full screen background image

2014-ம் ஆண்டுக்கான கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் விருது அறிவிப்பு..!

2014-ம் ஆண்டுக்கான கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் விருது அறிவிப்பு..!

18-வது கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருது ‘Q’ என்ற இந்தி திரைப்படத்தினை இயக்கிய அறிமுக இயக்குநர் சஞ்சீவ் குப்தாவுக்கு வழங்கப்படவுள்ளது.

1992-ம் ஆண்டில்  நடந்த  ஒரு விபத்தில் உயிர் நீத்த இளம் திரைப்பட இயக்குநர் கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ். இவரது நினைவாக, 1998-ம் ஆண்டில் இருந்து வருடா வருடம் இந்திய அளவில் சிறந்த அறிமுக இயக்குநருக்கு இவருடைய பெயரிலேயே ஒரு விருது வழங்கப்பட்டு வருகிறது.  இந்த விருதுக்கான அறிவிப்பு ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 17-ம் தேதி அறிவிக்கப்படும். ஆகஸ்ட்  மாதம் 12-ம் தேதி விருதுகள் வழங்கப்படும்.

இந்த விருது தேசிய அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது.  பரிசு கேடயத்துடன், ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் பண முடிப்பும் இந்த விருதுக்காக வழங்கப்படுகிறது. இந்திய திரை உலகின் முன்னோடிகள் பலரும் முந்தைய வருடங்களில் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

முதல் படம்  இயக்கும்  இயக்குநர்கள் பல்வேறு சோதனைகளை கடந்து, தங்களது சிந்தனையை திரை வடிவத்தில் கொண்டு வர பெரிதும் போராடுகின்றனர். இந்த காலக் கட்டத்தில் இவர்களது குடும்பங்களும், இவர்களோடு சேர்ந்து கண்களில் கனவு சுமந்து எதிர்காலத்தின் ஒளியை எதிர்நோக்கி உள்ளனர். அந்த இளம் இயக்குநர்களுக்கு இந்த விருது ஊக்கமும், ஆக்கமும் தருவதோடு.. அவர்களுக்கு தேசிய அளவில் ஒரு அங்கீகாரத்தையும் கொடுக்கும்.

இந்த விருது விழா, வெறும் சம்பிரதாயதமான விழாவோ..  நட்சத்திரங்கள் ஜொலிக்கும் கேளிக்கை விழாவோ அல்ல.. அதையும் தாண்டி திரையுலகின் நுணுக்கங்களை ஆராய்ந்து, மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் ஒரு பாடமாக அமைய, ஒவ்வொரு வருடமும் திரையுலகில் இருந்தே சிறப்பு பேச்சாளர் ஒருவர் அழைக்கப்படுவார்.

தேசிய அளவில் பிரசித்தி பெற்ற சிறப்பு அழைப்பாளர்கள் பலரும் முந்தைய விழாக்களில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியிருக்கிறார்கள். இந்த சிறப்பு உரைகள் அனைத்தும் இப்போது புத்தக வடிவமாக வெளிவர உள்ளது.

இந்த ஆண்டும் விருதுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 17-ம் தேதி வெளியானது. விருதுக்காக  ஹிந்தி, மலையாளம், மராத்தி, பெங்காலி, தெலுங்கு, கன்னடம்  உள்ளிட்ட  பல்வேறு மொழிகளை சேர்ந்த படங்களும் போட்டியிட வந்திருந்தன.

சிறந்த இயக்குநரை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுவும் வருடா வருடம் அமைக்கப்படும். இந்த வருடத்திய தேர்வுக் குழுவில் பழம் பெரும் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீநிவாசராவ், இயக்குநர்  வசந்த், தேசிய விருது  பெற்ற  நடிகை ரோகிணி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் மூவரும் இணைந்து ஒருமித்தக் குரலில் தேர்வு செய்த படம்தான் ‘Q’ என்ற இந்தித் திரைப்படம்.

இந்த கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் விருது வழங்கும் விழா வரும் ஆகஸ்ட் 12-ம்  தேதி,  சென்னை ஆழ்வார்பேட்டை மியூஸிக் அகாடமி அரங்கத்தில் நடை பெறவுள்ளது.

இந்த வருடம் இந்த விழாவை சிறப்பிக்க உள்ளவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இவருடன் பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குனர் ஃபாராகான், மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரும்  இந்த  விழாவை சிறப்பிக்க உள்ளனர். நடிகர் சித்தார்த் ‘My tryst with debutante directors’  என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவுள்ளார். 

இந்த விழாவின் ஹைலைட்டாக நடிகை சுஹாசினி மணிரத்தினத்தின்  ‘அந்தரம்’ நாட்டிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

Our Score