கோலமாவு கோகிலா – சினிமா விமர்சனம்

கோலமாவு கோகிலா – சினிமா விமர்சனம்

இத்திரைப்படத்தை லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் சரண்யா பொன்வண்ணன், ஜாக்குலின், ஆர்.எஸ்.சிவாஜி, யோகிபாபு, ஆனந்த், அன்புதாசன், மொட்டை ராஜேந்திரன், சரவணன், சீனு மோகன், நிஷா, ரெடின், தீப்பெட்டி கணேசன், சார்லஸ் வினோத், பில்லி முரளி, கலையரசன், ராஜதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – நெல்சன், ஒளிப்பதிவு – சிவக்குமார் விஜயன், இசை – அனிருத், படத் தொகுப்பு – நிர்மல், கலை இயக்கம் – அமரன், சண்டை பயிற்சி – மகேஷ், பாடல்கள் – விவேக், விக்னேஷ் சிவன், அருண்ராஜா காமராஜ், சிவகார்த்திகேயன்.

லேடி சூப்பர்ஸ்டார் என்று புகழப்படும் நயன்தாரா தானே கதை கேட்டு, இயக்குநரை தேர்வு செய்து தானே தயாரிப்பாளரையும் பிடித்துக் கொடுத்து படத்திற்கு எல்லாமுமாக இருந்து இந்தப் படத்தை வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

தன்னுடைய லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள சமீப காலமாக தனக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக பார்த்து நடித்து வருகிறார் நயன்தாரா. அந்த வரிசையில் இத்திரைப்படமும் அவருக்கு பெயர் சொல்லும் படமாகவே அமைந்திருக்கிறது.

ஆனால் படத்தின் கதை ஹாலிவுட்டில் இருந்து சுட்டக் கதையாக இருப்பது நெருடலைத் தருகிறது. 2013-ம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படமான ‘We Are The Millers’ என்ற படத்தின் கதையைச் சுட்டுத்தான் இத்திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். ஒரிஜினல் படத்தில் ஆண்தான் பிரதானம். இங்கே பெண்ணை பிரதானப்படுத்தி மாற்றியமைத்திருக்கிறார்கள். இதை முறைப்படி சொல்லிவிட்டு செய்திருக்கலாமே..? இதிலென்ன திருட்டுத்தனம் வேண்டிக் கிடக்கு..!?

நயன்தாரா என்னும் ‘கோகிலா’ ஒரு ஜெனரல் ஷோ ரூம் கடையில் வேலை செய்கிறார். இவருடைய தங்கை பள்ளியில் படிக்கும் ஷோபி என்னும் ஜாக்குலின். அப்பாவான ஆர்.எஸ்.சிவாஜி ஏ.டி.எம். செண்டரில் வாட்ச்மேன்.  ஆனால் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அம்மா சரண்யா பொன்வண்ணன் அப்படியே நேரெதிர். “இப்படியே இருந்தால் ரெண்டு பொண்ணுகளையும் எப்படி கரை சேர்க்குறது..”  என்று புலம்பும் பார்ட்டி..!

தான் வேலை பார்க்கும் கடையில் இன்கிரிமெண்ட் கேட்கும் நயன்ஸிடம் தனக்கு ஒரு நாள் கம்பெனி கொடுத்தால் அள்ளிக் கொடுப்பதாகச் சொல்லி அழைக்கிறார் மேனேஜர். நயன்ஸ் இதற்கு மறுக்க.. அவரது வேலை பறி போகிறது. அடுத்து ஒரு மசாஜ் கிளப்பில் மேனேஜராக வேலைக்கு சேர்கிறார் நயன்ஸ்.

இந்த நேரத்தில் சரண்யாவுக்கு நுரையீரல் புற்று நோய் என்பது தெரிய வருகிறது. இதற்கான மருத்துவச் செலவுக்கு 30 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்கிறார் மருத்துவர். குடும்பம் திகிலாகிறது. எப்படி 30 லட்சத்தை திரட்டுவது என்று யோசிக்கிறார் நயன்ஸ். கேட்ட இடத்திலெல்லாம் அல்வாவே கிடைக்கிறது.

திடீரென்று வட்டிக் கடைக்கு வந்த இடத்தில் எதிர்பாராமல் போதை மருந்து கடத்தல் கும்பலைச் சேர்ந்தவன் போலீஸில் பிடிபட காரணமாகிறார்கள் நயன்ஸும், அவரது தங்கையும்.

இதனால் கோபமடையும் போதை கடத்தல் கும்பலின் ஆள் நயன்ஸின் தங்கையான ஜாக்குலினை பிணைக் கைதியாகப் பிடித்து வைத்துக் கொண்டு நயன்ஸிடம் அந்த போதை பொருளை வைத்த இடத்தில் இருந்து எடுத்து வரும்படி சொல்கிறார். தங்கைக்காக அந்த வேலையைக் கச்சிதமாகச் செய்கிறார் நயன்ஸ்.

இன்னொரு பக்கம் அம்மாவின் மருத்துவச் செலவுக்கான பணத்தை உழைத்து சேமிக்கவே முடியாது என்பதை உணரும் நயன்ஸ் திரும்பவும் அதே போதை மருந்து கடத்தல் கும்பலிடம் வந்து செய்த வேலைக்குக் கூலி கேட்கிறார்.

கும்பலின் லோக்கல் தலைவரான சார்லஸ் வினோத், நயன்ஸை பார்த்துவிட்டு அவரது தைரியத்தை புகழ்ந்துவிட்டு 25000 ரூபாய் கொடுக்கிறார். நயன்ஸ் உடனே அவரிடம் ஏதாவது வேலை போட்டுக் கொடுக்கும்படி கேட்கிறார்.

இதுநாள்வரையிலும் போதை மருந்து கடத்தல் தொழிலில் ஆண்கள்தான் ஓடியாடி வருகிறார்கள். இந்தப் பெண்ணையே இறக்கினால் என்ன என்று யோசிக்கும் சார்லஸ், நயன்ஸை தன் கூட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார்.

இன்னொரு பக்கம் நயன்ஸின் வீட்டுக்கு எதிரில் மளிகைக் கடை வைத்திருக்கும் யோகிபாபு நயன்ஸை சின்சியராக ஒருதலையாக காதலித்து வருகிறார். அதேபோல் அவரது தங்கையான ஜாக்குலினை, ஆனந்த் என்னும் லொட லொட பையனும் காதலிக்கிறான். இருவரும் கூட்டணி சேர்ந்து அக்காவையம், தங்கையையும் சைட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் போலீஸ் மூலம் நெருக்கடிகள் அதிகமானதால் நயன்ஸ் இந்தக் கடத்தல் தொழிலில் இருந்து விலகுவதாக சொல்கிறார். சார்லஸ் முதலில் இதற்கு ஒத்துக் கொண்டாலும் போகும்போது தன்னுடன் ஒரு முறை உறவு கொள்ள வேண்டும் என்று அழைக்க.. அவரை அடித்துப் போட்டு படுக்கையோடு படுக்கையாக்குகிறார் நயன்ஸ்.

இதனால் வெகுண்டெழும் மும்பையில் இருக்கும் ஒரிஜினல் தாதாவா ஹரீஷ் பெராடி நயன்ஸை போனில் மிரட்டுகிறார். அவரது குடும்பத்தையே கொலை செய்துவிடுவதாக மிரட்டி நயன்ஸை கடத்தல் தொழிலைத் தொடரச் செய்கிறார்.

அப்போது ஒரு பீரோ நிறைய ஒரு கிலோ கோகெயின் போதை மருந்தை பாக்கெட், பாக்கெட்டாக பிரித்து நயன்ஸின் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார் ஹரீஷ். இதனை பல இடங்களுக்கும் கொண்டு சென்று பிரித்துக் கொடுக்கும்படி ஹரீஷ், நயன்ஸூக்கு உத்தரவிடுகிறார்.

நயன்ஸ் இதனை தனது குடும்பத்துடன் சேர்ந்து பிளான் செய்து சப்ளை செய்ய முடிவெடுக்கிறார். ஆனால் இடையில் நுழையும் யோகிபாபுவும், ஆனந்தும் இந்தக் கூட்டணியில் வலிய வந்து சேர்ந்து கொள்கிறார்கள்.

சொன்னபடி கோகெயினை சப்ளை செய்து முடித்தார்களா இல்லையா.. நயன்ஸின் குடும்பத்தினர் தப்பித்தார்களா.. இல்லையா… என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் மெயினான பிரச்சினையே நயன்ஸின் அம்மாவுக்கு வந்திருக்கும் கேன்சர்தான். அது 2-வது ஸ்டேஜில்தான் இருக்கிறது. தனியார் மருத்துவமனையில் 30 லட்சம் என்று கொள்ளையடிக்கும்போது அங்கே ஏன் போக வேண்டும்..? அரசு மருத்துவமனைகளில் இப்போது தரமான சிகிச்சை தரப்படுகிறதே..? அங்கேயே போகலாமே..? எதற்கு பணத்திற்காக இப்படி அலைய வேண்டும்..? இது  இந்தப் படத்தின் கதையின் அடித்தளத்தை ஆட்டம் காண வைக்கும் லாஜிக் மிஸ்டேக்.

இரண்டு, படம் நெடுகிலும் போதை மருந்தை கடத்துகிறார்கள். ஆனால் இந்தக் கடத்தல் தொழில் தவறு என்றோ.. இதைச் செய்வது சமூகக் குற்றம் என்றோ கிஞ்சித்தும் ஒரு வார்த்தையைக்கூட இயக்குநர் முன் வைக்கவில்லை. மாறாக, எப்படியாவது காசு சம்பாதிப்பதற்காக குடும்பம் மொத்தமுமே இணைந்து போதை மருந்தை சப்ளை செய்கிறது என்று திரைக்கதை அமைத்திருப்பது ஆபத்தானதாக உள்ளது.

ஆனாலும் படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் இறுக்கமான இயக்கத்தினால்தான் படத்தைக் கடைசிவரையிலும் இமை கொட்டாமல் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் நெல்சன். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இடையிடையே நகைச்சுவைகள் தெறித்தாலும் படம் முழுக்க, முழுக்க நகைச்சுவை படமல்ல.. அந்த டோன் யோகிபாபு காட்சிகளில் மட்டுமே தெரிகிறது..!

நயன்தாரா குனிந்த தலையும், மென்மையான பேச்சும், பாவமான பார்வையும், அலைபாயும் கண்களும், பாவாடையும், சட்டையுமாக படம் முழுவதும் வலம் வந்திருக்கிறார். ஆனால் இவரது கேரக்டர் ஸ்கெட்ச் கடைசிவரையிலும் உண்மையாக சொல்லப்படவில்லை.

நயன்ஸ் கல்லுளிமங்கையா.. அல்லது திட்டமிட்டுத்தான் இதையெல்லாம் செய்கிறாரா.. அல்லது நிறைய விஷயம் தெரிந்தவரா.. பணம் சம்பாதிக்கும் திறன் கொண்டவரா என்பதையெல்லாம் சொல்லாமல்.. அவரது அவ்வப்போதைய பேச்சுக்களின் மூலம் திரைக்கதையை நகர்த்திக் கொண்டே போகிறார் இயக்குநர். இதனால் நயன்ஸின் கேரக்டர் மீதான ஈர்ப்பு அதிகமில்லை. ஆனால் படத்தின் திரைக்கதை வேகம்தான் படத்தை கடைசிவரையிலும் பார்க்க வைக்கிறது.

யோகிபாபு வழக்கம்போல டைமிங் காமெடியில் ஜொலிக்கிறார். அவரும் கடை பையனும் பேசுகின்ற காட்சிகளெல்லாம் கலகல.. அதேபோல் வேனுக்குள் இவரும், ஆனந்தும் செய்யும் சேட்டைகள்தான் கொஞ்சம் சிரிப்பலையை தியேட்டர்களில் கொடுத்திருக்கின்றன.

மேலும் ஆனந்தின் கேரக்டர் ஸ்கெட்ச் ரசிக்கத்தக்கது. வீட்டுக்கு பெண் கேட்டு வந்திருக்கும்போது நடக்கும் சம்பவங்கள் மிக சுவாரஸ்யம். இதேபோல் கடத்தல் கும்பலின் சின்னத் தலைவனான கலையரசனின் மச்சானான ரெடின் செய்யும் அதிகப்பிரசங்கத்தனமான சேஷ்டைகளும், வசனங்களும் கலகலப்பை கூட்டுகின்றன.

வழக்கம்போல சரண்யா பொன்வண்ணன் அம்மா கேரக்டருக்கு தன்னை அடித்துக் கொள்ள ஆளில்லை என்பதை அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறார். வேனுக்குள் நோய்வாய்ப்பட்டவரை போல நடிப்பதும், அவ்வப்போது எழுந்து அமர்வதுமாய் வேகமான இவரது நடிப்பும் காமெடிதான்.

“அப்பனுக்கு பணம் சம்பாதித்துக் கொடுக்க வக்கில்லைன்னுதானே இதெல்லாம் நீ பண்ற..?” என்று முடியாத அப்பனாய் கேள்வி கேட்டு உருக வைத்திருக்கிறார் அப்பாவாக நடித்திருக்கும் ஆர்.எஸ்.சிவாஜி.

ஸ்பைனல் கார்டில் அடிபட்டு தலையைத் திருப்ப முடியாமல் தவித்தபடியே நடித்திருக்கும் சார்லஸ் வினோத்திற்கு இது நிச்சயம் பெயர் சொல்லும் திரைப்படம். இதேபோல் ஹரீஷ் பெரடியும் கொஞ்சம் மிரட்டியிருக்கிறார். மொட்டை ராஜேந்திரன் தன் பங்குக்கு கொஞ்சம் கத்திவிட்டுப் போகிறார்.

எதுவுமே செய்யாத இன்ஸ்பெக்டராக காட்சியளித்து கடைசியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஜெயிக்கும் இன்ஸ்பெக்டர் சரவணனை நயன்ஸ் அண்ட் கோ-மடக்கும் கடைசி காட்சியில் உண்மையாகவே திரைக்கதை அமர்க்களம். சரவணனின் மனைவியை வைத்தே அவரை மடக்கிப் போடுவது சிம்ப்ளி சூப்பர்ப்..

 விஜயனின் ஒளிப்பதிவு குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருக்கிறது. பாடல் காட்சிகளில் வெகுவான காதல் காட்சிகள் இல்லையென்பதாலும், சோகத்தைத் தாங்கிக் கொள்ளும் காட்சிகளே இருப்பதாலும் படத்தின் தன்மை கெடாத அளவுக்கு ஒளிப்பதிவை செய்திருக்கிறார் விஜயன். அதிலும் நயன்ஸின் அழகை இன்னும் அழகாக்கிக் காட்டியிருக்கிறார். இதற்கே ஒரு ஸ்பெஷல் பாராட்டுக்கள்..!

அடுத்துக் கண்டிப்பாக பாராட்டைப் பெறுபவர் கலை இயக்குநர்தான். போதை மருந்து கடத்தல் கும்பலின் இடத்தை மயிலாப்பூர் கற்பகாம்பாள் மெஸ் என்னும் கட்டிடத்திற்குள் வைத்துக் காட்டியிருப்பதுகூட ஒரு குறியீடுதான். ஆனால் அந்த உள் கட்டமைப்பு கவர்ந்திழுக்கிறது.

இதேபோல் நயன்ஸின் வீடும்கூட அந்த எளிய மிடில் கிளாஸ் குடும்பத்தினரின் வீடாக நம்பக்கூடிய வகையில் அமைத்திருக்கிறார்கள். இவர்கள் கடத்தல் தொழிலுக்குப் பயணிக்கும் பழைய காலத்து வேனும் ஒரு வித்தியாசம்தான்.

எத்தனையோ படங்களில் அய்யர்களை டீஸண்ட்டான திருடர்களாகவும், கோட்டு சூட்டு கொள்ளைக்காரர்களாகவும் காட்டியிருந்தார்கள். இந்தப் படத்தில் இன்னும் ஒரு படி மேலே போய் கூட்டிக் கொடுக்கும் மாமாவாகவும் காட்டியிருக்கிறார் இயக்குநர். அவர்கள் மீது இயக்குநருக்கு என்ன கோபமோ தெரியவில்லை.

இசை அனிருத்தாம். அவரது ரசிகர்களுக்கு மட்டுமே புரியும்வகையில் இசையமைத்திருக்கிறார். புரிந்தவர்கள் பாக்கியவான்கள்..! நல்லவேளையாக பின்னணி இசையை யார் செய்தது என்று தெரியவில்லை. அதை மட்டுமாச்சும் நல்லபடியாக முடித்துக் கொடுத்திருக்கிறார்கள். நன்றிகள்..!

ஒட்டு மொத்தமாய் இத்திரைப்படம் போதை மருந்தை எப்படியெல்லாம் கடத்துகிறார்கள்.. எப்படி கடத்த வேண்டும்.. ஏன் கடத்த வேண்டும்.. அத்தொழிலில் ஜெயிப்பது எப்படி என்பதையெல்லாமா டீடெயிலாக சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதே நேரம் நயன்ஸின் நடிப்புக்கும், இத்திரைப்படம் ஒரு பெரிய பாராட்டை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

படம் முழுவதும் உட்கார வைக்கும் அளவுக்கான வேகமான திரைக்கதை, திரில்லர் கலந்த காட்சிகள், அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பு.. இறுக்கமான இயக்கம்.. இது எல்லாமுமாக சேர்ந்து படத்தை நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம் என்று சொல்ல வைக்கிறது..!

எல்லாவற்றையும் நல்லபடியாக செய்து கொடுத்திருந்தாலும், இந்தக் கதையின் உண்மையான உரிமையாளர்களான Bob Fisher, Steve Faber, Sean Anders, John Morris ஆகியோருக்கு அவர்களுக்கான கிரெடிட்டை டைட்டில் கார்டில் கொடுத்திருந்தால் நேர்மையான செயலாக இருந்திருக்கும்..!

Our Score