full screen background image

‘கொலைகாரன்’ – சினிமா விமர்சனம்

‘கொலைகாரன்’ – சினிமா விமர்சனம்

தியா மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாகவும், ஆஷிமா நர்வல் நாயகியாகவும் நடித்துள்ளனர். ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் அர்ஜூன் நடித்துள்ளார். மேலும் சீதா, நாசர், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – ஆண்ட்ரூ லூயிஸ், தயாரிப்பு நிறுவனம் – தியா மூவிஸ், தயாரிப்பாளர் பி.பிரதீப், ஒளிப்பதிவு – மியூக்ஸ், படத் தொகுப்பு – ரிச்சர்டு கெவின், கலை இயக்கம் – வினோத் ராஜ்குமார், மக்கள் தொடர்பு – நிகில், புகைப்படம் – ஆர்.எஸ்.ராஜா, நடன இயக்கம் – பிருந்தா, உடை வடிவமைப்பு – ஹினா, டப்பிங் பொறியாளர் – சந்திரசேகர், ஒலி வடிவமைப்பு – கே.சக்திவேல், விளம்பர வடிவமைப்பு – ஓ.கே.விஜய், தயாரிப்பு நிர்வாகி – ஜி.ஏ.ஹரிகிருஷ்ணன், டிஸைன்ஸ் – Gibsonuga, கிராபிக் டிஸைன்ஸ் – Hues media design. நிர்வாகத் தயாரிப்பாளர் – சாண்ட்ரா ஜான்ஸன், தயாரிப்பு மேற்பார்வை – ஆர்.ஜனார்த்தனன், இணை தயாரிப்பு – சுந்தரகாமராஜ்.

இந்தப் படத்தை பாப்டா மீடியா வொர்க்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் வெளியிட்டுள்ளார்.

‘ராட்சசன்’, ‘தடம்’ வரிசையில் அடுத்து வந்திருக்கும் கம்ப்ளீட் கிரைம், திரில்லர் டைப் திரைப்படம் இது.

சென்னை வியாசர்பாடியில் இருக்கும் ஒரு மைதானத்தின் ஓரத்தில் பாதி எரிந்தும், எரியாமலும் ஒரு ஆணின் உடல் இருப்பதாக போலீஸுக்குத் தகவல் தெரிய வருகிறது. போலீஸ் துணை கமிஷனரான அர்ஜூன் இந்த வழக்கை விசாரிக்கிறார்.

எரிக்கப்பட்ட அந்த ஆணின் முகம் கருகிப் போயிருக்க முகம் அடையாளம் காண முடியவில்லை. ஆனால் அவர் அணிந்திருந்த பேண்ட்டில் இருந்த அடையாளத்தை வைத்து அவர் வெளி மாநிலத்துக்காரர் என்பதை அறிகிறார் அர்ஜூன். லோக்கல் போலீஸ் கொடுக்கும் ஒரு துப்பினால் எரிக்கப்பட்ட அந்த ஆளின் பெயர் வம்சி என்று தெரிய வருகிறது.

இவர் ஆந்திராவில் முன்னாள் அமைச்சரின் சொந்தத் தம்பி என்றும், அவரது கேரக்டர் சரியில்லை என்பதும் தெரிய வர.. சென்னைக்கு அவர் எதற்காக வந்தார் என்று விசாரிக்கத் துவங்குகிறார் அர்ஜூன்.

வம்சியை முன்பே தெரிந்தவர்கள் நாயகி ஆஷிமாவும், அவரது அம்மாவான சீதாவும் என்பது அடுத்துத் தெரிய வருகிறது. இருவரும் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்து குடியேறியிருக்கிறார்கள் என்பதையறிந்து அவர்களைக் கண்டு பிடித்து விசாரிக்கிறார் அர்ஜூன். கூடவே இவர்களது வீட்டுக்கு எதிர் வீட்டில் வசிக்கும் விஜய் ஆண்டனியையும் விசாரிக்கிறார்.

விஜய் ஆண்டனி தான் ஒரு சிவில் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தில் பணியாற்றுவதாகச் சொல்கிறார். இந்தக் கொலை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்கிறார்.  ஆனால் விசாரணை இவர்கள் மூவரைத் தவிர வேறு பக்கம் நகராத நிலையில் அர்ஜூன் இந்தக் கேஸை உடைக்க மெனக்கெடுகிறார்.

சீதாவும், நாயகியும்தான் இந்தக் கொலையைச் செய்திருக்க வேண்டும். இவர்களுக்கு விஜய் ஆண்டனி உதவி செய்திருக்கலாம் என்கிற கோணத்தில் அர்ஜூன் நினைக்கிறார். ஆனால் ஆதாரம் கிடைக்காமல் அல்லல்படுகிறார். ஓய்வு பெற்ற போலீஸ் உயரதிகாரியான நாசர் இந்தக் கேஸில் அர்ஜூனுக்கு உதவி செய்கிறார்.

கடைசியாக விஜய் ஆண்டனி பற்றிய ஒரு ரகசியம் அர்ஜூனுக்குத் தெரிய வர.. அதை வைத்து விஜய் ஆண்டனியை நெருங்குகிறார் அர்ஜூன். இந்த நேரத்தில் விஜய் ஆண்டனி தானே போலீஸில் வந்து சரண்டராகி தான்தான் அந்தக் கொலையைச் செய்ததாகச் சொல்கிறார்.

இந்தத் திடுக்கிடும் திருப்பம் ஏன்.. எதனால்.. எப்படி.. என்பதுதான் இந்தத் திரில்லர் படத்தின் திரைக்கதை.

ஜப்பானிய எழுத்தளரான ‘கெய்கோ ஹிகஷினோ’ எழுதி 2005-ம் ஆண்டு வெளியான நாவல் ‘The Devotion of Suspect X’. த்ரில்லர் வகையில் எழுதப்பட்டிருந்த இந்த நாவல் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பெரும் பாராட்டுக்களைப் பெற்றது.

இந்த நாவலின் கதை, 2008-ம் ஆண்டு ‘Suspect X’ என்ற பெயரில் ஜப்பானிய திரைப்படமாகவும் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. இதற்குப் பின்பு இத்திரைப்படம் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. கொரிய மொழியில் ‘Perfect Time’ என்கிற பெயரில் உருவாக்கப்பட்டது. மலையாள ‘த்ரிஷ்யம்’ படத்தின் மூலக் கதை இந்த, ‘Suspect X’ படம்தான்.

இப்போது இந்த ‘Suspect X’ படத்தைதான் இப்போது அதிகாரபூர்வமான முறையில் உரிமம் பெற்று இந்தக் ‘கொலைகாரன்’ திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் டைப் படங்களுக்கே உரித்தான லட்சணங்களை உள்ளடக்கி, கடைசிவரையிலும் அந்த சஸ்பென்ஸை கொண்டு சென்று கிளைமாக்ஸில் ‘அடடா’ என்றும் சொல்ல வைத்திருக்கிறார்கள்.

மூலக் கதையில் இருந்து தமிழுக்காக சிறிதளவு கதையை மாற்றியிருப்பது பாராட்ட வேண்டிய விஷயம். தமிழில் கணித பேராசிரியர் என்றோ, ஈக்குவேஷன்களை போட்டுக் காண்பித்துக் கொண்டே இருந்தாலோ ஈயோட்ட வேண்டியதுதான். அதற்காகவே அதையெல்லாம் தவிர்த்துவிட்டு படத்தை நமக்காக மாற்றிக் கொடுத்திருக்கும் இயக்குநரை வெகுவாகப் பாராட்டுகிறோம்.

படத்தில் கேரக்டர்களுக்கு வைத்திருக்கும் பெயர்கள்கூட கொஞ்சம் அரசியலைக் கொடுக்கிறது. கொலைகாரன் என்று சந்தேகிக்கப்படும் விஜய் ஆண்டனியின் பெயர் ‘பிரபாகரன்’. இவர்தான் கொலையாளி என்று தெரிந்தாலும் ஆதாரம் இல்லாமல் தவியாய் தவிக்கும் உயர் போலீஸ் அதிகாரியான அர்ஜூனின் கேரக்டர் பெயர் ‘கார்த்திகேயன்’. இவர்களின் பெயர் பொருத்தத்தை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

விஜய் ஆண்டனியின் இயல்பான தோற்றத்திற்குப் பொருத்தமான கேரக்டர். ஆனால் இவரைவிடவும் வேறு யாராவது நடித்திருந்தால் படம் இதைவிடவும் இன்னும் அதிகமாகப் பேசப்பட்டிருக்கும் என்பதும் உண்மை.

கிளைமாக்ஸில் தனது சொந்தக் கதை, சோகக் கதையை விஜய் ஆண்டனி சொல்லும்போதுதான் அவருக்கு நடிப்புக்கான ஸ்கோப்பே கிடைத்திருக்கிறது. தன் மீது பரிதாப உணர்வு வரும் அளவுக்கு அக்காட்சியில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. அதுவரையிலும் நடக்கிறார். அமர்கிறார். பேசுகிறார் கதைதான்.

நாயகியான ஆஷிமா நார்வலுக்கும் மிகப் பெரிய ஸ்கோப் இல்லை. ஆனாலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடித்திருக்கிறார். அவரது அம்மாவாக நடித்திருக்கும் சீதாவும் தனது அனுபவ நடிப்பால் திரைக்கதைக்கு மிகவும் உதவியிருக்கிறார்.

துணை கமிஷனராக நடித்திருக்கும் அர்ஜூன்தான் படத்தில் பேசப்பட்டிருக்கும் பிரதான கேரக்டர். ஒரு உயர் போலீஸ் அதிகாரி எப்படியிருப்பாரோ என்பதற்கு உதாரணமாக இவரது கேரக்டர் ஸ்கெட்ச் அமைந்திருக்கிறது.

கம்பீரத் தோற்றத்துடனும், அலட்டல் இல்லாத ஆபீஸராகவும்,  விசாரணையை என்னென்ன கோணத்தில் அணுக வேண்டும் என்று நினைக்கும் ஆவல் கொண்ட அதிகாரியாகவும், தனது உடல் மொழியைப் பயன்படுத்தி எதிராளியை சற்று பயங்கொள்ள வைக்கும் திறன் உடையவராகவும் இப்படத்தில் தனது நடிப்பை வித்தியாசப்படுத்திக் காண்பித்திருக்கிறார் அர்ஜூன். பாராட்டுக்கள் ஸார்.

கேஸை கண்டு பிடித்தே தீர வேண்டும் என்கிற அவரது ஆவல் பெருகக் காரணமே திட்டமிட்ட படுகொலையாக இது இருப்பதும்.. இரண்டு பெண்கள் இதில் சந்தேகிக்கப்படுவதும்தான். இதனை பல முறை வசனம் மூலமாகச் சொல்லிக் காட்டுகிறார் அர்ஜூன். இது பழைய தமிழ்ச் சினிமாக்களின் பாணி. தெரிந்தோ தெரியாமலோ இயக்குநர், இதை இந்தப் படத்தில் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

ஹோட்டலில் சிசிடிவி கேமிரா வொர்க் பண்ணலையாம் என்று ஒரு கான்ஸ்டபிள் ஆச்சரியமாய் கேட்கும்போது பட்டென்று திரும்பி “பெரிய ஆஸ்பத்திரிலேயே இல்லையாம்பா” என்று அர்ஜூன் கவுண்ட்டர் கொடுக்கும் காட்சியில்தான் தியேட்டரில் சலசலப்பு எழுந்தது. மற்றபடி படம் ஓடும் நேரத்தில் திரையைப் போலவே பார்வையாளர்கள் மத்தியிலும் சஸ்பென்ஸ்தான்.

முதல் பாதியில் கதை எதை நோக்கிச் செல்கிறது என்பதே தெரியாத அளவுக்குக் கொண்டு போனாலும், இரண்டாம் பாதியில் ஜெட் வேகத்தில் பறக்கிறது திரைக்கதை. மொத்தமாய் பார்க்கப் போனால் படம் ஓடும் 110 நிமிடங்களும் நொடிப் பொழுதில் ஓடி மறைந்தது போல் இருக்கிறது.

முகேஷின் ஒளிப்பதிவு இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பலம். வியாசர்பாடி வட்டாரத்தைத் துவக்கத்தில் காட்டும் ஒரு பருந்து பார்வை அபாரம். அதேபோல் வீட்டுக்குள் நடக்கும் சண்டை காட்சி, வியாசர்பாடி மைதானத்தில் இரவு நேரத்தில் நடக்கும் சண்டை காட்சிகளையெல்லாம் மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். பாடல் காட்சிகளிலும் இன்னும் கடுமையாய் உழைத்திருக்கிறார் போலும். ஹீரோவும், ஹீரோயினும் அநியாயத்திற்கு அழகாகத் தெரிகிறார்கள்.

பாடல் காட்சிகள் இந்தப் படத்திற்குத் தேவையே இல்லை. ஆனாலும் ‘கொல்லாதே கொல்லாதே’, ‘இதமாய் இதமாய்’ என்ற 2 டூயட்டுகளும் மெலடியாய் கேட்க வைக்கின்றன. இன்னொரு பாடலான ‘ஆண்டவனே துணை’யை  காட்சிப் படிமத்திலேயே நகர்த்தியிருப்பதால் அது திரைக்கதைக்கு அவசியமாகியிருக்கிறது.

இசையமைப்பாளர் சைமன் கிங்கின் ஸ்பெஷலான பின்னணி இசை காதைக் கிழித்திருக்கிறது. ஓவர் டோஸானால் அனைத்துமே அலங்கோலமாகிவிடும் என்பதை போல விஜய் ஆண்டனி வரும் காட்சிகளிலும், அர்ஜூன் யோசிக்கும் காட்சிகளிலெல்லாம் இதனை பயன்படுத்தியிருக்கிறார்கள். கொஞ்சம் நிறுத்தி மெளனித்திருக்கலாம். படத்திற்கு இன்னும் கொஞ்சம் பயத்தைக் கூட்டியிருக்கும்.

கலை இயக்குநரான வினோத் ராஜ்குமாரின் கை வண்ணத்தில் விஜய் ஆண்டனி மற்றும் சீதாவின் வீட்டின் உட்புற அலங்காரங்களும், கைவினைப் பொருட்களும் கண்ணைக் கவர்கின்றன. திரைக்கதைக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ரிச்சர்டு கெவினின் படத் தொகுப்பு கச்சிதம். இன்னும் ஒரு இருபது நிமிடங்களுக்கு கதையை நகர்த்தியிருக்கலாம்தான். ஆனால் இதுவே போதும் என்று நினைத்து கத்தரித்துக் கொடுத்த படத் தொகுப்பாளரை பாராட்டுவோம்.

பிணத்தை மாற்றி வைத்தக் கதையை அர்ஜூன் கண்டுபிடிக்கும் நிகழ்வை தனி காட்சியாக்கியிருந்தால் ரசிகர்களுக்கு இன்னும் கொஞ்சம் சூடு பிடித்திருக்கும். ஆனால் சஸ்பென்ஸ் வேண்டும் என்று கருதி விஜய் ஆண்டனியிடம் பேசும்போது சொல்ல வைக்க.. விஜய் ஆண்டனி இதற்குக் காட்டும் ரியாக்சனில் போதுமடா சாமி என்ற நிலைமைதான் ரசிகர்களுக்கு..!

வம்சி தங்கியிருந்த லாட்ஜில் இருந்து கிடைத்தத் தகவல்களை வைத்து அது வம்சிதான் என்று முடிவெடுத்து பாடியை அனுப்பி வைத்தாலும், டி.என்.ஏ. டெஸ்ட், கைரேகை டெஸ்ட் இதையெல்லாம் எடுத்து சோதித்ததிலும் அது வம்சிதான் என்பது உறுதியான பின்பும், அர்ஜூனுக்கு வரும் சந்தேகத்தை தெளிவாகச்  சொல்லாமல் விட்டுவிட்டார் இயக்குநர். அந்தக் கைரேகை விஷயத்தில் சற்று லாஜிக் இடித்தாலும் போகிறபோக்கில் அதுவும் மறந்து போய் உண்மையாகிவிட்டது.

இடைவேளைக்குப் பின்பு விசாரணையின் கோணம் அடிக்கடி மாறிக் கொண்டேயிருப்பது நம்மை அலை பாய வைக்கிறது. விஜய் ஆண்டனி ஒருவேளை பைத்தியமாக இருப்பாரோ என்று நினைக்க வைத்து.. கொஞ்ச நேரத்தில் காதலுக்காக செஞ்சிருப்பாரோ என்றும் சொல்ல வைத்து.. நாசர் மூலமாக இது காதலுக்கான கொலைதான் என்று உறுதியாக்கி.. பின்பு மீண்டும் அர்ஜூன் மூலமாக உதவி செய்யப் போய் இதைச் செய்திருக்கிறார் என்பதாக மாறி.. இப்படியே 5 நிமிடங்களுக்கு ஒரு முறை திரைக்கதையில் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் கொடுத்து தாங்க முடியாத ஆவலை உருவாக்கிவிட்டார் இயக்குநர்.

ஆக, சஸ்பென்ஸ், திரில்லர் டைப் படங்களை விரும்பிப் பாரப்பவர்கள் தவற விடாத திரைப்படமாக இந்த ‘கொலைகாரன்’ உருவெடுத்திருக்கிறான். அவசியம் பாருங்கள்..!

Our Score