக்கு தேவைப்படும்போது தண்ணீர் திறந்துவிட்டு அந்த பகுதியை வளமாக்கலாம் என்று நினைத்தார்.
அந்த திருமகனின் எண்ணப்படியே 1959-ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகே வைகை அணை கட்டப்பட்டது. இந்த அணை கட்டப்படும் பொழுது அணையின் பகுதிகளுக்காக அந்த பகுதியில் இருந்த ஒரு 12 விவசாய கிராமங்கள் அழிக்கப்பட்டன.
அந்த கிராமங்களில் வாழ்ந்து வந்த மக்களுக்கு அருகில் இருந்த பல்வேறு அரசு புறம்போக்கு நிலங்களும், வேறு கிராமங்களிலும் அந்த மக்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு தகுந்த நஷ்ட ஈடும் தரப்பட்டு, வீடு கட்டுவதற்காக ஒவ்வொருவருக்கு 5000 ரூபாயும் தரப்பட்டதாக அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அப்படி அந்த கிராம மக்களின் நிலத்தை அரசு எடுத்துக் கொண்டு, வைகை அணையை கட்டும் பொழுது பாதிக்கப்பட்ட ஒரு ஊரில் நடக்கும் கதைதான் இந்த ‘கொம்பு செவி’ திரைப்படம்.
தங்களுடைய சொந்த நிலத்தை அரசு எடுத்துக் கொண்டதால் வாழ்வாதாரத்திற்கு வேறு வழியில்லாத பாண்டியின் அப்பா தன்னுடைய கடனை அடைக்க முடியாமல் போன தற்கொலை செய்து கொள்கிறார்.
பாண்டிக்கு உறுதுணையாக இருந்த அவருடைய அம்மாவும் சில காலம் கழித்து இறந்து போகிறார். பாண்டி இப்போது பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தாலும் அவனுக்கு உணவிடவும், ஆறுதல் சொல்லவும் அவனுக்கு பாதுகாப்பாக இருக்கவும் அந்த ஊரில் வேறு யாரும் இல்லை.
அதே ஊரில் இருக்கும் பெரிய மனிதரான ரொக்கப்புலி என்ற சரத்குமார் பஞ்சாயத்து தலைவர் போல் வாழ்ந்து வருகிறார். ஆனால் இவரது உண்மையான தொழில் கஞ்சா வளர்த்து விற்பதுதான்.
கஞ்சா செடிகளை போலீஸுக்கு தெரியாமல் அருகில் உள்ள மலை பிரதேசத்தில் கஞ்சாவை வளர்த்து அதை கழுதைகள் வழியாக அடிவாரத்துக்கு கொண்டு வந்து அங்கிருந்து தேனி மூலமாக பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைப்பார்.
இதற்காக அவர் சம்பாதிக்கின்ற பணம்தான் அவரை அந்த ஊரின் பெரிய தலைக்கட்டுவாக காட்டி இருக்கிறது.
இந்த சரத்குமாரிடம் அம்மா, அப்பா இல்லாத அனாதையான பாண்டி வந்து சேருகிறான். பண்டிகை தன்னுடைய சொந்த மருமகனாக நினைத்து “மாப்பிள்ளை” என்ற பாசத்துடன் வளர்த்தெடுக்கிறார் ரொக்கப்புலி.
கூடவே தன்னுடைய கஞ்சா தொழிலும் அவனை இறக்கிவிட்டு அவருடைய அனுபவம் மற்றும் சாமர்த்தியம் மூலமாக கஞ்சாவை விற்று பெரும் லாபம் சம்பாதிக்கிறார்.
இந்த கஞ்சா வளர்ப்பு லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் வேலை செய்யும் அத்தனை பேருக்கும் தெரிந்தாலும் அவர்கள் கிடைக்கின்ற மாமூலை வாங்கிக் கொண்டு விட்டு விடுகிறார்கள்.
அவர்களை எதிர்க்கின்ற இன்ஸ்பெக்டர்கள் யார் வந்தாலும் கட்சிக்காரர்களிடம் சொல்லி அவர்கள் மூலமாக அந்த இன்ஸ்பெக்டரை இடமாற்றலும் செய்து விடுவார்கள். அந்த அளவுக்கு அதிகாரம் படைத்தவர்களாக இருக்கிறார்கள் மாமனும், மருமகனும்.
இந்த நேரத்தில்தான் இவர்களுக்கு ஆப்பு வைப்பதற்காகவே வந்து சேர்கிறார் லைலா என்ற பெண் இன்ஸ்பெக்டர். அவரைப் பார்த்தவுடன் பாண்டிக்கு காதல் உணர்வு வருகிறது.
காதலிப்பது போல் நடிக்க துவங்குகிறார் லைலா. அந்த லைலாவின் காதலை உண்மை என்று நம்புகிறான் பாண்டி.
இந்தக் காதலை வைத்து பாண்டியையும், ரொக்கப் புலியையும் ஆதாரத்துடன் கைது செய்கிறார் லைலா. தன்னுடைய மருமகனை போலீஸ் கஞ்சா பொட்டலங்களோடு படித்து விட்டதை அறிந்த ரொக்கப் புலி பெரும் கோபத்துடன் வந்து அந்த போலீஸ் ஸ்டேஷனை அடித்து துவம்சம் செய்து வருகிறார்.
போலீஸ் ஸ்டேஷனை அடித்து நொறுக்கி விட்டார்கள் என்ற கோபத்தில் வரும் போலீஸ் எஸ்.பி.யான சுஜித் சங்கர் பாண்டியையும் அவனது மாமா ரொக்கப் புள்ளியையும் வெடிகுண்டு கடத்தல் வழக்கில் சிக்க வைத்து கைது செய்கிறார்.
ஆனால் நீதிமன்ற வழக்கு விசாரணையில் இந்த வழக்கை பூ என்று ஊதி தள்ளும் ரொக்கப் புலி, தன்னுடைய மருமகன் பாண்டியையும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கிறார்.
ஆனால் இதை கௌரவ பிரச்சினையாக, ஈகோவாக பார்க்கும் எஸ்.பி. கரன் இவர்கள் இருவரையும் ஒழித்துக் கட்ட முயற்சி செய்கிறார்.
அவருடைய அந்த முயற்சி வெற்றி அடைந்ததா? இல்லையா? என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.
பாண்டியாக நடித்திருக்கும் ‘ஜூனியர் கேப்டன் விஜயகாந்த்’ சண்முக பாண்டியன் இயக்குநரின் சரியான வழிகாட்டுதலாலும் இயக்குநரின் இயக்கத் திறமையாலும் அழகாக நடித்திருக்கிறார்.
காதல் காட்சிகளில் தன்னால் முடிந்த அளவுக்கான ரொமான்ஸை காட்டியிருக்கிறார். இன்னொரு பக்கம் தன்னுடைய மாமன் சரத்குமார் உடன் அவர் பேசுகின்ற சில பேச்சுக்கள் காமெடியை வரவழைத்து இருக்கின்றன அதேபோல் சண்டை காட்சிகளிலும் துரிதமாக நடித்திருக்கிறார்.
‘ரொக்கப் புலி’ என்ற பெரிய மனிதனாக நடித்திருக்கும் சரத்குமார், கஞ்சா வியாபாரி என்கின்ற ஒரு பெயரை பெரிய தவறாகவே எடுத்துக் கொள்ளாமல் அது என்னுடைய சம்பாதிப்பின் ஒரு பெயர் என்கிறார்.
கூடவே தன்னுடைய மருமகன் பாண்டியையும் இந்தத் தொழிலில் இழுத்து கடைசிவரையில் இது தவறு என்ற குற்ற உணர்வே இல்லாத ஒரு பெரிய மனிதனாக வாழ்ந்திருக்கிறார்.
இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் இந்தப் படத்தில் ஆக்சன் நடிப்புடன் கொஞ்சம் காமெடியையும் சேர்த்து வழங்கி இருக்கிறார் சரத்குமார் ஆச்சரியமாக இருக்கிறது.
ஆனாலும் தியேட்டரில் ரசிகர்கள் பெரும் கை தட்டலுடன் அந்த காமெடியை ரசித்தார்கள் ரசிக்கிறார்கள். சித்தப்புவுக்கு நமது பாராட்டுக்கள்.
லைலாவாக நடித்திருக்கும் தரணிகா அறிமுக நடிகை. அந்த போலீஸ் டிரஸ் அவருடைய உடல் வாழ்வுக்கு கச்சிதமாக பொருந்தி இருந்தாலும் ஒரு பாடல் காட்சியில் மட்டும் சண்முக பாண்டியனுக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்திருக்கிறார்.
இறுதியில் இவரும் தன்னுடைய போலீஸ் புத்தியை காட்டும்போது “அட போம்மா” என்று நாமும் சேர்ந்து திட்ட வேண்டி இருக்கிறது.
எஸ்.பி.யாக நடித்திருக்கும் சுஜித் சங்கர் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை அட்டகாசமாக காட்டியிருக்கிறார்.
குந்துவாக நடித்திருக்கும் கல்கி ராஜா, லாரி டிரைவராக நடித்திருக்கும் முனீஸ் காந்த் காவலர்களாக நடித்திருக்கும் காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், கஞ்சாவை சவுத் இந்தியன் முழுவதும் வாங்கி விற்பனை செய்யும் பெரும் புள்ளியாக கொண்டோடியாக பிரபாகர், கஞ்சா தரகரான ராம்ஸ், ரொக்கப் புலியின் மனைவியாக நடித்திருக்கும் இந்துமதி என்று அத்தனை பேருமே இயக்குநரின் அருமையான இயக்கத்தினால் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
காடு, மேடு, மலை சார்ந்த பகுதிகள், கிராமம், போலீஸ் ஸ்டேஷன், தெலுங்கானாவின் ரேணுகொண்டா பகுதிகள் என்று அனைத்திலும் தன்னுடைய பங்களிப்பை நிறைவாக செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம்.
அதிலும் தேனியில் இருந்து ரேணுகுண்டா செல்லும் அந்த டிராவலிங்கை மிக அழகாக படம் பிடித்து காட்டி நம்மையும் கூடவே அழைத்துச் சென்று இருக்கிறார். அவர் நமது பாராட்டுக்கள்.
தேனியில் பூண்டு வியாபாரியாக நடித்திருக்கும் அந்த நடிகர், அடிக்கடி “அய்யோ அய்யோ”, “ஆஹா ஓஹோ” என்று சொல்லுகின்ற அந்தக் காட்சிகள் மிகப் பெரிய காமெடியை வரவழைத்து இருந்தன. அவருக்கும் நமது பாராட்டுக்கள்.
படத்திற்கு இசையமைத்திருக்கும் யுவன் சங்கர் ராஜா மிக நீண்ட நாட்கள் கழித்து ஒரு சஸ்பெஸ்ன்ஸ் படத்திற்கே உரித்தான பின்னணி இசையை அமைத்து கொடுத்திருக்கிறார். ஒரே ஒரு டூயட் பாடல்கூட ரசிக்கும்படியாக உள்ளது. ஆனால் அதை படமாக்கியவிதம் அதைவிட அழகு என்றே சொல்லலாம்.
சண்டைக் காட்சி இன்னமும் கொஞ்சம் வலுவானதாக இருந்திருக்க வேண்டும். இல்லாமல் போனது ஏன் என்று தெரியவில்லை.
படத்தை தொகுத்து வழங்கியவரும் சண்டை காட்சிகளை தவிர மற்ற காட்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி இருக்கிறார்.
படத்தின் துவக்கத்திலேயே இந்தப் படம் 1994-ம் ஆண்டு நடைபெறுவதாக காட்டி விட்டார்கள். அதோடு வைகை அணை கட்டும் பொழுது எத்தனை கிராமங்கள் அதில் அழிந்து போயின என்பதையும் படத்தில் சுட்டி காட்டி இருக்கிறார்கள்.
ஆனால் ஒரு கிராமம் அழிந்ததற்கும் அவருடைய விவசாய நிலங்கள் பறிபோன பின்பும் வேறு தொழிலுக்குப் போக முடியாமல் கஞ்சா வளர்ப்பு தொழில் இறங்கியதாக ரொக்கப் புலி சொல்வதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
போதை என்பது இந்த சமூகத்திற்கு மிகப் பெரிய சீர்கேடு என்கின்ற ஒரு உணர்வு ரொக்கப் புலிக்கு வரவில்லை என்பது ஆச்சரியம்தான். அவர் கிராமத்தில் இப்பொழுதும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் அந்த போதை மருந்து பயன்படுத்துவது எவ்வளவு கொடியது? அது எப்படி சமூகத்தை சீரழிக்கிறது? என்பதையும் இந்தப் படத்தில் யாராவது ஒரு கேரக்டர் மூலமாக இயக்குநர் சொல்லி இருக்க வேண்டும். அது சொல்லாதது ஏன் என்று தெரியவில்லை.
இது 1994-ல் நடந்த கதை என்று இயக்குநர் சொல்லி இருப்பது ஆச்சரியத்தை தருகிறது. ஏனெனில் தமிழகத்தில் அப்பொழுதுதான் ஜெயலலிதாவின் கொடூரமான ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அதிலும் காவல்துறையினருக்கு அளவுக்கதிகமான அதிகாரத்தை அவர் வழங்கியிருந்தார்.
அவர்களால் கொலை செய்யப்பட்ட அப்பாவிகள் எத்தனையோ பேர்… வாழ்க்கையை இழந்தவர்களும் எத்தனையோ பேர்… அந்தக் காலகட்டத்தில் ஒரு போலீஸ் ஸ்டேஷனையே அடித்து காலி செய்துவிட்டு ரொக்கப் புலியும், பாண்டியும் உயிரோடு இருந்தார்கள் என்பதெல்லாம் நம்மால் நம்ப முடியவில்லை.
எப்படி இருந்தாலும் இந்த படம் ஒரு கமர்சியலாக இரண்டு மணி நேரம் பொழுதைபோக்கும் வகையில் எடுத்திருக்கிறார்கள். இயக்குனர் பொன்ராம் தன்னுடைய அழுத்தமான இயக்கத்தினால் இந்தப் படத்தை கடைசிவரையிலும் நம்மை பார்க்க வைத்திருக்கிறார்.
நாம் முன்பே சொன்னது போல கஞ்சா போதையின் தீமைகளையும் இந்தப் படத்தில் கொஞ்சம் சொல்லியிருந்தால் நிச்சயமாக இந்தப் படத்துக்கு நாம் கிரேட் சல்யூட் கொடுத்திருக்கலாம்.
நடந்த கதை என்பதால் இந்தப் படத்தின் பல்வேறு லாஜிக் கோட்டைகளையும் பார்க்காமல் விட்டுவிட வேண்டி இருக்கிறது.
ஒரு கமர்சியல் என்டர்டெய்னராக இந்த படத்தை ஒரு முறையேனும் பார்க்கலாம்..!
RATING : 3.5 / 5








