மனித வாழ்க்கையில் உடலில் உயிர் இல்லை எனில் அதற்கு எந்த மரியாதையையும் இல்லை. இதனை கருவாகக் கொண்டு உருவாகியுள்ளது ‘கோம்பே’ என்ற திரைப்படம்.
தேனியில் வாழும் ஒரு இளைஞன், காசுக்காக எதையும் செய்யத் துணிபவன், அவனது வாழ்க்கையை சொல்கிற படம்தான் இந்த ‘கோம்பே’ திரைப்படம்.
காசுக்காக கொலைகூட செய்பவனின் வாழ்க்கையில் ஒரு பெண் நுழைகிறாள். அவன் வாழ்வில் வசந்தம் வீசுகிறது. அவள் அவன் வாழ்வை மாற்ற முயல்கிறாள். அதனால் ஏற்படும் பிரச்சனைகள்தான் இந்தப் படம்.
முழுக்க புதுமுகங்களால் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் ஹிரோவாக ‘சார்லஸ்’ என்பவரும், ஹிரோயினாக ‘தீர்த்தா’ என்னும் புதுமுகமும் நடித்திருக்கிறாரகள்.
கதை, ஒளிப்பதிவு, DI, படத் தொகுப்பு ஆகிய பணிகளுடன் இந்தப் படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார் ஹாபிஸ் இஸ்மாயில். மேலும் இப்படத்தில் வில்லனாகவும் நடித்து கலக்கியிருக்கிறார்.
இவர் மலையாளத்தில் ஏற்கனவே மூன்று படங்களை இயக்கியிருக்கிறார், மலையாள படைப்பாளியாக இருந்தாலும், தமிழ்த் திரை ரசிகர்கள் மேல் உள்ள நம்பிக்கையில் தமிழ் பட உலகில் நுழைந்துள்ளார்.
தமிழுக்கு புதிய இயக்குநரான இவர் தன் தெளிவான பார்வையுடன் மிகுந்த பொருட் செலவில் அனைவரும் வியக்கும் வகையில் இப்படத்தை இயக்கியுள்ளார்.
தேனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில்தான் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள். தமிழ் மொழி முழுதாய் தெரியாமலே தன் உதவி இயக்குநர்களின் உதவியால் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
புதுமுகம் அனூப் ராக்வெல், அபிஜித் ஜான்சன், டென்னிஸ் ஜோசப் ஆகிய மூவரும் இணைந்து இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள்.
தன் தம்பி ஹரிஸ் இஸ்மாயில் மற்றும் பினு ஆப்ரகாமுடன் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார் ஹாபிஸ் இஸ்மாயில்.
படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை நுங்கம்பாக்கம் எம்.எம். தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர். படப்பிடிப்பின்போது தான் தமிழ் மொழி தெரியாமல் தத்தளித்த கதைகளை சுவைபட பகிர்ந்து கொண்டார்.
“மிக உயிர்ப்பானதாகவும், உண்மையாகவும் படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. படத்தின் கதை நான்கே நாட்களில் நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. சிறிய பட்ஜெட் படம்… மிகுந்த உழைப்புடன் உருவாக்கியிருக்கிறோம். தமிழக ரசிகர்கள் எங்களது முயற்சிக்கு ஆதரவளித்து எங்களை வளர்த்துவிடுவார்கள் என்று நம்புகிறோம்…” என்றார் இயக்குநர்.
சரி.. இந்த ‘கோம்பே’ என்னும் வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கேட்டபோது, “தேங்காயில் இருந்து தேங்காயையும், நீரையும் எடுத்த பின் கீழே போடப்படும் கூட்டைத்தான் ‘கோம்பே…” என்பார்களாம். தமிழில் இல்லை மலையாளத்தில்..!